பரபரப்பு வற்றிப்போய் விடிந்தது இந்த விடுமுறை தினம். வழக்கமான அவசரத்தோடு சமைத்து பிள்ளைகளுக்குத் திணித்தும் திணிக்காமல் கொத்திப்போக வீதி மூலையில் வாகனக் கழுகுகளுக்கு துரத்த வேண்டிய அவசரமில்லை. கடந்த சில ஆண்டுகளைப் போல் விடுமுறை நாளில் வந்து தொலைக்காமல் கூடுதலாய் ஒரு விடுமுறையை பரிசாகக் கொடுத்து வழக்கச் சிறையிலிருந்து சிறகுகளை விடுவித்த இந்தப் புனித குடியரசு தினத்திற்கு கூடுதல் நன்றிகள்.
’கொடியேத்தி முட்டாய் கொடுக்கும்’ முக்கிய தினங்களின் மிக முக்கிய சமூகக் கடமையாற்றும் தொலைக்காட்சிகளின் எல்லாச் சேனல்களிலும் செயற்கைத் தேசப்பற்று அடர்த்தியாய் மின்னுகிறது. திரைகளின் ஏதோ ஒரு மூலையில் கொடி பாவமாய் பட்டொளி வீசி ஆட்டம் போட்டுக்கொண்டேயிருக்கின்றது.
அரசு தொலைக்காட்சிகளில் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் வயதான முதல்வர் எடுபிடிகளோடு அமர, அவர்களை விட வயதான, ஆளும் மாநிலத்தின் மொழியறியா ஆளுநர்கள் பெருமையோடு(!) குடியரசு தின உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கற்ற குரல்களில் மாநில மொழியிலும் ஆங்கிலத்திலும் ஆண் பெண் குரல்கள் வர்ணனை என்ற பெயரில் முக்கி முக்கிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியக் கலைகள் வளர்க்க முயலும் கலைஞர்கள், தொடங்கும் முன் ஒரு கும்பிடு, முடிந்து ஒரு கும்பிடு என இயந்திர கதியில் கொளுத்தும் முற்றிய காலை வெயிலில், தகிக்க முனையும் மைதானத்தில் வெறும் ஐந்து நிமிடங்களுக்காக பல நாள் ஒத்திகை பார்த்த ஆட்டத்தை ஆடித்தீர்த்துவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.
சன்னலினூடே தெரியும் சாலையில் பள்ளி வாகனங்களில் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சித் தலைவரோடு குடியரசைக் கொண்டாடிவிட்டு வண்ண உடையோடு, தீரப்போகும் விடுமுறை தினத்தை அனுபவிக்கும் குதூகலத்தோடு பள்ளிப்பிள்ளைகள் கூடுதல் உற்சாகத்தோடு கத்தி, கையாட்டித் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கமான தொணியில் ”நாட்டின் 62வது குடியரசு தினம் உற்சாகத்தோடும், பெருமிதத்தோடும் கொண்டாடப்பட்டது” என்ற வரிகளை எந்தச் சலனமில்லாமல் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே வரியை 60க்கும் மேற்பட்ட முறை வாசிக்கும் போது சலனத்தை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே!
வெளியே கிளம்புகையில் “வரும் போது கொடி வாங்கிட்டு வாங்கப்பா” என்ற வார்த்தைகளைச் சேமித்துக் கொண்டு கீழே வந்து வண்டியை நகர்த்தும் போது கீழ் வீட்டு உரையாடல் வலிய வந்து காதில் விழுந்தது…. ”டாடி! குடியரசு தினம்னா என்ன டாடி!!!!?” என்ற கீழ்வீட்டுச் சுட்டிப் பையனின் கேள்விக்கு வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த அப்பா “ஏண்டா இத்தன பணத்தப் புடுங்குறாங்களே, இதெல்லாங்கூட உங்க ஸ்கூல்ல சொல்லித்தரமாட்டாங்ளா?” எனக் கேள்வியால் கேள்வியை வீழ்த்தி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்.
மூன்றாவது பருவக் கட்டண ஓலை தந்த கடுப்பு ”என் இனமடா நீ!!!!” என அவரைத் தோளோடுதோள் அணைத்துக்கொள்ளத் தோன்றியது.
கூடவே…. குடிமக்களின் அரசு, மக்களாட்சி, மக்களுக்காக மக்களால் சுயமாகத்(!!) தேர்ந்தெடுக்கப்படும் அரசு, மக்களுக்காக ஆட்சி நடத்தும் அரசியலைமைப்புச் சட்டம் என ஏதோதே வார்த்தைகளும், வரிகளும் எனக்குள் ஏளனமாய் கும்மியடித்துக் கொண்டிருந்தது?
-0-