ஆப்பிள் தேசத்துக்காரியும் குட்டிக் கரடு தீ முட்டலும்
ஆடுமேய்க்கும் குட்டிக்கரட்டிலும் கூட
அவளுக்கு ஆப்பிள் குறித்த கனவு வளர்ந்தது
ஆப்பிளை பாலில் அரைத்து
நதியா குளிப்பதாக அப்போது கதையிருந்தது
முனியப்பன்கோவில் சந்தையிலிருந்து
பேரிக்காய் மாம்பழம் சப்போட்டாஎன
கேட்காததெல்லாம் வாங்கி வந்தாலும்
காசுக்கு கேடென ஒரு நாளும்
ஆப்பிள் மட்டும் வாங்கி வரமாட்டார்கள்
காலம் அவளை அயல் தேசத்தில்
ஆப்பிள் தோட்டத்தில் ஆராய்ச்சி செய்பவருக்கு
வாழ்க்கைத்துணையென மாற்றி மாயம் செய்தது


உலகின் தரம் மிகுந்த ஆப்பிள் வகைகள்
பெட்டிகளில் அடைபடாத மெழுகு பூசப்படாத
விலை கேட்டு மிரண்டு ஓடவேண்டியிராத
ஆப்பிள்களுக்கு மத்தியில் ஆசை தீர்ந்த ஒருநாளில்
பாறையிடுக்கில் தீ மூட்டி சுட்டுத் தின்ற
வேர்க்கடலை நினைவில் தகிக்கத் தொடங்கியது


வேர்க்கடலைச் செடி தேடி
கூகுளில் யாத்திரை செய்து பார்த்தவள்
அன்றைய கனவில் குட்டிக் கரட்டில்
பாறை மறைவில் தீ மூட்டிக் கொண்டிருந்தாள்
தீ மூளாமல் புகைந்த படி மட்டுமேயிருந்தது.

-