ஈரோட்டில் பசுமை பாரதம் சார்பில் ‘சித்தர்கள்
மரபு’ எனும் தலைப்பில் அன்பிற்கினிய கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் இன்று உரை நிகழ்த்தினார்.
காலை 10 மணிக்கு எளிமையாய் துவங்கிய உரை மாலை 4.15 மணிக்கு நிறைவடைந்தது.
சித்தர்கள் குறித்து எந்தவிதமான அறிதலும்,
புரிதலும், நோக்கமும் இல்லாமல்... ஆறுமுகத் தமிழன் அவர்களைச் சந்திக்க வேண்டும், உரையைக்
கேட்கவேண்டும், ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுள்ளிட்ட எளிய நோக்கங்கள் மட்டுமே
எனக்கு.
காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரையிலான
இதுபோன்ற உரை அல்லது பயிலரங்குகளில்... சில பல ஆண்டுகளாக பலரை இப்படி அமர்த்தி பாடாய்ப்படுத்தும்
நிலையில் இருக்கும் நான், இப்படி அமர்ந்து குறைந்தது 15 வருடங்கள் இருக்கும். ஆக, என்னால்
நாள் முழுக்க சுணங்காமல் உட்கார முடியுமா என்பதே எனக்கான உளப்போராட்டம். எந்தச் சுணக்கமும்
தடுமாற்றமும் உருவாகாத வண்ணம் தன் உரை முழுக்க அமர வைத்த ஆறுமுகத் தமிழன் அவர்களுக்கு
பாராட்டுகள் என்பதைவிட பெருமை மிகு நன்றிகள்.
உரை கேட்கும்போது குறிப்பெடுத்துக்கொள்ளும்
முகமாய், அதை ‘ஈரோடு வாசல்’ வாட்சப் குழுமத்தில் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பை
கீழே பகிர்கிறேன்.
- சித்தர் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டவை சுவாரஸ்யமானது
- தன்னையறிதல் என்பது எல்லைகளை அறிதல்
- மனம் என்பது சட்டி போல்.... எதைப்போட்டாலும் வாங்கி வைத்துக்கொள்ளும்
- புத்தி classify செய்வது
- முடிவெடுப்பது அகங்காரத்தின் உதவியோடு
- முடிவெடுத்து சேகரிப்பது சித்தம்
- தன்னையறிந்தொழுகுபவர் தன்னை மறைப்பர். இயல்புகளை display செய்யமாட்டார்கள்
- தாழ இருங்கள்.. தன்னை மறையுங்கள்
- வெளியில் இருப்பதுதான் உள்ளே இருக்கிறது.. உள்ளே இருப்பதுதான் வெளியே இருக்கிறது
- மனத்தைக் கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு மூக்கிலேயே இருக்கிறது - மூச்சு
- பரபரப்பாக இருக்கும் போது, உடல் சூடாக இருக்கும்போது மூச்சு வலது பக்கம் ஓடும். குளிர்ந்திருக்கும்போது இடது பக்கம்.
- மூச்சு நம் கட்டுப்பாட்டில்
- நம்பிக்கையின் ஆற்றலில் பல்வேறு காரியங்கள் நடக்கும்
- சுவாசிக்கும் முறையே மருந்து
- பசித்திரு - விழித்திரு – தனித்திரு : உணவு - உறக்கம் - உறவு குறை
- சித்தர்கள் எப்போதும் ஒரே கருதுகோளைக் கொண்டிருக்க வேண்டியதில்லை
- எங்கு நிறுவனமயமாகிறதோ அங்கு ஊழல் தொடங்கும்
- சித்தர்கள் தனித்தனி ஆட்கள். குழு ஆகவில்லை
- தனி ஆளாய் உரத்த குரலில் பேசலாம்... அமைப்பில் இருந்தால் சமரசங்கள் கூடும்
- சித்தர்கள் தனி ஆட்கள்... சுதந்திரமான கருத்து இருந்தது
- அமைப்பு இல்லாததால் பொது கருத்து கிடையாது
- அமைப்பு இருந்தும் தனித்தனி கருத்து கொண்டிருந்தோர் காங்கிரஸ் மட்டுமே!
- இது முறை, இது மரபு என fix ஆகாதே - சித்தர்கள்
- நிலா என விரல் சுட்டினால் நிலாவைப் பார். விரல் நகத்தில் இருக்கும் அழுக்கை பார்க்காதே
- நிறுவனங்கள் உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைக்கச்சொல்லும்
- தமிழர் மரபில் ஆசனங்கள் பிரதானமில்லை
- ஆசனத்தின் நோக்கம் உடம்பை சரி செய்து மூச்சை எளிதாக்குவதே
- பித்தளையை ஆடகமாக செய்தல் - பித்தலாட்டம்
- செத்தால் தெரியும் : அருமை / நாற்றம்
- பட்டுத்துணிக்கு தீட்டு கிடையாது
- அளவியல் ரீதியாக (logical) கடவுளை நிரூபிக்க முடியாது
- ஆப்பிரிகனின் கிருஸ்து கருப்பாகத்தானே இருக்க வேண்டும்
- கருத்து என்பதற்கு கருதுபவனும், கருதும் பொருளும் போதும்
- சடங்குகள் வியாபாரத்தை நோக்கி நகர்த்தும்
- சித்தர் வழியில் வரும் ஒரே பெண் ஔவையார்
- பட்டினத்தார், ஔவையார் தலா மூன்று பேரின் தொகுப்பு
- ஒற்றைக் கடவுளை வழிபடும் மரபு வைதீகத்தில் இல்லை
- உடன்பாட்டு மரபு, மறுப்பு மரபு
- அனுபவித்து, துய்த்து பின் கடந்து போ
- சித்தர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி சித்தர் பட்டியலில் இணைக்கலாம்
- சித்தர் மரபில் குரு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் குருவின் கருத்து தன் கருத்தாய் தொடர வேண்டியதில்லை
- நெற்றிக்கு நடுவே உற்று உற்றுப் பார்க்க தெளியும் - திருமந்திரம்
- இன்னொருவர் இருந்தால்தான் அடையாளம் சொல்ல பெயர் தேவை. யாருமே இல்லாவிடில் தனித்திருக்க ஒருவனுக்கு பெயர் எதற்கு
- நிறுவனமயமாகாததால் சித்தர்கள் காணாமல் போனார்கள்....
- நிறுவனமானாலும் நீர்த்துப் போகும்
- காலக்கணிதம்... செய்ய வேண்டிய காலத்தைக் குறிக்கவே
- காலக் கணிதம் ஜோசியத்திற்கானதில்லை. சித்தர்கள் ஜோதிடத்தை போற்றவில்லை
- சித்தர்கள் பெண்களை இழிவு செய்யவில்லை
- சித்தர்கள் சாதாரணமான சனங்களின் மத்தியில் வாழ்ந்தவனே
- ஊழ் – வினை : வினை என்பது நீங்கள் செய்ததையொட்டி விளைவது. ஊழ் என்பது நாம் எதும் செய்யாமலே விளைவது.
பொறுப்பி : இவை உரையில் பகிர்ந்துகொண்டவை
அல்லது அப்போது நான் புரிந்துகொண்டவை. மேலதிக விபரங்கள், விவாதங்களுக்கு அவரை அணுகுவதே
நலம்.
1 comment:
பயணம் அருமை
சித்தர் கருத்துகள் அறிமுகம் அருமை
Post a Comment