ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒவ்வொரு முறையும் கொண்டாட்டமாக அணுகுவதற்கு, புத்தகங்களோடு அங்கு மாலை நேரங்களில் நிகழ்த்தப்படும் சிறப்புரைகளும் ஒரு காரணம். ஒவ்வொரு முறையும் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகும்போது, எப்போதேனும் சந்திக்கவேண்டும் அல்லது அவர்களின் உரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் இருப்போர் பெயர்கள் இடம் பெறும்போது இனம்புரியாத மகிழ்ச்சி துளிர்ப்பதுண்டு. அப்படி இந்த ஆண்டு என் பட்டியலில் இடம் பெற்ற சில பெயர்களில் மிகக் குறிப்பிடத்தகுந்த பெயர் ”நம்மாழ்வார்”
நம்மாழ்வார் குறித்து வார இதழ்களிலும், இணையத்திலும், அவர் வெளியிட்டுள்ள புத்தகங்களின் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தாலும், புத்தகத் திருவிழா பேச்சாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இடமளித்தமைக்கு மக்கள் சிந்தனைப் பேரவைக்கு தனிப்பட்ட பாராட்டுகள்.
தலையில் ஒரு துண்டு, இடுப்பில் காவி வேட்டி, உடலைப் போர்த்திய பச்சை சால்வை எனும் உடை அமைப்பில் மிகவும் மெலிந்திருக்கிறார் நம்மாழ்வார். மீசைக்குள்ளும், தாடிக்குள்ளும் மறைந்துகிடக்கின்றது முகம். அந்தச் சிறு கண்களில் அளப்பரிய சிரிப்பு பொங்கி வழிகிறது. தொலைத்தவற்றை மீட்டுவிடமாட்டோமா என்ற தாகம் அந்தக் கண்களில் தழும்பிக் கொண்டேயிருக்கின்றது. இந்த உடல்தான் இத்தனை அற்புதமான தெளிவான குரலைத் தருகிறதா என்பது ஆச்சரியமே.
ஒரு பேச்சாளனுக்குரிய எந்தப் பாங்கும் இன்றி ”வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்” எனும் தலைப்பில் துவங்குகிறார் உரையை. உரை மிகக் கச்சிதமாக, மிகக் கோர்வையாக இருக்கின்றதா என எந்த அளவுகோளும் என்னிடம் இல்லை. பேசிய சுமார் 50 நிமிடங்களும் என்னைக் கட்டிப்போட்டது அவரின் பேச்சில் இருந்த நேர்மையும், பொளேர் பொளேர் என மனதை அறைந்த உண்மைகளும்தான்.
மனிதர்கள் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கமும், அமைப்புகளும் மிக நேர்த்தியாக நடத்திவரும் செயல்களாக ”மது, தொலைக்காட்சி, தேர்தல், அரசியல் கூட்டம், ஆன்மீகம், கல்வி” என அவர் பட்டியலிடுவதை ’அது அப்படியில்லை’ என என்னால் சட்டென மறுத்துவிட முடியவில்லை.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் பூச்சிக் கொல்லிகள் எனும் ரூபத்தில் மண்ணைச் சாகடித்து, உணவை விஷமாக்கி தொடர்ந்து நம்மில் கலந்து வரும் விஷம் குறித்துப் பேசியது ஏற்கனவே கேட்டது, வாசித்ததுதான். வாழ்க்கையில் கேட்பது, காண்பது, வாசிப்பது என்பவை வேறு, புரிந்துகொள்தல், புரிந்துகொள்தலை செயல்படுத்த முனைதல் என்பவை வேறு.
இந்தியாவில் பசுமைப் புரட்சி முதலில் தீவிரமாக்கப்பட்ட பஞ்சாபில் புற்றுநோய் பெருகியிருப்பதையும், புற்றுநோய்க்காக இலவச சிகிச்சை பெற ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரயில் மூலம் படையெடுப்பதையும், அந்த ரயில் கேன்சர் ரயில் என்றே அழைக்கப்படுவதையும் நாம் அறிவது நிகழ்காலத்தின் அவசியங்களில் ஒன்று.
