“புக் பாஸ்” : ஓடவும் முடியாத 8 நாட்களில் ஒளித்து வைக்க முடியா 3200 சொற்கள் - #WhyILoveErodeBookFestival

நாள் 1 : வெள்ளி 6.00 PM

கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு புத்தகத் திருவிழா நாட்களிலேயே இலங்கைப் பயணம் வாய்த்தது. அதுவும் 2015ல் 'கிளையிலிருந்து வேர் வரை' வெளியான சமயத்தில், புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது பெரும் சோகம். கடந்த ஆண்டும் இறுதியில் சில நாட்கள் மட்டுமே எட்டிப்பார்க்க முடிந்தது. ஆக இந்தாண்டு திகட்டத் திகட்ட புத்தகத் திருவிழாவில் சுற்ற வேண்டுமென்பதே மனச் சபதம்.

இத்தனை ஆண்டுகளில் முறையாக துவக்கவிழா நிகழ்வன்று செல்கிறேன். முகப்பிலும், உள்ளும் நிதானமான சூழல். இனி அடுத்த 11 நாட்களுக்கு இந்த மாதிரியான அமைதியைக் காணவியலாது. சரி... திருவிழாவில் அமைதி எதற்கு?

அரங்குகளின் நுழைவாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு துவக்க விழாவிற்குத் தயார் செய்யப்பட்டிருந்தாலும், அந்த வழியாக உள்ளே செல்லவோ, வெளியில் வரவோ கெடுபிடி எதும் கிடையாது. 95% அரங்குகள் தயார் நிலையில் இருந்தன. ஆங்காங்கே புத்தக விற்பனை மெல்லமாய் துவங்கியிருந்தது.

6.45 மணி சுமாருக்கு அமைச்சர்கள் வருகைக்காக ஊரின் பெரிய மனிதர்கள் உட்பட அமைப்பாளர்களும் காத்திருந்தனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். அவர்களின் வருகையும், பங்கேற்பும் மிக எளிமையாகவே இருந்தது மகிழ்ச்சிக்குரியது.

அநேகமாக இன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 2011ம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார் என நினைக்கிறேன். 2012ல் வரவில்லைதானே(!)?

ஒவ்வொரு ஆண்டும் இப்படியாக, அந்த சமயத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர்கள் கலந்து கொள்வதுண்டு. அப்படிக் கலந்து கொள்பவர்களுக்கு அமைச்சர்கள் என்றளவிலனான சம்பிரதாய மரியாதை பொதுவாகவே கிட்டும். ஆனால் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு, இதுவரையில் இல்லாத அளவிலான கூடுதல் மரியாதை கிடைக்க காரணங்கள் இருப்பதாக உணர்ந்தேன். பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள், நூலகங்கள் மேம்பாட்டிற்கு உத்தரவுகள் என துறையின் செயல்பாடுகளே அந்த மரியாதைக்கான காரணங்கள்.

துவக்க விழா உரைகள் துவங்கின. பரவலாக அரங்குகள் பக்கம் மக்கள் நடமாட்டம் கூடிக்கொண்டிருந்தது. புத்தகத் திருவிழாவில் உற்சாகம் தொடங்கியது.

நாள்
1 : வெள்ளி 7.00 PM

கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, ஒவ்வொரு அரங்கின் பெயர் பலகைகளையும் வாசித்தபடி கிட்டத்தட்ட ஒரு சுற்று வந்தாகிவிட்டது. சில பதிப்பகங்களின் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் புன்னகைக்கிறார்கள். அடிக்கடி ஃபேஸ்புக்கில் முகங்களை மாற்றிக் கொண்டேயிருப்பதன் விளைவு அது. 361வது டிகிரியில் இருந்து பார்த்தாலும் அடையாளம் தெரிவது அதனால்தான்.

டிஸ்கவரி புக் பேலஸில் மூன்று புத்தகங்களும் வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன. நம் புத்தகங்களை நாமே தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுகம் தான். நாம் அப்படி வேடிக்கை பார்க்கும்போது, யாரோ ஒருவர் வந்து வாங்கினால் சிலிர்ப்பாகத்தான் இருக்கும். சரி... அந்த சிலிர்ப்பிற்கு இப்ப என்ன அவசரம்.

முன்னும் பின்னும் ஊர்ந்து கொண்டிருக்க, பவானியைச் சார்ந்த தினகரன் நிருபர் மகேந்திரன் அடையாளம் கண்டு கொள்கிறார். சுமார் 20 வருடங்களுக்கு முன்பான பவானியில் இருந்த நாட்களை நினைவுபடுத்திப் பேசினார். உறவெனும் திரைக்கதை - சூரியன் பதிப்பகம் எனச் சொன்னதும், அரங்கிற்கு அழைத்துச் செல்கிறார். அரங்கில் இருந்த விற்பனைப் பிரதிநிதி வேற எதும் புத்தகம் வருதுங்ளா...!?” என்பதையே மீண்டும் மீண்டும் கேட்கிறார். எழுதாத இந்த வெம்மை நாட்கள் குறித்தெல்லாம் சொல்ல முடியாதல்லவா?

சில அரங்குகளில் நின்று நிதானித்துவிட்டு, பாரதி புத்தகாலய அரங்கில் லேண்ட் ஆனேன். அண்ணன் இளங்கோவிடம் புத்தகங்கள் உள்ளிட்ட இன்னபிற விசயங்களையும் இம்மாதிரியான நேரங்களில் அரட்டையடிப்பதுண்டு.

சில புன்னகைகள், தலையசைப்புகள் என மனிதர்கள் இடமும் வலமும் கடக்கிறார்கள். தெரிந்த முகமாய் ஒருவர் புன்னகைத்து நெருங்கிறார். புன்னகைத்தபடியே யோசிக்கிறேன்... அட.... கார்த்திகேயன். காலையிலே எத்தனை மணிக்கு வருவீங்க எனக் கேட்டிருந்தவர். 2015 வரை சிங்கப்பூரிலும், தற்போது பெங்களூரிலும் இருப்பவர். 2010, 2013, 2015 என எல்லா ஆண்டு கால வலைப்பக்க எழுத்துகள் குறித்தும் கேள்விகளும், சிலாகிப்புமாய் உரையாடுகிறார். ஆச்சரியத்திலும் கொஞ்சம் வெக்கத்திலும் ஊசலாடுகிறேன். இலங்கைப் பயணக் கட்டுரை எந்தத் தொகுப்பில் எனக் கேட்கிறார். கிளையிலிருந்து வேர் வரையிலா, பெயரிடப்படாத புத்தகத்திலா என நானே கேள்வி கேட்டுக் கொள்கிறேன். இரண்டு புத்தகத்தையும் புரட்டி சற்று வழிந்தபடியே பதில் சொல்கிறேன். சிங்கப்பூர் நண்பர்கள், பயிலரங்குகள், பயணங்கள் குறித்து என நிறைய... நிறைய பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

தலைமையாசிரியாக இருக்கும் ஒரு நண்பர் வருகிறார். உரையாடுகிறோம். அவரோடு வந்த இளைஞர் ஒருவர் ஒவ்வொரு அரங்குகளாக புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈரோடு சி.ஈ.ஓஎன்கிறார் நண்பர். மாவட்ட கல்வி அதிகாரி இவ்வளவு இளமையாகவும், தன்னிச்சையாய் அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களைப் பார்வையிடுவதையும் ஆச்சரியத்தோடு நோக்குகிறேன்.

பின்னாலிருந்து ஒரு பெரியவர் முதுகைத் தொடுகிறார். வயது அறுபதுக்கும் மேலிருக்கலாம். உறவெனும் திரைக்கதைபுத்தகத்தை கையில் வைத்தபடி, ”உங்க புத்தகம்தானே!?” என்கிறார். தேடல் திரைப்படச்சங்க துவக்க விழாவில் உங்க பேச்சு கேட்டேன்என்கிறார். அது டிசம்பர் 2016ல் நடந்த நிகழ்வு. அப்போதுதான் குங்குமம் தொடர் நிறைவடைந்திருந்த காலம். 'கம்மாட்டிப்பாடம்படம் குறித்து பேசியது நினைவிற்கு வருகிறது. அவரைக்குறித்து விசாரிக்கிறேன். பெயர் சண்முகம். கையில் சுமார் 3000 படங்கள் வைத்திருப்பதாகவும், உலகத்திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசைத் தட்டுகள் என தேடித்தேடி பார்க்கிறவராகவும், கேட்கிறவராகவும் இருக்கிறார். தினசரி தவறாமல் ஒரு படம் பார்ப்பதாகச் சொல்கிறார். படங்களுக்கான தனது தேடல், பயணங்கள் குறித்து நிறையப் பேசுகிறார். உண்மையில் மிரண்டு போகிறேன். படங்கள் குறித்து எழுதுங்கள், அறிமுகப்படுத்துங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறேன். அவர் வட்டத்தில் துரதிருஷ்டவசமாக இதற்கான ஆதரவு பெரிதாக இல்லாமல் இருந்திருக்கிறது.

வாழ்க்கை இப்படியான முரண்களை தனக்குள் வைத்துதான், ஒவ்வொரு தருணத்திலும் தன்னை அழகூட்டிக்காட்டுகிறது.

சேமிப்பிலிருந்த புன்னகையோடு நுழைந்தவன் மலர்ச்சியான சிரிப்போடு வெளியே வருகிறேன்




நாள் 2 : சனி 6.00 PM

இரண்டாம் நாளே கூட்டம் சூடு பிடிக்கிறது. சில அரங்குகளுக்குள் கூட்டம் கசகசப்பதையும், சில அரங்களுக்குள் யாரும் இல்லாமலிருப்பதையும் காண முடிகிறது.

சில வாசகர்கள்(!) புகழ்பெற்ற கவிஞர் / எழுத்தாளர் புத்தகங்களைத் தாண்டி மற்ற புத்தகங்களின் பக்கம் திரும்பாத ஒரு தீண்டாமையைக் கடைபிடிக்கின்றனரோ எனத் தோன்றுகிறது.

என்னுடன் வந்த மகளை எங்கே வேணா போ, நிதானமா தேடு, உனக்கு பிடிச்ச புத்தகங்களை வாங்கிட்டு, இங்கே வந்து சேர்!என முதன்முறையாக தனியாக அனுப்புகிறேன். அந்த சுதந்திரத்தை அவள் எதிர்கொண்ட கெத்தை மெல்ல ரசிக்கிறேன். ஆனால் அவள் சென்ற பின், நினைவு முழுக்க அவளே அலையடித்துக் கொண்டிருக்கிறாள்.

உடன் வந்த நண்பர் ஜெயபாலன், இரு மருங்கிலும் அரங்குகளில் குவிந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டி, “பாருங்க... எத்தன பொஸ்தகம்னு... இதையெல்லாம் எத்தனையாளுக எழுதியிருப்பாங்க!என்கிறார். அது எந்தப் புத்தகமாக இருந்தாலும், அதற்கும் மனம், எழுத்து, உழைப்பு உள்ளிட்ட எத்தனையோ தேவைப்பட்டிருக்கும்தானே எனத் தோன்றுகிறது. அதுவே மனதை ஆக்கிரமிக்கித் தொடங்குகின்றது.

ஒரு அரங்கின் முகப்பில் விற்பனையில் பரபரப்பாக இருக்கும் நண்பரின் அருகில் அமர்கிறேன். மற்றொரு பதிப்பகத்தைச் சார்ந்தவர் அங்கு வருகிறார். ஏதேதோ விசயங்களைப் பேசி, பேச்சு ஜெ. மரணம் குறித்து நகர்கிறது. வந்தவர் செப்டம்பரிலேயே இறந்தாச்சுங்க... அதெல்லாம் சொல்றதுக்கு ஆள் இருக்காங்க!என்ற நிலையிலே மட்டுமே தளும்பிக்கொண்டிருந்தார். சோர்ஸ்... சோர்ஸ்என்ற அந்தக் குரல்கள் மனதிற்குள் கோரஸாய் கதறுகின்றது. தெறித்து ஓடுகிறேன்.

அடுத்த நாள் தங்கள் பதிப்பகத்தில் 60 புத்தகங்கள் வெளியிடப்படுவதாக ஒரு அழைப்பிதழை வழங்கிச் செல்கிறார்.

ஒரு குறிப்பிட்ட எண் மட்டும் தலைப்பாக போட்டிருக்கும் ஒரு புத்தகத்தை ஒரு பெண் நீண்ட நேரமாக புரட்டிவிட்டு, “3600 இல்லையாஎனக் கேட்டிருக்கிறார். பதிப்பகத்தார் குழம்பி என்னவென விசாரிக்க, “3600 ஸ்டிச்சஸ்க்கான புக் இல்லையா!?” எனக் கேட்டு கதறவிட்டிருக்கிறார்.

அரங்குகளுக்கு வருபவர்களுக்கும், அவர்களைக் கையாள்பவர்களுக்குமென ஒரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்கின்றது.


நாள் 2 : சனி 8.10 PM

சிந்தனை அரங்கில் இரண்டாம் பேச்சாளர் உரையைத் தொடங்குகிறார். அமர்ந்து கேட்கும் நிதானம், பொறுமை இல்லை. மகள் ஒற்றைக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டாள். இடையில் பஜ்ஜி வாங்கப் போகிறேன் என்றவளை அனுப்பிவிட்டு சிந்தனை அரங்கின் முகப்பில் நிற்கிறோம்.

பேச்சாளர் குரல் கணீரென ஒலித்துக் கொண்டிருக்கிறது. உறவுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் எனப் புரிகிறது.

ஒழுகும் குடிசையில் உன் மேல் ஒரு சொட்டுத் தண்ணீர் படாமல் காப்பவள் தாய். ஒரு வேளை உன் மேல் ஈரம் பட்டால் அது அவளின் கண்ணீராக இருக்கும்என்கிறார். கூட்டம் கை தட்டுகிறது.

மகனை அடித்துவிட்டு, மனம் முழுக்க ரணத்தோடு அமர்ந்திருப்பவர் அப்பா. அடி வாங்கிய மகன் தூங்கும்போது, அவன் தலையைக் கோதி கண்ணீரால் நனைப்பவர்தான் தந்தை என்பது உங்களுக்குத் தெரியுமா?’ கூட்டம் வேறென்ன செய்யும்... அதேதான்... கை தட்டுகிறது.

ஜெயபாலனும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம். ஒரே நேரத்தில் இருவரும் கடுப்போடு சிரித்துக் கொள்கிறோம்.

அந்தப் பேச்சாளரை கால யந்திரத்தில் வைத்து, அவர் தேங்கி நிற்கும் காலத்திலிருந்து, குறைந்தபட்சம் ஒரு கால் நூற்றாண்டு காலமேனும் முன்னகர்த்திவிட்டுவிட வேண்டுமெனத் தோன்றுகிறது. அவரை மட்டுமல்ல, கூடவே அந்த கை தட்டி ரசிகர்களையும் தான்.

நாள் 3 : ஞாயிறு 5.15 PM

புத்தகத் திருவிழாவில் மற்றொரு கொண்டாட்டம், அதையொட்டி நடைபெறும் புத்தக வெளியீடுகள். அவற்றில் ஒன்றாக காவ்யா பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியிடும் விழா லீ ஜார்டின் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் 'இருளும் ஒளிரும்எனும் புதினம் என்னுடைய கல்லூரிப் பேராசியர் சுபன் அவர்கள் எழுதியது.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு பேராசிரியராகப் பார்த்த அவரை, கடந்த சில மாதங்களாக நண்பராகப் பார்க்கும் வாய்ப்பு. முன்பு சாதாரணமாக அறிந்தவர்களை பிற்காலத்தில் ஒரு படைப்பாளியாக, எழுத்தாளராகப் பார்ப்பது மிக வித்தியாசமானதொரு உணர்வைத் தரக்கூடியது.

6 மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தேன். ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய கூட்டம். நுழையும் இடத்திலிருந்து முதல் பத்து அரங்குகளுக்குள் இருக்கும் கூட்டம், ஒரு போதும் அதன் இறுதி வரைக்கும் வருவதேயில்லை. எங்கே கரைந்து போவார்கள் என்பதுதான் ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் தருவது.

விஜயா பதிப்பகத்தில் தம்பி சங்கரராமன் அவர்களின் தலைவர்கள் தேவை நூல் வெளியீடு நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்து சுய முன்னேற்ற துறை சார்ந்த எழுத்துகளில் கலக்கி வருகிறார். சக்திவேலாயுதம் தனது புத்தகத்தைக் கொடுத்தார். நண்பர் ஜெயபாலன் மகளோடு அரங்குகளுக்குள் வேட்டையாடிக்கொண்டிருந்தார்.

ஆங்காங்கே தெரிந்த முகங்களின் புன்னகைகள், தலையசைப்புகள், கையாட்டல்கள் என நகர்ந்துகொண்டிருந்தேன். வெளியில் இறையன்புவின் உரைக்காக இடம் பிடிக்க கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

நாள் 3 : ஞாயிறு 6.00 PM

கொஞ்சம் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு டிஸ்கவரி அரங்கில் மையம் கொள்கிறேன். அருகிலிருக்கும் காலச்சுவடு அரங்கிலிருந்து தம்பி ஜனார்த்தனம் அழைத்து படம் எடுத்துக் கொள்கிறார். சந்திப்பென்றாலே படங்கள்தான் என்றாகிப்போனோம்.

இந்த தினத்தின் நுழைவு வாயில் மறு முனையில் என்பதால், உள்ளே நுழையும் கூட்டம் ஆங்காங்கே கரைந்து போய், ஓய்ந்து போய் இந்த இடத்தைக் கடக்கும்போது அவரசகதிக்கு மாறிப்போகின்றனர். ஞாயிறு மாதிரி விடுமுறை தினங்களில் வரும் கூட்டத்தில் பாதிக்கும் மேலானோர் விண்டோ ஷாப்பிங் மனநிலை வாய்த்தவர்களாகவும் இருப்பார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார். விண்டோ ஷாப்பிங் மனநிலை வாய்த்தவர்களையும் தாண்டி ஒரு வர்க்கம் இருக்கின்றது. இரண்டு புறமும் திரும்பாமல், எல்லா மனிதர்களின் தலைக்கு மேலாக பார்த்த பார்வையோடு நகர்கிறவர்கள். அவர்களைப் பார்க்கும்போது கோவில்களில் சுற்றுகிற மாதிரி இதுவும் ஒருவகை பரிகாரமாக இருக்குமோ எனக் கருதுவதுண்டு.

எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களை அழைத்துக்கொண்டு கவிஞர் மோகனரங்கன் அவர்கள் மெல்ல அரங்குகளைக் கடக்கிறார். இதுவரை அவரை வாசித்ததில்லையெனினும் நட்புகளின் வாசிப்பில் மிகக் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பவர்.

டிஸ்கவரியில் ஒரு சிறுமி வெட்டாட்டம் நாவலை கையில் எடுத்து முன்னும் பின்னும் புரட்டி ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். சற்று ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளே விரித்து எதோ படித்தும் பார்த்தாள். சுற்றிலும் பார்த்த கணத்தில் என்னைப் பார்த்துவிட்டாள். மெல்ல சிரித்தேன். லேசான திடுக்கிடலோடு திரும்பிக்கொண்டாள். வெளியில் வரும்போது அந்த புக்ல என்ன கண்ணு தேடுனே!?” என்றேன். செஸ் படம் சூப்பரா இருந்துச்சு!" என்றாள். ஜீவ கரிகாலனிடம் சொல்ல வேண்டிய விசயம் என மனதில் குறித்துக் கொண்டேன்.

சிந்தனை அரங்கில் இறையன்புவின் குரல் முழங்கத் தொடங்கியது.

நாள் 3 : ஞாயிறு 7.30 PM

சிறிது நேரத்தில் ஜீவ கரிகாலன் வந்து சேர்ந்தார். பதிப்பகம், அச்சு, எழுத்தாளர்கள், Print-On-Demand, சந்தைப்படுத்துதல் என ஏகத்துக்கும் பேசத் தொடங்கியிருந்தோம்.

மஞ்சு வந்தார். உங்க புக்ஸ் எல்லாம் கோயம்புத்தூர் ஃபேர்ல வாங்கிட்டேன், ஷான் அண்ணா புக் வாங்கனும்என்றார். உடனே ஜீவ கரிகாலன் பதிப்பாளரையும் தாண்டிய தொழிலதிபராய் மாறி அலுவல் முறை வெளியீடு என்று புதிய நிகழ்வை நடத்தி ஆவணப்படுத்திக்கொண்டார். 

புவனேஷ் வந்தார். கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடங்கள் கழித்து சந்திக்கிறோம். மேலும் சில கை குலுக்கல்கள், தலையசைப்புகள். திடீரென யாரும் இங்கே என்ன பண்றீங்க!?” எனும் போதுதான், “யோவ்... யாராச்சும் ஒரு ஜீப்பைக் கொண்டு வந்து நிறுத்துங்களேன்!என சொல்லத் தோன்றும்.

மீண்டும் எங்களுக்குள் உரையாடல் தொடர்ந்தது. Print-On-Demand-ன் சாதக பாதகங்கள் குறித்தே அதிகம் பேசியிருப்போம். உறவெனும் திரைக்கதை வகை கட்டுரைகள் இன்னும் எழுத வேண்டும் என உந்துதல் கொடுத்தார். ஈரோடு புத்தகத் திருவிழாவின் கூட்டம், விற்பனை, ஒழுங்கு உள்ளிட்ட பல விசயங்கள் அவருக்கு பல ஆச்சரியங்களைக் கொடுத்திருக்க வேண்டும்.

அங்கிருந்து பாரதிக்கு நகர்ந்தேன். வாமு.கோமுவின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஒரு நல்ல முயற்சி எனத் தோன்றியது. திருச்செங்கோட்டிலிருந்து தென்றல் நிலவன் வந்தார். இந்த தலைமுறை ஜேஸி அவர்.

அடுத்து... திட்டமிடல் ஏதுமின்றி ஈரோடு வாசல் நட்புகள் ஒவ்வொன்றாக பாரதியில் கூட ஆரம்பித்தோம். தீனா, கிருஷ்ண வேணி , சதீஷ், ராஜி, யசோதா அக்கா என ஒவ்வொருவராய் இறையன்புவின் உரையைக் கேட்ட கையோடு வந்தடைந்தார்கள். உற்சாகமடைந்த அண்ணன் பாரதி இளங்கோ வளைத்து வளைத்து படமாக எடுத்துத் தள்ளினார்.

9.30க்கு விற்பனைகளை முடிக்க அறிவுறுத்தும் விசில் சப்தம் கேட்க ஆரம்பித்தது.

நாள் 5 : செவ்வாய் 2.45 PM

மதியம் 1 மணியளவில் நாமக்கல்லில் பயிலரங்கு முடித்துவிட்டு நேராக புத்தகத் திருவிழாவிற்குச் சென்று விட்டு அலுவலகம் செல்லும் திட்டத்தோடு ஈரோடு நோக்கிப் புறப்பட்டேன்.

கோடை பண்பலை ஈரோடு புத்தகத் திருவிழாவிலிருந்து நேரலை ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தனர். நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் பேசுவார்களா என நினைத்த நொடியிலேயே யசோதா அக்காவின் குரல் கேட்டது.
திருச்செங்கோட்டை நெருங்கும்போது அலைபேசி ஒலித்தது. அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அழைப்பு. திடீரென இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறார் என்ற யோசனையோடே அழைப்பை எடுத்தேன். அந்த யோசனைக்கும் காரணமும் உண்டு.

எடுத்தவுடன் இப்பத்தான் ஸ்டால்களுக்குள் வந்தேன், எங்கே ஈரோடு படைப்பாளர் அரங்கில் உங்க புத்தகத்தைக் காணோமே!?” என்றார். அத்தனை பரபரப்பிலும் அந்தப் புத்தகங்களை அவர் நினைவு வைத்திருக்கவும் காரணங்கள் உண்டு. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே டிஸ்கவரியில் இருந்து மூன்று புத்தகங்களும் வந்து சேர்ந்துவிட்டதாகவும் கூறி, முக்கியமான ஒரு விசயம் பேச வேண்டும், புத்தகத் திருவிழாவிற்கு வரும்போது சந்தியுங்கள் என்றார்.

மைதானத்திற்குள் நுழையும்போதே, பார்வையில் படும் இடமெங்கும் பள்ளி கல்லூரி வாகனங்கள் நிரம்பியிருந்தன. ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிறப்புகளில் மேலோங்கிய ஒன்று பள்ளி கல்லூரி மாணவர்களின் இம்மாதிரியான வருகை.

பொதுவாகவே வார நாட்களின் பகற்பொழுதுகளில் சீருடைகளில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் மொய்க்கும். ஒவ்வொரு அரங்காகப் புகுந்து புகுந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள். நிதானமாய் புத்தகங்களைத் தேடி வாங்குவோருக்கு அந்தப் பிள்ளைகள் கூட்டம் சற்று அயர்ச்சியைத் தரும். விற்பனையாளர்களுக்கும் கூட்டம் மொய்ப்பதாகத் தோன்றும், ஆனாலும் அந்தப் பிள்ளைகள் பெரிதாய் ஒன்றும் வாங்க மாட்டார்கள். உண்மையில் மாவட்டத்தின் பல எல்லைகளிலிருந்தும் அப்படியான பிள்ளைகளை அழைத்து வருவதில் இருக்கும் உழைப்பும், சிரமமும் மிகக் கடினமானது. ஆனாலும் இந்தப் பிள்ளைகளின் வருகைதான் புத்தகத் திருவிழாக்களின் ஆணி வேர். இந்த அரங்குகளும், பிரமாண்டங்களும், புத்தகக் குவியல்களும் அவர்களின் மனதில் ஆழப்பதிய வேண்டிய சரியான காலத்திலேயே அவர்கள் அங்கு சுற்ற விடப்பட்டிருக்கிறார்கள். இதன் அருமை இன்று தெரியாது. எதிர்காலத்தில் புத்தகச் சந்தைகளுக்குள் புகுந்து வேட்டையாட ஊன்றப்படும் விதையே, ஆங்காங்க சிற்சில சிரமங்களையூட்டும் இந்த வருகைகள்.

2.45 மணியவில் அரங்குகளுக்குள் நுழைந்தேன். மதியத்திற்கே உரிய வெம்மை தகித்தது. மாணவர்கள் வரிசை வரிசையாக வெளியேறிக்கொண்டிருந்தனர். தம் மாணவர்களை வாகனத்திற்கு அனுப்ப பரபரப்பாக மூச்சிறைக்கத் தேடிக்கொண்டிருந்த எக்ஸெல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு பேசவும் முடியாமல், நகரவும் தோன்றாமல் பேசி விடைபெற்றார்.


நாள் 5 : செவ்வாய் 3.30 PM

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் உலகத் தமிழர் பேரவை அரங்கில் இருப்பதாகச் சொன்னார். புத்தகத் திருவிழா தொடங்கிய நாள் முதல் தொலைவில் இருந்து அவரைப் பார்த்தாலும், நேரில் சந்திக்கவேயில்லை. நான் சென்ற போது ஊடகவியாலர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தனர். எந்த பரபரப்புமின்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார்.

சேலத்தைச் சார்ந்த ஒரு வயதான தம்பதியினர் வைரமுத்து அவர்களின் படமொன்றை ஃப்ரேம் போட்டு எடுத்து வந்து, வைரமுத்துவிடம் சேர்க்க உதவி செய்யவேண்டுமென ஸ்டாலின் அவர்களிடம் வேண்டிக்கொண்டனர். அதில் இருக்கும் சாத்தியமின்மை குறித்து பொறுமையாக, விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.

