என் கேள்விக்கென்ன பதில்?அறிவியலும், தொழில் நுட்பமும் அதுவாக அமைந்ததில்லை. அவை மனித மூளையின் வியர்வைத்துளிகள். இத்தனை வியர்வைத்துளிகளைச் சிந்,த இந்த மனிதமூளை கொஞ்சமாகவா யோசித்திருந்திருக்கும். ஏன் இத்தனை கண்டுபிடிப்புகள் மனிதனுக்குத் தேவைப்பட்டது? எதற்கு இத்தனை யோசனைகள் மனிதனுக்குள் வந்தது. யோசனை என்பதே ஒருவிதப் பேராசைதானோ?

எண்களைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்து சிரமப்படுவதிலிருந்து விடுபட, அதை எளிமைப்படுத்திட உருவாக்கப்பட்ட கையடக்க கால்குலேட்டர் எவ்வளவு பெரிய அற்புதம். ஆனால், அந்த அற்புதமே பள்ளிகளைக் கடந்த பிறகு இரண்டையும் இரண்டையும் கூட்டவும் பெருக்கவும் கூட அது இருக்கும் இடத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் வன் மாயத்தை தன் இதழோரம் சிந்துவதையும் காணத்தானே செய்கின்றோம். கணக்கிடக் கண்டுபிடித்ததற்காகப் பெருமைப்படுவதா? கணக்கிடுதலை மறந்து அதன் பிடியில் கட்டுண்டு கிடப்பதற்கு வருத்தப்படுவதா!?


இதோ இந்தக் கைபேசிகள். வரும்பொழுது இத்தனை கனவுகளை யாருக்குள்ளும் சுமத்தியிருக்கவில்லையே. ஒரு செங்கல் போல் கனத்து, நம் காசை விநாடிகளில் கரைக்கும் ஒரு வஸ்துவாக வந்து, சமூகத்தில் வசதிபடைத்தோர் என்ற குறியீட்டை சுட்டும் ஒரு காணக்கிடைக்காத அற்புதமாக வந்த இந்தக் கைபேசிகள் இத்தனை மாயங்களைச் செய்யும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லைதானே?

இன்றைக்கு எல்லாமும் எளிமைப் பட்டுவிட்டன. எதையுமே எட்டுவதற்குச் சிரமமாயில்லை. உள்ளங்கைக்குள் எல்லாம் வந்து அடங்கிவிட்டன. பேசுவதற்கு, தகவல் பெற அனுப்ப, மின்கட்டணம் செலுத்த, தொலைபேசிக்கட்டணம் செலுத்த, பணப்பரிமாற்றம் செய்ய, மின்மடல் அனுப்ப, காட்சிகளை நிழற்படங்களாக சேமிக்க, பேருந்து, தொடர்வண்டி என விமானம் வரை எல்லா பயணச்சீட்டுகளையும் பதிவு செய்ய விரல் நுனியில் பதிவு செய்துகொள்ள முடிகிறது. உலகத்தின் எந்த மூலையில் நடப்பதையும் தொடுதிரையில் வருடும் விரல்களின் நுனிகளில் மீட்டிவிட முடிகிறது.

பணப்பரிமாற்றங்கள் எத்தனையெத்தனை எளிமைப்பட்டுப்போய் விட்டன. பணத்தைச் சம்பாதிக்கவும், அதை வங்கியில் நேரிடையாக செலுத்தவும் மட்டும்தான் நமக்கு அதிக நேரமும் சிரமமும் ஏற்படுகின்றன. மற்றபடி ATMல் பணத்தை எடுக்கவும், அதைச் செலவிடவும் வெகு எளிதாகவே இருக்கின்றன.
இணையம், அடேங்கப்பாஇதன் மாயாஜாலங்களைச் சொல்ல வார்த்தையில்லை. ஒவ்வொரு சொடுக்குகளில் உலகின் எந்த மூலையை வேண்டுமானலும் மிக நெருக்கத்திற்கு கொண்டு வந்துவிடமுடிகின்றது

வரமாக வந்த கைபேசிகள் ஒட்டுமொத்தமாய் நம்மை வாரி தனக்குள் சுருட்டி வைத்துக்கொள்ளவில்லையா? சிறிது நேரம் நமது கைபேசிக்கு அழைப்பு வரவில்லையென்றால், அது இயங்குகிறதா? இயங்கவில்லையா என்று நம்மையறியாமல் பொத்தான் அழுத்திப் பார்க்க எது நம்மைத் தூண்டுகிறது? ஏன் யாருமே அழைக்கவில்லையென்று விசனப்படுகிறோம்? ஏன் அழைக்க வேண்டுமென்று கேள்வி கேட்பதேயில்லை? அதுவும் தனியாக இருக்கும் பொழுதுகளிலும், தனியாய் மேற்கொள்ளும் பயணங்களிலும் அழைப்புகள் வராத கைபேசிகள் ஏன் தான் இத்தனை கனம் கனக்கின்றனவோ!?

