Showing posts with label குப்பை. Show all posts
Showing posts with label குப்பை. Show all posts

Feb 24, 2010

மறுபடியும்

தமிழ், மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாம் என கதம்பமாய் கோர்த்த மாலைபோல் பலதரப்பட்ட மொழி பேசும் மாணவ, மாணவியர்கள் நிரம்பிய வகுப்பறை அது. மாணவர்கள் ஆறு அணிகளாக பகுக்கப்பட்டு, அவர்களுக்காக ஒரு பணி இடப்படுகிறது. ஒதுக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்குள், அந்த வகுப்பறை அமைந்துள்ள கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கிடை(ட)க்கும் பொருட்களை சேகரித்து வரவேண்டும்.

பரபரப்பாக கட்டிடத்தைச் சுற்றியும், மைதானத்திற்குள் இரை தேடும் பறவையாக பறந்தோடினர். குழுவாக செயல்படுவதில் சிரிப்பும், குதூகலமும், கும்மாளமும் கொட்டிக் கிடந்தது. ஒரு வழியாய் நேரம் முடிவதற்குள் அவர்களை ஒன்று திரட்டி, தாங்கள் சேகரித்த பொருள் குறித்து நல்லவிதமாக (Positive) கருத்துகள் பகிரவேண்டும் என்பது நிபந்தனை

உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் சேகரித்து வந்ததில் 90% வெறும் குப்பைகள் மட்டுமே. உதாரணத்திற்கு காலி சிகரெட் பெட்டி, தேங்காய் சிரட்டை, தென்னைமரத்திலிருந்து விழுந்த பன்னாடை, தென்னை ஈர்க்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில் மூடி, உடைந்த பிளேடு, ரப்பர், நூல்.......... இது போல் பற்பல பொருட்கள். இவையெல்லாம் உபயோகப்படுத்தி அல்லது இயற்கையாய் விழுந்து இனி இது பயனில்லை என நினைத்த குப்பை வகைகளே.

ஒவ்வொரு அணியாய் தாங்கள் சேகரித்த பொருட்களைப் பற்றி நல்லவிதமாக சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தால் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு, தற்சமயம் இருக்கும் நிலையில் இருந்து, அதை மீண்டும் பயன் படுத்த முடியும் என்பது போல் உதாரணத்திற்கு...

காலி சிகரெட் பெட்டியின் உள் பக்கம் - அவசரத்திற்கு ஏதாவது குறித்து வைத்துக்கொள்ள உதவும்.

காலி தீப்பெட்டி அட்டையை மடித்து லேசாய் ஆடும் மேசைக்கு அடியில் வைக்கலாம்.

பாட்டிலின் காலி மூடியை சுத்தம் செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்

தேங்காய் சிரட்டையை தேய்த்து, உடைந்த பிளேடு மூலம் வித்தியாசமான படம் ஒன்றை செதுக்கலாம்.... என்பது போல், வித்தியாசமான சிந்தனைகளோடு தாங்கள் எடுத்து வந்த பொருள் குப்பையே ஆகினும், சற்றும் விட்டுக் கொடுக்காமல் அது குறித்து சிலாகித்து பேசியதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஒரு நிர்பந்தம், போட்டி என்று வந்தால் நாமோ அல்லது பிறரோ உபயோகித்து, குப்பை என்று தூக்கி எறிந்த பொருளைக்கூட கொண்டாட முடிகிறது.

ஒன்றை தூக்கி எறிவதற்கும், ஒரு நிர்பந்தம் வந்தால் கொண்டாடுவதற்கும் அந்த பொருளின் தன்மை மட்டுமே காரணமா? அல்லது நம் மனதும் காரணமா? அந்த நிகழ்வு ஒரு விதையாக, ஒரு நெருப்பு கங்காக மனதில் விழுந்தது.

வாழும் காலம் முழுதும் நாமும் குப்பைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். சில சமயம் பொருட்களில், சில சமயம் மனித உறவுகளில். தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு மற்றும் நட்பு இதில் ஏதோ ஒன்றை சட்டென எதன் பொருட்டோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை விட்டு குப்பை போல் தூக்கி எறிந்திருந்திருப்போம்.

ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!

நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாதா என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?

தூக்கி எறியும் பொருட்களுக்குப் பதிலாக அதற்கு நிகராகவோ, கூடக் குறையவோ மாற்றுப் பொருளைப் பெற்றுவிட முடிகிறது, ஆனால் மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர்.
________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...