Nov 16, 2011

கீச்சுகள் - 5

சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை, எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது.

***
”எல்லாம் நானே, எவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதில்லை”  எனச் சொல்பவர்களிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது!.

***
தேய்க்கமுடியாத அளவுக்கு கரைந்த சோப்பை புது சோப்பில் ஒட்டிப் பயன்படுத்துறீங்களா? கடையில் இருந்து நீங்கதான் சோப் வாங்கிட்டு வர்றீங்கங்றத ஒத்துக்குறேன் :).

***
மௌனங்களில்தான்  தேடவும் முடிகிறது,  தொலையவும் முடிகிறது.


***
அண்டை வீட்டு நாய் அடங்காமல் குரைப்பது அதன் சுதந்திரம். பதிலுக்கு குரைக்கவோ, காதைப்பொத்தவோ மட்டுமே சுதந்திரம். அதை அடிக்க அல்ல #முடியலத்துவம்.

***
நாயகனாகவோ, வில்லனாகவோ இருப்பதை அவன் மட்டுமே தீர்மானித்துவிட முடிவதில்லை!

***
நம் தவறுகள், பல சமயங்களில் மற்றவர்கள் சுட்டும் முன்பே நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஒத்துக்கொள்வதில் மட்டும்தான் எப்போதுமே சிக்கல்!.

***
எல்லாவற்றுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லும் நபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருப்பது நிகழ்காலத்திற்கும் நல்லது!.

***
ஆரம்பப் பள்ளி நாட்களில் அதிகம் திட்டு வாங்கியவர்களில் முக்கியமானவர் ”திருவள்ளுவர்”.

***
தேவதைகளுக்கு தங்களைத் தேவதைகளெனத் தெரிவதில்லை, ஆராதிப்பவர்களுக்குத்தான் தெரிகிறது.

***
விடுமுறைக்கு அடுத்து வரும் எல்லா நாட்களும் திங்கட்கிழமை இல்லை என மனசுக்குப் புரியவைக்க நான் படுற பாடு இருக்கே!!! #அப்ப்ப்பப்பா!


***
சில மரணங்களை கடவுள் தடுப்பதுமில்லை.  சில மரணங்களை அவ்வளவு எளிதில் பரிசளித்துவிடுவதுமில்லை!.

***
பிடிக்காத உணவுக்கு எத்தனை நேரமானாலும் பசிப்பதில்லை. பிடித்த உணவுக்கு எந்த நேரமெனினும் பசிக்கிறது # குழந்தைகள்.

***
இன்னும் போதாமல் இருப்பது “அன்பு”.

***
தங்கம் விலை உயர்வால் மக்கள் அவதி - அடப் பாவமே காத்தால பழைய சோத்துக்கு தங்கத்தைத்தான் தொட்டுக்குவாங்களோ?

***
பல பொண்ணுங்க ஆண்களை, அண்ணான்னு கூப்பிடறது பாசத்துல இல்ல, பாதுகாப்புக்கும்தான் #தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி.... :)

*** 

அழகாய் இருக்கும் அபத்தங்கள் சில நேரங்களில் கவிதையாக மாறிவிடுகிறது.

***

அதீதமாய் நேசிக்கும் ஒன்று குறித்து பேசும்போது கூடுதல் நாடகத்தன்மை வந்துவிடுகிறது. 

*** 

எந்தச் சூழலில் ஆழ்ந்திருந்தாலும், சில பாடல்களால் அதிலிருந்து மீட்டெடுத்துவிட முடிகிறது # இசை.

***
மனதுக்கு உகந்த நண்பர்கள் உடன் இருக்கும் பொழுதுகளில், ஒரு திருவிழாவிற்குரிய கொண்டாட்டம் மனதில் நிலைகொள்கிறது!.

***

மாங்குமாங்னு கல்யாணத்தை போட்டோ எடுத்துக்கொள்ளும் பலர் (முழுதாய் பணம் கொடுத்து) ஆல்பம் வாங்குவதற்குள் பசங்க புள்ளைக பள்ளிக்கூடம் போய்டுது.

***


பொறுப்பி: அவ்வப்போது ’ட்விட்டரில்’ கிறுக்கிய ’கீச்சுகள்’.

Nov 14, 2011

தழும்புகள்




 


பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!



~0~

வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!