உணவுச் சங்கிலி அறுந்துபோயிருக்கும் ஒரு அவலமான சூழலில் இருந்து கொண்டிருப்பதை தெளிவாய்ச் சுட்டுகிறார். ஒரு விளை நிலத்தில் நூறுவகைப் பூச்சிகள் இருக்கிறதென்றால் அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம், 90 பூச்சிகள் நமக்கு நண்பர்களாக இருக்கும். அந்த பத்து பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்தததன் பாவத்தை நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.
கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மானோ குரோட்டாம்பாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சியற்று பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிரிகளையும் கொன்றபின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின் அதை மேலோட்டமாய் கழுவிவிட்டு தின்பதின் பாவம்தானே இத்தனையித்தனை நோய்கள்.
”ஒரு காலத்தில் இறக்கை விரித்த தட்டாம் பூச்சி பறப்பதைக் கண்டதுண்டு. உயிர்க்கொல்லி மருந்துகளினால் தட்டாம்பூச்சி காணாமல் போனது. தட்டாம் பூச்சிகள் அதிகமாக உணவாக உண்டது கொசு முட்டைகளை. இன்றைக்கு தட்டாம் பூச்சிகளை அழித்து கொசுக்களை உற்பத்தி செய்து, அதிலிருந்து தப்பிக்க ஃபேன் போடுகிறோம், அதற்கு மின்சாரம் தேவையென்று நிலக்கரியை எரிக்கிறோம், அணு உலை அமைக்கிறோம், ஆனால் எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாய் அழிக்க முடியவில்லை என்று கூறியது சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தது.
”அவர்களின்” பேச்சைக்கேட்டு, சில ஆண்டுகளில் மண்ணைக் கெடுத்துக்கொண்டு, அய்யோ மண் விளையலையே என ஓடியபோது யூரியா போடு எனக்கொடுக்க, சில ஆண்டுகளில் யூரியா போட்டும் விளையலையே என ஓடியபோது பொட்டாசியம் போடு எனக்கொடுக்க, சில ஆண்டுகளில் பொட்டாசியம் போட்டும் விளையலையே என ஓடியபோது நைட்ரஜன் போடு எனக் கொடுக்க, அப்போது விளையலையே என அதிலிருந்து மீள முடியாமல் ஓடியபோது இனி நான் சொல்லும் விதைகளைப் போடு என ஓடியோடி தேடித்தேடி நோய்களை வாங்கிச் சேமித்து சுமந்திருப்பதையும் உணர்ந்துதான் ஆகவேண்டியிருக்கின்றது.
உரையில் இடையிடையே பாடல்கள், கவிதை, நகைச்சுவை என ஏதேதோ அவர் செய்தாலும்கூட அதில் மனது பெரிதாதக் கிறங்கவில்லை. இருபது முப்பது ஆண்டுகளில் நான் என் கண்முன்னே தொலைத்த ஒவ்வொன்றாய் மனக்கண் முன்னே வந்துவந்து மோதிப்போனது.
உரை நிறைவடைந்து கிளம்பும்பொழுது, இறுகிக்கிடந்த நிலத்தை ஏர் போட்டு உழுததுபோல் மனது பொதுபொதுவெனக் கிளர்ந்து கிடந்தது. இதை இப்படியே விட்டுவிட்டால் மீண்டும் இறுகித்தான் போகப்போகிறது. நல்லதாய் ஏதாவது விதையைத் தூவ போடவேண்டும்.
-
குறிப்பு :
புத்தகத் திருவிழா மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தில் நம்மாழ்வார் உட்பட 2005 ஆண்டுமுதல் அனைவரின் உரைகளும் ஒலி, ஒளி வடிவில் விற்பனைக்கு கிடைக்கும்.
3 comments:
நல்லதொரு பதிவு
உரை நிறைவடைந்து கிளம்பும்பொழுது, இறுகிக்கிடந்த நிலத்தை ஏர் போட்டு உழுததுபோல் மனது பொதுபொதுவெனக் கிளர்ந்து கிடந்தது. இதை இப்படியே விட்டுவிட்டால் மீண்டும் இறுகித்தான் போகப்போகிறது. நல்லதாய் ஏதாவது விதையைத் தூவ போடவேண்டும்.\\ Wonderful!
Erode na erode kathir. The great
Post a Comment