கூடுகள் உடைபட வேண்டும்


நாம் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் ஒரு இணக்கமான, சுபமான, பிடித்த ஒரு முடிவை எட்டுவதுதான் நம் விருப்பமாகவும் ஆசையாகவும் இருக்கின்றன. அப்படி எட்டுவதைத்தான் வெற்றி என்றும் கருதுகிறோம். நம் அன்றாடத்தில் எடுத்துக் கொண்டாலே களைத்த நேரத்தில் பூரண ஓய்வு, இரவுகளில் முழுமையான உறக்கம், பசித்த வேளைகளில் பிடித்த உணவு, குளியலின் முடிவில் புத்துணர்வு, வாசித்து நிமிர்கையில் திருப்தி மற்றும் அறிதலின் ஒளி, பயணங்களில் அழகிய அனுபவங்கள் என நாம் மேற்கொள்ளும் ஒவ்வொன்றிலும் ஒன்றை விரும்பிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒருவகையில் நாம் எதிர்பார்த்ததை அடைவதை அல்லது  சுபமான நிறைவடைதலைத் தான் வெற்றி என்றும் அழைக்கிறோம்.

ஆனால் வெற்றியென்பது அது மட்டுமேயன்று. வெற்றி என்பதை அளவிட குறைந்தபட்சம் மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. நிர்ணயித்ததை அடைந்திருக்க வேண்டும். அடைய வேண்டியதை குறித்த கால எல்லைக்குள் அடைந்துவிட வேண்டும். மிக முக்கியமானது முறையான வழிகளில் அடைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வெற்றிதான் உண்மையில் அங்கீகரிக்கப்படும். சில வேளைகளில் மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்யாமலும் வெற்றியாக அறிவிக்கப்படுவதும் உண்டு. அது, ஊருக்கும் உலகத்திற்கும் வெற்றியாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதில் ஈடுபவருக்கு, நிகழ்த்த முனைபவருக்கு இந்த மூன்றையும் பூர்த்தி செய்து அடையப்படும் வெற்றி மட்டுமே பரிபூரண வெற்றியாக மனநிறைவைத் தரும். இலக்கை அடையாமல் வெற்றியீட்டியதாக நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். குறித்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர் ஏறத்தாழ அந்தக் குறித்த காலத்திற்குள் திருணம் செய்து கொண்டால் மட்டுமே அது வெற்றியாகக் கருதப்படும். மிக முக்கியமாக, அடைய வேண்டிய எதையும் அதற்கான முறையான, நியாயமான வழிகளிலேயே அடைய வேண்டும். காசு சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கில் மனநிறைவையும் தன்னம்பிக்கையும் தரும் வெற்றி என்பது நேர்மையான வழியில் சரியான உழைப்பின் வாயிலாக ஈட்டப்படும் காசு மட்டுமே.

வெற்றி என்பது நினைத்த ஒன்றை, குறித்த காலத்திற்குள், சரியான வழிகளில் அடைந்து விடுவது மட்டுமல்ல. நினைத்த ஒன்றை அடைதலில் ஏற்படும் மனநிறைவும், அதன் மூலம் கிட்டும் தன்னம்பிக்கையும் சேர்ந்ததுதான். மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம் தான். தன்னால் அடைய முடிந்தது எனும் ’தனக்குள் ஜீவிக்கும் தனக்கான நம்பிக்கை’.

