மௌனம் தகர்தல் ஒரு பிரசவம் போன்று வாதை நிரம்பியது. ஆனால் அதுவொரு விடுதலை, சிக்கலான கேள்விக்கான சரியான பதிலும்கூட
*
மனிதனின் சுயநலங்களில்
ஒன்று,
‘தம் அன்புதான் புனிதமானது, தாம் நிறுவிய
வடிவங்களுக்குள் பொருந்தாத அன்பு எப்போதும் புனிதமற்றது’ என
நினைப்பது
*
அடைத்த குழாயின்
நுனியில் விழாமல்
கனத்துக் கொண்டிருக்கும்
சொட்டு நீர்த்துளியாய்
மோகம்!
*
துவண்டுபோகும்
சூழல்களில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றோம் என நம்புவது அவசியம்.
*
மலரில் சுரக்கும் தேனின்
சுவை
மலருக்கு எப்படித்
தெரியும்?
சுவைக்கும் வண்டுக்குத்தானே
தெரியும்!
*
சொற்களைக் கேட்க செவிகள்
மட்டும் போதுமா...
மனமும் வேண்டுமல்லவோ!?
*
ரகசியங்கள்
புதைக்கப்படுவதன் மூலம் விடுதலையாக்கப்படுகின்றன.
*
தாக்கப் பயன்படும்
ஆயுதங்கள்போல் கூர்மையாக, முனையில் நஞ்சு பொருத்தி
இருக்க வேண்டியதில்லை, தற்காத்துக் கொள்ள தயாரிக்கப்படும்
ஆயுதங்கள்!
*
பசிக்கவில்லையென
ஏமாற்றும் குழந்தைக்கு, ருசியாகப்
பிணைந்த சோற்றின் முதல் கவளத்தை ஊட்டிவிட்டால் போதும்... அதேபோல்... ஒரு செயலைச் செய்யவே
முடியாது என மனம் அடம் பிடிக்கும் நேரத்தில் அதைத் தொடங்கிவிட்டால் போதும்...!
*
சிக்னல் விழுந்த உடனே ஒலிப்பானை
அலற விடுவதுக்குப் பேரு
புத்திசாலித்தனமல்ல... சைக்கோத்தனம்!
*
தாமதித்த
இந்த மாலைப்பொழுதில் எலுமிச்சைச் சாறு பிழிந்தளிக்கப்பட்ட தேநீர் குவளையிலிருந்து, அடுத்த மிடறிலேனும், பளிங்காய்
மிதக்கும் எலுமிச்சையின் புளிப்பு நிறைந்ததொரு முத்து கிட்டிவிட்டால் போதும்... மெல்ல நாக்கில் அழுந்தி
உடைத்து, அதன் ருசியை ஒரு கள்ளமுத்தம் போல் உயிரின் ஓரத்தில்
தேக்கிக்கொள்ளலாம்!
*
வேப்ப மரத்திலும்
எறும்பு சுவைக்க ஏதோவொன்று இருக்கிறது!
*
‘எல்லாத்துக்கும்
மனசுதான் காரணம்’ என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது
எளியது. :)
*
ஆளே இல்லாத ரயில்
பெட்டியை மகிழ்வாய் நினைப்பது எவ்ளோ பெரிய பேராசை!
*
”அவமானம்ங்கிறது அவங்க
கொடுக்கிறதில்ல. நான் நினைச்சுக்கிறது. ”
*
பகிர்ந்திடாத முத்தம்கூட
சுமைதான்!
*
சற்றும் எதிர்பாராத
தருணத்தில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கே அவரின் உண்மையான ஆளுமையை
காட்டுகிறது.
*
மனிதன் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றைக்
கண்டுபிடித்தபோதே, அதைக்கொண்டே தான் வீழ்த்த விரும்புவதை
வீழ்த்துவதற்காக ‘துரோகம்’ என்ற
ஒன்றையும் உருவாக்கியிருக்க வேண்டும்.
*
முறுக்கேறியிருக்கும்
கர்வத்தின் மீசை மழிக்க ஒரு கணம் போதும்!
*
நம்பாமல் இருக்கும்
வரைக்கும் உண்மையும் பொய்தான்!
*
தண்டிப்பதற்கு
அதிகாரம், உடல் வலு, பொருளாதார வசதி
மட்டுமே போதும். ஆனால், மன்னிப்பதற்கு வீரமும், தெளிவும், மிகப்பெரிய மன வலுவும் தேவை.
*
மகிழ்ச்சி என்பது அதை
வேண்டுவோர் கொள்ளும் நம்பிக்கையிலும், அதற்காக
எடுக்கும் தீர்மானத்திலும் அடங்கியிருப்பது!
