பழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்


சட்டம் என்பது மனிதர்களை நெறிப்படுத்தவும், எந்த வகையிலும் தீங்கிழைக்காமல் ஒருவித ஒழுங்கிற்குள் வைக்கவும்தானே தவிர, சட்டத்திற்குள் உட்படுபவர்களுக்கு எதிரானதாகவோ அல்லது அவர்களை குற்றம் செய்யத் தூண்டுவதாகவோ அமைந்து விடக்கூடாது. மனிதர்களின் நலனுக்கான இயற்றப்பட்ட சட்டமே காலப்போக்கில் மனித குலத்திற்கு எதிரானதாக இருந்தால் அவை நிச்சயம் ஆய்வுக்குட்படுத்தி மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சட்டங்களில் சமீப ஆண்டுகளில் கேள்வி எழுப்பப்படும், மாற்றம் தேவை எனக் குரல் கொடுக்கப்படும் சட்டங்களில் முக்கியமானது மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (Medical Termination of Pregnancy MTP - எம்டிபி). இது சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றது.

அதென்ன மருத்துவ கருக்கலைப்பு சட்டம்?

ஒரு பெண் கருவுற்று, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்தக் கருவினை கலைக்க விரும்பினால், அதன் காலம் 12 வாரங்களுக்கு உட்பட்டிருந்தால், அதற்கான பயிற்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்வதை தீர்மானித்து மேற்கொள்ளலாம்.

ஒருவேளை கருவின் காலம் 12 வாரங்களைத் தாண்டி 20 வாரங்களுக்குள் இருந்தால், மருத்துவ கருக்கலைப்பு சட்ட பயிற்சி பெற்ற இரண்டு மருத்துவர்கள் கலந்தாலோசித்து கருக்கலைப்பு செய்யலாம்.

இருபது வாரங்களைத் தாண்டிவிட்டால், கருக்கலைப்பு செய்வதென்பது சட்டப்படி குற்றம். அப்படியும் செய்ய வேண்டிய தேவை இருந்தால், நீதிமன்றத்தை அணுகி அதன் ஒப்புதல் பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

கருக்கலைப்பு எதனால்?

கருவின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு இருக்கும் எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

18 வயதிற்கு குறைவான ஒரு பெண் கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

பாலியல் வன்புணர்வினால் ஒரு பெண் கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

கருவினால் தாயின் உடல் மற்றும் மனநலத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

கருத்தடை சிகிச்சை மேற்கொண்டிருந்து, அது தோல்வியடைந்து கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்

இவை அனைத்திற்கும் அந்தப் பெண்ணின் ஒப்புதல் மிகவும் முக்கியம்.

*

அந்தப் பெண்ணிற்கு பதினெட்டு வயதிலேயே திருமணமாகி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இரண்டு பெண் குழந்தைகள். எப்படியும் ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் தொடர்ந்து காத்திருந்தார்கள். ஆனால் அதன்பின் ஒருபோதும் கருத்தரிக்கவில்லை. மீண்டும் ஒரு கருத்தரிப்பை மறந்தே போயிருந்தார்கள். ஆண்டுகள் ஓடின அவருக்கு நாற்பத்தி இரண்டு வயதாகும்போது முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு மாதவிடாய் தள்ளிப்போனது. மாதவிடாய் நிற்கும் காலம் என்பதால் பெரிதாக பொருட்படுத்தவில்லை. வாரங்கள் மாதங்களாக கடக்க, வயிறு மெல்லப் பருமனாக ஆரம்பிக்க ஏதோ ஒரு விபரீதம் புரிந்தது. கருவுற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததால் கருத்தரிப்பின் அனுபவம் தேய்ந்து போயிருந்தது. மருத்துவரை அணுகிப் பார்க்கும்போது அவர் கருவுற்றிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. கலைக்க முயற்சித்தால் சட்டம் இடம் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை.

மகள் திருமணமாகி கருவுறுவாள் எனக் காத்திருந்த நேரத்தில், தம் வயிற்றில் இருக்கும் கருவை எப்படி கலைப்பது எனும் குழப்பம் வந்தது. இளைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழலில் எப்படி குழந்தையை பெற்றெடுப்பது எனும் பயம் சூழ்ந்தது. சம்பந்தி வீட்டார் உள்ளிட்ட சுற்றமும் நட்பும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனும் பதட்டம் கூடியது. மத்திம வயதில் இருக்கும் ஒருவரை குழப்பம், பயம், பதட்டம் ஒன்றாகச் சூழ்ந்தால் போதும், மிக எளிதில் வீழ்த்திவிடும். வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறியது. திசையெங்கும் கறை படிந்ததாகத் தோன்றியது. அவர் முன் இருந்த ஒரேயொரு எளிய வாய்ப்பு வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதல்.

பொருத்தமில்லாத வயதில் கருவுறுதல் என்பதை அவமானமாக, குற்றமாக அவர் கருதியது அவர் பிழை மட்டுமல்ல. அது சமூகத்தின் சாபம். ஒருநாள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். உடனடியாக உடல் தகனம் செய்யப்பட்டது. உண்மை தெரிந்த இரண்டே இரண்டு பேர் ஒன்று கணவர் மற்றொன்று எதிர்பாராத வகையில் உருவான கருவை இருபது வாரத்திற்கு மேல் கலைக்க அனுமதிக்காத சட்டம்.

அந்த மரணத்திற்கு பொறுப்புள்ள இருவரில் சட்டம் அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்க, கணவரிடம் மட்டும் கேள்விகள் குவிந்துகொண்டே இருந்தன. ஏன் தற்கொலை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அதில் தன் குற்றம் ஏதுமில்லை என்றாலும், தானும் அந்தப் பிழைக்கு பொறுப்பு என்பது தொடர்ந்து உறுத்தியது. அதிலிருந்து தப்பிக்க எப்போதாவது இருந்த குடி, பழக்கமாக மாறி, நோயாக உருவெடுத்தது. அடுத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பே குடியால் வீழ்ந்து மனம் குலைந்து அவரும் இறந்து போனார்.

இப்போது நம் நினைவுகளை மீட்டிப் பார்த்தால் இப்படி நாற்பதுகளில் காரணமே இல்லாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் சிலர் நினைவுக்கு வருவார்கள். அவர்களில் ஒரு சில மரணங்கள் இப்படியான காரணங்களாலும்கூட நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கத் தோன்றவில்லை.

சட்டம் இதுபோல் இத்தனை ஆண்டுகளில் லட்சக்கணக்கான அழுகுரல்களை கேட்டிருக்கும். சட்டம் எல்லாவற்றையும் தின்று செரிக்கும். சட்டமென்பது ஒரு காலகட்டத்தின் தீர்மானம். அது மனித மனங்களை, அதிலிருக்கும் உணர்வுகளை, நுண்ணிய சிக்கல்களை எட்டிப்பார்க்கும் பொறுமையற்று தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும். சட்டம் என்பது பல நேரங்களில் வெறும் சொற்களால் அமைக்கப்பட்ட வேலிதானே?.

மன வளர்ச்சி குறைந்த ஓர் இளம்பெண் தனக்கு என்ன நிகழ்ந்தது எனத் தெரியாமலேயே சமூகத்தின் கசடுகளால் கருவுற்ற கொடுமை ஏற்பட்டுவிட்டது. அதன் ஆபத்தை இனம் கண்டு, சிறிய தொண்டு அமைப்பு ஒன்று அந்தப் பெண்ணிற்கான நல்லது செய்ய முற்பட்டு, மருத்துவமனையை அணுகியது. கரு இருபது வாரங்களை கடந்திருப்பதால், கருக்கலைப்பு செய்ய சட்டம் இடம் கொடுக்காது என மருத்துவமனை கையை விரித்தது. முறையாக நீதிமன்றத்தை அணுகி, அதன் நடைமுறைகளைக் கடந்தபோது கரு முப்பது வாரங்களைக் கடந்திருந்தது. அதற்கு மேல் கருக்கலைப்பு செய்தால், அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால், தனக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பது தெரியாமலே அவர் அம்மாவாகவும், அம்மா இருந்தும் பயன் இல்லாத, அப்பா யாரென்றே தெரியாத அந்தக் குழந்தையும் இந்த உலகத்தில் எல்லாமும் இருக்கும் குழந்தைகளோடு போட்டியில் பங்கெடுக்கும் நிலையை சட்டம் திணித்துள்ளது.

ஒரு பிழை நிகழும்போது அதிலிருந்து மீளும் வாய்ப்பைத் தராமல் அலைக்கழிக்கவோ அல்லது வாழ்க்கை மீது மிரட்சியை ஏற்படுத்தவோ ஒரு சட்டம் ஏன் காரணமாக இருக்கின்றது?. சட்டத்தைச் சொல்லியும் குறையில்லை. காரணம் அது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பழமையான சட்டம். இந்த மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ம் ஆண்டு இயற்றப்பட்டது. அப்போதைய வாழ்வியல் முறைகளை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டது, அந்த கால கட்டத்திற்கு தகுதியானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்திருக்கலாம்.  அதுவே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துமா?

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக அதே சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாட்களாவே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென பல தரப்புகளில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சமீபத்தில் பாராளுமன்றத்தில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் இருபது வாரங்கள் என்பதை இருபத்து நான்கு வாரங்களாக மாற்றும் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது. இது எப்போது சட்டமாகி, சமூகத்தில் அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.


*

இருபத்து நான்கு வாரங்களுக்கான சட்ட முன்வரைவு வைக்கப்பட்டிருப்பதே ஓரு ஆரோக்கியமான செயல்பாடாக கருதப்படும் சூழலில் இது குறித்து மேலும் அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும்,  ஈரோடு மாருதி மருத்துவ மையத்தின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் நிர்மலா சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பார்பரா லிடியா ஆகியோருடன் இணைந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உரையாடலில் மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் இருபது வாரங்கள் என்ற அனுமதியை இருபத்து நான்கு வாரங்களுக்கு மாற்றினால் ஏற்படும் தவறுகள் குறித்த கேள்வியை வழக்கறிஞர் எழுப்பினார். எல்லாக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவான பதில்களை மருத்துவர் நிர்மலா சதாசிவம் விளக்கமாக கொடுத்தார்.

இந்தியாவில் நடக்கும் கருக்கலைப்புகளில் 76% சதவிகிதம் மருத்துவமனையை அணுகாமல் பாதுகாப்பற்ற முறையில் சட்ட விரோதமாக செய்யப்படுகின்றன. இருபது வாரங்களைத் தாண்டிவிட்டால், நீதி மன்றம் சென்று அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதுவும்கூட பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கு வழி வகுக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் இரண்டு குழந்தைகளைக் கொண்டிருந்த தம்பதி, பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு எதிர்பாராமல் கருத்தரித்த சூழலில், இருபது வாரங்களைக் கடந்த காரணத்தால் அந்தக் கருவை கலைக்க முடியாமல், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டி வந்தது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த அவர்கள் மூன்றாவது குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர். சட்டம் இருபத்து நான்கு வாரம் வரை அனுமதி கொடுத்திருந்தால், எதிர்பாராமல் கருவுற்ற அந்த மூன்றாவது குழந்தையை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

இதனால் பாலினம் கண்டறியப்பட்டு, அதனை முன் வைத்து கருக்கலைப்பு செய்யப்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம் தானே?”

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிவிப்பது மிகக் கடுமையான குற்றம். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆகவே அந்த தவறு இருபத்து நான்கு வாரம் எனும் அனுமதியால் நிகழும் என்று சொல்வது ஆதாரமற்றதாகவே கருதுகிறேன்

வேறென்ன காரணங்களால் சட்ட திருத்தம் அவசியம் எனக் கருதுகிறீர்கள்?”

இந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறை மாறியிருக்கின்றது. இணைந்து வாழ்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சூழலில், விரும்பத்தகாத ஒரு கரு வளரும் நிலை ஏற்பட்டால், அந்தப் பெண்ணின் நலன் கருதி, திருமணமாகாத பெண் என்ற நிலையில் கருக்கலைப்பிற்கு அனுமதி கொடுக்க வேண்டியது முக்கியம்.

ஒரு கருவை வளர்ப்பதும், வேண்டாம் என நினைப்பதும் இறுதியாக பெண்ணுடைய முழுமையான உரிமையாகக் கருதப்பட வேண்டும். அதை அவள் தீர்மானிக்க நாம் அதிகபட்சமான அவகாசத்தைத் தரவேண்டும். இதனால் பெண்ணின் உரிமை நிலை நாட்டப்படுவதோடு, ஆரோக்கியமான நல்ல சூழலில் குழந்தை வளர்வதற்கு சரியான வாய்ப்பளிக்கப்படும்.”



