சிங்கப்பூர் பயணம் - 7

சிங்கப்பூரில் யாரை எப்போது சந்தித்தாலும் சுற்றிப்பார்த்த இடங்கள் குறித்த அவர்களின் பட்டியலில், விசாரிப்புகளில் தவறாமல் இடம்பெறுவது நூலகம். முதல் பயணத்தின் போதே தேசிய நூலகத்திற்கு சென்று, பல பகுதிகளைப் பார்த்து வியந்து போயிருந்தேன். இந்த முறை தேசிய நூலகத்திற்கு ஏ.பி.ராமன் அவர்கள் அழைத்துச் சென்றார். தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு தம் நேரத்தை ஒதுக்கி முன்பு கண்டிராத பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். அதில் குறிப்பாக மேல் மாடியில் இருக்கும் கூட்ட அரங்கு. அந்த கூட்ட அரங்கில் நின்று கொண்டிருப்பதே சொல்லமுடியாத குதூகலத்தைத் தருகின்றது. வானில் மிதக்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை. அந்தத் தளத்தில் கழிவறைகளுக்கு வைத்திருக்கும் பெயர்கள்கூட வித்தியாசமாய், உதாரணத்திற்கு மூன்று ஆண்கள் மட்டும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் அறைக்கு Three Men in a Boat என்பதாய் புத்தகங்களின் பெயராய் அமைந்துள்ளன. 




தேசிய நூலகத்தில் தமிழ் இலக்கியங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் அளித்திருக்கும் முக்கியத்துவத்தை, அதற்காக தாம் மேற்கொண்ட பணிகள் குறித்தவற்றை புஷ்பலதா நாயுடு விளக்குகிறார். அரிதான பல படைப்புகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு முந்தைய படைப்புகளை பாதுகாக்கும் விதம் குறித்தும், அப்படியான நூல்களைப் குறித்த தகவல்கள், அதை பயனாளிகள் பயன்படுத்த அனுமதிக்கும் முறைகள் குறித்த விவரிப்புகள் அனைத்தும் நம்ப முடியாத வியப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லாண்டு கால செய்தித்தாள்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.



முடிந்தவரை தமிழர்களின் படைப்புகளை நூலகத்தில் இடம் பெறச்செய்வதற்கு தாம் அளிக்கும் முக்கியவத்துவம் குறித்துச் சொல்லும்போது, மிகத் தட்டையான, மேலோட்டமான சில புத்தகங்கள் குறித்த வருத்தத்தை கடுமையாக வெளிப்படுத்துகிறார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சொர்க்கமாய், அறிவுக் களஞ்சியமாய் விரிந்து கிடக்கும் நூலகத்தின் பல பகுதிகளை அவர் உதவியோடு கண்டு வியந்து வந்தேன். ஒரு அரசு, நூலகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும், அப்பகுதி மக்கள் நூலகத்தை பயன்படுத்தும் விதத்தையும் வைத்துமே ஒரு நாட்டின் மேம்பாட்டை நாம் தீர்மானித்துவிடலாம் என்பதற்கு சிங்கப்பூர் அரசும், தேசிய நூலகமும், வாசகர்களும் மிகச்சிறந்த உதாரணம். அற்புதமான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த புஷ்பலதா நாயுடு அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

*

ஷானவாஸ் அவர்களின் ”க்ரேஸி கிங்ஸ்” உணவகத்தில் புறாக்கள் மிகச் சுதந்திரமாய் நடமாடுவதைப் பார்க்கவே அழகாக இருக்கின்றது. பசியோடு சென்ற எங்களுக்கு அவர் அளித்த உணவின் ருசி சொற்களில் அடங்காதது. ஷானவாஸ் எதைப் பகிர்ந்தாலும் அதை நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார். அங்கு பணிபுரியும் மலாய் தொழிலாளர்களின் இயல்பு, குணம் குறித்துச் சொல்லும்போது, ஒரு சித்திரமாக மனதிற்குள் பதிய வைக்கிறார். வேலையில் மிகத் தீவிரமாக, தெளிவாக, பொறுப்பாக இருக்கும் மலாய்க்காரர்கள் குறித்து பெருமையாகக் கூறுகிறார். என்னுடைய திறமையை நானே உணர்ந்து, நம்பிக்கை கொண்டிட பலவித கதவுகளைத் திறந்துவிட்டு உதவிய ஷானவாஸ் இல்லையென்றால் இந்தக் கட்டுரைகளுக்கெல்லாம் சாத்தியங்களற்று, வழக்கமான நாட்களைக் கொண்டதாகவே கடந்திருந்திருப்பேன்.



