எப்பொழுதுமே கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் சிறிது
அச்சம் உண்டு. காரணம் பதில்கள் நம்முடையதாக இருக்கலாம், ஆனால்
கேள்விகள் கேட்பவரின் அறிவு, தேடல், அனுபவம்,
நிலைப்பாடு, நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து
எழக்கூடியவவை. அந்த சேர்மானத்திற்கு உணவிடுவது அவ்வளவு எளிதல்லவே!
திடீரென்று ஒருநாள் Jayalalitha Kaleshwaran அவர்களிடமிருந்து இந்தக் கேள்விகள் கொத்தாக வந்து விழுந்தன. பொதுவாகவே
அவர் எது குறித்தாவது கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருப்பார். நானும் பெரும்பாலும்
ஒற்றைச் சொல்லில் பதிலளித்து சமாளித்துவிடுவேன். ஆனால் தொகுப்பாக விழுந்த இந்தக்
கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களில் தப்பிக்க முடியாததால்...
இனி நீங்களே படிங்க...
1. "எழுத்து" ஒரு எழுத்தாளரா இது பற்றி
சிறுகுறிப்புச் சொல்லுங்க?
சொல், காட்சி, சிந்தனை, ஒலி இதில் ஏதோ ஒன்று மனதில் தைக்கலாம்
அல்லது நம்மிடம் வழங்கடலாம். அது தானாக வளர்ந்து அல்லது நம்மால் வளர்க்கப்பட்டு,
இனியும் வைத்திருக்க முடியாது என்ற தருணத்தில் வெளியேற்றினால்தான்
நிம்மதி எனும் நிலையில் வாய்த்திருக்கும் பல வடிவங்களில் எழுத்தும் ஒன்று.
2. பிற புத்தகங்களை, இலக்கியங்களை வாசிப்பதும்,
பல்வேறு ஊர்களுக்குப் பயணப்படுவதும் ஒரு எழுத்தாளருக்கு எவ்வகையில்
தம்படைப்புகளுக்கு உதவுகிறது? அல்லது உதவ முடியும்?
வாசிப்பதன் மூலம் வாசிப்பதையும், தான்
எழுதியதையும் ஒப்பீடு செய்யலாம், செம்மையாக்க முயலலாம்.
வாசிப்பு புதிய சொற்களை, அழகியலை, நடையை,
சூட்சுமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்.
பயணம் எழுதுவதற்கான வாய்ப்புகளை, தேவைகளை
உருவாக்கிக் கொடுக்கும்.
3. மேற்சொன்னது சாத்தியமானால் மட்டுமே ஒரு படைப்பை
எழுத்தாளரால் தர அல்லது உருவாக்க முடியுமா?
பல்வேறு காரணிகளில் வாசிப்பும், பயணமும்
குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருக்கலாம்.
4. எழுதும் போது தங்களை கதிராகவே உணருவீர்களா? இல்லை அதன் கருவாகவே எழுத்தின் வழி கரைந்ததை எழுதி முடித்ததும் தான்
உணர்வீர்களா?
அருள் வந்து சாமியாடும்போது தன்னை முற்றிலும் மறப்பதுபோல்
எதுவும் இங்கு நடப்பதில்லை. நான் என்னைக் கதிராகவே உணர்ந்தபடிதான் எழுதுவேன். சில
நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் ஏறிக் கொண்டு, அதை
உணர்ந்தபடி, ரசித்தபடி எழுதிவிட்டு, இறங்கிக்
கொள்வதும் உண்டு.
5. எழுத்தாளர் பயிற்சியாளர் இதில் எந்த கதிரை தங்களுக்கு
மிகவும் பிடிக்கும்? இவ்விரண்டில் எதையொன்றையாவது
விடச்சொன்னால் எதை விடுவீர்கள்?
இரண்டுமே இரண்டு விதங்களில் பிடிக்கும். ஒன்று கலை, இன்னொன்று
தொழில்.
இரண்டையும் நான் பிணைத்துக் கொள்வதில்லை. ஒருவேளை
இரண்டில் ஒன்றை விடச் சொன்னால் ஏன் விடவேண்டுமென்று விளக்கம் கேட்பேன். அப்படிச்
சொல்லப்படும் விளக்கத்திற்கு, மீண்டும் கேள்விகள் கேட்பேன். அதற்கு
வரும் பதில்களுக்குள் மீண்டும் கேள்வி கேட்பேன். இது நிற்காது. சொன்னவர் சலித்துப்
போய், ‘விடவேண்டுமென்று சொல்வதை’ கைவிடலாம்
6. தாங்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து, நிறைவாக
உணர்ந்த ஒரு தருணம் எது?
பல தருணங்கள் உண்டு. எப்போதே எழுதி, முற்றிலுமாக
மறந்திருக்கும் ஒரு சொற்றொடரை தன் வாழ்வின் மந்திரமாக வைத்திருக்கிறேன் என ஒருவர்
சொல்லும் தருணங்களில். பயிலரங்குகள் சந்தித்து, காலம்
கடந்தும் விடாப்பிடியாக தொடர்பில் வந்து, தம் தெளிவை,
உயர்வை ஒருவர் அறிவிக்கும் தருணங்களில்.
