ஓடி விளையாடு... ஒழுங்கா விளையாடு! - புதியதலைமுறை ஆண்டு மலர் கட்டுரை

ங்கும் குளிர் பூத்திருக்கிறது. வெயில் காலத்தின் உக்கிரத்தில் குளிர் காலம் மேல் அலாதியான ஒரு ஏக்கம் பூக்க ஆரம்பித்துவிடும். அடைமழைக் காலம் ஓய்ந்து குளிர்காலம் மெல்லப் பூக்கத் துவங்கும்போது என்னை மாதிரியான ஆட்களுக்கு ஏங்கியிருந்து, காத்திருந்து பெற்ற வரமான குளிர் காலம் சாபமாய் உருவெடுத்திருக்கும். ஆமாம் குளிர் காலத்திற்கும் என் நுரையீரலுக்கும் ஏதோவொரு வாய்க்கால் வரப்புத் தகராறு இருந்து கொண்டேயிருக்கிறது.

சுற்றி வளைத்தெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. கிட்டத்தட்ட ஊளமூக்கன் ஆகிவிடுவேன். தூக்கத்திலிருந்து கண் விழித்து படுக்கையறையை விட்டு வெளியே வந்தவுடன் குறைந்தது முப்பது முதல் ஐம்பது தும்மல்கள் பொலபொலவென அதிரும். அக்கம்பக்க வீடுகள் வரை அது அலறும். பழகிப்போகும்வரை ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வைத்தியங்களையும், வைத்தியர்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருந்தனர். அவர்களுக்குப் பழகியபிறகு நிறுத்திக் கொண்டார்கள்.

மீண்டும் மிரட்டும் குளிர்காலம். இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் என் மனைவியிடம்இப்பெல்லாம் அண்ணன் காலைல வீட்ல இருக்கிறதில்லையா!?” எனக் கேட்க, ”இருக்காரே... ஏன் கேக்குறீங்க!?” எனக் கேட்டதற்குஇல்ல இப்பவெல்லாம் தும்மல் சத்தமே கேக்குறதில்ல... அதென்னவோ காலைல அந்தச் சத்தம் கேட்டுக்கேட்டுப் பழகிப்போச்சுஎன்றிருக்கிறார்.

மனைவிக்கு அப்போது தோன்றியஅட ஆமாம்ல...”, என்னிடம் கூறியபோது எனக்கும்அட...ஆமாம்லஎன்றே  தோன்றியது. தும்மல் யுத்தம் எப்படிக் கணக்கிட்டாலும் இருபது வருடங்களுக்கு மேலாக என்னோடு நிகழ்ந்தபடியே இருப்பது. குளிர்காலம் மட்டுமில்லை. வெயிற்காலத்திலும் அதீதமாய் வியர்த்து சளி பிடித்து காலையில் தும்மியபடியேதான். ஆனால் இந்தக் குளிர்காலத்தில் எப்படி தும்மலற்று இருக்கிறேன் என்பதை நானே ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். உணவு, இருப்பிடம், பழக்க வழக்கம், பயணப் பாதை, அலுவலக அமைப்பு என எதிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.

ஆனால் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பத்து ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு நடைப்பயிற்சியைத் துவங்கி இடைவிடாது செய்தேன். நடையில் இருந்து மென் ஓட்டத்திற்கு மாறினேன். அதன்பின் ஓட்டத்திலிருந்து மிதிவண்டிக்கு. இம்மூன்றிலும் நான் மிக முக்கியமாகச் செய்வது சமரசங்களின்றி பெரிதாக மூச்சு வாங்குவது. சில நேரங்களில் மூக்கு, வாய் போதாமல் கண், காதுகளிலெல்லாம் மூச்சு வாங்கமாட்டோமா என்கிற அளவுக்கு மூச்சு வாங்கத் தோன்றும். அதுவொரு போதை. சில நேரங்களில் இதயமோ, நுரையீரலோ தொண்டை வழியே வெளியே வந்து விழுந்துவிடுமோ என்றும் கூடத் தோன்றும்.

