குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்

நேற்று மாலை துணி காய வைக்கக்கூடாத நேரத்தில் அம்மணி காயவைக்கப் போனார். அவர் கீழே இறங்கியதும் இருட்டத் தொடங்கியது. விளைவு...
“ஏங்க நான் குளிக்கப்போறேன், ‘சும்மாதானே இருக்கீங்க’ தூறல் விழுந்தா துணி ஒண்ணுவிடாம எடுத்தாந்து போட்டுடுங்க”.
இந்தத் தூறல் எப்ப விழும்னுதான் தெரியாதே. வெளியில் வந்து காவல் இருக்கத் துவங்கினேன். சரி எதற்கும் துணி அருகிலேயே இருப்பதுதான் உத்தமம் என மொட்டை மாடிக்குச் சென்று வானத்தை நோக்கி வழி மேல் விழி வைத்து...
வாவ்.... என்ன ஒரு அற்புதமான காட்சி. நடுவில் மட்டும் நீலமும், வெண்மையும் பிச்சுப் போட்ட பஞ்சு பொதிகளாய், குறிப்பிட்ட வட்டத்தைத் சுற்றி ஏறிக்கட்டி நிற்கும் கரு மேகங்கள். கரு மேகங்களைத் தாண்டி நடுவில் இருக்கும் நீலத்திற்குள் துளைத்துப் பாயும் மாலை ஐந்தரை மணி சூரிய ஒளி...
நான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். முன்னப்பின்ன மேகத்தையே பார்க்காதவன்போல நானும் வளைச்சு வளைச்சு கழுத்து வலிக்கப் பார்க்க, துணிகளும் உலர்ந்த பாடில்லை, தூறலும் விழுந்த பாடில்லை.
ஒரு வழியாக இரவு மழை வந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய செய்திகள் வந்தன. வழக்கம்போல் பின்னரவில்தான் தூங்கப் போனேன். அப்படித் தூங்கப்போனால் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும் எனும் எண்ணம் சில மாதங்களாய்.
சில முக்கியமான கூட்டங்களுக்கு செல்லவிருக்கும் தினங்களில் மட்டும் அன்றைய தினத்தை முன்வைத்த கனவுகள் வந்து இம்சைப் படுத்தும். மற்றபடி நிகழ்காலத்தையொட்டி கனவுகள் பெரிதாக ஆக்கிரமிப்பதில்லை.
மாலையில் கழுத்து வலிக்க ஆராய்ச்சி செய்த மேகக்கூட்டமும், இரவு ஆங்காங்கே கொட்டிய மழைச் செய்திகளும் இணைந்து கனவில் வந்தன.
நான் ‘குபீர்’ வானிலை ஆராய்ச்சியாளராக அவதாரம் எடுத்திருந்தேன் அந்தக் கனவில். என் கண்டுபிடிப்பில் ஊரையே மூழ்கடிக்கும் மழையொன்று அங்கே நிகழப்போவதாக எல்லோரையும் எச்சரித்திருத்திருந்தேன். மிகச் சரியான நேரமும், எப்படி மழை கொட்டும், எவ்வளவு அளவு என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்த மழை ஒரு மேக வெடிப்பு மூலம் நிகழும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
எல்லோரும் காத்திருக்கிறார்கள். மாலையில் பார்த்த அதே வடிவில் மேகங்கள் திரண்டிருக்கின்றன. நடுவில் இருந்த பஞ்சுப் பொதியின் ஓரங்களில் தீ எரிகின்றது. வனத்தில் எரியும் நெருப்பிற்கு ஒப்பானது அது. மேகத்தில் பற்றிய தீ, சரசரவெனப் பரவி வெடிக்கும்போது மேகம் வெடிக்கும், அதையடுத்து மழை அப்படியே நயாகரா அருவிபோல் கொட்டப்போகின்றது எனக் காத்திருக்கிறேன்.
அதற்குள்ளாக காற்று வீசியிருந்தது. முன்பே எச்சரித்திருந்தேன். இரண்டு சக்கர வாகனங்களைக்கூட நிலத்தில் படுக்க வைத்து விடுங்கள் என்று. யாரும் கேட்ட பாடில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றைக் காணவில்லை. காற்றில் கரைந்து போயிருக்கலாம். மற்றொரு வண்டியான மிலிடரி பச்சை நிற புல்லட் சிதைந்திருக்கின்றது. பெட்ரோல் டேங்க் ஓரிடத்தில் கிடக்க, டெயில் லேம்ப் இன்னொரு இடத்தில் கிடக்க... அந்தக் காற்று பயபுள்ள என்ஜினையும் அடித்துப் பெயர்த்துப் போயிருந்தது. மொத்தத்தில் அங்கே புல்லட் இருந்த சுவடே இப்போது இல்லை.
எனினும் மழையைக் காணவில்லை. இது தப்பாச்சே... எரிந்து கொண்டிருந்த மேகத்தைப் பார்க்கிறேன். எண்ணெய் இல்லாத திரிபோல் சோம்பலாய் மினுக்குகின்றது. இரவு நீள்கின்றது. நீளாமல் என்ன செய்யும். மேகத்தில் நெருப்பு பரவவில்லையே. நானும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் கோட்டைசாமி என்பதாக, மேகம் எப்படியாவது எரிந்து மேக வெடிப்பு நிகழ்ந்து... ம்ஹூம்...
“அடேய் நவுத்துப் போன மேகமே....!”
இறுதியில் நானே பெருந்தன்மையோடு குபீர் வானிலை ஆராய்ச்சியாளர் பதவியை உடனடியாக ராஜினமா செய்து விட்டேன்.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை. மெல்ல எழுந்து வருகிறேன்.
“என்னங்க கண்ணு ரெண்டும் நெருப்பாட்ட சிவந்திருக்கு!”
“மேகத்துக்கு அனுப்ப ராத்திரி முழுக்க உருவாக்கிக் கொண்டிருந்த நெருப்பு”னு சொல்லவா முடியும்!?
“நேரங்கெட்ட நேரத்தில் துணியை மெஷின்ல போட்டு எடுத்து, காய வைக்கிறதுக்கு காவல் இருக்கச் சொன்னா கண்ணு இப்படித்தான் செவக்குமாம்!”
“யாரு சொன்னது!?”
“குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்!”
*

No comments: