சவால்களும், இழப்புகளும், துன்பங்களும், தோல்விகளும் வாழ்க்கையை உறைந்துபோகப்
பணிக்கும் தருணங்களில், குலைந்து நிற்பவர்களிடம்
பகிர்ந்துகொள்ள ‘இந்தக்கணத்தில் உயிரோடு இருப்பதற்காக
நிம்மதி கொள்ளுங்கள். உயிரோடு இருந்துவிட்டால் எங்கிருந்தும், எதை நோக்கியும் இன்னொருமுறை துவங்கிவிடலாம்’ எனும்
சொற்கள் என்னிடமுண்டு. உயிரோடு இருப்பதே போராட்டமாய் இருந்துவிட்டால்? இந்த வாழ்க்கையின் அதிகபட்ச தேவை உயிரோடு இருப்பதுதான்.
மரணத்தை தண்டனையாக, விடுதலையாக, தப்பித்தலாகக் கருதுவோர் உண்டு. கனவுபோல் எல்லோரையும் மரணத்தின் அண்மை உரசிப் பார்க்கவே செய்கின்றது. சிலருக்கு அது நீள் கனவாய் அமைந்து நிஜமாய் மாறிவிடுகிறது. மரணம் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள். மரணம் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால்? மரணம் அண்மித்துவிட்டதென அறிவிக்கப்படும்பொழுது, வாழ்க்கையை அதன் முழு நீள அகலத்திற்கும் வாழ்ந்துவிட எத்தனை பேரால் இயலும்?
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அறிவிப்பாக தன்னை அறிவித்து விடுவதில்லை. மற்றவர்கள் வாழ்வதற்காக சுவாசித்தால், மரணம் அறிவிக்கப்பட்டவர்கள் சாகாமல் இருக்கச் சுவாசிக்கிறார்கள். சேலம் மாநகரத்தின் வரலாற்றில் புதிதாய் இணைக்கப்படும் பக்கங்களில் ‘மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ எனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ‘நம்பிக்கை மனுஷிகளுக்கு’ இடம் கொடுத்தே தீரவேண்டும்.
பதின்ம வயதிலிருந்த வானவன் மாதேவியை தசைச்சிதைவு நோய் முதலில் தன்வசப்படுத்தத் தொடங்குகின்றது. அடுத்து தங்கை வல்லபியும் நோயின் பிடிக்குள் சிக்குகிறார். அக்காவுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் தனக்கும் நடக்கும் எனும் பக்குவம் மட்டுமே வல்லபிக்கு கூடுதல் ஆறுதல். கருணையற்ற நோய் அவர்களை முற்றிலும் முடக்கி விடுகிறது. பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சிரமப்பட்டுச் சென்றவர்கள், முடியாமல் மேற்படிப்பை வீட்டிலிருந்தே தொடர்கிறார்கள்.
நிற்க, நடக்க, கைகளைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நோய் அவர்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. போன் பேசக்கூட கைகளை உயர்த்த முடியாத நிலையில், போனை காதருகே பிடிக்க மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் முறையில் வாதையை மென்று விழுங்குகிறார்கள். தங்களைப் போன்றே பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவிட “ஆதவ் அறக்கட்டளை” எனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் சிகிச்சை மையம் நடந்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஏழைப் பிள்ளைகளை, தங்கள் செலவில் அழைத்து வந்து, இயன்ற சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்கின்றனர். தசைச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒருங்கிணைந்த மையம் ஒன்றினை பெரும் நிதியீட்டலின் மூலமாகத் தற்போது அமைத்து வருகிறார்கள். அந்த மையத்திற்காக நிதி திரட்டுகையில், பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றின் சமூகப் பங்களிப்பு நிதியைப் பெற்றுத் தர நான் முன்வந்தேன்.
‘‘பன்னாட்டு நிறுவனங்களின் உதவியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என நிர்த்தாட்சண்யமாக மறுத்த உறுதி கண்டு வருந்தினாலும், வியந்து போனேன். சகோதரிகளின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, உதவும் குணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், ஆவணப்பட இயக்குனர் கீதா இளங்கோவன் 2014ம் ஆண்டு “நம்பிக்கை மனுஷிகள்” எனும் ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இருபதுகளில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீபனுக்கு கணிதம், இயற்பியலுடன், ‘ஜேன் வைல்டு’ மீதும் காதல் வருகிறது.
