சிலர் ‘எனக்குள்ள ஒண்ணு தோணுச்சுனா அப்படியே நடந்துடும்’ என்று தமது உள்ளுணர்வு குறித்து சொல்வதுண்டு. சில வேளைகளில் அது அச்சமாகவும் வெளிப்படும். இன்னும் சிலர் தாம் ஒன்றை நினைத்தால், சொன்னால் அப்படியே நடந்துவிடும் என்று சொல்வார்கள். இந்த இரண்டு குறித்தும் நான் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை. காரணம் எனக்கு இதுவரை உள்ளுணர்வு இப்படி எதையும் சுட்டிக்காட்டியதில்லை. அதேபோல் நான் நினைத்தபடியோ, சொல்லியபடியோ எதுவுமே நடந்ததவும் இல்லை.
இன்னொரு வகையினர் இருக்கின்றனர். அவ்வகையினர் மற்றவர்களுக்கு ஏதேனும் சொன்னால், அந்த மற்றவர்களுக்கு அது அவ்விதமே நடந்துவிடும் என்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருவர் சொல்லி, ஓரிரண்டு சம்பவங்கள் அவ்விதமே நடந்தது. நடந்தவை சவாலானவை என்பதால், ‘இனிமே எதுக்காச்சும் நீ வாய் தொறந்தேன்னா கொல வுழும்’ என்று விளையாட்டாக மிரட்டி வேறு வைக்க வேண்டியதாகிப் போனது. எனினும் இந்த மூன்று விதமான நம்பிக்கைகைகள்(!) குறித்து, எனக்கு மிக நெருக்கமான அனுபவமோ அல்லது நம்பிக்கையோ ஏற்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மனதில் ஒரு சிந்தனையோட்ட கேள்வி எழுந்தது. ‘எல்லோரும் எல்லாவற்றையும் கைவிட்டிருக்கும் இந்தச் சூழலில், காற்று மாசு, ஒலி மாசு, நுகர்வுகள், எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட ஏதேதோ குறைந்திருப்பது போலவே மரணங்களும் குறைந்திருக்கின்றனவா? விபத்துகளுக்கு வாய்ப்பே இல்லை. மது விற்பனையில்லை. எப்போதும் மூச்சுத் திணறும் மருத்துவமனைகள்கூட பெரும்பாலும் முடங்கிக் கிடைக்கின்றன அல்லது தேவையே ஏற்படவில்லை. இந்த நாட்களில் உறவு மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் மரணச் செய்தி எதுவும் கேள்விப்படவில்லையே!’ என்ற சிந்தனை நிழல் நினைவிலிருந்து தேய்வதற்குள் இரண்டு மரணங்கள் குறித்த தகவல் வந்து சேர்ந்தது.
இரண்டிலும் இருந்த பொருத்தம்தான் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. இரண்டுமே மாரடைப்பு. இருவருமே 40-50 வயதிற்குள் இருந்தவர்கள். கிடைத்த மிகப் பெரியதொரு வாழ்க்கை ஐம்பது வயதிற்குள் அவசரமாக முடிந்தது போலவே, அவர்களின் அடக்கமும் மிக மிக அவசரமாக உற்றார் உறவினர்கள் இன்றி நிகழ்ந்தது கடும் வலியைத் தந்து கொண்டிருக்கின்றது.
ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவன் ‘இந்த நாட்களில் சாவுகளைக் கேள்விப்படவில்லையே’ என ஏன் சிந்தித்தேன். சிந்தனைகள் உருளும்போது, தலையை உலுக்கி வளராமல் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் உருவாகும் சிந்தனையை எப்படித் தடுப்பது. அந்த மரணங்கள் யதேட்சையாகவே நிகழ்ந்திருக்கலாம்கூட, எதற்காக அப்படியான சிந்தனைகள் எனும் கேள்வி மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டேயிருக்கின்றன. இன்றைய நிலையை ஒட்டியும்கூட அந்த சிந்தனை வந்திருக்கலாமோ?
மரணத்தை தவிர்க்கவே முடியாது, அதை கணிக்கவும்கூட முடியாதுதான். எனினும் முதுமை சார்ந்த மரணங்கள் எதையும் கேள்விப்படாத இந்தத் தருணத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த வாழ வேண்டிய வயதில் நிகழ்ந்த இந்த இரண்டு அதிர்ச்சி மரணங்கள் இந்த நாட்கள் குறித்தான பயத்தையும் கூடுதலாக விதைக்கின்றன.
இது யாரும் எதிர்கொண்டு, இந்த நாட்கள் இப்படித்தான் இருக்கும் என சமாதானம் சொல்ல முடியாத வகை நாட்களே. வீட்டில் முடங்கிக் கிடப்பது, தம் தொழில் சார்ந்த துறைகள் முடங்கிக் கிடப்பது, எதிர்காலம் எப்படியிருக்கும், வரவு செலவுகள் என்னாகும், வசூலிக்க வேண்டிய தொகை, கட்ட வேண்டிய கடன், யாரையும் சந்திக்க முடிவதில்லை, எந்நேரமும் அதே செய்திகள் ஓடுகின்றன உள்ளிட்டவை குறித்து அதீதமாய் சிந்தித்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பதுதான் இப்போதைய முதல் தேவை.
இங்கு எது முடங்கியிருந்தாலும், எது வீழ்ந்து போனாலும், எது சிதைந்து கொண்டிருந்தாலும் அது தனக்கு மட்டுமில்லை, ஊரிலும் உலகத்திலும் உள்ள பலருக்கும் நிலை அப்படித்தான் எனும் தெளிவும் நிதானமும் தேவை.
வாழ்ந்து பழக்கமில்லாத, ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத நாட்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். தொற்று - நோய் – மரணம் என்பதைச் சுற்றியே எல்லாம் இயங்கிக் கொண்டிருப்பதாய் கூரிய மாய நகங்கள் நம்மைப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த நாட்கள் எப்படியானதாகினும், நடந்து, ஓடி, தாண்டி, மிதித்து, தவழ்ந்து, ஊர்ந்து கடந்து சென்று விடுவோம். வேறொரு நாட்களில் நின்றபடி, ‘கடந்த அந்த நாட்கள் இருக்கே... அதை எப்படிக் கடந்தேன் தெரியுமா!’ என்று பெரும்பாலானோர் கதை பேசக் காத்திருப்போம்.
கவனமும் அதீத நிதானமும் தேவை. உடல் நலம் மிக முக்கியம், அதைவிட மன நலம், மன பலம் மிக மிக முக்கியம். ஏற்கனவே நம் மீதும், சக மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மீது படிந்திருக்கும் தூசிகளை ஊதிவிட்டு இறுகப்பற்றிக்கொள்வோம்.
- ஈரோடு கதிர்
*
ஒலி வடிவில் கேட்க :
https://anchor.fm/erodekathir/episodes/ep-ecgea9
https://anchor.fm/erodekathir/episodes/ep-ecgea9
4 comments:
தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 24 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
25ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
நிச்சயமாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம். உங்கள் வசீகரிக்கும் எழுத்து நடைக்கு வாழ்த்துகள்.
எங்கள் தளத்தில் தங்களது பதிவு: நம்பிக்கை மீது நம்பிக்கை வை!
நம்பிக்கை வைப்போம் தொடர்வோம்
Post a Comment