பொதி சுமத்தல் கழுதைக்கு பிறவிக்குணம் அல்ல. பழக்க குணம் மட்டுமே!
-
எனக்கு நானே நேர்மையாக இருக்க மறுப்பதிலும் தொடங்குகின்றன பல அநியாயங்கள்!
-
சில பொய்கள் உண்மைகளாகப் பார்க்கப்படுவதை ரசிக்க முடிவதுபோல், உண்மைகள் பொய்களாகப் பார்க்கப்படும்போது ரசிக்க முடிவதில்லை!
-
நடுநிசியில் வெளிநாட்டு விமானத்திற்கு காத்திருப்போரின் செல்ஃபிகள் இஞ்சி தின்ற மூதாதையர்கள் போல் ஏதேனும் ஒரு கோணத்தில் தோற்றமளிக்கின்றது-
-
கடுங்கோடையின் காலையொன்றில் மழை நனைத்திருக்கும் நிலம் கிழித்தோடும் ரயிலொன்றின் சன்னல் வழி பாயும் ஈரக்காற்றின் தழுவல்ச் சுகத்திற்கு இணையேது!
-
சிலருக்கு உடலில், சிலருக்கு மனதில் மட்டும் வயது கூடுகிறது. உடல், மனது இரண்டிலும் சமமாக வயது கூடுகிறவர்கள் அதிக நிம்மதியாய் வாழ்கிறார்கள்!
-
எத்தனை பாடங்கள் கற்றுக்கொண்டாலும், வாழ்க்கையின் வேகமும் அவசரமும் ஏதாவது ஒரு கீழ்மைக்குள் தள்ளி விடுகிறது!
-
எல்லாக்
கோணங்களிலும் ஒன்று அழகாய்த் தெரிகிறதென்றால், அழகாய்ப் பார்க்க கண்களுக்குத்
தெரிந்திருக்கிறதென்று அர்த்தம்
-
மழை வராவிட்டால் நாடு நரகமாக இருக்கிறது. மழை வந்தால் நகரம் நரகமாகி விடுகிறது.
-
ஒன்பது கிரகங்களின் உச்சம் பெற்ற ஒருவனுக்கு, வெயிலில் சீலிங் ஃபேன் போட, அதிலிருந்து சர்க்கரை பந்தலில் தேன்மாரி போல் எறும்புகளும் உதிரலாம்!
-
நூலகத்திற்கு அரசு தரும் முக்கியத்துவம், மக்கள் நூலகத்தை பயன்படுத்தும் விதம் வைத்தே மேம்பாட்டை தீர்மானிக்கலாம்
-
மிஞ்சிய போதையில் தயிர், மோர் விற்கும் கடைக்கு வந்து “அரைப்படி மோரு 13 ரூவாயா? அநியாயம் இது”னு சத்தம் போடுபவர்களையும் கொண்டது உலகம்!
-
ரசிக்க அழகு மட்டும் போதுமானதல்ல… சூழலும், மனநிலையும் அவசியம்!
-
நம்மையறியாமல் நிகழ்த்தும் அபத்தங்களில் சட்டெனச் சூழும் வெட்கத்திலிருந்து, தூக்கம் கலைந்த பிள்ளையாய் குழந்தைத்தனம் மீண்டெழுந்து வருகிறது!
-
செடியில் தொங்கும் சிவந்த மிளகாய் பழம் போல் மின்னுகிறது வெயில்!
-
பழித்தும் துரத்தவியலாது பதுக்கினாலும் அடங்காது வெறுத்தொதுக்க முடியாது வேறு வழியென்ன பருகித் தீர்ப்போம் பாசமாய்த் தழுவும் பங்குனி வெயிலை
-
மகிழ்ச்சியான முதலிரவின் விடியல் போல் இருக்கிறது கடுங்கோடை தினமொன்றில் இரவு முழுக்க பெய்த பெருமழைக்குப் பின்னான விடியல்!
-
சில நேரங்களில் சப்தமாகவும், சில நேரங்களில் கிசுகிசுப்பாகவும் பேசினால்தான் குழந்தைகள் புரிந்துகொள்ளுமென நினைக்கின்றோம்!
-
மன்னிக்கும் குணம் மட்டும் முற்றிலும் வேரறுந்து போயிருந்தால் உலகம் எப்போதோ வெறும் மண் மேடாக மாறியிருந்திருக்கும்!
உண்மையாக ஏமாறும்போதும், துரோகத்தில் பலியாகும்போதும்கூட பதறாதவர்கள், ஏப்ரல்-1ல் கோமாளித்தனமாக ஏமாற்றப்படும்போது கூடுதலாய்ப் பதறுகிறார்கள்!
-
-
3 comments:
ஒவ்வொன்றும் உணர்ந்து எழுதிய சொல்லாடல்கள்..நன்று...
அருமை
அருமை
**ஏப்ரல்-1ல் கோமாளித்தனமாக ஏமாற்றப்படும்போது கூடுதலாய்ப் பதறுகிறார்கள்!**
அன்றைக்கு மட்டும் தானே ஏமாற்றுபவன் நேரடியாக ஏமாற்றி விட்டதாக சொல்கிறான்! மத்த நாள் எல்லாம் மீசையில் மண் ஓட்டலைனு சமாளிச்கிக்கலாமே:)
Post a Comment