புத்தகத் திருவிழா நிறைவு பெற்றதும் அடுத்து ஈரோட்டில் நடத்த வேண்டிய ஒரு திட்டம் குறித்து என்னிடம் பேசினார். (விபரங்கள் விரைவில் வரும்) இவ்ளோ பெரிய திட்டத்தை இரவு பகலாய் பார்த்துப் பார்த்து நடத்திக்கொண்டிருக்கும் சூழலில், எப்படி இதையும் கடந்து இன்னொன்றை யோசிக்க முடிகிறது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தற்போது சீனாவில் இருக்கும் அத்தாணியைச் சார்ந்த ரமேஷ்... அரங்குகளில் விசாரித்துவிட்டு என்னைத் தேடி வந்தார். நீண்ட நாட்களுக்கு முன்பு உரையாடிய நியாபகம். என்னையும் அழைத்துக்கொண்டு அரங்குக்குச் சென்று என் மூன்று புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு விடைபெற்றார்.

டிஸ்கவரி அருகே தம்பி மதியைப் பார்த்தேன். உலகம் உருண்டை என்பது போல், திரும்பத் திரும்பப் பார்த்தேன். இன்று பார்த்தால் தெரிகிறது, அவர் பரவலாக வேட்டை நடத்தியிருப்பது

நேரம் கடக்கக் கடக்க வைரமுத்துவின் உரை கேட்க ஆங்காங்க மக்கள் தேங்க ஆரம்பித்தனர். இன்னும் 2-3 மணி நேரம் காத்திருக்கப் போகிறார்களே என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது.

நாள் 5 : செவ்வாய் 4.30 PM

இரண்டு மணி நேரத்தில் கிளம்பிவிடும் திட்டத்தோடு தான் புத்தகத் திருவிழாவிற்குள் நுழைந்திருந்தேன். கொஞ்சம் நேரம் இருங்க, நாங்க வந்துடுறோம்!என்ற பிரதீபாவின் அழைப்பு நேரத்தை நீட்டித்தது. அப்பா, அம்மா மற்றும் குழந்தைகளோடு வந்த பிரதீபாவை காத்திருந்து சந்திக்க முதல் சந்திப்பு என்பதோடு இன்னொரு நெகிழ்வான காரணமும் உண்டு.

2015 ஜூலை 26ம் தேதி முதல் புத்தகத்தின் வெளியீடு இறுதி செய்த நிலையில், மூன்றாவது வாரம் வரை, புத்தகத்தின் தலைப்பை முடிவு செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். அப்போது எங்கோ ஒரு கட்டுரைக்குள் என் பார்வைக்குள் அகப்படாமல் ஒளிந்து கிடந்த கிளையிலிருந்து வேர் வரைஎனும் வரியை தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது பிரதீபாதான். அதன்பின் அந்தத் தலைப்பை வேறொரு கட்டுரைக்கு தலைப்பாக்கி, புத்தகத்தின் தலைப்பாகவும் வைத்தேன்.

நாள் 5 : செவ்வாய் 6.15 PM

6.00 மணிக்கு முன்பே வைரமுத்துவின் உரை கேட்க வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பியிருந்தது. உண்மையில் உரை கேட்க வந்தவர்களைவிட பார்க்க வந்தவர்களே அதிகம் எனத் தோன்றியது. அதிலும் அவரைப் பார்த்தபோது பரவசம் அடைந்தவர்களைக் காணுகையில் ஆச்சரியமும், அயர்ச்சியுமே வந்தது.

உரையின் ஆரம்பம் வெகுவாகக் கவர்ந்தது. முதல் 15 நிமிடங்களில் உரை ஆழமாகச் செல்லும் அறிகுறிகளைக் காட்டியது. பொதுவாக உரைகள் கேட்கும்போது அவ்வளவு எளிதில் கை தட்ட மாட்டேன். கை தட்டலுக்கென சில வழமையான சொற்களுண்டு, அதற்கு வரும் கை தட்டல், பேச்சாளனுக்கு சற்றே போதையூட்டினாலும், மகிழ்வூட்டாது. ஆனால் தான் அதிகமாய் நேசிக்கும் சொற்களுக்கு கை தட்டல் கிட்டும்போது பேச்சாளன் நிமிர்ந்துவிடுவான். அதுவே தொடர்ந்து இயக்கும்.

'ஒரு பெண்ணை சந்தித்தால் கடைசியா எப்போது பாடினீர்கள் எனக் கேளுங்கள்!?' எனும் அவரின் கேள்வி என்னைக் கை தட்ட வைத்தது. அதே நேரத்தில் பிரதீபாவும் கை தட்ட, சரியாக அந்தக் கை தட்டல் வைரமுத்து பார்வையில் சிக்கியது. தன் உரையில் அதை சுட்டிக்காட்டவும் செய்தார்.

அதன்பின் வெகு சீக்கிரத்தில் தன் பேச்சின் ஓட்டத்தை தவற விட்டுவிட்டார் என்றே தோன்றியது அப்போதிலிருந்து குறிப்புகளில் தேடவும், கதைகளைச் சொல்லி சமாளிக்கவும், யோசனை செய்த படியும் பேசினார். எனினும் மூன்று முறை மழை வந்து நனைத்தபோதும் 99% கூட்டம் அசையாமல் இருந்ததிற்கான காரணம், அந்த உரை கூட்டத்திற்கு பரிமாறப்பட்ட சுவையான தீனியே!

நாள் 7 : வியாழன் 2.00 PM

வார நாட்களின் மதியத்திற்கே உரிய மாணவ, மாணவியர் படை. நடை பாதையெங்கும் அலை மோதும் கூட்டம். ஈரோடு படைப்பாளர் அரங்கில் மீண்டும் புத்தகங்கள் தீர்ந்திருந்தன. இது ஒரு வகை மண் பாச வகைதான். அட ஈரோட்ல இருந்து எழுதுறாங்களா!?” என உள்ளூர்க்காரர்கள் எட்டிப்பார்க்கும்போது எளிதில் புத்தகம் அவர்கள் கண்களில் பட்டு தீர்ந்து போவதும் மகிழ்வானதுதான்.

டிஸ்கவரி அரங்கில் அயல் சினிமா பிரதிகள் விற்பனைக்கு வந்தடைந்திருந்தது. எடுத்து நிதானமாக, பக்கம் பக்கமாகப் புரட்டினேன் பொதுவாக இப்படியாக வரும் புது இதழ்கள் தனக்கென சில குறைகளை வைத்திருக்கும். அந்த நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்து அயல் சினிமா கச்சிதமாக, மிளிர்ந்து நின்றது. வேடியப்பன் தன் முயற்சியில் மிகச் சிறப்பாக வென்றிருக்கிறார்.

