நிறக்குமிழிகள்

நீண்ட காத்திருப்பின் பின் அப்பாவாகியிருக்கும் மகிழ்வை தோழனொருவன் பகிர்வதற்குச் சற்று முன்புதான் நேசிப்பிற்குரிய ஒருவரின் மரணச்செய்தி மனதில் கனத்து உருண்டு கொண்டிருக்கிறது. ஜனனம் குறித்து மகிழ்வதை விடவும் மரணம் குறித்து குழைதல் அதிகமாவே இருக்கின்றது. அடுத்ததொரு விடியலில் வானம் பச்சென விடிவதுபோல் மனதும் தெளிவடையலாம். முந்தைய தினத்தின் மகிழ்வும், அதை அமிழ்த்திய சோகமும் சற்றும் நினைவிலிருக்காமலும் போகலாம்.

வாழ்க்கையின் ஆகச் சிறந்த சுவாரஸ்யம் என்பது நாம் வாழவேண்டிய எந்த ஒரு நாளையும் அது எனக்கு இப்படித்தான் இருக்க வேண்டுமென நமக்கே நமக்கென்று வடிவமைத்துக்கொள்ள முடியாததுதான். மேம்போக்காகப் பார்த்தால் நாம் விரும்பியபடி அந்த நாள் இருப்பதாகப் பல நேரங்களில் தோன்றும். சற்று யோசிக்கையில்தான் விளங்கும், நாம் விரும்பும் நம்முடைய ஒரு நாள் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இல்லையென்பது. எத்தனையெத்தனை புறக்காரணங்கள் நிறைந்ததாய் இருக்கின்றது ஒவ்வொரு தினமும். எல்லாவற்றையும் உதறிவிட்டு யாருமற்ற ஒரு வெளியில் தன்னந்தனியே அமர்ந்திருந்தால் கூட நம்மைச் சூழும், வருடும், முறுக்கிப் பிழியும் நினைவுகள், சிந்தனைகள் அந்த நாளை நாம் விரும்பியதுபோல் நம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை.

விடியல்கள் எப்போதும் போல், எல்லோருக்கும் போல், அந்தந்த பருவத்திற்கு ஏற்றார்போல் நிகழ்ந்துவிடுகின்றன. விடியலில் கண்ணில் படும் முதல் காட்சி, காதில் விழும் முதற்சொல், மனதில் தோன்றும் முதல் எண்ணம் குறித்து எப்போதும் எனக்கு யோசனை உண்டு. பல நாட்களில் எது முதற்சொல், முதல் ஓசை, முதல் காட்சி, முதல் எண்ணம் என இனம்கான முடிவதில்லை. அடுத்த நாள் இதுதான் கண்ணில் விழவேண்டும், இதுதான் காதில் விழவேண்டும் எனத் திட்டமிட்டு அதை இயந்திர கதியாய் நிர்ணயிப்பது அபத்தமெனினும், அந்த அபத்தம் எதிர்பார்த்த நேர்த்தியோடு அமைந்துவிடுவதுமில்லை.

கார்த்தியின் மகன் பரிதி இப்போதுதான் பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கிறான். உண்மையில் பள்ளி செல்லும் வயதில்லை. ப்ரீ கேஜியில் சேர்க்கலாம் எனச் சென்ற இடத்தில் பையன் கெத்தாக ’குட்மார்னிங் மிஸ்’ எனத் துடியாக அசத்த எல்கேஜியில் அடைத்துக் கொண்டார்களாம். இதெல்லாம் அநியாயமென கார்த்தியிடம் கொடிபிடித்துப் பார்த்தேன். “எங்கட்டையெல்லாம் கொடி புடிக்காதீங்க… ரெண்டு நாளைக்கு அவன வூட்ல வெச்சிருந்து பாருங்க.. எப்படா வூட்டவுட்டு வரலாம்னு இருக்குது அவன் படுத்துற பாடு” என்றபடி நான் பிடித்திருந்த கொடியைப் பிடுங்கி வண்டி துடைக்க டேங்க் கவரில் வைத்துக் கொண்டார். பள்ளியில் சேர்ந்த இரண்டாம் நாளிலிருந்து பரிதி கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறான். காலையில் கண் விழிக்கும்போதே ’இன்னிக்கு ஸ்கூல் லீவு, நேத்திக்குத்தான் (அவன் உலகத்தில் நாளை என்பதே நேத்திக்கு) ஸ்கூல், நேத்திக்குப் போனாப்போதும்’ எனும் தாரக மந்திரத்தை உரக்கப்பாடிய படி எழுவதும், இவர்கள் என்னென்னவோ சொல்லி அவனைப் பள்ளியில் விடுவதுமாய் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யக் கதைகளைப் அவர் சோகமாகப் பகிர்வையில் நான் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