ஆமாம் இதெல்லாம் யார் எதற்காக எத்தனை பிரயத்தனப்பட்டு கண்டுபிடித்தார்கள். நாம் இன்றைக்கு எளிமையாகப் பயன்படுத்தும் இவற்றை நமக்காகக் கண்டுபிடித்தவன் நமக்கு சொந்தமா? பந்தமா? அவன் தேவனா? சாத்தானா?

இதுபோல் ஒவ்வொன்று குறித்தும் விதவிதமாக சிலாகித்து, குறைகூறி பக்கம் பக்கமா எழுத நினைக்கிறது மனது. ஆனாலும் வேறோ ஏதோ ஒன்று என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றது. அது என்னவென்று உற்றுக் கவனிக்கின்றேன். வேறொன்றுமில்லை அது ஒரு சாதாரணக் கேள்விதான், ஆனால் வம்புபிடித்த கேள்வி.

இத்தனை எளிமைப்பட்ட உலகில், வாழ்க்கையை எளிமையாக்க தேவைப்பட்டதும், தேவைப்படாததும் என எல்லாவற்றையும் வாங்கித் தீர்த்த பிறகு, எனக்குள் மூளையக் அரித்துக்கொண்டேயிருக்கும் அந்த ஒற்றைக் கேள்விஇத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனைபிசியாவே இருக்கிறோம்”?

-0-

9 comments:

vasu balaji said...

செம.

/என்ன வெங்காயத்துக்கு நாம பிசியாவே இருக்கோம்?/

கொஞ்சம் பிசியா இருக்கேன். அப்பாலிக்கா பதில் சொல்றேன்:))))))))))

Prapavi said...

”இத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம்”?.......டெக்னாலஜியை உபயோகபடுத்தும் நமக்கு, நம் நேரத்தையும் வேலையையும் ஒழுங்கு படுத்தி கொள்ள தெரியாததால்..ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

///இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம் ///

பிசியாக காட்டிக் கொள்கிறோம்...

அதியா வீரக்குமார் said...

எனக்குத் தெரிந்த பதில்....டெக்னாலஜிதானே நம்மை பிஸியாக்கியிருக்கறது. முதலில் லெண்ட் லைன் மட்டும் இருந்தபோது நாம் ஒருநாளில் இவ்வளவு நபர்களைத் தொடர்பு கொண்டோமா...? இப்போது நாம் கொள்ளும் தொடர்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை கூடத்தானே செய்யும். நாம் பிஸியாகித்தானே தீரவேண்டியிருக்கிறது. இணையத்தின் நிலையும் அதுதானே...?? ஆனால் நீங்கள் கூறுவதில் வங்கியின் கணக்கு சரிதான். ஆனால் வங்கியில் நமக்கு மிச்சமாகும் நேரம் இணையத்தாலும் கைத்தொலைபேசியாலும் கையகப்படுத்தப் படுகிறதுதானே...??

MARI The Great said...

5000 பேர் வேலை பார்க்கும் கம்பெனியில் முன்னர் எத்தனை கணக்காளர் இருந்திருப்பார்?குறைந்தது ஒரு ஐந்து பேர் இருந்திருப்பார்களா?

ஆனால்... இப்போது ஒரே ஒரு கணக்காளரும் ஒரு கணிப்பொறியும் அதில் ஒரு SAP software-ம் போதுமானதாக இருக்கிறது!ஆனாலும் அந்த கணிப்பொறியை இயக்குவதற்கு நாள் முழுவதும் நாம் பிசியாகத்தான் இருக்கவேண்டியதிருக்கிறது! :) :)

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனைகள். பாராட்டுகிறேன், கதிர்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இன்னும் இன்னும் எளிமையாக்குவதற்காகத்தான் பிஸியாக அலைகிறோம் - அவ்வளவுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விருச்சிகன் said...

நல்ல சிந்திக்க தூண்டிய பதிவு. நன்றி.

"இத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம்?"

இதற்கு காரணம் ஆசை, அதைவிட பேராசை. ஒரு சாதாரண கைபேசி நமக்கு போதலியே. ஸ்மார்ட் போன் வாங்கணும், அப்புறம் நோட், டேபிலேட். சின்ன மாருதி கார் வசிருக்கரவரு, பெரிய ஜீப் இல்லன்னா SUV க்கு ஆசைபடறார். SUV வச்சிருக்கரவங்க, ஆடி, பென்ஸ் மாதிரி காருக்கு ஆசைப்படறாங்க.


மனுஷன் சுகவாசியா ஆயிட்டான். அதுக்கு பணம் வேணும். சீக்கிரம் பணம் சம்பாரிக்க குறுக்கு வழிய தேடறான். நாம நல்லா இருக்கணும்னா, நாலு பேரு செத்தாக்கூட பரவா இல்லைங்கற எண்ணம் இப்போ இருக்கு.

இந்த போட்டியில, நாம மனுஷத்தன்மைய சுத்தமா இழந்துட்டு வர்றோம். அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலி ஆகும்னே நிறையப்பேரு கணக்கு போட்டுட்டு இருக்காங்க.

கூடிய சீக்கிரம், இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்னு எதிர்பார்ப்போம்.

சாமி உழவர்களின் நண்பன் said...

வேறேன்ன!!! தேவையற்ற பேராசை, அர்த்தமிழந்த ஆடம்பரம்,,,..