வேடிக்கைகள் சூழ்ந்திருந்த காலம்



மனித சமூகம் கண்டுபிடித்த மிக எளிய, அழகிய பொழுதுபோக்கு வேடிக்கை பார்த்தலாகத்தான் இருக்க வேண்டும். முன்பின் காணாததைக் கண்டாலும் சரி, ஏற்கனவே கண்டதையே மீண்டும் காண நேரிட்டாலும் சரி, அதனை சுவாரஸ்யமாய் மிகமிக சுவாரஸ்யமாய் ரசிப்பதென்பது ஒரு வரம். காலம் காலமாய் நிகழாத ஒன்று நம்மிடையே நிகழும்போது, அதை ஆச்சரியமாய் வேடிக்கை பார்த்தலென்பது மிகப் பிடித்தமானதாகிறது.

வேடிக்கை பார்த்தலின் பொற்காலம் என்றால், அது என் பால்யம் தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை எனச் சொல்லலாம். அன்றைக்கு வீட்டிலும், பள்ளிலும் வழமையாய் நிகழும் காரியம் தவித்த எல்லாமே வேடிக்கைதான்.

கிராமத்தில் இருக்கும் வரை வேடிக்கை பார்த்தல் என்பது எப்போதும் சலிப்பூட்டாத ஒன்று. அணையிலிருந்து வாய்க்காலில் பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் தண்ணீர் நம் பகுதியைக் கடக்கையில், அதுநாள் வரைக் கிடந்த கழிவுகளையெல்லாம் கரைத்து அடித்துக் கொண்டு வருமே… அதில் துவங்கி, இரவுகளில் கரைகளில் குழாய் போட்டு தண்ணீர் திருடுவதைத் தடுக்க, ஆய்வு செய்ய வரும் பொதுப்பணித் துறையினரின் ஜீப் வெளிச்சம் கண்டு, அவசர அவசரமாய்க் குழாயை இழுத்துக்கொண்டு வயற்காட்டிற்குள் பயிர்களுக்கு இடையே ஓடி ஒளிவது வரை எல்லாமே வெளியிலிருந்து பார்க்கையில் வேடிக்கைதான்.

கிராமங்களில் சினிமா போஸ்டர் ஒட்டும் நிகழ்வு தனித்துவமானது. அருகில் இருக்கும் ஊரிலிருந்த சினிமா தியேட்டருக்காக போஸ்டர் ஒட்ட வரும் ஆட்களிடம் தனித்த ஒரு கர்வம் இருக்கும். இத்தனைக்கும் போஸ்டர் ஒட்டப்படும் படங்கள் ஒன்றும் அப்போதைய வெளியாகும் படமொன்றும் கிடையாது. எப்போதோ வெளியாகி ஒவ்வொரு படிநிலைகளாய் இறங்கி, படச்சுருள் தேய்ந்து போயிருக்கும் நிலையில், அந்த மாதிரியான திரையரங்கை எட்டியிருக்கும். போஸ்டர் ஒட்ட வேண்டிய இடத்திற்கு அவர் வந்து சைக்கிள் நிறுத்தியதுமே, “யேய்… படம் மாத்துறாங்கடோய்….” என திக்கெட்டிலுமிருந்து கூடுவோம். முன் பக்கம் மாட்டியிருக்கும் பசையை அள்ளி ஏற்கனவே இருந்த போஸ்டர் மேல் தடவி முடிக்கும் வரை ”என்ன படம்… என்ன படம்..!?” என நச்சரிப்போம். எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்தோடு பசையைப் பூசிவிட்டு, சிக்கிள் பின்பக்கம் இருக்கும் மடித்த போஸ்டரை எடுத்து அருகாமைச் சுவற்றின் மேல் வைத்து பின்பக்கம் பசை தடவுவார். ஒருவழியாக அதைத் திருப்பி ஏற்கனவே பசை தேய்த்த இடத்தில் ஒட்டுவார். பல நேரங்களில் அது மேல் பாதி அல்லது கீழ் பாதி போஸ்டராகத்தான் இருக்கும், மீதிப் பாதி போஸ்டரும் ஒட்டி முடிக்கும் வரை இருக்கும், ‘அது என்ன படமாக இருக்கும்’ எனும் பரபரப்பு வார்த்தைகளுக்குள் அடங்காதது.

பகலில் பூம்பூம் மாட்டோடு குறிசொல்ல வந்து அரிசியோ, நெல்லோ வாங்கிப்போக வரும் நபரை எளிதில் கையாண்டுவிடும் நாங்கள், இரவுகளில் குடுகுடுப்பையோடு வரும் சாமக்கோடங்கியை கதவிடுக்கு வழியாக பயந்துகொண்டே ரகசியமாகத்தான் அணுகுவோம். அந்த பயம் தோய்ந்த வேடிக்கைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சுடுகாட்டிலிருந்து நேராக வருவதாக சாமக்கோடங்கிகள் குறித்துச் சொல்லப்படும் கதைகளும் திகில் நிறைந்தவையாகவே இருக்கும். இரவுகளில் அவர் சொல்லும் குறிகளுக்காக பெரியவர்கள் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருக்க, இருளில் நாங்கள் கண்களைத் தீட்டிக் காத்திருப்போம்.

