தேயும் கதகதப்பு


சீராக வெட்டப்பட்ட
அந்த புல்வெளி ஓரத்தில்
தனித்திருக்கும் அந்த நீள் இருக்கையில்
கடைசியாக அமர்ந்தெழுந்து போன
யாரோ ஒருவரின் கதகதப்பு
தீர்ந்து கொண்டிருக்கிறது
வெப்பம் தீருமிடத்தில்
தனிமை வந்தமர்கிறது
தனிமையின் மொழிக்கு
வடிவமில்லை
இலக்கமணமில்லை
ஒலியுமில்லை
எனினும் இடைவிடாது
ஏதோ ஒன்றைப்
பகிர்ந்துகொண்டேயிருக்கிறது
கனம் கூடுகிறது
இன்னொருவர் வந்தமரும் வேளையில்
தனிமை தீரலாம்
மௌனம் கலையலாம்
அந்த இன்னொருவர்
ஒரு வண்ணத்துப் பூச்சியெனின்
காதல் கூடும்!

1 comment:

ராஜி said...

காதல் கொள்ள பட்டாம்பூச்சிகூட போதும்