கல்லூரி மாணவர் அணியொன்று அரங்கிற்குள் நுழைந்து வேகவேகமாக ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் எடுத்தனர். அட இவ்வளவு ஆர்வமா புத்தகத்தை அள்ளுகிறார்களே என ஆச்சரியப்பட்டேன். அடுத்த கணம் வரிசையாக நின்று படம் எடுத்துக் கொண்டனர். தோன்றிய இடத்தில் புத்தகங்களை வைத்துவிட்டு கடகடவென வெளியேறினார்கள். இதுவென்ன யுக்தியென ஒன்றுமே புரியவில்லை. திக்கித்து நின்றேன். விற்பனைத் தம்பி, இப்படித்தான் சார் அடிக்கடி செய்றாங்க என்றார். தாம் கையில் வைத்திருந்த புத்தகத்தின் தலைப்புகூட அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன நிரூபிப்பதற்காக, நிறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் எனப் புரியவில்லை. இதற்கு நேர்மாறாக ஆறுதல் அளிக்கப்போகும் பெண்ணொருத்தியை இன்னும் கொஞ்ச நேரத்தில் சந்திக்கப்போகிறேன் என அப்போது தெரியவில்லை.

கவிஞர் அறிவுமதி மெல்ல நடந்து வந்தார். கண்டவுடன் புன்னகைத்தார். ஏற்கனவே சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தாலும் மறந்து போயிருந்தார். நினைவுபடுத்தி உரையாடினேன்.

பில் போடும் மேசையில் இருந்த பெயரிடப்படாத புத்தகம்புத்தகத்தை எடுத்த ஒரு பெண் அருகாமையில் இருந்தவரிடம் பேரு வச்சிருக்காங்க பாருங்க!என்றபடி பின் அட்டையைப் பார்த்ததும் விக்கித்து என்னைப் பார்த்தார். அதே நிற சட்டையில் நான் நிஜமாய் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தைக் கண்டு திடுக்கிட்டார். நான் பெரிதாய்ப் புன்னகைத்தேன்.

நாள் 7 : வியாழன் 3.00 PM

பள்ளி மாணவர்களின் குறுக்கும் நெடுக்குமான இலக்கற்ற ஓட்டம் ஒருவகையில், சற்று நேரம் அங்கிருக்கும் நமக்கே அலுப்பூட்டத்தான் செய்கின்றது. அவர்களின் வருகையை நான் குறை சொல்லவில்லை. அதைக் கொஞ்சம் நெறிப்படுத்த வேண்டுமென்றே சொல்கிறேன். அந்த நெறிப்படுத்தல் அமைப்பாளர்கள் கையில் மட்டுமே இல்லை. ஆசிரியர்கள் கையில் இருக்கின்றது. அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் எனப் பொறுப்பெடுத்து, மொத்த அரங்குகளை ஒவ்வொரு குழுவிற்கும், இவையிவையென தனியாகப் பிரித்து, அந்த அரங்களுக்கு மட்டும் அழைத்துச் சென்று, அங்கிருக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே எதிர்காலத்தில் பயனளிக்கும் எனத் தோன்றுகிறது. ஆசிரியர்களால் இயலாவிடில் தன்னார்வலர்களின் உதவியை அவர்கள் கோரலாம்.

இப்படியான திட்டத்தைச் செயல்படுத்த முதலில் ஆசிரியர்களுக்கு எழுத்தாளர்கள், புத்தகங்கள், பதிப்பகங்கள், அரங்குகள் குறித்து ஓரளவேணும் தெரிந்திருக்க வேண்டும். எங்களுக்கு இருக்கிற வேலைகளில் இதெல்லாம் சாத்தியமாவென ஆசிரியர்கள் சலித்துக்கொள்ளக்கூடாது.

இம்மாதிரி மாற்றி யோசிப்பது மட்டுமே அந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை, தேடலை அதிகரிக்கும். இல்லாவிடில் வெறும் பாடப்புத்தகங்களோடு, தொலைக்காட்சிகளோடு, மாய விளையாட்டுகளோடு பிள்ளைகள் சுருங்கிப் போகும் சாத்தியமுண்டு. இதை எங்கிருந்து, எவ்விதம் துவங்குவது என்பதுதான் யோசனையாக இருக்கின்றது. ஆனால் விரைவில் துவங்கித்தான் ஆகவேண்டும்.



நாள் 7 : வியாழன் 4.30 PM

கே.எஸ்.ஆர் சமுதாய வானொலி சார்பில் இரண்டு மாணவர்கள் வந்தார்கள். பேட்டி என்கிற ரீதியில் சில கேள்விகளைக் கேட்டார்கள். சற்றே அவர்களுக்கு புத்தகத் திருவிழா வாசகர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் என வகைகளைச் சொல்லிக்கொடுத்து பேட்டியெடுக்க அனுப்புதல் நலமெனத் தோன்றுகிறது.

அவ்வப்போது குறிப்பிட்ட சில புத்தகங்களைத் தேடி வரும் இளைஞர்களைக் காண முடிந்தது. கோபி பி.கே.ஆர் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு தமிழிலக்கியம் படிக்கும் லாவண்யா என்கிற மாணவி நீளமான ஒரு பட்டியலோடு வந்து அண்ணன் பாரதி இளங்கோவிடம் இதெல்லாம் எங்கு கிடைக்குமெனக் கேட்டார். இவரும் அந்த புத்தகங்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை குறித்துக் கொடுத்தார்.

ஒரு முதலாம் ஆண்டு மாணவி வகை வகையான தெரிவுகளோடு வந்து புத்தகங்களை வேட்டையாடுவது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கை தரமிகு ஒரு விதைக்கு நிகரானது. தனி மரமாக வளர்ந்தோங்கி நிற்கும். வளர்ந்தோங்கி தனித்து நிற்கும் மரத்தை நோக்கி ஒரு கட்டத்தில் பறவைகள் வரும். அந்தப் பறவைகள் கடத்தி வரும் விதைகளில் அங்கொரு வனம் உருவாகும் என்றெல்லாம் என் கற்பனையை நீட்டிக்கொண்டிருந்தேன்.

கவிஞர்கள் மோகனரங்கனும், மகுடேஸ்வரன் அவர்களும் வலம் வந்தார்கள். வழக்கத்தை விட அண்ணன் மோகனரங்கன் பேச்சில் கூடுதல் உற்சாகம் காட்டினார். கோவையிலிருந்து கல்லூரி மாணவரான சதீஷ் வந்தார். சமூகத்திற்கு சேவையாற்றத் துடிக்கும் அவரின் ஆர்வம் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியது.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வருகை தந்தால். நூல்வெளியில் அவருடைய புத்துமண் நாவலுக்கு நான் எழுதிய விமர்சனத்திற்கு மகிழ்ச்சி பகிர்ந்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பு தம்பி கவிமணி கேட்டார் என எழுதிக்கொடுத்தது எப்போது மோட்சம் பெற்றதெனத் தெரியவில்லை. இனிதான் தேட வேண்டும். சமீபத்திய என் புத்தகங்கள் குறித்து விசாரித்து உறவெனும் திரைக்கதையை வாங்கிச் சென்றார்.

சிந்தனை அரங்கில் ஐந்து மணி வெயிலிலேயே இடம் பிடித்து அமர்ந்திருந்த அன்பிற்குரிய ஆசிரியை கிருஷ்ணவேணியை பேய் மழையொன்று இடி மின்னலோடு வந்து விரட்ட வேண்டுமென சபித்துவிட்டு கிளம்பினேன்.