*
ரோபோ மனசு
கிராஃபிக் கிளியை
வரைந்து
கொண்டிருக்கும்போது
கோவப்பழமொன்று
காற்றுவெளியில்
முழுச் சிவப்பாகிறது!
*
எல்லா அறிவுரைகளும்,
எல்லாருக்கும் ஒரே மாதிரி பொருந்தாது என எனக்கு நானே இப்போதைக்கு
அறிவுரை சொல்லிக்கிறேன்.
*
அன்பைப் பகிர்வதென்றான
பிறகு
அதில் அதிகமென்ன
குறைவென்ன!?
*
பௌணர்மி இரவில்
தகிக்கும்
கடலலையில் மிதக்கும்
படகு
இந்த நேசம்! #நேசமொழி
*
வேர் அறுந்த
நினைவுகள்... உரமாக!
*
கொளுத்தும்
வெயிலில்
சடசடத்து
நம்பிக்கையூட்டி
சட்டெனக்
காணாமல்போகும்
பெருமழைச்
சொட்டுகளாயும்
ப்ரியத்தின்
நினைவுகள்.
*
கடைசிப் பேருந்தில்
அனுப்பிவிட்டு
அசைக்கும் கையின்
தளர்வில்
சிந்துகிறது பிரியம்!
*
'செவப்பா இருக்கிறவன்
பொய் சொல்ல மாட்டான்' என்பது போன்றதுதான் 'ஆடி'க் கார்ல போறவங்கள நிறுத்தி வாயை ஊதுனு சொல்லாம
இருக்கிறதும்
*
மனிதர்களின் இல்லாமையைக்
குறிப்பதல்ல ’தனிமை’.
புரிந்துகொள்ளா
மனிதர்களின் இருப்பு மற்றும்
புரிந்துகொள்ளும் மனிதர்களின்
இல்லாமையைக் குறிப்பது!
*
அணைப்பென்பது
உடல்களின் வெற்றுப்
பிணைப்பா
ஆன்மாக்களின் கலவியன்றோ!?
*
”வாழ்பவர்கள்
செய்யவேண்டிய முக்கியமானதொரு கடமை... வாழ்ந்து முடிப்பவர்களின் இறுதிக் கணங்களில்
மன்னிக்க வேண்டியிருப்பின் மன்னிப்பதுவும், நம்மால் இயன்றதை
நேர்மையாகச் செய்வதும்தான். காரணம், ‘இறுதிக் கணங்கள் எப்படி
அமையும்’ என்பதை அவ்வளவு எளிதில் யாரும் தீர்மானித்துவிட
முடியாது.”
*
உடனிருப்போர் விலகக்
காத்திருந்து
முத்தமொன்று
பகிரத்துடிக்கும்
காத்திருப்பின்
அவதியைத்தான்
மொழிகிறது அந்தக்
குயில்!
*
ரயில் மோதி யானை இறந்ததை
ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப்
போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று
அறுந்துபோனது தெரியவா போகிறது!?
*
"பின்வாங்கு"
என மனம் சொல்லும்போது,
"இன்னும்
போ" எனும் புத்திதான் இப்போதைய தேவை!
*
மோதிர விரல்
நக இடுக்கில்
புதைந்து கிடக்கும்
அந்த முத்தத்தின்
நினைவுகளைக் கிளற
அந்திப் பொழுதைவிட
அழகான நேரம் ஏது!?
*
யாருக்காக உழைக்கின்றோமோ
அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது!
*
குழப்பமான கனவொன்றின்
மையத்தில்
தெளிவடைவதற்காக
விழித்துக் கொண்டேன்!
*
சந்தேகங்களின்
எண்ணிக்கைகளைக் குறைக்கப் பழகுங்கள்.
*
கடவுச்சொற்களில்
ஒட்டிக்கிடக்க மட்டுமா
அத்தனை பிரியம்!
*
இன்னொருவருக்கு
நஷ்டமில்லாத லாபம் சாலச் சுகம்!
*
”நான்
முட்டாள்” எனச் சொல்லிப் பாருங்கள், உலகம்
மெல்ல யோசித்தபடியே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பேசுவதாகவும், முட்டாளென்று நம்ப முடியவில்லையென்றும் சொல்லும். ”நான் புத்திசாலி”
எனச் சொல்லிப்பாருங்கள் உலகம் உடனடியாக ”பொய்
சொல்றான் பாரு... முட்டாப் பய” எனச் சொல்லும்.
*
பிழை பொறுத்தருள் மனமே!
*
உலர்ந்த நின் இதழ்களை
நாவால் வருடி
நீயே ஏன்
சிரமப்படுகிறாய்!
2 comments:
//யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது!//
ஆனாலும் வாழ்ந்து தான் தீர்க்க வேண்டியுள்ளது.
நின் சொற்கள் உரமாகுக
Post a Comment