பிறந்த எந்தக் குழந்தையும் உடனே எழுந்து நடக்கவோ, ஓடவோ செய்து விடுகிறதா என்ன? அதற்கான வலுவும், அவசியமும் வரும்வரை காத்திருந்து அதன்பின்தானே அதை நிகழ்த்த முற்படுகின்றது. முதலில் குப்புற விழ முயல்கிறது. வயிற்றில் உந்தித் தவழ முற்படுகிறது. மண்டியிட்டு நடைபயில ஆரம்பிக்கிறது. எதையேனும் பற்றி எழுந்து நிற்கிறது. தத்தித் தத்தி நடக்க முயற்சி செய்கிறது. இவை ஒவ்வொன்றிலும் முதல் வெற்றிக்கு முன்பான பல தோல்விகளை, சவால்களை எதிர்கொள்கிறது. ஆனாலும் முயல்கிறது. எல்லாம் கை வருகிறது. ஒரு கட்டத்தில் ஓட்டப் பந்தயத்திலும்கூட கலந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறுகின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் அதன் முயற்சிக்கு கிடைத்த வெற்றியில் சேகரமான மனநிறைவும் தன்னம்பிக்கையும் அந்தக் குழந்தையை வளர்ந்த பிறகும் ஒவ்வொரு சவால்களையும் சந்தித்து வெல்லும் ஆற்றலை, நம்பிக்கை, வலுவைத் தருகிறது.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு ஒரு போட்டி வைத்து சில சாக்லெட்டுகளைப் பரிசளிக்கின்றோம் என வைத்துக்கொள்வோம். வெல்லும் குழந்தைகளுக்கு சிறப்பான சாக்லெட்டுகள் அளிக்கின்றோம். குழந்தைகளும் மகிழ்ந்து விரும்பி உண்கின்றனர். சாக்லெட்டின் சுவை அந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் இருந்துவிடப் போகின்றது?. எளிதில் மறந்துபோகும் சாக்லெட் சுவைகளுக்காகத்தான் போட்டியில் முனைப்போடு செயல்பட்டு வெற்றியீட்டினார்களா? இப்போது எண்ணிப்பார்த்தால், போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசாக கிடைத்த சாக்லெட்டுகள் குறித்து எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. ஆனால் அந்தப் போட்டியில் வெல்லும் சூத்திரம், அதற்கு எவ்வாறான உழைப்பினைக் கொடுக்க வேண்டும், எவ்வளவு திறன், வலு தேவை என்பவை காலம் முழுமைக்கும் மனதில் அழியாமல் இருக்கும்.

ஆக, வெற்றி என்பது ஒரு பொருளை, பதவியை, இடத்தை அடைந்து விடுதல் மட்டுமே அல்ல. மனதால் உணரப்படுவது. நம்பிக்கையை இன்னும் உயர்த்திப் பிடிப்பது அல்லது பொருத்தமான பாடத்தைக் கற்பிப்பது.

எல்லோருக்குமே வெற்றியின் மீது தீராத மோகம் தான். எனினும் ஏன் வெல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது என்பதற்கு விடை காண்பதும் மிக அவசியம். வெற்றியை நோக்கி பயணத்தைத் துவங்க வேண்டியவர்களில், அனைவருமே அதற்கான பயணத்தைத் துவங்கி விடுவதில்லை. அதனால் பயணமே துவங்காதவர்கள் எந்தவகையிலும் பலனையும், சிறப்பையும், நிறைவையும் எதிர்பார்க்க நியாயமில்லை.

மக்கள் நிறைந்திருக்கும் கூட்டத்தை நோக்கி ”இரண்டு பேர் மேடைக்கு வாருங்கள்” என அழைப்பு அல்லது அறைகூவல் விடுக்கப்படும்போது அந்த அரங்கில் இருக்கும் அனைவருமே தாம் அந்த இரண்டில் ஒருவர் என ஓடிவருவதில்லை. முதல் ஐந்து பத்து நொடிகளுக்குள் எழுந்து வருகின்றவர்கள் மட்டுமே பயணத்திற்கு தாம் தயார் என அறிவிக்கின்றவர்கள். அவர்களே களத்தில் நிற்கும் மனநிலை வாய்த்தவர்கள். வெற்றிக்கான பயணத்தில் தன்னை தகுதியானவராய் உணர்கிறவர்கள். பொதுவாக அப்படியான அறைகூவல் விடுக்கப்படும்போது அந்தக் கூட்டத்தில் 99% மனிதர்கள் ’அழைக்கப்பட்ட அந்த இருவர் நாமல்ல’ என நம்புகிறார்கள். அப்பெருங்கூட்டத்திலிருக்கும் அந்த இருவரை ’தமக்குத் தொடர்பற்று எங்கோ இருப்பவர்கள்’ எனக் கருதுகிறார்கள். அப்படியாக அவர்கள் எழுந்து போகும் போது அமர்ந்திருக்கும் பலர் ‘தாம் தப்பித்தோம்’ என ஒருவித நிறைவு கொள்கிறார்கள், சிலர் ”அட நாம போயிருந்திருக்கலாமோ!?” என வருத்தப் படுகிறார்கள்.

