உதிர மறுக்கும் நொடிப் பொழுதுகள்மருத்துவமனை…. இந்த வார்த்தையை தட்டச்சும்போதே கனமான ஒரு அலுப்பு என்னை அழுத்துகிறது. ஈரோடில் இருக்கும் மிகவும் பரபரப்பான, பிரபலமான மருத்துவனை அது. ஊரிலிருக்கும் தாத்தாவிற்கு சில உடல் தொந்தரவுகளின் காரணமாய், அங்கு பார்த்த மருத்துவர் இந்தப் பிரபல மருத்துவமனையில் இருக்கும் குறிப்பிட்ட நிபுணரைச் சந்திக்க பணித்திருந்தார்.

காலையிலேயே மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரம் பெற முன்பதிவுக்கு முயன்றேன். தொலைபேசியில் அழைப்பை எடுத்த பெண்மணியிடம் மருத்துவர் பெயரைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டுமென்று கூறினேன்.

“9 மணிக்கு மேல போன் பண்ணி டோக்கன் போடுங்க” என பட்டென தொலைபேசியை வைத்தார்.

நேரடியாகவே மருத்துவமனைக்கே சென்று முன்பதிவு செய்திடலாம் என 9 மணிக்குச் சென்றேன் குறிப்பிட்ட அந்த மருத்துவப் பிரிவில் இன்னும் யாரும் வரவில்லையென்றும், 9.30 மணிக்கு மேல்தான் வருவார்கள், அப்போது நேரில் வரவும் அல்லது தொலைபேசியில் அழைக்கவும் என்று வரவேற்புப் பகுதி பெண்மணி கூறினார்.

அரை மணி காத்திருக்க முடைபட்டுக்கொண்டு, அலுவலகம் வந்து 9.30க்கு அழைத்தேன். தொலைபேசியை எடுத்த பெண்மணி, “அவங்க லைன் பிசியா இருக்குங்க, அவங்க நெம்பரே தர்றேன், அங்கையே கால் பண்ணிக்குங்க” என்று எண் தந்தார்.

அந்த எண்ணிற்கு அழைத்தேன். இணைப்பு செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை
மீண்டும் பழைய எண்ணுக்கே அழைத்து “நீங்க தந்த நெம்பர்ல கால் போவேமாட்டங்குதுங்க. ரிசீவரை வெளியே எடுத்து வெச்சிருக்காங்ளானு கொஞ்சம் பாருங்களேன்” என்றேன்
கொஞ்ச நேரம் அமைதி தவழ்ந்தது.

“சார், அந்த சிஸ்டர் உள்ளே இருக்காங்க. ஆள் இல்லனு ரிசீவர் எடுத்து வெச்சிருந்திருக்காங்க, நீங்க 10 மணிக்கு மேல போன் பண்ணுங்க சார்” என்று அழைப்பைத் துண்டித்தார்

பத்து மணிக்கு முயற்சித்தேன். நான்காவது முயற்சியில் கிடைத்தார்.

இந்தமாதிரி இந்தமாதிரி என முன்பதிவு ஒப்புதல் கேட்டேன்.

”என்னிக்கு டாக்டரைப் பார்க்கனும்” என்றார்

”இன்னிக்கு”

”அப்போ 7 மணிக்கு வாங்க” என்றார்

என்னது 7 மணியா, இப்பத்தாங்க காலையில் பத்து மணி” தாத்தாவை ராத்திரிவரை எப்படி காத்திருக்க வைப்பது என நினைத்துக்கொண்டே, வேறு மருத்துவர் பரிந்துரைத்துள்ளதையும் சொன்னேன்

”அப்போ நாலு மணிக்கு வந்து ’எக்கோ’ எடுத்துக்குங்க சார்”

”டாக்டரைப் பாருங்கனுதான் சொல்லியிருக்கார், டாக்டரைப் பார்த்துட்டு ’எக்கோ’ எடுக்கனுமா, இல்ல முன்னாடியே ’எக்கோ’ எடுத்துட்டு டாக்டரைப் பார்க்கனுமா” என்றேன்

”டாக்டர் 4 மணிக்கு எல்லோருக்கும் எக்கோ எடுத்து அப்பப்பவே பார்த்துடுவாரு” என்றார்

அதற்குள் வீட்டிலிருந்த தாத்தா சீக்கிரம் ஆஸ்பத்திரி போய்ட்டு ஊருக்குப் போவனும் எனச் சொன்னதால், மனைவி அவரை அழைத்துக்கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு என்னை அழைத்தார். நடந்த கதைகளைச் சொன்னேன். இரத்த அழுத்தம் மட்டும் சோதித்துவிட்டு 4 மணி வரை காத்திருக்கச் சொல்லியிருக்கின்றார்கள்.