 


~0~
-

Nov 8, 2011

பெருநதிப் பயணம்





ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி

~ 

நன்றி: திண்ணை

~

Nov 5, 2011

இன்றும் ஒரு இனிய நாள்

பள்ளி மாணவர்களின் உலகத்திற்கு கலந்து மூழ்கி நீந்தி வருவது சுகமானதொரு அனுபவம். சீருடைகளில் ஏறக்குறைய ஒரே உயரத்தில் இருக்கும் மாணவர்களிடம் உரையாடி மகிழ்வது நமக்கு நாமே புத்துணர்வு ஊட்டிக்கொள்ளும் இனியதொரு தருணம்.



பத்திரிக்கை, தொலைக்காட்சி என ஊடக உலகத்தில் அழுத்தமாக அசத்திவரும் புதிய தலைமுறை குழுமத்தின் ”புதிய தலைமுறை அறக்கட்டளை” அப்படிப்பட்ட இனியதொரு வாய்ப்பினை வழங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் ”இது எப்படிப்பட்ட சுதந்திரம்” என நிழற்படக் கண்காட்சியையும், மாணவர்களுக்கான சிறப்பு உரை வீச்சுகளையும் ஏற்பாடுசெய்து வருகிறது. 

புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஈரோடு  மாவட்ட கௌரவ அமைப்பாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து ஆகியோரின் அழைப்பின் பேரில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவ மாணவியர்களிடையே “தியாக மனப்பான்மை” எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு இன்று (05.11.2011) கிடைத்தது.


மாணவ மாணவியர்கள்




அரங்கிற்குச் செல்லும் வரை, நான் பேசவேண்டியது எந்த வயது, வகுப்பு மாணவர்கள் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. மேடையில் அமரும் போதுதான் தெரிந்தது, அரங்கில் இருப்பது எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் என்று. அருமையானதொரு அரங்கம். சுமார் 150 மாணவ மாணவியர்கள் இருந்திருக்கலாம். எனக்கு முன்பாக ஒருவர் உரை நிகழ்த்தி முடித்திருந்தார். நான் செல்லும் சமயத்தில் பெருந்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்.கணபதி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது பொன்.கணபதியின் பெயரைப் பார்த்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. காரணம் 1994-95 ஆண்டுகளில் என நினைக்கின்றேன். கல்லூரி முடிந்த அந்த நேரத்தில் கவிதைப் பித்துப் பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வாயிலாக மகுடஞ்சாவடியைச் சார்ந்த வடிவேலு என்பவர் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்திக்கொண்டிருந்தார். (கையெழுத்துப்பிரதி என்பது புத்தகவடிவில் கையால் எழுதி, அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகிப்பது) அப்போது அந்தக் கையெழுத்துப்பிரதிக்கு கவிதைகள் அனுப்புவதும், அதில் வெளிவந்துவிட்டால் உலகமே வசப்பட்டதுபோல் கொண்டாடி மகிழ்வதும் எனத்திரிந்த காலம். 

அப்போது பள்ளிபாளயத்தில் நடந்த ஒரு கவியரங்கிற்கு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் பொன்.கணபதி அவர்கள் தலைமைதாங்க நான் கவிதை வாசித்தேன். அதன்பின் ஓரிரு வருடங்கள் அவரோடு கடிதத் தொடர்பு இருந்தது. கால வேகத்தில், சூழல்களின் வெள்ளத்தில் கடிதப் பழக்கம் அடித்துச் செல்லப்பட்டது. நட்பு வட்டங்கள், ரசனைகள் மாறியது. பல வருடங்கள் எழுத்து முற்றிலும் அற்றுப்போனது. மீண்டும் வலைப்பக்கம் வந்தபிறகுதான் எழுத்து மறுபிறப்பெடுத்தது. பொன்.கணபதி என்பவர் நினைவிடுக்கிலும்கூட இல்லாமல் போயிருந்தார்.

அழைப்பிதழ் கிடைத்த நாளிலிருந்து, நான் பேசுவதை விட அவரைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன். நான் உள்ளே நுழைந்த போது, அவர் பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 16 வருட இடைவெளி அவர் உடலை, முகத்தை, குரலை நிறையவே மாற்றியிருந்தது.

அடுத்ததாகப் பேசுவதற்கு என்னை அழைக்குமுன் ஐந்து நிமிட இடைவெளி கொடுக்க, அப்போது மற்றொரு பேச்சாளர், அந்த நேரத்தில் மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடலுக்காக “நீங்கள் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்க வேண்டிய கேள்வி, கேட்கக் கூடாதே கேள்வி என எதை வேண்டுமானாலும் கேட்கலாம்?” என அறிவித்தார். யாரும் எதுவும் கேட்க முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினார். கூட்டத்திலிருந்து ஒரு மாணவன் எழுந்தான்

“நாம ஓட்டுப்போட்டு எம்எல்ஏ, அமைச்சர்னு தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் லஞ்சம் வாங்கினால் அதை எப்படி திருப்பி வாங்குறது?, அவர்களை பதவியிலிருந்து இறக்குவது எப்படி?” என்று கேட்டான்.

