தமிழ் Quora : கேள்வி பதில் - 2

தமிழ் Quora-வில் கேட்கப்பட்ட சில கேள்விகளும்... அதற்கான என்னுடைய ‘அரிய’ பதில்களும்...

கே : வேற்றுக்கிரகவாசி திடீரென்று உங்கள் கண்முன் தோன்றி தமிழ் மொழியில் பேசினால் அல்லது உங்கள் பரிச்சயமான மொழியில் பேசினால் நீங்கள் என்ன பேசுவீர்கள்?
ப : வேற்றுக்கிரகவாசி என நம்ப மாட்டேன். மேக்கப் போட்ட உள்ளூர்வாசிதானே எனக் கேட்பேன்.

கே : ஒருவரை சுயநலமற்றவராக மாற்றுவது எப்படி?
ப : “சுயநலமற்றவர்” எனப் பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். அதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
தன்னலம் போற்றுவது மனித இயல்பு. அந்த இயல்பு பல இடங்களில் வெளிப்படாமல் இருப்பது அவருடைய வளர்ப்பு, சூழல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமையலாம். ஆனாலும் முழுவதும் இயல்பைத் தொலைப்பது மிகக் கடினமானது, அவசியமற்றது.

கே : நாம் அதிகமாக வெறுப்பது அதிகமாக ஈர்க்கப்படுவது போல் தோன்றுகிறது அது எதனால்?
ப : காரணம் வெகு எளிது.
வெறுக்க வேண்டும் என முடிவு செய்ததை, மீண்டும் மீண்டும் நினைவில் மீட்டுவோம். மீண்டும் மீண்டும் நினைவில் நிழலாடும் ஒன்று எளிதில் பிடித்துப் போகும்!

கே : தோல்வியை நாம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ப : எந்த அளவிற்கு தோல்வி கிடைத்துள்ளதோ அதை அவ்விதமே ஒப்புக் கொள்ள வேண்டும். தோல்வி என்பது ஓர் உண்மை. உண்மையை மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை.
ஒப்புக்கொள்வது வேறு, ஏற்றுக்கொள்வது வேறு.

கே : பெரிய விஷயங்களை சாதிப்பதற்கான ஆற்றல் உங்களுக்குள் உள்ளது என்பதை உணர ஏன் பயமாக இருக்கிறது?
ப : 'பெரிய விசயங்கள்’ என்கிற மாயை தரும் அழுத்தம். பெரிய விசயமாக கருதப்பட்டதாலேயே அதைச் செய்ய முடியாமல் போய்விட்டால் யாரேனும் ஏதேனும் சொல்வார்களே எனும் தயக்கம்.
இந்த அழுத்தம், தயக்கம்… நம்மிடம் இருக்கும் ஆற்றலை மறக்கடித்துவிடும்

கே : காரணமே இல்லாமல் ஒரு விதமான பயம் மனதில் வருகிறது இரவில் இது மிக அதிகமாக இருக்கிறது இதில் இருந்து மீள்வதற்கு வழி இருக்கிறதா?
ப : காரணம் இல்லாமல் இருக்காது. அந்தக் காரணத்தை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருப்போம், ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டிருப்போம், ஏதோ ஒன்றை தவறுதலாக செய்திருப்போம், ஏதோ ஒரு காரணத்தினால் முடக்கப்பட்டிருப்போம்…. இதுபோல் ஏதோ ஒன்றுதான் அந்த இனம்புரியா பயத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
எந்தெந்த சூழல்களில் அந்த பயம் இருப்பதில்லை என்பதைக் கண்டுபிடியுங்கள். எந்தெந்த தருணங்களில் அந்த பயம் வருகிறது என்பதையும் கண்டு பிடியுங்கள்.
பயம் வருகின்ற தருணங்களைத் தவிர்த்து முடிந்தவரை பயம் வராத சூழல்களை ஏற்படுத்திக் கொள்வதே இதிலிருந்து மீள்வதற்கான முதல் வழி.
அடுத்து எந்தெந்த காரணங்களுக்காக வருகின்றது என்பதையும் பட்டியலிட்டால் மீள்வதற்கு உதவும்.
- ஈரோடு கதிர்


தமிழ் Quora-வில் தொடர... https://ta.quora.com/profile/Erode-Kathir

No comments: