மனிதத்திலிருந்து சற்றே மாறி

காலை 7.30 மணி அழுக்கடைந்த நகரப்பேருந்தின் ஜன்னல் ஓரம் கை முட்டியில் அழுக்குப் படாமல் சிறிது ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறேன். நகரப் பேருந்து என்பதால் மனிதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது, ஆனாலும் நடத்துனர் முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருந்தார்.




மனிதர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏ... ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் எறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை.....

மூலப்பட்டறை அருகே குறுக‌லான‌ திருப்ப‌த்தில் இருக்கும் நிறுத்த‌த்தில், சிறிது தூரம் தள்ளி பேருந்து நிற்கிற‌து. ந‌ட‌த்துன‌ர் யாரையோ திட்டுவ‌துபோல் தெரிகிற‌து, எதையோ எடுத்து படிக்க‌ட்டு வ‌ழியே வீசுகிறார், ஒரு திடுக்கிட‌லோடும், கொஞ்ச‌ம் ஆர்வ‌த்தோடும் சன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். நான்கு முனைக‌ளும் இழுத்து மைய‌த்தில் முடிச்சு போட‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌ழைய‌ துணிமூட்டை விழுந்த‌ வேக‌த்தில் லேசாய் அதிர்கிற‌து. சில‌ நொடிகளில் ஒரு நைந்துபோன‌ கிழ‌வி இற‌ங்குவ‌து தெரிகிற‌து. நகரும் பேருந்தின் பக்கவாட்டில், அவசரமாய், தள்ளாடிக்கொண்டு, துணி மூட்டையை நோக்கி குனியும் கூன்விழுந்த முதுகு தெரிகிறது. ஏனோ என்னுடைய‌ பாட்டி நினைவுக்கு வ‌ருகிறார், அந்த‌ ந‌ட‌த்துன‌ரின் தாயோ, பாட்டியோ அந்த கிழ‌‌வியின் வ‌ய‌தொட்டி இருக்க‌ வேண்டும் என ம‌ன‌ம் நினைக்கிற‌து.

சற்று நேரத்தில், ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்து, நவீன கட்டண கழிப்பிட அறைக்கு அருகில் நிற்கிறது. உள்ளிருந்த பயணிகளை துப்பிவிட்டு, புதிதாய் மனிதர்களை நிரப்பிக்கொண்டிருந்தது பேருந்து. மனிதர்களை பயணிகளாக்குவதற்கு "பார்க், ஸ்டேசன், நால்ரோடு" என நடத்துனர் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ....

நவீன கட்டண கழிப்பிட அறை நகரத்தின் சாட்சியமாகவும், நரகத்தின் ஒரு முன் மாதிரியாகவும் அழுக்கும், துர்நாற்றமும் தன் அடையாளமாக கொண்டு நிற்கிறது. கொஞ்சம் நீளமாக இருக்கும் அறைக்கு, இரண்டு நுழைவாயில்கள், ஒருபுறம் ஆண் படமும், இன்னொரு புறம் பெண் படமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு கதவுகளுக்கும் இடையே இருக்கு மைய இடைவெளியில் ஒரு தகர நாற்காலியும், தகர மேசையும், மேசை மேல் விரித்துப்போட பட்ட பழைய செய்திதாளும், அடுக்கி வைக்கப்பட்ட சில்லறை காசுகளும் தெரிகிறது.


நவீன கட்டண கழிப்பிடப்பிடத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய அழுக்கோடு ஓட்டை விழுந்த பனியனோடு இருந்த கழிப்பிடப் பொறுப்பாளார், கழிப்பிடத்திற்கு வந்த வாடிக்கையாள‌னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக சில்லறை குறித்த சண்டையாக இருக்கலாம் என மனதுக்குப்பட்டது. பேருந்து மெல்ல நகரத்துவங்கியது...

மனிதர்களால் காலை நேரத்திலும் கூட கோபங்களையும், சண்டைகளையும் தவிர்க்க முடிவதில்லை. மனிதனுக்கு மனிதனோடு என்றும் சண்டை வருவதில்லை. மனிதன் நடத்துனராகவும், மனிதன் பயணியாகவும் அடையாளம் மாறும்போது கோபம் எளிதாக வருகிறது. மனிதன் கழிப்பிட பொறுப்பாளனாகவும், மனிதன் வாடிக்கையாளனாகவும் அடையாளம் மாறும் போது சண்டை எளிதாக வருகிறது.

ம‌னித‌னாக‌ இருக்கும் வ‌ரை சுக‌மே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது ம‌னித‌னாகவே இருக்கிறோம், அதுதான் நிஜ‌முகமும் கூட‌.

விழித்த‌து முத‌ல்......
க‌ண‌வனாக‌, மனைவியாக, த‌ந்தையாக‌, தாயாக, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌, தொண்டனாக...... என‌ நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான். 

________________________________________________________

39 comments:

ஈரோடு கதிர் said...

மீள் இடுகை.

vasu balaji said...

பொதுவா சண்டையில் நீயெல்லாம் ஒரு மனுசனா என்ற வார்த்தை வராமல் போகாது. இடுகை படித்த பின்பு தன்னையறியாமலே உணர்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.Good one.

Radhakrishnan said...

பிரமாதம் கதிர். :)

க.பாலாசி said...

//அந்த‌ ந‌ட‌த்துன‌ரின் தாயோ, பாட்டியோ அந்த கிழ‌‌வியின் வ‌ய‌தொட்டி இருக்க‌ வேண்டும் என ம‌ன‌ம் நினைக்கிற‌து. //

ம்ம்.. படிக்கும்போதே எவ்வளவு மனச்சங்கடம் உண்டாகிறது... சிலஇடங்களில் இவ்வாறு காணும்பொழுது மனதில் ஒரு தவிப்பு உண்டாகத்தான் செய்கிறது...

//புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான். //

இதுஒரு தலைகீழ் பரிணாமம் மீண்டும் வந்தப்புள்ளிக்கே செல்லும்....

தனி காட்டு ராஜா said...

//விழித்த‌து முத‌ல்...... க‌ண‌வனாக‌, த‌ந்தையாக‌, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌ என‌... நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான். //
"ஈரோடு கதிர் " என்ற ஊர் (மாநகராட்சி) அடையாளம் ஏன்..? உங்கள் பெயரில் இருந்து ஈரோடு என்பதை தூக்குங்கள் ...இல்லை பதிவை தூக்குங்கள்...

ஹ ஹ ஹ ......

சத்ரியன் said...

// க‌ண‌வனாக‌, த‌ந்தையாக‌, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌ என‌... நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான். //

சரியாச் சொன்னீங்க... கதிர்.

(இனிமே கூடுமான வரையில் மனிதனா இருக்க முயற்சி பண்றேன் சாமி.)

VELU.G said...

//ம‌னித‌னாக‌ இருக்கும் வ‌ரை சுக‌மே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது ம‌னித‌னாகவே இருக்கிறோம், அதுதான் நிஜ‌முகமும் கூட
//
அந்த நிஜமுகம் உயிர்ப்புடன் இல்லை என்பது தான் இங்கே முரண்பாடு. ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் எப்படியிருந்தாலும் அதில் யாதொன்றும் பயனில்லை. அதில் மனிதம் என்பதற்கான அர்த்தமே இல்லை.

எப்போது உயிர்ப்புடன் எழுகிறானோ அப்போதே பிரச்சனைகளோடு எழுகிறான். எப்போது பிரச்சனைகளை வைத்து இருக்கிறானோ அப்போது தான் அவன் மனிதனாக இருக்கிறான். எப்போது பிரச்சனைகளை யாருக்கும் தீங்கு இல்லாமல் தீர்க்கிறானோ அப்போது மனிதத் தன்மையுடன் இருக்கிறான்

,,,,,,,,,,,,,,,,,,,
யப்பா சாமி போதுன்டா வேலு இதோட நிறுத்திக்கோ

ராமலக்ஷ்மி said...

//மனிதனுக்கு மனிதனோடு என்றும் சண்டை வருவதில்லை.//

உங்கள் பார்வை சிந்திக்க வைக்கிறது.

பழமைபேசி said...

//நாற்காளியும்//

மனிதனுக்கு தன்னுடைய கால் கூட நினைவுக்கு வரமுடியாமற் போனதும் இதில் அடக்கம்! அஃகஃகா!!

AkashSankar said...

யோசிக்கவேண்டிய விடயம் தான்...

CS. Mohan Kumar said...

அருமை கதிர்

dheva said...

மனிதர்கள் பொறுப்புகளுக்குள் தங்களை புகுத்திக்கொள்ளும் போது தான்...இந்த பிரச்சனைகள்தான்....! மனிதன் எப்போதும் மனிதனா இருத்தலே நலம்! நல்ல பதிவு கதிர்!

அம்பிகா said...

\\விழித்த‌து முத‌ல்...... க‌ண‌வனாக‌, த‌ந்தையாக‌, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌ என‌... நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான்.\\
உண்மைதான். அருமையான பதிவு.

செ.சரவணக்குமார் said...

நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையில் 'மரியாதை என்பதே தெரியாத பேருந்து நடத்துனர்கள் போல' என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மனிதர்கள் மனிதர்களாக மட்டுமே இருந்துவிடில் எந்தப் பிரச்சனையும் இல்லை தான்.

மிக நல்ல பகிர்வுக்கு நன்றி கதிர் அண்ணா.

பத்மா said...

சரியாய் சொல்லிருக்கீங்க கதிர். எங்க போய் மனிதம் தேடுவது

ரோகிணிசிவா said...

STUPENDOUS WRITING,
THANKS FOR SHARING KATHIR,
REAL LIFE INCIDENTS NARRATED IN ITS BEST WAY ,KEEP BLOGGING

பிரபாகர் said...

நல்ல பகிர்வு கதிர்!

இது சம்மந்தமா நடந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வர... இடுகையாய் எழுதுகிறேன்!

பிரபாகர்...

Paleo God said...

//பொதுவா சண்டையில் நீயெல்லாம் ஒரு மனுசனா என்ற வார்த்தை வராமல் போகாது. இடுகை படித்த பின்பு தன்னையறியாமலே உணர்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.Good one.//

அதே அதே..! அருமைங்க கதிர்.

தாராபுரத்தான் said...

தினம் தினம் அனுதினம்...என்ன செய்ய..

Unknown said...

புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான்.\\

Good Kadhir.Zp
by Jc.Guna,Salem

பாலகுமார் said...

அருமையான கட்டுரை..

நிலாமதி said...

மனிதம் மறந்த உலகில் எப்படி மனிதத்தை தேட முடியும்....
...நல்ல பதிவு.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான சிந்தனை - நாம் மனிதத்தைத் தொஅலித்து விட்டு மற்றவையாக மாறும் போது இச்சண்டைகள் தவிர்க்க இயலாது போகிறது. என்ன செய்வது .....

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

*இயற்கை ராஜி* said...

அருமையான பகிர்வு.. தினம் பார்ப்பவைதான் என்றாலும் வித்தியாசமாய் சொல்லியிருக்கிறீர்கள்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Radhakrishnan

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ க.பாலாசி
//இதுஒரு தலைகீழ் பரிணாமம் மீண்டும் வந்தப்புள்ளிக்கே செல்லும்....//
பயபுள்ள என்னென்னவோ சொல்லுதே


நன்றி @@ தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி
// "ஈரோடு கதிர் " என்ற ஊர் (மாநகராட்சி) அடையாளம் ஏன்..? உங்கள் பெயரில் இருந்து ஈரோடு என்பதை தூக்குங்கள் ...இல்லை பதிவை தூக்குங்கள்...//

வாங்க த.கா.ரா(அ).சு.யோ.

அண்ணே.. ”ஈரோடு” பேர யூஸ் பண்றதுக்கு (மா)நகராட்சியில 2015 வரைக்கும் டாக்ஸ் கட்டிப்புட்டேன்... இப்போ அந்த பேர எடுத்தா கட்டுன காசு வீணா போயிடுமே.. என்ன்ன்ன்ன்ன்ன்னா பண்றதுன்னு கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லுங்கண்ணே...

நன்றி @@ ’மனவிழி’சத்ரியன்
நன்றி @@ VELU.G
//யப்பா சாமி போதுன்டா வேலு இதோட நிறுத்திக்கோ//

பாலாசி கூட சேரவேணாம்னா கேட்டாத்தானே ஆகும்

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ பழமைபேசி
//நாற்காளியும்//
ம்ம்ம்... நாலு காளின்னு எதாவது சொல்லி சமாளிக்கலாமா...