நாள் 9 : சனி 5.00 PM

தொடர் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளால் நகரமுடியாமல் களைத்துக் கிடந்த சூழலில் நண்பர் முரளியின் அழைப்பு வந்தது. ஒருவேளை புத்தகத் திருவிழாவிற்கு வருவாரோ என்று நினைத்தபடியே அழைப்பை எடுத்தால் அண்ணா... காளை மாடு சிலைட்ட வந்துட்டேன். புக் ஃபேர்ல இருக்கீங்ளா!?” என்றார். சரி... வந்துடுங்க... வந்துடுறேன்என அடித்துப் பிடித்து ஓடினேன். அதற்குள் பாதி அரங்குகளில் வேட்டை நடத்தி முடித்திருந்தார்.

தேடித்தேடி வாசிக்கும் நாட்டம், விரல் சுட்டும் திசையெங்கும் அங்கிருக்கும் புத்தகங்களை அள்ளும் வேட்கை என முரளி அதீதமான வாசிப்பு கொண்டவர்தான். ஏழாண்டுகளுக்கு முன்பாக அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கங்கணம் வாசித்தவர் எனும் அறிமுகத்தோடுதான் நாங்கள் மோகனூரில் முதன்முறையாக சந்தித்தோம். அதன்பின் எழுத்து குறித்தும், மனிதர்கள் குறித்தும் சந்தர்பங்கள் வாய்க்கும்போதெல்லாம் உரையாடுவதுண்டு. அதுவும் நேரிடைச் சந்திப்பென்பது ஆண்டுகொன்று வாய்ப்பதே அரிது.

அதன் பொருட்டு, இன்று இவ்வளவு பக்கத்தில் வாய்த்திருக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாதென்றே விரைந்தோடினேன். அப்போதுதான் இயல்வாகை அரங்கில் கொக்குகளுக்காகவே வானம்புத்தகம் வெளியீடு நடந்துகொண்டிருந்தது.

புத்தக வேட்டை முடிந்து வெளியே வரும்போது சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. இதே அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் என் கையில் இரண்டு புத்தகங்களைத் திணித்து இதே போன்றொரு நாவலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என மொய் வைத்தது நினைவில் கனத்துக் கிடந்தது. அதற்கு பதிலில்லாததால் நானும் நினைவூட்டவில்லை, அதே காரணத்தைப் புரிந்துகொண்டு அவரும் கேட்வில்லை.

வெளியே வந்தபின் நீண்ட நேரம் சமீபத்திய கல்லூரி அனுபவங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சில அனுபவங்கள் பேசப் பேச மெருகேறுகின்றன. சில அனுபவங்கள் கரைகின்றன. இரண்டுமே தேவையானதுதான்.

நாள் 9 : சனி 7.00 PM

நண்பர் முரளியை அனுப்பிவிட்டு நானும் கிளம்பிவிடலாம் என நினைத்த நேரத்தில் நண்பர் ஜெயபாலன் வந்தார். ஃபேக்பைப்பர் பின்னால் போன குழந்தைகள் போல நான் மீண்டும் அரங்களுக்குள் நுழைந்தேன்.

மீண்டும் தொடங்கியது கிழக்கும் மேற்குமான நடை, சந்திப்புகள், அளவளாவல்கள். தம்பி தனபால் இணைந்து கொண்டார். ஜெயபாலனுக்கும் தனபாலுக்கும் இடையே ஒரு மர்ம ஃபேஸ்புக் ஐடி குறித்து விசாரிப்புகள் நடந்து கொண்டிருந்தது. பெரியவர்கள் கிருஷ்ணசாமி, சாந்தா மேடம் ஆகியோர் பேசிக் கடந்தார்கள்.

நண்பர் பாலா தன் மனைவியோடு வந்திருந்தார். ஜனவரி வெளியீட்டின்போது பெயரிடப்படாத புத்தகம்னு ஒரு பேரா என பிடித்தும் பிடிக்காமலும் வாங்கிச் செல்ல, அந்தப் புத்தகம் அவர் மனைவிக்கு ரொம்பவும் பிடித்த கதையை முன்பே அழைத்துச் சொல்லியிருந்தார்.

பாரதி புத்தகாலயத்தில் பிரியாணி சிறுகதை குறித்து ஒரு பெரும் விவாதம் ஓடியது. அன்று காலை எங்கள் ஈரோடு வாசல் குழுமத்தில் அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்த, சற்று நேரத்தில் அது மொத்தமாகத் தீர்ந்து போக, அடுத்து வருபவர்களுக்கு இல்லையில்லையென்று சொல்லி சலித்துப் போயிருந்தார்கள். சில நேரங்களில் சலிப்பே வெற்றியின் முழக்கம்.

முனைவர் தனபாக்கியம் குடும்பத்தோடு தென்பட்டார். அவர்கள் வீட்டு சின்னக்குட்டி கை கொள்ளாத அளவு பணத்தை சுருட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு அரங்காக தாள் உருவி செலுத்திக் கொண்டிருந்தாள். அது உண்டியல் காசு எனும் கதை முந்திய தினம்தான் குழுமத்தில் பகிரப்பட்டிருந்தது. தம்பி சங்கரராம பாரதி, கிருஷ்ணவேணி, மகேஸ்வரி மதன் என எல்லோரையும் அடுத்தடுத்து சந்திப்பதும் பேச்சுமென நேரம் மூத்திருந்தது.

புத்தக விற்பனை குறித்து இரு வேறு கருத்துகள் ஆங்காங்கே பகிரப்பட்டன. கருத்து எதுவானாலும் உண்மை, கடும் வறட்சி, பணம் மாற்று, வரி விதிப்பு, தொழில்களில் முடக்கம் எனும் கடினமான சூழலில்தான் இந்தத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து Print-On-Demand வடிவில் அச்சிடப்படுவதால் சில நூல்கள் யானை விலை, குதிரை விலை இருப்பதையும் யோசிக்க வேண்டிய தருணம்.



நாள் 12: செவ்வாய் 2.00 PM

காலை முதலே மேக மூட்டம் தான். தகிக்கும் வெயில் இல்லை. மதியம் 2 மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தேன். தம்பி செல்வமுரளி கிருஷ்ணகிரியில் இருந்து நண்பர்களோடு புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தார்.

அரங்குகளில் விற்பனை குறித்துக் கேட்கும்போது முந்தைய தினத்தைக் கொண்டாடினார்கள். இதுவரையில் இருந்ததிலேயே இந்த திங்கள் தான் சிறப்பு என்றனர். இன்றைய மாலை அதைவிடச் சிறப்பாக இருக்கப்போவது அவர்களுக்கும் தெரிந்திருக்கலாம். காரணம், இது கடைசி தினம். இதுவரை எட்டிப் பார்க்காதவர்களும்கூட, தவற விட்டுவிடக்கூடாதே என்று தவிப்போடு ஓடிவரும் கணம் இன்றைய மாலைப் பொழுது.