7. எதன் பொருட்டு எழுத ஆரம்பித்தீர்கள்? எதை நோக்கி பயணப்பட விரும்பினீர்கள்? நீங்கள்
விரும்பியதை அடைந்து விட்டீர்களா?
தமிழில் எழுதி, இணைய வலைப்பக்கத்தில்
பகிரமுடியும் எனும் வாய்ப்பு கிடைத்ததால் மட்டுமே எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப
நாட்களில் வலைப்பக்கத்தில் எப்படியாவது இருபத்து ஐந்து இடுகைகள் எழுதிவிட்டால்
போதும் எனக் கருதினேன்.
8. பசங்களுடனான மறக்கமுடியாத ஒரு அனுபவம் சொல்லுங்களேன்?
கடந்த அக்டோபர் மாதம் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில்
தனக்குப் பிடித்தவருக்கு ஒரு கடிதம் எழுதும் ஒரு பணியைக் கொடுத்து பத்து
நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியிருந்தேன். ஒரு மாணவி மட்டும் நேரம் போதாது என்று
என்னிடம் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றுக்கொண்டு, விடாப்பிடியாக
இரண்டாவது அமர்வின்போதும் தொடர்ந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை பக்கம்
பக்கமாக எழுதியதோடு, நிகழ்வின் நிறைவில் தன் குடும்பத்தை
நினைத்து அழுத காட்சி மறக்க முடியாத ஒன்று.
9. எழுத்தாளருக்கும் தம் ஒரு வாசகருக்குமான மறக்க முடியாத
இனிப்பான, தருணம் பற்றிப் பகிருங்களேன்?
யாரையும் வாசகர் என்று கருதத் தோன்றியதில்லை, ஆகவே
நானும் எழுத்தாளராய் என்னைக் கருத வேண்டி வருவதில்லை. எவரையும் நட்பாகக் கருதி
இணைந்து பயணிப்பதால் கேள்வியில் எதிர்பார்த்த மறக்க முடியாத இனிப்பான தருணங்களை
சற்று நீர்த்துவிடுவதற்கு நானே வாய்ப்புகள் கொடுத்துவிடுவேன்.
10. இன்றைக்கு எங்கு பார்த்தாலும், யாரைப்
பார்த்தாலும்.. வாசிப்பு வாசிப்பு என்றும், வாசியுங்கள்...
வாசியுங்கள்... என்பதுமான குரல் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என்ன பயன்
வீட்டிற்கும் நாட்டிற்கும்? இதனால் ஏற்படும் மாற்றம் தான்
என்ன?
புத்தகங்கள் வாசிப்பதால் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள்,
எழுத்தாளர்கள், புத்தகத் திருவிழாக்கள்
உயிர்ப்புடன் இருக்கும். வெறும் வாசியுங்கள் எனும் முழக்கம் ஒருகட்டத்தில் அலுப்பு
ஏற்படுத்திவிடும். உண்மையில் வாசித்த அனுபவம், அதனால்
ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி வாசிப்பை ஊக்குவிப்பதே முக்கியத் தேவை.
வாசிப்பதால் நிகழும் முதல் மாற்றம் அப்போதிருந்த மனநிலை மாறும். தொடர்ச்சியாக
மேலும் சில மாற்றங்கள் மெல்ல மெல்ல விளையும்.
11. அன்றைய எழுத்தாளர் (ஜெயகாந்தன்) ஒருவருக்கு, ஒரு வாசகர் தட்டு நிறைய பணம் பவுன் கொடுக்க (உதவ) வந்ததாகவும், அதை மறுத்து விட்டதாகவும் அறிந்த போது வந்த ஒரு கேள்வி இது. இன்றைக்கும் அது
மாதிரியான வாசகர்கள் இன்றைய எழுத்தாளர்களுக்கு கிடைக்கிறார்களா?
இருக்கிறார்கள். தட்டில் வைத்து தருகிறார்களா எனத்
தெரியவில்லை, நெட்டில் அனுப்பும் கதைகள் கேட்டதுண்டு.
12. எழுத்தாளர் கதிர் ஏன் இன்னும் கதைகளை நாவல்களை எழுத
ஆரம்பிக்கவில்லை?
சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். அடுத்த ஆண்டில்
தொகுப்பாக வெளிவரும்.
13. சினிமாவிற்கு கதை எழுத விருப்பமா?
இதுவரை சினிமாவுக்கு என்று எழுதத் தோன்றியதில்லை.
எழுதியதில் அல்லது இனி எழுதுவதில் ஏதாவது ஒன்று சினிமாவிற்கு பொருந்தினால் அந்த
விருப்பம் வரலாம். விருப்பம் மட்டும் போதாது கடும் உழைப்பு தேவைப்படும்.
14. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஒரு எழுத்தாளருக்கு தன்
படைப்புக்கான வருமானமும் சன்மானமும் அண்டை மாநிலங்களைவிட மிகச் சொற்பமாகவே
கிடைக்கிறது? அல்லது கொடுக்கிறார்கள்? இதை
பற்றி ஒரு நாளாவது தாங்கள் யோசித்ததுண்டா?
அண்டை மாநிலங்களில் எப்படித் தருகிறார்கள் என்பது
தெரியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை
சதவிகிதம், எழுத்தாளர்களை அறிந்திருப்போர் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம்
என்பதையெல்லாம் அலசி விபரங்கள் அறிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை
கிடைக்கும்.
15. ஒரு படைப்பிலக்கியம் எதிர்காலத்திற்கு, அச் சந்ததியினருக்கு எவ்வகையில் உதவும்? எவ்வகையில்
உதவுவதாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஏதோ ஒரு காலத்திய நிகழ்வுகளை, உணர்வுகளை,
நிலைமைகளை இன்னொரு காலத்திற்கு கடத்தி உதவலாம்.
16. வேட்கையோடு விளையாடு பற்றிய தங்களின் சிறு குறிப்பு?
ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
17. அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் போது, தமிழ் மொழியினை பற்றிய தங்களின் உணர்வு, நிலைப்பாடு எப்படியிருக்கும்?
(இங்கு மொழி பற்றியே கேள்வி. கதை படம் பற்றியல்ல)
மலையாளம் ஓரளவு புரியும். இந்தி ஓரிரு சொற்கள்
புரியும். எல்லாவற்றையும் சப்-டைட்டில்களோடு மட்டுமே பார்ப்பதால், ஆங்கிலத்தின்
வழிதான் அந்தந்த மொழிகளை உணர்கிறேன், உள்வாங்குகிறேன்.
இறுதியாக எல்லாவற்றையும் தமிழ் மொழியிலேயே புரிந்து கொள்கிறேன்.
18. பிற எழுத்தாளருடனான நட்பு பற்றி சுருக்கமாச்
சொல்லுங்களேன்.
சிலருடன் அறிமுகம், சிலருடன் மரியாதை,
சிலருடன் ஆச்சரியம், பலருடன் பழக்கம் என்ற
அளவில்தான் இருக்கின்றேன். மிகச் சிலருடன் நல்ல நட்பு உண்டு.
19. நாம நிறைய எழுத்தாளர்களைப் படிப்போம். பிடிக்கும்னும்
சொல்லுவோம்.! ஆனா நா அவரோட எழுத்துக்கு பைத்தியம்னு யாரோ ஒருவரை அல்லது ஓரிருவரைத்
தான் சொல்லுவோம். அப்படியாகத் தங்களை பாதித்தவர் யார்?
முதன்முதலில் அதாவது 1990களில் அப்படிப்
பைத்தியமாக்கியவர் பாலகுமாரன். தற்போது ஒட்டுமொத்தமாக யாரும் பைத்தியமாக்கவில்லை.
சில ஆக்கங்கள் கொஞ்சம் கிறுக்குப் பிடிக்க வைக்கும்.
20. ஈரோடு வாசல் இதுவரைக்குமான தம் சாதனையாக உணர்வது எது?
ஆரம்பித்ததின் இலக்கு நோக்கிய பயண அனுபவங்கள் பற்றிய சுவாரசியமான
(அ) கசப்பான அனுபவம் பற்றி பகிர முடியுமா?
சாதனை என்பது பெரும்பாலானோர் அது தனக்கான களம் என்று
மனதாரக் கருதுவது.
படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். அது
மிகச் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் புதிய முயற்சிகளே.
ஆகவே அவை தொடர்ந்து சுவாரஸ்யமூட்டுகின்றன.
மிகச் சொற்பமாக நிகழ்ந்த கசப்பான என்பதைவிட சவாலான
அனுபவங்களை மனதிற்குள்கூட மீட்டுவதில்லை. ஆகவே பகிரவும் தேவையில்லை.
21. ஒரு படைப்பில் புனைவும் நிஜமும் எப்படி, எவ்விகிதத்தில் பிணைய வேண்டும்?
ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு சேர்க்கையுண்டல்லவா.
அது போன்றே படைப்பிற்கேற்ப விகிதங்கள் அமைவது சிறப்பு.
22. இத்தனை கேள்வியிலும் ஒன்றிரண்டுக்காவது தாங்கள் பதில்
அளிக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறதா?
இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள்
கேட்டிருந்த இந்த 22வது கேள்வி வரை பதில் கிடைத்த வகையில்
உங்களுக்கு கிடைத்திருக்குமென நினைக்கின்றேன்.
குறிப்பு :
ஜெயலலிதா காளீஸ்வரன் : #வேட்கையோடு_விளையாடு தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுக்கும் தனித்தனியே தம்
வாசிப்பு அனுபவத்தை எழுதியவர். புத்தகத்தில் அடங்கியிருந்த மொத்த சொற்கள் ஏறத்தாழ 20000
என்றால், அந்தக் கட்டுரைகளுக்காக அவர் எழுதிய
அனுபவப் பகிர்வுகளில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000.
.
No comments:
Post a Comment