ஜூன் 1, 2016 முதல் 2019 ஏப்ரல் 30ம் தேதி வரை, கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி 194 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 97 பேர் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் 82 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். 88 வழக்குகளில், கரு அசாதாரணமாக இருந்ததாக, கருக்கலைப்புக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் முன்பே கூறியது போல், கர்ப்பம் 20 வாரங்களை கடந்திருந்ததால், 82 பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியரில் 13 பேருக்கு இந்த கருக்கலைப்பு நடைமுறை மறுக்கப்பட்டது.
திருமண நிலை மற்றும் வயதை பொருட்படுத்தாமல் கருத்தரித்த 12 வாரங்கள் வரை, அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்வும் வகையில் எம்டிபி சட்டத்தில் திருத்த வேண்டும் என்று ரஸ்தோகி கூறினார். சட்டபூர்வமான கருக்கலைப்பின் வரம்பு, 24 வாரங்கள் என நீட்டிக்க வேண்டும். அந்த கட்டம் வரை கருக்கலைப்பு செய்வது பாதுகாப்பானது. பலாத்காரம் மற்றும் கரு அசாதாரண நிலை போன்றவற்றில் இந்த வரம்பு பொருந்தாது என்ற ரஸ்தோகி, இச்சட்டத்தில் திருத்தம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்
2016 முதல் 2019 வரை, கருக்கலைப்பு செய்ய அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் 194  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 97 பேர் வன்புணர்வு குற்றங்களில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 80 சதவிகிதம் பேர் பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள். மற்ற வழக்குகளில், கரு வளர்ச்சி குறைபாடு, கருக்கலைப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்த வழக்குகளில் கரு வளர்ச்சி இருபது வாரங்களை கடந்திருந்த காரணத்தினால் பதிமூன்று பேருக்கு இந்த கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட அனைவரும் வன்புணர்வுக்கு ஆளானவர்கள். வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட கொடுமையுடன், வேண்டாத, விரும்பத்தகாத கருவையும் சுமக்க வேண்டிய கொடுமையும் இணைந்தது.

கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது என்பதை வெகு சிலரே அறிந்துள்ளனர். நியாயமான காரணங்களோடு அதை முன்னெடுக்கும்போது ஏற்படும் தடைகளைத் தாண்ட முடியாமல் குறுக்கு வழிகளைத் தேர்தெடுக்கும் நிலைக்கு பலரும் தள்ளப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறை.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளில் கடுமையான ஆபத்துகள் ஏற்படுகின்றன. வயிற்றை அழுத்துவது, அங்கீகரிக்கப்படாத மருந்துகளைக் கொடுத்தல், பிறப்புறுப்பில் குச்சி வைத்தல் ஆகிய செயல்கள் மூலம், குடல் பாதிப்படைதல், நோய்த் தொற்று ஏற்படுதல், மீண்டும் கருவுறும் தன்மை இல்லாது போதல், காயம் ஏற்படுதல் ஆகிய ஆபத்துகள் உண்டு. சிலவேளைகளில் இதன் காரணமாக மரணமும் ஏற்படுகின்றன. உலக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளில் ஆண்டுக்கு சுமார் 70,000 பெண்கள் இறந்து போகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்வதால் மட்டும், தினசரி பத்து பெண்கள் இறந்து போகின்றனர்.

ஒவ்வொரு பத்தாண்டு கால இடைவெளியிலும் கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிற்கான மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம் என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் பெண்ணின் உரிமை சார்ந்த, உயிர் சார்ந்த, எதிர்காலம் சார்ந்த ஒரு விசயத்தில், ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் இன்றி மௌனம் காத்திருக்கிறோம் என்பது ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளமாகாது.

மருத்துவ கருக்கலைப்பு சட்டம் நவீனம் அடைய வேண்டும். அது நாடாளுமன்றத்தில் சட்டமாக மாறி மக்களுக்கான சட்டமாக விரைவில் மாற வேண்டும். நியாயமான காரணங்களால் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

1 comment:

Malar Selvam said...

"பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் இந்தியாவில் மட்டும் தினசரி பத்துப் பெண்கள் இறந்து போகின்றனர்"

"நியாயமான காரணங்களால் கருவைக் கலைப்பது பெண்ணின் உரிமை என நிலைநாட்டப் பட வேண்டும்" -விழிக்க வைக்கும் குரல்.