இதோ இப்போது காலைப் பனியில் ஐந்தரை மணிக்குக்கூட, பனி தூவும் கிராமத்துச் சாலைகளில், எந்தக் கவசங்களுமின்றி மிதி வண்டியில் மூச்சு வாங்குகிறேன். தலையிலும், உடையிலும் பனியின் ஈரம் படிவதை உணர்கிறேன். ஆனாலும் இந்தக் குளிரோ, பருவ நிலை மாற்றமோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதைவிட, உடல் அந்தவித பாதிப்புகளுக்கு இணங்க மறுத்து உறுதி காட்டுகிறது.ப்போது உடம்பைத் திடமாக்க அல்லது பலவீனம் அடையாமல் இருக்க, திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இயல்பாய் நம் வாழ்வியலோடு இருந்த வாய்ப்புகள்தானே.? குழந்தைப் பருவத்திலிருந்து விளையாட்டுகள் மூலம் உடலைத் திடப்படுத்தி வந்தோம். ஓரளவு வளர்ந்தபின் உடல் உழைப்பு மூலம் வாழ்க்கை நடத்தினோம். அதுவே போதுமானதாக இருந்தது. நம் பிள்ளைப் பருவத்து விளையாட்டுகள் அனைத்துமே உடல் உழைப்பையும், உறவுகளைப் பேணுதலையும், மன நலத்தையுமே சார்ந்திருந்தது.

அப்போது கரடுமுரடாகவேணும் பள்ளிகளில் மைதானம் எனும் ஒரு வெளி இருந்தது. ஒரு நாள் விட்டு ஒருநாளோ வாரத்திற்கு இரண்டு நாட்களோ உடற்பயிற்சி வகுப்புக்கென நேரம் ஒதுக்கப்பட்டது. கல்வி என்பதில் புத்தகங்களாக கற்கும் பாடங்களைத் தவிர, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ விளையாட்டும், தோட்டக்கலையும் தவிர்க்க இயலாத பாடங்களாக இருந்தன. பூப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கோ-கோ எனும் பல்வேறு விளையாட்டுகளோடு கபடி பிரதானமாய் இருந்தது. இவை தவிர்த்து உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுகள், பல்வேறு ஓட்டப் பந்தயங்கள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் எதேதோ விளையாட்டுகள், செயல்பாடுகள் என எப்போதும், உடம்பு இறுகுவதற்கான செயல்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

பள்ளி நேரம் முடிந்தபின் நிகழும் விளையாட்டுகள்தான் குழந்தைகளின் உண்மையான கொண்டாட்ட உலகம். திருடன் போலீஸ் துவங்கி, கிட்டிப்புல், நொண்டி, அஞ்சாங்கல் உள்ளிட்ட அனைத்திலும் ஏதோ ஒரு உயிர்ப்பிருந்தது. இன்று இந்த தேசத்தில் எல்லா விளையாட்டுகளையும் புறந்தள்ளி மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யமாய்த் திகழும் கிரிக்கெட்டின் ஆதி விளையாட்டாக கிட்டிப்புல் இருந்திருக்க வேண்டும். அரையடி நீளத்திற்கு நிலத்தை ஆழக் கீறி அருகாமையில் இரண்டு புள்ளிகள் வைத்து கையில் ஒரு சிறிய கோல் ஏந்தி கூர் முனைகொண்ட கில்லியை, தண்டாலால் தூக்கி வீச வேண்டும்.
பிடிபட்டால் ஆட்டம் இழப்பு. பிடிபடாமல் விழுந்த கில்லி குழியை நோக்கி எறியப்படும். குழியில் அல்லது பக்கவாட்டுப் புள்ளியிலிருந்து ஒரு தண்டா தொலைவிற்குள் விழுந்தால் ஆட்டமிழந்து விடுவோம். வந்து சேரும் கில்லியை ஒரு முனையில் தட்டினால் பறந்து எகிரும். அதை தண்டலால் சுழற்றி அடித்தால், பறந்து விழும் தொலைவு வரை தண்டா எண்ணிக்கை கணக்கில் சேரும் புள்ளிகள். தடுத்தல், பிடித்தல், நுணுக்கமாய் சுழற்றி அடித்தல் முதற்கொண்டு புள்ளிகளுக்காக பார்வையால் அளவிடும் கணக்குகள் வரை, எல்லா விளையாட்டுகளிலும் கற்றுக்கொள்ள ஏதேனும் இருந்து கொண்டேயிருக்கும்.

ஒற்றைக்காலில் நொண்டியடித்தபடி மைதானத்தில் ஓடுபவர்களை துரத்துவதில் இருக்கும் காட்டும் முனைப்பாகட்டும், எட்டாய்ப் பிரிக்கப்பட்ட கட்டத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப நொண்டியடித்தபடி, கண் மூடிய படிரைட்டா... ரைட்டாஎனச் சிட்டாங்கல் ஆடும் நிதானமாகட்டும் விளையாட்டு என்றால் மூர்க்கமும், பக்குவமும் நிறைந்தேயிருக்கும்.