வேறு வழியின்றி 4 மணிக்கு வந்துவிடலாம் என மீண்டும் வீட்டுக்குச் சென்றுவிட்டு, என்னை 4 மணிக்கு அழைத்துச் செல்லப் பணித்தார்.மருத்துவமனையில் காத்திருப்பதில் ஒவ்வொருமுறையும் வாழ்க்கை மீதான பிடிமானங்கள் நீர்த்துப்போவதையே உணர்ந்திருக்கின்றேன்.

மீண்டும் அப்படி ஒரு சூழலுக்கு ஆட்படப்போகிறோம் என்பதை அறிந்தவாறே, எச்சரிக்கையாக மருத்துவமனை எண்ணிற்கு அழைத்து 4மணிக்கு முன்பதிவு அனுமதி கொடுத்ததைக்கூறி வரலாமா என்று கேட்டேன். வரலாம் என பணித்த நம்பிக்கைக்கையில் சரியாக 4 மணிக்குச் சென்றேன்.

அந்தப் பிரிவை அணுகி அங்கிருந்த பெண்ணிடம் பதிவு குறித்த விபரங்களைச் சொல்லி எப்போது பார்க்கமுடியும் என்றேன்

“வெயிட் பண்ணுங்க சார்” என்று சொல்லியவேகத்தில் எங்கோ மறைந்துபோனார்.

மருத்துவமனையின் வரவேற்பறை தொலைக்காட்சியில் சப்தமின்றி ஒரு சேனல் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. காத்திருக்கும் ஒவ்வொரு முகங்களிலும் படிந்துகிடக்கும் உணர்வுகள் வித்தியாசமான வலிகளையே பெரிதும் வெளிப்படுத்துகின்றன.

ஸ்கேன் அறையின் முன்பு காத்திருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களையும், உடன் வந்திருப்போரையும் பார்த்த வண்ணம் ஒரு கனத்த அமைதியோடு நானும் நிற்கத் தொடங்கினேன்.

மெலிந்த தேகத்தில் மருத்துவமனை இலட்சினை பொறித்த மேலங்கி அணிந்த உதவிப் பெண்டிர் இங்கும் அங்கும் நடந்து கொண்டேயிருந்தனர். காத்திருந்தவர்களை மிக எளிதாக கடந்து போவதும் வருவதுமாக. ஒருபோதும் ஒருவரும் நோயோடும், பயத்தோடும் காத்துக்கிடப்போரிடம் எப்போது பார்க்கமுடியும், எப்போது கிளம்ப முடியும் என்ற உறுதியினை, ஆறுதலைச் சற்றும் கொடுக்கத் தயாரில்லை.

வரவேற்பறையில் கிடந்த அறுபத்தி சொச்ச நாற்காலிகளும் திரும்பத் திரும்ப நிறைந்து கொண்டேதான் இருந்தன. பின்பக்கமாக இருந்து பார்க்கையில் வரிசையாக ஏற்றஇறக்கமான தலைகளின் பின்பக்கம் மட்டுமே தெரிந்தன. பெரும்பாலும் 50 வயதுகளைக் கடந்த மனிதர்களே நிரம்பிக்கிடந்தனர். பெரும்பாலான தலைகளில் முடிக்கான சாயம் அடிக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு தலையும் எதோ ஒரு வருத்தத்தைச் சோகத்தை பயத்தைச் சூடிக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அத்தனை பேரும் எதற்கோ காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று மட்டும் புரிந்தது.

நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் நிரம்பி வழியும் கூட்டத்தினூடே, முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு அரசியல் பிரபலம் வரவேற்பறை கடந்து மேல் மாடியில் இருக்கும் படுக்கைப் பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். உடன் இரண்டு பேர் கூட்டத்தை விலக்கிவிட்டவாறு சென்று கொண்டிருந்தனர். ஓரிருவர் மட்டும் அவரிடம் கும்பிட்டு வணக்கம் சொன்னார்கள். வேறொரு இடத்தில் இது போன்றதொரு மக்கள் சங்கமம் இருந்திருந்தால் அவருக்கென தனித்த அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்திருந்திருந்திருக்கலாம். இங்கு அவரவர் வலி அவரவர்க்கு.

காத்திருப்போரில் தம் நோய்க்காக மருத்துவரைச் சந்திக்க காத்திருப்போர், நோயாளியுடன் வந்து காத்திருப்போர், எதாவது மருத்துவ அறிக்கை பெறக் காத்திருப்போர், சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் உறவினர்கள் என பலவகைகள் இருக்கலாம் எனத் தோன்றியது.

காத்திருக்கும் நேரம் முழுதுமே நோயின் வதை குறித்த அயர்ச்சியை விட, நோய் என்னவாக இருக்குமோ, நோய்க்கு மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ எனும் பயமே பெரிதானது, கொஞ்சம் கொடுமையானதும் கூட.சுமார் ஐம்பது வயதுகொண்ட ஒரு கொண்டை போட்ட பெண்மணி, ஒரு கையில் செல்போனும், மறுகையில் கணவனை மெல்ல பிடித்தவாறும் ஒருவித துறுதுறுப்போடு நின்றிருந்தார். ஸ்கேன் அறைக்குள் எப்படியாவது உடனே நுழைந்துவிடவேண்டும் எனும் ஆர்வமும், அவசரமும், தேவையும் இருந்தது போல் தோன்றியது. வெளுத்த சட்டையும், அடிக்கும் வண்ணத்தில் கட்டம் போட்ட லுங்கியும், இடது கையின் மணிக்கட்டுக்கு கீழே ஊசி குத்தி டேப் ஒட்டப்பட்டு, மெலிந்த உருவமும், கொஞ்சம் புடைத்த வயிறும், பரட்டைத் தலையும், நரைத்த முள் தாடியும் என ஒரு மருத்துவனையில் தங்கியிருக்கும் நோயாளிக்கான அடையாளங்களோடு அந்தக் கணவர் நின்றுகொண்டிருந்தார்.

கொஞ்சம் தள்ளி காலியாக இருந்த இருக்கையைச் சுட்டி அமரச் சொன்னேன். நான் சொன்னதை அவர் கண்டுகொண்டாதாகவே தெரியவில்லை. நான் சொன்னதைக் கவனித்த அவரின் மனைவியும் அவரை அமரச் சொன்னார். அப்போது கண்டுகொள்ளவில்லை.
மியூசிக் சேர்போல நாற்காலிகளில் ஒருவர் எழுந்திருப்பதும் யாராவது ஒருவர் தேடிவந்து அமர்வதுமான விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

சற்றுத்  தொலைவில் இரண்டு நாற்காலிகள் காலியாகக் கிடக்க, அந்த மனைவி, நோயாளிக் கணவனை ஒருவழியாக இழுத்துச் சென்று அமர வைத்தார்.

மருத்துவமனைக் காத்திருப்புகள் அவ்வளவு எளிதில் தீர்ந்துவிடுவதில்லை என்பதையுணர்ந்த நானும் காத்திருக்க ஆரம்பித்தேன். காத்திருத்தலின் பொழுதில் அலங்கரிக்கும் நொடிகள் ஒவ்வொன்றுமே உதிர மறுத்துக்கொண்டேயிருந்தன.

ஒருவழியாய் மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெற்று, மருந்து மாத்திரை வாங்கித் திரும்புகையில் மணி இரவு எட்டை நெருங்கியிருந்தது.

நோய்கள் கொடுமை என்பதைவிட, வைத்தியத்திற்கு காத்திருக்கும் கொடுமை கொடூரமாக இருக்கின்றது. இந்தக் கொடூரத்தை அப்படியே முழுதாக அனுபவிப்பவர்கள் நோயாளிகள். ஒன்றே ஒன்று நோயில் நொறுங்கிக் கிடப்போரால் அதை உணர்ந்தாலும் சொல்ல முடிவதில்லை!

-0-7 comments:

சத்ரியன் said...


சில மருத்துவமனையில் நோயாளிகளை நடத்தும் விதம் மிகவும் கேவலமாகத்தான் இருக்கிறது.

கிருத்திகாதரன் said...

பிரபல மருத்துவமனைகளில் அப்பாயின்ட்மென்ட் என்பது கண்துடைப்பாகதான் இருக்கு.காத்திருத்தலின் வலி வேதனையானது.முக்கியமாக வயதானவர்களும்,சிறு குழந்தைகளும் காத்திருத்தலின் பொழுது படும் அவலங்கள் வேதனை. அருமையான தலைப்பு.

Prapavi said...

தாத்தா நலமா?

Prapavi said...

தாத்தா நலமா?

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மருத்துவ மனைகள் போதுமானதாக இல்லை - சில பிரபலமான மருத்துவ மனைகளில் காத்திருப்பதென்பது இயல்பான ஒன்றாக ஆகி விட்டது. கொடுமையிலும் கொடுமை - நோயாளி வரவேற்பறையில் மணீக்கணக்காகக் காத்திருப்பது தான். வேறு வழியும் இல்லை.

Rathnavel Natarajan said...

நோய்கள் கொடுமை என்பதைவிட, வைத்தியத்திற்கு காத்திருக்கும் கொடுமை கொடூரமாக இருக்கின்றது. இந்தக் கொடூரத்தை அப்படியே முழுதாக அனுபவிப்பவர்கள் நோயாளிகள். ஒன்றே ஒன்று நோயில் நொறுங்கிக் கிடப்போரால் அதை உணர்ந்தாலும் சொல்ல முடிவதில்லை!

அருமையான பதிவு. நன்றி கதிர் சார்.

MADURAI NETBIRD said...

மருத்துவமனைக் காத்திருப்புகள் அவ்வளவு எளிதில் தீர்ந்துவிடுவதில்லை என்பதையுணர்ந்த நானும் காத்திருக்க ஆரம்பித்தேன்.

ஆம் தோழரே சில நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதவை.

அருமையான பதிவு.உங்கள் எழ்த்து நடை மிகவும் சூப்பர்.......................