ஒருநாள் நடை பிறழ்ந்து கீழே விழுந்து அடிபடுகிறார். மருத்துவர் ‘மோட்டார் நியூரான்’ எனும் நரம்பியல் இயக்க நோய் தாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார். கைகள், கால்கள், மற்ற அங்கங்கள் ஒவ்வொன்றாக முடங்கும்; இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியுமென தேதி குறிக்கிறார். ‘‘மூளை வேலை செய்யுமா?’’ எனக் கேட்க, “பாதிப்பில்லை” என்கிறார்.
ஸ்டீபன் தனித்திருக்க விரும்புகிறார். தன்னைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்க வீட்டிற்குள்ளேயே முடங்குகிறார். வீட்டிற்கு வரும் ஜேனை போகச் சொல்கிறார். உறுதியான மனநிலையோடு ஜேன் தன் காதலைப் பகிர, மனதளவில் மீள்கிறார். திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. கால்கள், கைகள், உடல் இயக்கம், பேச்சு, உணவு உட்கொள்ளல் என ஒவ்வொன்றாய் முடங்குகின்றன. கருந்துளைகள் குறித்த அவரது ஆராய்ச்சிக் கட்டுரை பெரும் பாராட்டைப் பெற்றுத்தருகிறது.
இனி நடக்க முடியாது என்பதை உணரும் ஸ்டீபன் சக்கர நாற்காலிக்கு மாறுகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த சூழலில் கருந்துளைகள் குறித்து அவரின் கோட்பாடுகள் உலகப்புகழ் பெற்றவராக மாற்றுகிறது. குழந்தைகள், கணவனின் உடல்நிலை, அவரின் புகழ், சூழல், தன் கனவை அடையமுடியாத இயலாமை ஆகியவற்றால் களைத்து அயர்ச்சியடைகிறார் ஜேன். இசையாசிரியர் ஜோனாதன் பிள்ளைகளுக்கு பியானோ கற்றுத்தர வீட்டிற்கு வருகிறார்.
ஜோனாதன், ஸ்டீபனின் குடும்ப நட்பாகி அவர்களோடு நேரம் செலவழிக்கிறார். ஸ்டீபனுக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறார். இந்நிலையில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை ஸ்டீபனா அல்லது ஜோனாதனா என ஸ்டீபனின் அம்மா கேட்க, அதிர்ச்சியடைகிறார் ஜேன். அந்த உரையாடலைக் கேட்கும் ஜோனாதன் வருத்தத்தோடு விலகிச் செல்கிறார். ஜோனாதனின் நட்பை இழக்க விரும்பாத ஸ்டீபன் அவரைத் தேடிச்சென்று அழைக்கிறார்.
உடல் பாதிப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது. தொண்டையில் துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டதால், பேசும் திறனை முற்றிலும் இழக்கிறார். சக்கர நாற்காலியில் கணினியின் ‘ஸ்பீச் சின்த்தசைஸர்’ இணைக்கப்படுகிறது. அதன் துணைகொண்டு அவர் எழுதும் ‘‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” நூல் உலகளவில் விற்பனையில் சாதனை புரிகிறது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழமுடியுமென விதிக்கப்பட்ட ஸ்டீபன், ஜேனின் துணையோடு முப்பதாண்டுகளைச் சிறப்பாக வாழ்ந்து கடக்கிறார்.
அதுவரை அர்ப்பணிப்போடு தன்னைக் கவனித்த ஜேனை அன்பின் காரணமாய் தன்னிடமிருந்து விடுவிக்க விரும்புகிறார். சூழலையும் அவர் மனநிலையையும் புரிந்துகொள்ளும் ஜேன் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று ஜோனாதனுடன் இணைய, செவிலியராக வந்த எலைனுடன் காதல் கொண்டு இணைகிறார் ஸ்டீபன். நிறைந்த அரங்கொன்றின் மேடையில் ஸ்டீபன் உரையைத் துவங்கும்போது, முதல் வரிசையிலிருக்கும் பெண்ணொருவர் பேனாவைத் தவறவிடுகிறார்.