வாசலில் கட்டம் வரைந்து விடியவிடிய ஆடும் தாய விளையாட்டு அனுபவங்களின் மகிமை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். அணி பிரிந்து சுற்றிலும் அமர்ந்து நிலைமைக்கேற்ப கட்டையை உருட்டுவதில் இருக்கும் வேகம், விவேகம் ஒரு வகையில் உணர்வுகளை பழக்கும் விளையாட்டு எனச் சொல்லலாம். எது விழுந்தால் எங்கே எந்தக் காயை நகர்த்தலாம் எனும் கணக்கீடுகளிலும், காத்திருப்புகளிலும் கால்குலேட்டர்கள் இல்லாத மனக்கணக்கு ஒரு ருத்ர தாண்டவக் கலை எனலாம்.

பச்சைக்குதிரை தாண்டுவது, பல்லாங்குழி ஆடுவது, பம்பரம் விடுவது, கோலிக் குண்டு விளையாடுவது, மேய்ச்சல் நிலங்களில் கற்களைப் பொறுக்கி அச்சாங்கல் விளையாடுவது இவையாவும் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல. எண்ணத்தைக் குவித்து வெற்றியீட்ட மனம் ஒப்பி விளையாடும் திறன் வாய்ந்த விளையாட்டுகள்.

திருடன் போலீஸ் அல்லது ஐஸ் விளையாட்டில் மரமேறுதல், கிணற்றுப்படியில் இறங்கி ஒளிந்து கொள்ளுதல், வைக்கோல் போருக்குள் மறைத்துக் கொள்ளுதல், கோழிகள் அடைக்கும் பெரிய கூடைக்குள் புகுந்து கொள்ளுதல் என்பதெல்லாம் வெறும் விளையாட்டாக மட்டுமே அல்ல. தான் அகப்பட்டு விடுவதைத் தவிர்க்க, யாரோ ஒருவர் அகப்படும் வரை காத்திருக்கும் உறுதி, நிதானம் ஆகியவற்றையும் பறை சாற்றுவது.

வழுக்கு மரம் ஏறுவது, உறியடித்தல், நொங்கு வண்டி ஓட்டுதல், களிமண் பொம்மைகள் செய்தல் என திறனை வெளிக்காட்ட, திறமையை நிரூபிக்க, உருவாக்குத்திறனை மேம்படுத்த என பட்டியலிட முடியாத அளவுக்கு அன்றாடங்களில் நிரம்பிக் கிடந்த காலம் அது. இவைகளன்றி விளையாட்டின் பட்டியலுக்குள் இன்னும் எத்தனை எத்தனையோ விளையாட்டுகள், மண் சார்ந்து, மரபு சார்ந்து, வாழ்க்கை முறை சார்ந்து நம்மோடு உயிர்ப்புடன் இருந்தன.

இந்த தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி திகழ்ந்ததற்கு, அது பட்டிதொட்டியெங்கும்கபடி... கபடிஎனப் பாடப்பட்டதும் ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும். எல்லை தாண்டி எதிரியை நோக்கி வேட்டையாடச் செல்வதில் ஒரு போருக்கான யுக்தியும், முனைப்பும் இருக்கும். சென்றதற்காக வீழ்த்திவிட்டு வரவேண்டும் என்பதைவிட பிடிபட்டு தன்னை இழந்துவிடக் கூடாது என்பது அதில் முக்கியம். ஒருவேளை வீழ்த்தப்பட்டு அல்லது  பிடிபட்டு வாழ்வை இழந்தால், சக வீரன் தன் வெற்றி மூலம் நமக்கு பல நேரங்களில் வாழ்வளிப்பான் எனும் போரின் யுக்திகளையும், தோல்விகளிலிருந்து மீளும் நம்பிக்கைகளையும் விளையாட்டெங்கும் கற்றுக் கொண்டேயிருந்தோம்.

நீச்சல் என்பது பயிற்சி வகுப்புகள் வைத்து பகட்டும், பாதுகாப்புமாய் மட்டுமே கற்றுத் தரப்படும் ஒரு விளையாட்டல்ல, அதுவொரு கலை. தாய் மீன் தம் குஞ்சுகளுக்கும் எப்படி இயல்பாய் நீச்சலை இடம் பெயர்த்துகிறது, அவ்விதமே ஒவ்வொரு குடும்பத்திலும் பழக்கப்படுத்தப்படும். ஆறு, குளம், ஏரி, கால்வாய், கிணறு என தண்ணீர் கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆழம் பார்க்கவும், அகலம் பழகவும் நீச்சல் பழகிய ஒவ்வொருவருக்கும் உள்ளம் துடிக்கும்.காலம் மாறுகிறது. இல்லையில்லை மாறிவிட்டது உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. வேரோடு பிடுங்கிக் கொண்டு அல்லது வேர்களைத் துண்டித்துவிட்டுக் கொண்டு பலர் வேறு நிலம் தேடி வந்தாகிவிட்டது. விளையாட்டு, பொழுது போக்கு, உழைப்பு, ஆரோக்கியம் எல்லாவற்றிலும் வேறு ஏதோ ஒன்றைப் புகுத்திக் கொண்டோம். அப்படியான புகுத்தல் நாகரீகத்தின் அடையாளம் என அப்பட்டமாய் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. விளைவு தம் பால்யத்தை சேற்றிலும் புழுதியிலும், வெயிலிலும் குளிரிலும் பழக்கப் படுத்தியிருந்த சமூகம் தம் அடுத்த தலைமுறையை மண்ணில் கால் வைக்க அனுமதி மறுத்து குளிரூட்டப்பட்ட வீடு, அலுவலகம், வாகனம், பள்ளி வகுப்பறைகள் எனப் பழக்கப்படுத்தியிருக்கிறது.