ஆனால் மதியம் அதீத மந்தமாய்த் தோன்றியது. கோவையிலிருந்து நண்பர் ஆறுமுகம், சென்னிமலை அருகே இருக்கும் தன் கிராமத்து அரசுப் பள்ளி மாணவ மாணவியர் ஐம்பது பேரை பெற்றோர்களோடு தனி பேருந்து ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தார். பிள்ளைகள் வலம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கும் விதத்தில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் சுமார் ஐம்பது தலைப்புகளில் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் எழுத்தாளர் வா.மு.கோமு ஆகியோரோடு பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வா.மு.கோமு குழந்தைகளுக்காக இந்தாண்டு ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். சமரசம் செய்துகொள்ளாத எழுத்து நடையில் குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தககங்கள் தம் நோக்கத்தில் சிறப்பெய்தும்.

ஆரூரன் பரபரப்பாக அரங்குகளுக்குள் தெரிந்தார். இந்த ஆண்டின் அவரின் முதல் வருகை. ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறேன் எனச் சென்றார். அப்போதுதான் அவர் தாமதித்து வந்த கதையை வாட்சப்பில் வாசித்தேன். சுற்றி முடித்து வெளியே வந்தவரின் கையில் கணிசமாகப் பாரம் கூடியிருந்தது. புத்தகத் திருவிழா என்பது மலர் தோட்டத்திற்குள் வண்டு நுழைவது போலத்தான். கட்டுப்பாடுகளோடெல்லாம் திரும்ப முடியாது மக்களே!

நண்பர்கள் ஆரூரன், ஜெய்லானி, சங்கரராமபாரதி, செல்வமுரளி என ஒவ்வொருவராகக் கூடி, தேநீர் கடைப் பக்கம் ஒதுங்கினோம்.

ஆற்றில் வெள்ளம் மெல்ல அதிகரிப்பது போல, அரங்குகளில் மக்கள் நடமாட்டம் கூட ஆரம்பித்தது.

நாள் 12: செவ்வாய் 4.30 PM

ஐந்து மணிக்கு கிளம்பிவிடும் திட்டத்தோடு மீண்டும் ஒரு சுற்று மட்டும் சென்று சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். யாவரும்.காம் ஜீவகரிகாலனோடு உரையாடல் தொடங்கியது. அவருடனான உரையாடல் அவ்வளவு எளிதில் நிறைவடைந்து விடுவதில்லை.

சமீபத்தில் சந்தித்திடாத பலதரப்பட்ட நண்பர்களை இந்த மாலைப்பொழுது சந்திக்க வைக்கப்போகிறதென்பதும் அப்போது புரியவில்லை. கல்லூரி வகுப்புத் தோழன் அண்ணாமலை, பத்தாண்டுகளுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து உரையாடும் பேராசிரியர் மாதவன் என ஆச்சரியமும் மகிழ்ச்சியுமான சந்திப்புகள். அரிமா சங்க நண்பர் அண்ணன் விஜயகுமார் அவர்களோடு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த உரையாடல் மிக நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது. குமலன் குட்டை பள்ளி  ஆசிரியர் சங்கர் அவர்களோடும் நீள் உரையாடல்.

ஃபேஸ்புக் நண்பர் உறவெனும் திரைக்கதை புத்தகத்தோடு பில் போடு இடத்திற்கு வந்தார். நம் கண் முன்னே நம் புத்தகம் விற்கப்படுவது குறித்து முதல் நாள் எழுதியிருந்ததை நினைவு கூர்ந்தார். மூர்த்தியை சந்தித்தேன்

வாசல் குழுமத்திலிருந்து ஜெயபாலன் ஒரு பக்கம் இறுதி நாளுக்கான வேட்டையைத் தொடங்கியிருந்தார். லதா சுந்தர் மகள்களோடு ஒவ்வொரு அரங்காக ஏறியிறங்கிக் கொண்டிருந்தார். ஆர்த்தி அள்ளிக்கொண்டு வந்திருந்த பெருந்தொகை புத்தகங்களாக மாறியிருந்தது. தம்பி தீனா தன் ஓட்ட அனுபவத்தை புத்தகமாகக் கொண்டு வரும் தினம் குறித்து பேச ஆரம்பித்தார். இதுதான் சேர்க்கை என்பது, ”எதனோடு இருக்கிறாயோ அதுவாகவே மாறிப்போய்விடுவாய்



நாள் 12 :  செவ்வாய் 7.30 PM

கல்வித் துறைச் செயலர் உதயச்சந்திரன் நிறைவு விழாவிற்கு வருகை தருவார் என்பதற்காக பெருந்தொகையிலான ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் கூட்டம். ஒரு கட்டத்தில் அவர் வரவில்லையென்பதை அறிந்தவர்கள் சற்று ஏமாற்றத்தோடு அரங்குகளின் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தனர். ரங்குகள் பெருங்கூட்டமொன்று புத்தக வேட்டையில் இருப்பதைக் கண்டு அவர்களும் களம் இறங்கினார்கள். ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியை கையில் பெரும் பொதியோடு இரண்டாம் முறையாக பார்த்தேன்.

சண்முகப் பிரியா, பள்ளி மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவதற்கென்று பெருமளவில் புத்தகம் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்கு தான் ஒதுக்கி வைத்திருந்த நிதியில் கழிவுகள் போக மிஞ்சிய தொகையில் தனக்காக புத்தகம் வாங்கவேண்டுமென்று உற்சாகமாக அடுத்த சுற்று பயணப்பட்டார்.

இரவு 11 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும் என மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்து மகிழ முடியாத வருத்தத்தைத் தணிக்க இந்த வருடம் திகட்டத் திகட்ட சுற்றியாகிவிட்டது. இருப்பதையெல்லாம் வாசித்து முடித்து விட்டுத்தான் இனி புது புத்தகங்கள் எனும் கட்டுப்பாடுகளைத் தகர்த்து தேர்ந்தெடுத்த சில புத்தககங்களை வாங்கியாவிட்டது.

இனி...............

அதுதான் சரி... விடை பெறுதலே தேவை....

கூடிப் பழகிய அரங்குகளிலிருந்த நண்பர்களிடம் விடைபெற்று சற்றே கனத்த மனதோடு வெளியே வரும்போது, புறப்படும் அவசரத்தில் அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் சில ஆசியர்களோடு உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவரின் உற்சாகம் ஒரு பாடம். அது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய வித்தை.
#WhyILoveErodeBookFestival


அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சந்திப்போம்


நன்றி. வணக்கம்!

4 comments:

கிறுக்கல்கள்/Scribbles said...

எழுத்து ஒரு கலை. அது உணர்வு பூர்வமாக எழுதும்போதும், உண்மை இருக்கையில் அது உள்ளத்தை தொடுகிறது. வாழ்க! வளர்க!!

Avargal Unmaigal said...



புத்தக திருவிழாவை அப்படியே நேரில் காண்பது போல ஒரு உணர்வு.. சென்றது மட்டுமல்லாமல் அதை அழகாக சொல்லிஸ் சென்றவண்ணம் அருமை நன்றி

Venkatachalam Athappan said...

அருமையான பதிவு எழுத்தரே..... கண்ணில் பிம்பங்கள் நிழலாடுகிறது

Venkatachalam Athappan said...

அருமையான பதிவு எழுத்தரே..... கண்ணில் பிம்பங்கள் நிழலாடுகிறது