தோள்மீது கை போட்டபடி
நிழற்படத்திலிருக்கும் நண்பன்
இறந்து போனதாய்
செய்தி வந்திருக்கிறது
செய்தி வந்திருக்கிறது
நெருக்கமாய்
நின்றிருப்பவனின் கை
என் முதுகில் படர்ந்து
தோள்பட்டையில் பிரியமாய்
விரல் பதிந்திருக்கின்றது
சற்றே பலமாய் அவன்
அணைத்த நொடிப்பொழுதில்
படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
அக்கணத்தில் நானும் அவனும்
ஓருயிராய் மாறிவிட வேண்டிய
பிரியமும் இருந்திருக்கலாம்
அணைப்பின் அழுத்தத்தில்
மூச்சு முட்டிய கணமும்
நெருக்கத்தின் பிரியமும்
என் விழிகளில் தேங்கியிருந்தது
இப்பொழுதும் தெரிகிறது
என்னைவிட உயரமும்
அகண்ட பருமனுமான
அவனின் ஆகிருதி அணைப்பில்
ஒடுங்கி நிற்கிறேன்
படத்தை மீண்டும் பார்க்கிறேன்
மரணத்தைப் போர்த்திக்கொண்ட
அவன் பிடிக்குள்
ஒரு பறவையாய் நான்
யாருடைய கண்ணீரிலோ
சிறகுகள் நனைந்திருக்கின்றன!
-குங்குமம் (02.03.2015) இதழில் வெளியான கவிதை
-குங்குமம் (02.03.2015) இதழில் வெளியான கவிதை
5 comments:
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் நண்பரே
யாருடைய கண்ணீரிலோ
சிறகுகள் நனைந்திருக்கின்றன!/////அருமை அண்ணா...
நல்ல கவிதை.
இரத்தம் மாறிதான் கண்ணீராகிறது.நண்பர்கள் இழப்பு நம் சிறகு விரிப்பை சுருக்குகிறது.
Post a Comment