நேற்றுக் காலை தன் அப்பாவிடம் ”நீ ஜீன்ஸ் போடுறே… என்னைய ஊனிபார்ம் போடச்சொல்றே” என்றும், அம்மாவிடம் ”நீ வீட்லையே இருந்துட்டு என்னைய மட்டும் ஸ்கூல் போகச் சொல்றே” என பெரிய கொடிகளைக் கைகளில் ஏந்தியிருக்கிறான்.

மாலையில் கார்த்தி அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தபோது, ”குட்டி.. ஸ்கூல் எப்படிடா இருக்கு!?” எனச் சீண்டினேன்

”கொன்னே போடுவேன்” என்றான்

சிரித்தபடி “யாரைடா” என்றேன்

மழலைக்குரலில் “உங்களையில்ல… உங்களையில்ல… எங்கப்பாவைக் கொன்னே போடுவேன்” என்ற படி… ”அப்பா உன்னக் கொன்னேபோடுவேன்… கொன்னேபோடுவேன்” எனக் அவர் கன்னத்தில் செல்லமாய் குத்திக் கொண்டிருந்தான்.

ஒரு விடியலின் சாயம் குழந்தைக்கு ஒருவிதமாகவும், பெற்றோர்களுக்கு அதன் நேரெதிராகவும், அக்கம்பக்கத்தாருக்கு இன்னொரு விதமாகவும் இருப்பதை எப்படித் தவிர்க்க. விடியல் மட்டுமா, ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு கணமும் ஒருவிதமாய், நேரெதிராய், இன்னொருவிதமாய் என ஆயிரமாயிரம் விசித்திரங்களை உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.வெயில் கொளுத்தும் ஒரு முதும் காலைப்பொழுதில் ஊதி ஊதி தேநீர் பருகிக்கொண்டிருக்கும் போது டீக்கடையில் அரசியல் உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது. டீக்கடையில் அரசியல் குறித்தொழுகும் விவாதங்களின் சுவை தேநீரை விடச் சுகமானது, அலாதியானது. துடுக்கு மீசையும் கருப்புச் சட்டையுமாக இருந்த ஒருவர் கடவுள் மறுப்புக் கருத்துக்களை உதாரணம் வைத்து பேசிக்கொண்டிருந்தார். மீசையும் கருப்புச் சட்டையும் கவனத்தை ஈர்த்தது. அவருடைய பேச்சு முறுக்கத்தை முறித்துப்போடும் வண்ணமாக, ”எப்பவுமே கருப்புச்சட்டைதான் போடுவீங்ளா!?” எனும் அ(ட)ப்பாவிக் கேள்வியொன்றை ஏவினேன். கடும் வாதம் புரியும் ஒருவரை இதைவிட எளிதாய் முறித்துப்போட்டு நீர்த்துப் போகச் செய்ய முடியாதென்பதையும் அவ்வப்போது அனுபவத்தில் அறிந்ததுண்டு. ”கல்யாணத்தன்னிக்குக்கூட நானு கருப்புச்சட்டதானுங்க” என்ற கணத்தில் குளிர்ந்திருந்தார். அதன்பின் அவரைக் காணும் பெரும்பாலான தினங்களில் கருப்பு தவிர வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருந்தார். ஏன் கருப்பு அணியவில்லை என ஒருபோதும் கேட்பதில்லை. அதேநேரம் கருப்புச் சட்டை அணிந்துவரும் ஏதாவது தினங்களில் மட்டும் எங்களை அடையாளம் கண்டவர்போல் அவரின் முகக்குறிப்பு உணர்த்தும்.