மேடைக்கு அழைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக அக்கம் பக்கம் பார்க்கும் கணப்பொழுதில்தான் அதற்குத் தகுதியானவர்கள் என்றெழுந்தோடும் அந்த இருவருக்குள் சில முக்கியக் காரணிகள் இருக்கின்றன.

அரங்கின் முக்கியப் புள்ளியிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது “உங்களில் இருவர் மேடைக்கு வாருங்களென” அது மிகச் சரியான நேரத்தில் ஏறத்தாழ சம அளவில் அங்கிருக்கும் அனைவரின் காதுகளிலும் நுழைந்து மூளைக்கு எட்டுகிறது. ”எதுக்காக கூப்பிட்டிருப்பாங்க? ஏன் போகனும்? போனா என்ன நடக்கும்? போகனுமா? நமக்கெதுக்கு அந்த வேலை?” இது போன்ற கேள்விகள் சுரந்து கொண்டிருக்கும் தருணத்தில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தயாரித்து சமாதானப்படுத்திக்கொள்ளும் முன்பாகவே “எதுக்காக இருந்தாலும் சரி, நாம போவோமே” என நொடிப்பொழுதில் மேடைக்குச் செல்லும் முனைப்பிருப்பவர்கள், ’தாம் யார்” என முதலில் தம்மிடம் நிறுவுகிறார்கள்.

அழைத்த காரணம் என்னவாக இருந்தாலும், அதில் தான் பங்கெடுக்க முடியும் என தனக்கு நிறுவியதோடு அங்கிருக்கும் அனைவரிடமும் தான் அதற்கு தயாராக இருப்பதாக பிரகடனப்படுத்துகிறார்கள். அதன்பின் எதற்காக அழைக்கப்பட்டிருந்தார்களோ அதை எதிர்கொள்கிறார்கள். அந்த எதிர்கொள்ளல்தான் பல நேரங்களில் மிக அற்புதமான வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அது பல திறப்புகளை ஏற்படுத்துகிறது.

“இப்போது செய்து கொண்டிருப்பதையே தொடர்ந்து செய்தால், இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதுதான் தொடர்ந்து கிடைக்கும்” என்பது மிக எளிதான, நிதர்சனமான ஆனால் மிக முக்கியமான விதி. யாரொருவருக்கு தற்போது கிடைத்துக்கொண்டிருப்பதில் திருப்தி இல்லையோ, போதாமை இருக்கின்றதோ அவர்கள் அதுவரை செய்து கொண்டிருந்ததையே தொடர்ந்து செய்தால் ஒருபோதும் போதாமையும், திருப்தியும் சரியாகி விடாது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டியதும், அதையே செய்து கொண்டிருந்தால் அதே பலன்கள்தான் கிடைக்கும் என்பதை உணர வேண்டியதும்தான் மிக அவசியமானது. மாற்றம் வேண்டுமென நினைக்கின்றவர்கள், தாம் அதுவரையில் தம்மைச் சுற்றி பின்னியிருந்த கூட்டினை உடைக்கிறார்கள். வேண்டிய பலனுக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த முற்படுகிறார்கள். அதற்குத் தோதான செயல்களைச் செய்யத் துவங்குகிறார்கள். வேண்டியதை அடைகிறார்கள்.

-

“நம் தோழி” நவம்பர் இதழில் வெளியான கட்டுரை