தாம் எழுந்து சென்று அதை எடுத்து அந்த மாணவியிடம் தருவதாகக் கற்பனை செய்யும் ஸ்டீபன், நோய் அவரை இத்தனையாண்டு காலம் எவ்வாறு முடக்கிப் போட்டது எனக் கலங்குகிறார். உரையில் “மனித முயற்சிகளுக்கு எல்லைகளேதும் கிடையாது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறது. வாழ்க்கை இருக்கும்போது, நம்பிக்கையும் இருக்கும்” என்கிறார்.
உலகப்புகழ் பெற்ற இயற்பியல் கோட்பாளரான ‘‘ஸ்டீபன் ஹாக்கிங்” தம் நோயோடு ஐம்பது ஆண்டுகள் இயைந்து, 74 வயதினைக் கடந்து வாழ்கிறார். அவரின் முதல் மனைவி ஜேன் வைல்டு எழுதிய ‘‘மை லைஃப் வித் ஸ்டீபன்” எனும் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு 2014ம் ஆண்டு வெளியான ஆங்கிலப் படம் “த தியரி ஆஃப் எவ்ரிதிங்”, வாழ்க்கையை நம்பிக்கையின்மை கொண்டு பூட்டி வைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் திறவுகோல்களைத் தருகின்றது.
“கிடைச்சிருக்கிற இந்தப் பிறவியில எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லது செஞ்சிடணும்” எனும் வானவன் மாதேவியும், “வாழ்க்கையென்பது ரொம்ப எளிமையானதுங்க” எனும் இயலிசை வல்லபியும், ‘‘வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறது” எனும் ஸ்டீபன் ஹாக்கிங்கும், வாழ்க்கை மீதான அத்தனை கேள்விகளுக்கும் பதிலாகவும், புகார்களுக்குத் தீர்வாகவும் இருப்பவர்கள்.
எதுவாகினும் வாழ வேண்டுமெனத் துணிவதற்கு நிகர் வேறெதுவுமில்லை. வாழ்ந்திடத்தான் மிகப்பெரிய மனோதிடம் வேண்டும். உடல் மீது கெடுதிகள் ஏவி விடப்படும் தருணங்களில், அதிலிருந்து தப்பிப் பிழைத்து, விரும்பிய வண்ணம் வாழ்க்கையை வாழ்ந்திட நம்மிடமிருக்கும் துணிவும், நம்பிக்கையும்தான் வாழ்க்கையின் ஆணிவேர். வாழ்க்கையில் தெளிவின்மை கொண்டோருக்கு, இரத்தமும் சதையுமான நம்பிக்கையாய், வாழ்நாள் சாட்சியங்களாய் இருப்பவர்களே இந்த வானவன் மாதேவி, இயலிசை வல்லபி, ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர். தமக்கு வழங்கப்பட்ட, பிழையாய் வழங்கப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் தம்மளவில் பிழை செய்யாமல் நேர் செய்தவர்கள்.
தம் வாழ்க்கையைப் பாடமாக்கி பதில்களையும், தீர்வுகளையும், மந்திரச் சொற்களையும், நம்பிக்கையையும் நமக்கு வழங்கிட இவர்கள் எதிர்நீச்சல் போட்டபடியே இருக்கின்றனர். அந்த எதிர்நீச்சலின் அத்தனை வாதைகளுக்கும் பின்னால் அவர்கள் நமக்களித்திருக்கும் பாடங்களை புரிந்துகொள்கிறோமா, நம்பிக்கைகளை மனதில் விதைத்துக் கொள்கிறோமா என்பது மட்டுமே நம்முன் இருக்கும் கேள்வி. இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படியான கொடுமை எனும் புதிர் கேள்விக்கு, ’மற்றவர்களுக்கான உலகின் ஆகச்சிறந்த உதாரணங்கள் இவர்கள்’ எனும் பதிலையே தர விரும்புகிறேன்.
-
குங்குமம் வார இதழில் எழுதிய உறவெனும் திரைக்கதை தொடரின் இறுதிக் கட்டுரை
வானவன் மாதேவி மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோருக்கு அஞ்சலிகள்
1 comment:
மனித முயற்சிகளுக்கு மகுடம் சூட்டியது தங்கள் கட்டுரை ! வாழ்க !
Post a Comment