இன்று டீக்கடையிலிருந்து வெள்ளைச்சட்டையில் பைக் எடுத்தவரை நண்பரிடம் சுட்டிக்காட்டி ”கல்யாணத்துக்குக் கூட கருப்புச் சட்டை போட்டவரைப் பாருப்பா!?” என்றேன். நான் சொன்னது டீக்கடைக்காரர் காதில் விழுந்திருக்க வேண்டும். அவரைச் சுட்டிக்காட்டியபடி “பையனுக்கு கல்யாணம்னு ஜாதகம் பார்த்துக்கிட்டிருக்கார்” என்றார். முரண்களின் மொத்தத் தொகுப்பாகவும், சுவாரஸ்யங்களின் கிடங்காவும் தங்களை தகவமைத்துக் கொள்வதில் மனிதர்களுக்கு நிகர் மனிதர்களே.

கடந்தோடும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ சுவாரஸ்யங்களை நம் உள்ளங்கையில் வைத்து, விரல்களை மடக்கி மூடி, மடங்கும் விரல்களின் மேல் செல்லமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத்தான் போகின்றன.

அப்படி இதுதான் வேண்டுமென எதிர்பார்க்காமல், எது வரும் எனக் காத்திருப்பதில் ஒருவித சுக அவஸ்தையுண்டு. எதிர்பாராத நேரத்தில் நிகழும் ஒன்றும், இயல்பாய் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கும்போது முரணாய் நிகழும் ஒன்றும் சுவாரஸ்யமாகத் தெரிகின்றவையே. நடந்து போகும் பாதையில் கடந்துபோகும் பெண் சூடியிருக்கும் மல்லிகை வாசம் கவர்ந்திழுத்து மயக்கப் பார்க்கும் கணப்பொழுதும், நாசி உரசி இறுக்கிப்பிடித்து சுழற்றி அமிழ்த்தும் சாக்கடைக் கசிவும்கூட சுவாரஸ்யத்தின் தவிர்க்கவியலாக் கூறுகள்தான். 

-

6 comments:

ஷான் கருப்பசாமி said...

எங்கேயோ போயிட்டீங்க....

Sakthivel Erode said...

அருமை கதிர் சார் !

கிருத்திகாதரன் said...
This comment has been removed by the author.
கிருத்திகாதரன் said...

உங்கள் எழுத்து எப்பவும் ஏமாற்றுவதில்லை..சுவாரஸ்யமாக லெப்ட், ரைட் வளைஞ்சு அப்படியே சாஞ்சு பின் எழுந்து சீராக செல்லும் பயண அனுபவம் போல மனதில் விரியும். எங்க வீட்டில் என் பையனும் அன்றில் இருந்து இன்று வரை கொலை வெறியாகதான் அலையறான..என்ன செய்வது..அனுப்பனுமே..

நாடோடி இலக்கியன் said...

//முரண்களின் மொத்தத் தொகுப்பாகவும், சுவாரஸ்யங்களின் கிடங்காவும் தங்களை தகவமைத்துக் கொள்வதில் மனிதர்களுக்கு நிகர் மனிதர்களே.//

//நடந்து போகும் பாதையில் கடந்துபோகும் பெண் சூடியிருக்கும் மல்லிகை வாசம் கவர்ந்திழுத்து மயக்கப் பார்க்கும் கணப்பொழுதும், நாசி உரசி இறுக்கிப்பிடித்து சுழற்றி அமிழ்த்தும் சாக்கடைக் கசிவும்கூட சுவாரஸ்யத்தின் தவிர்க்கவியலாக் கூறுகள்தான். //

அருமை கதிர்.

Unknown said...

போகும் இடம் சொல்லாமலே வழி நீளுவதில் தானே வாழ்வின் ஒட்டுமொத்த சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது......
அழகான பதிவு....