பாவம்... மாப்பு...
போனாப்போகுது தப்புதான்னு ஒத்துக்குவோம்

நன்றி @@ மோகன் குமார்

நன்றி @@ ராசராசசோழன்

நன்றி @@ dheva

நன்றி @@ அம்பிகா
இன்னும் உங்க சிரட்டை மிட்டாய் கவிதைதான் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது


நன்றி @@ செ.சரவணக்குமார்
நாஞ்சில் நாடனின் அந்தக் கதை இன்னும் படிக்கவில்லை. படிக்கிறேன்

நன்றி @@ padma

நன்றி @@ ரோகிணிசிவா

நன்றி @@ பிரபாகர்
//இது சம்மந்தமா நடந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வர... இடுகையாய் எழுதுகிறேன்!//

தாத்த்த்த்த்த்த்தா!!!!!!!

நன்றி @@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ guna
//Jc.Guna//
மிக்க மகிழ்ச்சி. சட்டென நினைவுக்கு வரவில்லை. தொடர்பு கொள்ளுங்கள் குணா

நன்றி @@ பாலகுமார்

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ *இயற்கை ராஜி*

மதுரை சரவணன் said...

good thought. thank u to make all to think of our humanity.

அன்புடன் அருணா said...

/மனிதன் நடத்துனராகவும், மனிதன் பயணியாகவும் அடையாளம் மாறும் போது கோபம் எளிதாக வருகிறது./
ரொம்ப சரி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை. நகரங்களில் ஓடும் வாகனங்களை விட கிராமங்களில் ஓடும் பேருந்து நடத்துனர்கள் கொஞ்சம் கனிவாக இருப்பார்கள்.

ரோஸ்விக் said...

கடைசி நான்கு பாராக்கள் மிக மிக அருமை கதிர்...

Chitra said...

விழித்த‌து முத‌ல்...... க‌ண‌வனாக‌, த‌ந்தையாக‌, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌ என‌... நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான்.

.......... very sad but true. ...... நிறைய யோசிக்க வைக்கும் பதிவு.

'பரிவை' சே.குமார் said...

மிக நல்ல பகிர்வுக்கு நன்றி கதிர் அண்ணா.

பிரேமா மகள் said...

உண்மை அங்கிள்... நகரங்கள் நரகமாகும் போது மனிதன் என்பவன் மிருமாக முயற்சிக்கிறான்....

Thenammai Lakshmanan said...

உண்மையான ஆதங்கம் கதிர்

காமராஜ் said...

எல்லாவற்றையும் இடம் மாறிப்பார்க்கவேணும்.பேருந்துக்கு காத்திருக்கிற வரை பேருந்தை சபிப்பதும் .ஏறியவுடன் காத்திருப்போரைச்சபிப்பதும் இயல்பாகிப்போன உலகம்.' நான்'. அப்புறம் 'என்' என்கிற இரண்டையும் கழித்துப் பார்க்கச்சொல்லுகிற எழுத்து. கதிர் அசத்துங்கள்.

காமராஜ் said...

ரொம்ப நாளாச்சு கதிர் ஒரு அன்புக்கவிதை தாருங்கள்.

Thamira said...

தொடர்ந்து பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பளிக்கக்கூடிய கட்டுரை. இருப்பினும் நீங்கள் எழுதியவரையில் நேர்த்தியாக இருந்தது. நன்று.

சத்ரியன் said...

மனிதர்களைச் சுட்டும் சாக்கில் சில சுற்றுச்சூழல் குறையினையும் குட்டியிருக்கும் பாங்கே பாங்கு. அக்மார்க் கதிர்.

everestdurai said...

மனித தன்மை நமது கூட்டு குடும்பத்தில் இருந்தது இப்பொழுது இல்லையே .... முதல வீட்ட பாபோம் கதிர்

Unknown said...

மனிதனுக்கும்,மனிதனுக்கும் சண்டை வருவதில்லை...புதிய சிந்தனை.ஆனால் கண்விழித்தது முதல் ஏதோ ஒரு முகமூடியை அணிந்துகொள்ளவேண்டியது இருக்கிறதே...என்ன செய்வது?குழந்தைகளாய் இருந்துவிட்டால் எவ்ளோ நல்லாயிருக்கும்?