எங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளோடு கணவன்-மனைவியாய் சைக்கிளில் வந்து, மாரியம்மன் கோவில் வாசலில் தொழிலை ஆரம்பிக்கும் ஈயம் பூசுபவர்களும் மிகுந்த சுவாரசியம் கொண்டவர்களே! மரத்தின் நிழலைத் தேர்ந்தெடுத்து, ஓரமாய் கொஞ்சம் குழி தோண்டி அடுப்பு அமைத்து, அதில் துருத்தியைப் பொருத்தி, கரி போட்டு நெருப்பு மூட்டி துருத்தியால் இயக்கி ஈயம் பூசுபவர்கள் காட்டும் வேடிக்கையும் அலாதியானதுதான். தீய்ந்து எரியும் கரியும் வாசனையும், அந்த அனலும், உருகிய ஈயத்தையை பாத்திரத்தில் பூசும் லாகவமும் பிரமிக்கச் செய்யும். அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டும் வரை சோறு தண்ணியின்றி அங்கேயே தவம் கிடப்போம்.

ஐஸ்காரர்களுக்கென்று சில யுக்திகள் இருக்கும். எங்கெல்லாம் அந்த ”ப்பூம்ம்ந்ந்த்த்” ஒலிப்பானை ஒலிக்க வேண்டும் எனும் வித்தை தெரியும். காடு கரையெல்லாம் கடந்து வரும் அந்த சைக்கிளின் முன்பக்கம் ஒரு சாக்குப்பை இருக்கும். பழைய இரும்புக்கு ஐஸ் கொடுக்கும் காலம் அது. விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளின் ஐஸ் ஆசைக்கு, கட்டை வண்டியின் கடையாணி வரை களவு போன விவகாரங்களும் உண்டு. அப்படியான முக்கியமான பொருட்கள் ஐஸ் வண்டிக்காரரிடம் போகும்போது, அதனருமை தெரிந்தும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் புரிந்தும், அவரே வீடு தேடி வந்து கொடுத்து சிக்கல் உண்டாக்கிய கதைகளும் நடந்ததுண்டு. ஐஸ்பெட்டிக்குள் அவர் கை விட்டு எடுக்கும்போது வரும் ஐஸ் நிறத்தையொட்டி எனக்கு, உனக்கு என அடிதடியே நடப்பதுமுண்டு.



ஊருக்குள் இல்லாமம் வயல் வெளிகளுக்குள் முடங்கிப் போகின்றவர்களுக்கு பெரிதாய் எதும் வேடிக்கை பார்க்கக் கிட்டிவிடாது. அதனால் உழுவதும், விதைப்பதும், களையெடுப்பும், அறுவடையும் கூட வேடிக்கைகள்தான். கிணறு வெட்டுவதும், ஆழ்துளைக் கிணறு துளையிடுவதும் சொல்லொணா வேடிக்கைகள். இதில் பரிதாபமான ஒரு காரியத்தை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு அமையும். சேற்று வயலென்பதே ஒரு ஆகச்சிறந்த விளையாடற்களம்தான். சேற்று வயலில் உழும் டிராக்டர் இன்னும் இதம். கரும்பு ஆலைகளுக்கோ, மஞ்சள் வேக வைக்கவோ அடுப்புக் குழி தோண்டப்பட்டிருக்கும் நிலத்தில் நெல் நடவு செய்ய சேற்று உழவு நடக்கும். அந்த நிலத்தில் தெரியாத்தனமாய் எப்போதாவது சிக்கிக்கொள்ளும் டிராக்டர்கள் மீள்வது எளிதல்ல. புதைகுழியில் சிக்கிய ஒரு யானையை ஒத்த ஒரு ஓலத்தோடு ட்ராக்டர் போராடும். சக்கரத்தின் அடியில் பெரிய கற்களைப் போட்டு, மரக்கட்டைகளைப் போட்டு என பிரயத்தங்கள் நிகழும். அது முடியாமல் தூரத்தில் கடப்பாரையை முன்னோக்கி சாய்வாக ஊன்றி கயிறு கட்டி, அதை சக்கரத்தில் சுற்றி, இறுக்கமாக்கி அதன் வழியே மீட்கும் முயற்சிகளில் கயிறு தெறித்துப்போகும். அம்முயற்சி பெரும்பாலும் தோற்றும் போகும். அங்கு வரும் ஒவ்வொருவரும் புதிய புதிய யோசனைகளை வழங்குவார்கள். அதை ஒவ்வொன்றாய்ச் செயல்படுத்தி சிக்கல்கள் மேலும் சேர்ந்து போகும். இறுதியாய் வேறு வழியின்றி, மற்றொரு ட்ராக்டர் அழைத்து வரப்பட்டு அத்தோடு கயிறு இணைத்துக் கட்டி இழுக்கும் பெரும் போராட்டம் துவங்கும். மீட்கப்படும் வரைக்கும் அதுவொரு தவிர்க்கவியலாத வேடிக்கைதான்.

கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி, ட்ராக்டர்களின் சக்கரங்கள் சாலைகளில் சிக்கிக் கொள்வது, பொது ஆழ்துளைக் குழாய் கிணறு அமைப்பது, மாட்டிற்கு லாடம் கட்டுவது, எருமை கன்று ஈனுவது, எப்போதாவது நிகழும் வாய்க்கால்-வரப்பு சண்டைகள், லோன் கட்டாதவர்கள் வீட்டுக்கு வரும் வெள்ளைக் கார், அவ்வப்போது நடக்கும் ஊர் நியாயம் (பஞ்சாயத்து) என மனிதர்களையொட்டிய வேடிக்கைகள்தான் அப்போதைய பொழுதுபோக்கு.

ஊருக்கு ஒரேயொரு தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் இருந்த - அதிலும் கூடஒரு ஒரு தமிழ் ஒளிபரப்புதான் வரும் அந்தக் காலத்தில், பார்வையில் சிக்கியதில் எல்லாம் ஒரு வேடிக்கை இருந்தது. காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள் வந்தபிறகு, ஜன்னல்கள் வழியே பார்க்க எந்த விழிகளுக்கும் மனமில்லை. சேனல்கள் பெருகி வந்து நம்மை ஆக்கிரமித்த பிறகு, எல்லாவற்றையும் தொலைக்காட்சிக்குள்ளேயே தேடவேண்டி வந்துவிட்டது. இதுவரை ஜன்னல்கள் வழியே பார்த்த உலகம் வீதிகளாகவும் அக்கம்பக்கமாகவும் இருந்தது. தொலைக்காட்சி மூலம் உலகின் எட்டாத மூலைகளையும் காணத் துவங்கிய பிறகு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் வழக்கமே முற்றிலும் அழிந்து விட்டது.

எல்லா வேடிக்கைகளிலும் ஏதோ ஒரு கொண்டாட்டத்தை உணர்ந்தோம், கற்றுக்கொண்டோம், உணர்வுகளைத் தட்டியெழுப்பினோம், மகிழ்ச்சியை உணர்ந்தோம், அதனோடு பயணித்தோம் என பல கூறுகள் உண்டு. மழையைக் கூட ரசிக்கும் மனப்பாங்கு மறைந்துபோய் எதையும் படமாகவும், காணொளியாகவுமே பார்க்கும் மனநிலை வாய்த்தவர்களாகிப் போனதில் காலத்தின் பங்கும், நம் மனதின் பங்கும் சம அளவிலானது. மலை முகடு, அடர் வனம், நீலக் கடல், நெடும்பாதை என எல்லாமே இணையத்தில் தத்ரூபக் காட்சிகளாய் வர, அதில் மூழ்கி, அவையே விளையாட்டின், தேடலின் களமாய் மிஞ்சியிருக்கின்றன.

காலம் காலமாய் திருவிழாக்களும், ரயில்களும் தான் வேடிக்கைகளின் உச்சபட்சக் களமாய் இருந்ததனெவும் சொல்லலாம். ரயில் பயணத்திலிருக்கும் சுவாரசியமே அத்தனை அந்நியர்களோடு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதும், அதில் அழகிய சிநேகிதம் ஈட்டுவதும்தான். இதோ… இப்போதும் ரயில் பயணங்கள் அமைந்து கொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் சராசரியாக முன்னூறு, நானூறு கி.மீ தொலைவு பயணித்த ஒவ்வொரு பயணத்திலும் சன்னல் வழியே வேடிக்கை பார்க்கவோ, அக்கம் பக்கம் பேசவோ, அங்கு நிகழும் எதையும் எந்த வகையிலும் கவனிக்கவோ பெரும்பாலானோருக்கு அவசியம் ஏற்படவேயில்லை. எல்லா வேடிக்கைகளையும் வண்ண வண்ணமாய் காட்டும், உள்ளங்கை அளவிலிருக்கும், ஒரு கை பேசிக்குள் இந்த சமூகம் மூழ்கித் தேடிக்கொண்டிருப்பதும் கூட ஒருவித வேடிக்கைதான்!

-

நன்றி நம்தோழி

*

2 comments:

Indhu said...

மிக மிக அருமை .. பஞ்சு மிட்டாய் , பம்பாய் மிட்டாய் , ஐஸ் வண்டியுடன் சேரும் ... பம்பாய் மிட்டாய்க்காரர் பிசுக்கு கொடுத்தாதான் அந்த இடத்தை காலி செய்த நாட்கள் ... உண்மையில் இவற்றை அனுபவித்த நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்...

ஆரூர் பாஸ்கர் said...

அருமையானதொரு பதிவு.

ஏதோ ஓரு காரணத்துக்காக ஜன்னல் எனக்கும் ஓரு ஆச்சர்யமான ஓன்றாய்தான் இருந்திருக்கிறது.

நடிகர் கமல்-ஜன்னல் எனும் இந்த கட்டுரையைப் பாருங்கள்

http://aarurbass.blogspot.com/2014/07/blog-post.html