மீண்டுமொருமுறை ஜோ.டி.குரூஸ் உள்ளிட்ட நண்பர்களோடு அங்கு அரட்டையடிக்கும் வாய்ப்பு. பேச்சுவாக்கில் யாரோ அவரை எழுத்தாளன் எனச் சொல்லும்போது, தான் எழுத்தாளன் அல்ல என்கிறார் குரூஸ். மிகத் தெளிவாக தாம் ஒரு போராளி என்கிறார். எழுத்தாளனாகவும், பேச்சாளனாவும் தெரிவதும் கூட அந்தப் போராட்டத்தின் ஒரு வகை என்கிறார். ஆழி சூழ் உலகு ஆங்கில மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டது குறித்த ஒரு கேள்வியின் போது எவ்வித எதிர்மறை வினையாற்றலுமின்றி கசப்பானதொரு புன்னகையோடு அந்தக் கேள்வியிலிருந்து ஒதுங்கிச் செல்கிறார். 

*

அந்த முன்னிரவுப் பொழுதில் நானும் அண்ணன் வெட்டிக்காடு ரவியும் பேசிப்பேசி அத்தனையாயிரம் சொற்களைப் பகிர்ந்துகொள்வோம் என ஒருபோதும் நினைத்ததில்லை. வெட்டிக்காடு வலைப்பக்கத்தின் மூலம் அவரை ஒரு பதிவராகத்தான் முதலில் அறிவேன். 2012ல் ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கு உரையாற்ற வந்தபோது என்னைச் சந்தித்தார். 2013ல் சிங்கப்பூர் வந்திருந்தபோது சந்திக்க முயன்றும் முடியாமல் போனதில் வருத்தம்தான். இந்தமுறை இரண்டு நாட்களாக திங்கள் இரவு சந்திப்பதாக உறுதிப்படுத்தி அந்த சந்திப்பை நிகழ்த்தினார்.

அவரின் பால்யகால வாழ்க்கை, அவரின் வெட்டிக்காடு கிராமம், அவரின் சிங்கப்பூர் வாழ்க்கை, அமெரிக்க வாழ்க்கை, பெங்களூர் வாழ்க்கை, மாதொருபாகன் நாவல், பிள்ளை இல்லாத கிராமப் பெண்களின் அந்தக் கால வாழ்க்கை, தற்போதை சிங்கப்பூர் வாழ்க்கை, 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் தமிழர்கள் புதிதாக வந்த தமிழ்ர்களை எதிர்கொண்டவிதம், அவர் பணிபுரிந்த இடங்களில் ஏற்பட்ட சுவாரஸ்யங்கள், தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் அவர் கண்ட வளர்ச்சி, அவருடைய கிராமத்தைச் சார்ந்தவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பை வலையேற்றம் செய்ததில் அந்தக் கதையாசிரியர் முப்பதாண்டுகளுக்கு முன்பு விலகிப்போய் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரின் உறவினரோடு மீண்டும் பேசியது, சிங்கப்பூரின்ந் நீர் மேலாண்மை, உலகின் தலைசிறந்த விமான நிலையமாக இருக்கும் சாங்கி விமானநிலையம் ஆகியவை குறித்து பேசினோம் பேசினோம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்தோம். 



சிங்கப்பூர் ஆற்றங்கரை உணவகம் ஒன்றில் சுத்தியல் கொரடு துணையோடு பரிமாறப்பட்ட ஒரு பெரிய நண்டினை உடைத்து சாப்பிட்டோம். நான் சாப்பிட்டதைவிட நாங்கள் அமர்ந்திருந்த ஒரு பெரிய மேசையில் விளையாடிக் கீழே வீழ்ந்து அழுது கொண்டிருந்த குழந்தையைக் கூட கண்டுகொள்ளாமல் நண்டை பிரித்து மெய்ந்துகொண்டிருந்த ஒரு சீனனைத்தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன். உள்ளங்கையில் பாதி அளவிற்கு இருக்கும் வாய்க்கால் நண்டுகளை ஒரு காலத்தில் பார்த்து வந்த எனக்கு வடைச்சட்டி அளவிற்கு நண்டு இருக்கும் என்பதை வாழ்க்கையில் அப்போதுதான் பார்க்கிறேன் என்பதால் அதன் ருசியை எதனோடு ஒப்பிடுவது. பொதுவாக மிகப்பெரிய சாப்பாட்டு விரும்பியாக இல்லாத என்னை, அன்றைக்கும் அந்த சிங்கப்பூர் சிறப்பு உணவு வயிறு முட்ட சாப்பிட வைத்து சாதித்துக்கொண்டது.

-

தொடர்புடைய பதிவுகள்...
சிங்கப்பூர் பயணம் - 1
 
சிங்கப்பூர் பயணம் - 2
 

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

சிங்கப்பூர் பயணம் - 5
சிங்கப்பூர் பயணம் - 6

-

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரே ஒரு முறை சிங்கப்பூர் சென்று வந்திருக்கின்றேன்

பழமைபேசி said...

மாப்பு... நன்று

Rathnavel Natarajan said...

சிங்கப்பூர் பயணம் - 7 = எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமை சார் திரு Erode Kathir

காவேரிகணேஷ் said...

அருமையா இருக்குண்ணே...தொடர்ந்து எழுதுங்க...