முதுகு ஒடிய சுமந்து வந்த
பள்ளிக்கூடப் பைகளிலிருந்து
ஒவ்வொரு ஏடாய் எடுத்து
ஹோம் வொர்க் செய்கிறார்கள்
அடுத்தடுத்த வகுப்பில் படிக்கும்
அண்ணனும் தங்கையும்
எதிர்புறச் சுவரில்
தலைக்குமேலே ஒளிரும் குழல்விளக்கில்
முத்தமிடும் பூச்சியும்
கள்ள மௌனம் பூசிய பல்லியொன்றும்
நெடுநேரமாய் அவர்களோடு
உடனிருக்கின்றன
பூச்சிக்கும் பல்லிக்கும்
பெயர் சூட்டலாமென
அண்ணனும் தங்கையும்
ஒருமனதாய்த் தீர்மானித்து
பசித்த பல்லிக்கு ஆளுக்கொரு
ஆசிரியர் பெயரைச் சூட்டுகிறார்கள்
பல்லியினருகே பூச்சி வந்தமரும்
அவசர கணத்தில்
வேறு பெயர் வைக்க நேரமில்லையென
பல்லிக்கு வைத்த பெயர்களை
பூச்சிக்குச் சூட்டுகிறார்கள்
பூச்சிக்குச் சூட்டுகிறார்கள்
வேறு பெயர்
யோசிக்க நேரமில்லையென
தத்தமது பெயரை
பல்லிக்குச் சூட்டிவிட்டு
ஹோம் வொர்க்கைத்
தொடர்கிறார்கள்.
*
ஆனந்தவிகடன் (17.07.2014) சொல்வனத்தில் வெளியான கவிதை
4 comments:
பூச்சிகளை பல்லி இரையாக்கிக் கொள்வதுப்போல மாணவர்களை ஆசிரியர்கள் இரையாக்கிக் கொள்கிறார்கள். பாவம் பிள்ளைகள்:-(
அஹா... அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...
மாலை முழுதும் ஹோம்வொர்க் இதை வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா...
குழந்தைகளின் மன நிலை தெரிகிறது கவிதையில் . விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
Post a Comment