மேடையில் அமர்ந்திருந்த நான் ஒருகணம் ஆடிப்போனேன். என்னவோ எட்டாம் வகுப்பு பசங்க, விளையாட்டுத்தனமா இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டிருந்த என் முட்டாள்தனத்தின் மேல் பளீரென்று அறைந்தது போல் இருந்தது அந்தக் கேள்வி.

இவர் சமாளிப்பதாக நினைத்துக்கொண்டு “அவங்களே லஞ்சமா வாங்கிட்டாங்க, அதை நாம ஏன் வாங்கனும்” என நகைச்சுவை ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பேச….

சட்டென இடைமறித்த மாணவன் “இல்லங்க சார், இப்போ 2ஜி ஊழல்ல இத்தனை பணம் அடிச்சுட்டாங்க, கேஸ்தான் நடக்குது, அது வேறங்க சார், ஆனா அவங்களை நாமளே பதவியில இருந்து எப்படி நீக்குறது” என்று கேட்க

இவர் அரசியல் கேள்வியெல்லாம் வேண்டாம், போதுவா கேளுங்க எனச் சொல்ல அந்த மாணவன் அமர்ந்துகொண்டான்.

”ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்” என்பது போல், எனக்கென்னவோ அந்த மாணவன், அங்கிருந்த ஒட்டுமொத்த மாணவர்களின் பிரதிநிதியாகவே தோன்றினான்.

வெங்கட்ராமன், வெங்கடேஷ்வரன், பொன்.கணபதி, முத்து

இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் 

“ஏம்பா கனிமொழிய ஜெயில்ல வச்சிருக்காங்க?” ”2ஜி-னா என்ன, அதுல எப்படி காசு போச்சு” ”அப்புறம் ஜெயலலிதாவுக்கு என்னப்பா பிரச்சனை”  “ஏற்கனவே பணக்காரங்களா இருந்துட்டு ஏன் இப்படி பண்றாங்க” என ஏதேதோ புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் பேசவேண்டிய நான், மனதில் ஓடிக்கொண்டிருந்த குறிப்புகளை வேகவேகமாய் இடம் மாற்றிக் கொண்டிருந்தேன். அவரைக் கேள்வி கேட்ட அந்த மாணவன் என் புத்தி முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு நம்பிக்கைக்கோடு போல் தெரிந்தான்.

ஏற்கனவே பேசியவர்கள் எனக்கான நேரத்தையும் கொஞ்சம் கூடுதலாய் எடுத்திருந்ததால் முதலில் 45 நிமிடம் பேசவேண்டும் என கேட்டிருந்த அமைப்பாளர்களை நானே கேட்டேன், ”நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா” என்று. சங்கடத்தோடு ”20 நிமிடங்கள் பேசுங்க”. ஒலிவாங்கி அருகே இருந்த கைபேசி பதிவு நேரத்தில் 19.45 நிமிடங்கள் எனக் காட்டிக்கொண்டிருக்கும் போது நன்றியை உதிர்த்துக் கொண்டிருந்தேன். 

கதவுகள் திறக்க விடுபட்ட கூண்டுப் பறவைகளாய் மதிய உணவை நோக்கி சிட்டாகப் பறந்தன பிள்ளைகள். அந்தக் கேள்வி நாயகன் மட்டும் என் மனதிற்குள் தேங்கிக்கொண்டான். 


புதிய தலைமுறை அறக்கட்டளை அங்கு வைத்திருந்த சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த நிழற்படங்கள் கண்காட்சியை வலம் வந்தோம். இனியும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்த நினைவுகளை, ஆவணங்களை வைப்பதை விடுத்து, இன்று அடிமைப்பட்டுக்கிடக்கும், சிக்கல்களிலிருந்து, மாயைகளிலிருந்து வெளிவரும் யுக்திகளை காட்சிப்படுத்துவதே அவசரமான அவசியம் என மனதிற்குப் பட்டது.

பள்ளியில் மாணவர்கள் உணவு உண்ணும் அரங்கில், எங்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி போன்றே, ருசியான நிறைவானதொரு உணவு. வயிறும் மனதும் நிரம்பியது…. இன்றும் ஒரு இனிய நாள்.


~

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...