புதிர்களின் முடிச்சவிழும் தருணம்



ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் எனும் கேள்விகள் பலமுறை வருவதுண்டு. ஒவ்வொருமுறையும் அப்போது இருக்கும் மனநிலைக்கேற்ப ஒரு பதில் கிடைக்கும். சில நேரங்களில் எழுத்து என்பது பீடித்திருக்கும் ஒரு வியாதி போன்றும், எல்லாவற்றையும் எழுத்தாகவே பார்க்கிறோமா என்ற புகாராகவும் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. ஆனாலும் எழுத வேண்டியிருக்கிறது. ஏன் எழுத வேண்டி வருகிறது அல்லது எது எழுதத் தூண்டுகிறது எனும் முக்கியமான கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் இரகசியமாகவேணும் ஒரு பதில் இருக்கும்

என்னை மாதிரி ஒரு காலத்தில் வலைப்பக்கத்தில் எழுதத் துவங்கி, ஃபேஸ்புக், ட்விட்டரில் கரை சேர்ந்து அங்கு அதிக நேரம் செலவிட வாய்த்தவர்கள் எல்லாவற்றையும், எந்நேரமும் வதவதவென எழுதிக்கொண்டேதான் இருக்கின்றோம். அதெல்லாம் எழுத்து வகைகளில் சேருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் காலம் எழுத்தில், வடிவத்தை, தீர்க்கத்தை, முதிர்வை, நிதானத்தை, காரணகாரியங்களை அவ்வப்போது சீராக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆகப்பெரிய ஆசான் காலம் என்பதில் எப்படி மாற்று இருக்க முடியும்.

முந்தைய ஆண்டுகளில் நாம் எழுதியவற்றை ஃபேஸ்புக் ஒவ்வொரு நாளும் நினைவுகளாய் மீட்டு வழங்குகின்றது. அது ஒருவகையில் கிளர்ச்சியான அனுபவம்தான். கடந்த காலத்திற்குள் மிக எளிதாகப் பயணப்பட்டு வருவதற்கான அனுமதிச் சீட்டு. சில வருடங்களுக்கு முன்பு நாம் எழுதியதை நாமே வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவுமானதொரு வாய்ப்பு அது.

ஓரிரு வரிகளில் அப்போது எழுதியிருக்கும் நிலைத்தகவல்கள், அதை எந்த உணர்வோடு, எந்த மனநிலையில் எழுதினோம் என்பதை நினைவில் மீட்டாவிடினும்கூட அது அப்போதைய நம் உணர்வு, அப்போதைய நம் மனநிலைதான் எனும் பந்தத்தை ஏற்படுத்துவதுண்டு.

மிகச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் ஒன்றாம் நாளில் //வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது// எனும் வரியை அந்த பின்மதியப்பொழுதில் எழுதியிருக்கிறேன். இத்தனை நாட்களில் இப்படியான நினைவுகளை மீட்டும்பொழுது அந்த சொற்களை எழுதிய காலம், சூழல், மனநிலை என்பதெல்லாம் நினைவுகளில் மீட்டப்படுவதில்லை. ஒரு வரியாக, கூற்றாக மட்டுமே தெரிவதுண்டு. ஆனால் இந்த வரி, என்னை மிகச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த வெம்மை தினத்திற்கு வெகுவேகமாய் இட்டுச்சென்றுவிட்டது.



அதை மதுரை அர்விந்த் கண் மருத்துவமனை காத்திருப்பு அறையிலிருந்து கைபேசி வழியே எழுதிய சூழலும், காட்சியும் அப்படியே கண் முன் குவிகின்றது. குடும்பத்தில் ஒருவரின் மருத்துவச் சோதனைக்காக அன்று கசகசக்கும் கூட்டத்தினிடையே ஏராளமான கேள்வி வைத்துக்கொண்டு விடை தெரியாமல் காத்திருந்த ஓய்ந்த மனநிலையில் எழுதிய வரி. அப்போது சுமந்திருந்த கேள்விகள் அத்தனையும் புதிர்கள்தான். உண்மையில் காலையில் மிக எளிமையாக மருத்துவமனைக்குள் ஒரு கண் பரிசோதனைக்காகத்தானே எனச் சென்றிருந்த மனநிலை முற்றிலுமாக எதிர்மனோநிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. முதற்கட்ட சோதனை, இரண்டாம் கட்ட சோதனை என அழுத்தம் கூடி, ”அப்படியும்” இருக்கலாம் எதுக்கும் ஒரு எம்.ஆர்.ஐ எடுத்துட்டு வாங்க என்று சொல்லப்பட்டு, அதற்கான விபரம் கொடுக்கப்பட காத்திருந்த நேரம் அது. சோதனையின் முடிவு ”இப்படியாக” இருந்தால் ஒன்றுமில்லை, ஆனால் ”அப்படியாக” இருந்தால் என்ற பயம் மெல்ல மெல்ல நிரம்பத்தொடங்கியிருந்த தருணம் அது. உடனிருந்த குடும்ப உறவுகளிடமே உடைத்துப் பேசமுடியாத மௌனத் தருணம் அது.

பதட்டத்தைக் குறைக்க சிலருக்கு ஒரு தம் தேவைப்படலாம், சிலருக்கு மூச்சுப் பயிற்சி தேவைப்படலாம், எனக்கு அப்போது எழுத்து தேவைப்பட்டிருந்திருக்கிறது என்பது புரிகிறது. அதுவும் குறிப்பாக அந்த ஆறு சொற்கள் கொண்ட வரி தேவைப்பட்டிருந்திருக்கிறது. அந்த வரியில் நான் சற்று தளர்ந்திருந்திருப்பேன், ஆசுவாசம் அடைந்திருந்திருப்பேன். பரிசோதனையின் முடிவுகள் “அப்படியாக” இருந்தால் என்ற ஐயத்தின் பின்னால், மிகப்பெரிய இருண்மை சூழ்ந்திருந்தது. எங்கு, எவ்விதம், என்ன செய்ய வேண்டுமெனும் எதுவும் தெரியாத ஒரு வெற்று அறிவு மற்றும் மனநிலை. அப்படியான பெரும்பான்மையான சூழ்நிலைகளிலெல்லாம் எனக்கு அப்படியான வரிகள்தான் மனதைத் தளர்த்தவும், சுவாசத்தைச் சீராக்கவும் உதவியிருக்கின்றன என்பதை இப்போது நினைவில் கொள்கிறேன்.

அந்த நாள் முழுக்கத் தீர்ந்துபோயும் விடை தெரியாமல், வார இறுதியில் மீண்டும் பயணித்து, பரிசோதனையின் முடிவுகள் விரும்பவே விரும்பாத “அப்படியான” ஒரு முடிவாகவே திணிக்கப்பட்டு, அடுத்த நான்கைந்து மாதங்கள் ஈரோடு, சென்னை, கோவை எனப் போராடி, நிறைவாய் நலம் அடைந்ததெல்லாம் பெரிய கதை. ஆகப்பெரிய அனுபவம்.

இப்போது மிக வேகமாக நான் நினைத்துப் பார்க்கவும், மனதிற்குள் ஓட்டிப் பார்க்கவும் விரும்புவது மூன்றாண்டுகளுக்கு முன்பான அந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து இப்போது வழக்கமான பரிசோதனைக்காக மார்ச் இரண்டாம் தேதி சென்னை சென்று வந்ததுவரை. எல்லாம் ஒரு கனவு போல் இருக்கின்றது. அந்த இடைப்பட்ட காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் எப்படிக் கடந்ததென நினைக்க பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும், சற்று மிரட்சியாகவும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் ஒன்று புரிகிறது. எதுவும் அந்தந்தக் கணங்களில் புதிராக இருந்தாலும், அவற்றிற்கு ஒரு திறப்பு இருக்கின்றது. ஒரு பதில் இருக்கின்றது. அது சற்று முன்பின்னாக நமக்கு கிடைத்துவிடுகின்றது. அப்படிக் கிடைப்பது விரும்பியதாகவோ, விரும்பாததாகவோ இருந்தாலுமே கூட, அதையும் கடந்து நம்மால் வாழ்ந்துவிட முடிகிறது. ஒவ்வொரு இடர் வரும்போதும், ஒவ்வொரு புதிர் அவிழும்போது நான் கொண்டிருந்த பதட்டங்கள் அப்போது தவிர்க்க முடியாததும், பின்னர் அவை அவசியமற்றதென்றே புரிய வைக்கப் பட்டிருக்கின்றன.


-

1 comment:

Unknown said...

சில நேரங்களில் சில காத்திருப்புகள் நம்மை இழுத்து செல்லும் இடம் புதிராக இருக்கும், உண்மையில் விரும்பாத முடிவுகள் பெரும்பாலும் மருத்துவத்துறையில் நமக்கு தீர்வா வருகின்றன.

காலம் மிக சிறந்த ஆசான் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை அண்ணா.
அருமையான பதிவு.