புழுதியில் இறங்கினால் சரும வியாதிகள் முதற்கொண்டு, தம் வசதி, அந்தஸ்துக்கு பங்கம் விளையும் ஆபத்துவரை வந்துவிடுமெனச் சொல்லி பிள்ளைகளை சிறைப்படுத்தியிருக்கிறோம். அதற்கு அன்பு, அக்கரையென தேவைப்பட்ட விதமாய் அடையாளமும் சூட்டியிருக்கிறோம். வீட்டிற்குள்ளேயே சாமான்களையும் கருவிகளையும் குவித்து, தானே தன்னந்தனியே அல்லது நம்மோடு எவ்வகையிலும் ஒட்டாத கற்பனை கதாபாத்திரங்களோடு விளையாடப் பணிக்கிறோம். அதைவிட எளிதாக தொலைக்காட்சியில் அவர்களை ஈர்க்கும் காட்சிகளில் மூழ்கடித்துவிட்டு நாம் நம் அன்றாடங்களில், கொஞ்சம் கூட குற்றவுணர்வின்றி கவனம் செலுத்தப் பழகிவிட்டோம். அப்படியான நிகழ்சிகளில் மூழ்கும் குழந்தைகளை ஒருகட்டத்தில் அந்த நிகழ்ச்சிகளே கபளீகரம் செய்து விடுகின்றன.

குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு, அவர்களுக்கு பிரியமானதாய், பிரிய முடியாததாய் மாறிப்போன பொம்மைச் சித்திரக் காட்சிகள் வரும்  தொலைக்காட்சி நிகழ்வுகள் போதிக்கும் வன்முறை, பலவகைகளில் குழந்தைகளின் மனதைப் பதம் பார்ப்பவை. அதைப் பெற்றோர்கள் உணரும்போது, காலம் வெகுவாய்க் கடந்து போயிருக்கும் என்பதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி.

கால் நூற்றாண்டு காலத்தில் இரண்டு தலைமுறைகளுக்குள் தொலைக்கப்பட்ட விளையாட்டுகளில் இழந்தவற்றை பட்டியலிட்டால் நாம் எதை நோக்கி இந்த வாழ்க்கையை நடத்துகிறோம் எனும் அச்சம் பொங்கியெழும். உடல் வலுவூட்டும், புத்தியைக் கூர்மைப்படுத்தும், உடனிருப்போரின் பங்களிப்பு நாடும், யுக்திகள் தீட்டும், கணக்குகள் போடும் விளையாட்டுகள் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு வழங்கப்படவும், பழக்கப் படுத்தவுமில்லை. வீடியோ கேம் விளையாட்டுகளில் கை விரல்களில் கொஞ்சம் விளையாட்டும், கண் சிமிட்டாத பார்வைகளும் அவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உலகமாக விஸ்வரூபம் எடுத்துவிட்டன. அவர்களின் கண்கள் திரையில் ஆழ்ந்திருக்குகையில் கைகள் ஏதேனும் ஒரு பெரு நிறுவனத்தின் நொறுக்குத் தீனிகளை நிரப்பிக் கொண்டேயிருக்கின்றன.

அவர்கள் மழையில் நனைவதில்லை, வெயிலில் காய்வதில்லை, காற்றில் உலர்வதில்லை. அவர்கள் நனைவதும், காய்வதும், உலர்வதும் ஏதோவொரு தொழில்நுட்பம் சார்ந்தே. அவர்களுக்கும் ஆரோக்கியத்திற்கும் போராட்டம் துவங்கும்போது பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும் பேஸ்மெண்ட் வீக்காகிக் கொண்டேயிருப்பதுஅவசரகதியில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

முடங்கிக் கிடக்கும் பிள்ளையை ஓடி விளையாட விரட்டுங்கள்... ஒழுங்காகத் தினமும் விளையாடச் சொல்லுங்கள்.

*

No comments: