சனியம்புடிச்ச மழ



மீண்டும் மழை. சரியாக இரண்டு நாள் வெட்டாப்பு. அடைமழைக் காலத்தில் மழை ஓய்ந்து கிடைக்கும் இடைவெளியை வெட்டாப்பு எனச் சொல்வோம். இந்த வெட்டாப்பு அழகியதொரு ஆசுவாசம். மழையற்றுக் கிடந்த ஊரில் பத்து நாளுக்கு மேல் தொடரும் அடைமழை ஒரு கட்டத்தில் அலுப்பூட்டத்தான் செய்கின்றது. யாரை அலுப்பூட்டுகிறது என்பதும் மிக முக்கியம். மழைக்குப் பழக்கப்பட்ட மலைப்பகுதி மனிதர்கள் நம்மைப்போல் ஒருபோதும் மழையை நிந்திப்பதில்லை. குறுகிய பாதையில் எதிர் சாரியிலிருந்து கடப்பவரோடு ஒரு இணக்கம் பாவிப்பது போல் மழையோடு இணக்கம் பழகுபவர்கள் அவர்கள்.

வெட்டாப்பு முடிந்து அமைதியாய்க் கிடக்கும் மதியப் பொழுதொன்றில் மழை வந்திருக்கிறது. பத்து நாட்களில் மனிதர்கள் மழையோடு சற்றே இணக்கம் கொண்டிடப் பழகிவிட்டார்கள். எவரிடமும் மழை குறித்து கடுகடுப்பும், எரிச்சலுமில்லை. நசநசனு பெய்யுதே எனும் அலுப்பில்லை. மாறாக மழையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும் வேடிக்கை பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

கட்டிட முகப்பொன்றில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் 25 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு பெண் குழந்தைகளோடு அமர்ந்திருக்கிறார். வெள்ளை வேட்டி அணிந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் சுமார் இரண்டு வயதுதான் இருக்க வேண்டும். இரட்டைப் பிறவிகள் போலவும் தோன்றுகின்றனர். அவர் கால் நீட்டி அமர்ந்தபடி மடியில் ஒரு பெண்ணை கவிழ்த்துப் போட்டு அதன் முதுகில் கை போட்டிருக்கிறார். முதுகின் மேலிருக்கும் கையிலிருக்கும் கடிகாரத்தை மற்றொரு குழந்தை விரலால் குத்திக்கொண்டிருக்கிறது. படுத்திருக்கும் குழந்தை அந்த மற்றொரு குழந்தையிடம் இடைவிடாமல் உரையாடியபடி இருக்கிறது. மழை அடித்துப் பெய்கிறது. அவரிடம் மழை விடுமா விடாதா என்பது குறித்த தவிப்பேதும் தோன்றவில்லை. இரண்டும் அவர் குழந்தைகளாக இருக்குமா? அவர்களின் அம்மா எங்கே? ஒருவேளை அவருடைய சகோதரியின் குழந்தைகளாக இருக்குமா? குழந்தைகள் இரண்டும் மிக அணுக்கமாக அவரோடு விளையாடிக் கொண்டேயிருக்கின்றன. மொத்தத்தில் குழந்தையின் அம்மா எங்கே? இவர்கள் எங்கே பயணிக்கிறார்கள் எனும் கேள்விகள் மண்டையைக் குடைகிறது. அம்மாவோடு இருக்கும் இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப்படியான பதட்டக்கேள்விகள் உருவாகுவதில்லை.

காற்றில்லாமல், சுழற்றிச் சுழற்றி அடிக்காமல் மண்மீது பிரியமாய் விழுந்து புரண்டு கரையும் மழை அழகினும் அழகு. சாலையில் அமைதியாய் ஆனால் அடர்த்தியாய் பெய்த வண்ணம் இருக்கிறது மழை. சாலையின் ஒரு பகுதியில் கோணல்மாணலான ஒரு அரை வட்ட வடிவத்தில் பெருந்துளிகளாய் விழுந்துகொண்டிருக்கிறது. வட்டத்தின் எல்லையில் தண்ணீர் மொத்தமாய் இருக்கிறது. எப்படி அரைவட்டம் எனக் கேள்வி வருகிறது. மேலே கிளை நீட்டிய வேம்பு. மரத்தில் மோதி இலை கிளை தழுவி வரும் துளி தடித்த உருவமாய் வருகிறது. மரத்தின் விளிம்பில் சீராக பெய்யும் மழையும், மரத்தடி மழையும் கூடும் இடத்தில் தண்ணீர் தடிமனாய்க் கரைகிறது.

சாலையில் கார்கள் மட்டும் சீறிக்கொண்டிருக்கின்றன. எப்போதாவது ஒரு பைக் செல்கிறது. மழை வருவதற்கு முன் மழையில் நனையலாம் என்றிருக்கும் பெருவிருப்பம், மழை வரும் நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து நிறைவேறாமல் போய்விடுகிறது. நிறைவேறவில்லை என்பதைவிட விருப்பமற்றே போய்விடுகிறது.

சேலையை சற்றே உயர்த்திக்கட்டிய ஒரு பெண் கையில் தூக்குப்போசியோடு, முதுகில் திராட்சைக்கொத்து போல் ஒரு பலூன் கொத்தினைச் சுமந்தபடி மழையில் நடந்து கொண்டிருக்கிறார். வித்தியாசமான காட்சியாய் இருக்கிறது. அடர் ரோஸ் வண்ண பலூன்களுக்கு மத்தியில் ஓரிரு வெள்ளைப் பலூன்கள் இருக்கின்றன. அவை தீபாவளிக்காக எதாவது ஒரு ஷோரும் முகப்பில் கட்டப்பட்ட பலூன்களாக இருக்கலாம். அந்தப் பலூன்களை எதிர்கொள்ளப்போகும் குழந்தைகளின் குதூகலம் ஒரு நொடி மனதில் வந்து போகிறது. அடர்த்தியாய் மோதும் மழை குறித்து எந்தத் தயக்கமுமற்று நடந்துகொண்டிருக்கிறார். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கெனும் பழமொழி அந்த பலூன் மீது மோதிச் சிதறும் துளிகளில் மின்னுகிறது.

எத்தனை வருடங்களுக்கு முன்பு இப்படியான அடைமழை இருந்ததென நினைவில்லை. மழைக்கும் அடை மழைக்கும் அழகிய வேறுபாடுண்டு. இது ஐப்பசியின் கொடை. அடைமழை என்பது மிகச்சிறிய வயது அனுபவமாக மட்டுமே நினைவிலிருக்குறது. இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் பேய்மழையாக அடித்து பாலங்களை உடைத்து நொய்யலில் கரை புரண்டோடிய நாளில்தான் கடைசியாகப் பெருமழையைப் பார்த்தது.

பொதுவாக மனிதர்கள் இதுபோன்ற மழைகளுக்கு பழக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலம் எத்தனையெத்தனை மழைகளைக் கண்டிருக்கும். பொழிந்து தழுவியோடும் இந்த மழையை போன்றே எண்ணற்ற மழைகள் பெய்தோய்ந்திருக்கலாம், எனினும் இதுவொரு புது மழைதானே.

கிராமத்து சனம் ஒருவரையொருவர் எப்போது எங்கு சந்தித்துக் கொண்டாலும் முக்கியமாய்க் கேட்கும் கேள்வி “அப்புறம் ஊர்ல மழைங்ளா” என்பதுதான். நலம் விசாரித்தலின் மிக முக்கியக்கூறு இது. மழையை மட்டுமே நம்பி நிலம், நிலத்தை மட்டுமே நம்பி மக்கள் என இருந்த காலத்தின் அதி அவசியக்கேள்வி அது.

சிலபல ஆண்டுகளாகப் பருவம் தப்பி, பகிர்வில் பாதகம் செய்து வரும் மழை இந்த ஆண்டுதான் முறைப்படி தன் மடி திறந்திருக்கிறது. ஒரு இடத்தில் மழை பெய்யும், அதே நேரம் 500-1000 அடி தொலைவில் மழையின் சுவடற்றுக் கிடக்கும். நீளமாய்க் கிடக்கும் பத்து ஏக்கர் விளைநிலத்தின் ஒரு பகுதியில் மழை, மறு பக்கத்தில் மழையில்லை என்பது போன்ற வேடிக்கையான கொடுமைகளும் நிகழ்ந்ததுண்டு.



துவைத்த துணிகள் காய்வதில்லை. கடை வீதிக்குப் போய் வர முடியவில்லை. குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது. சிலருக்கு காய்ச்சலும் வருகிறது. மழையென பள்ளிகளுக்கு திடீரென அறிவிக்கப்படும் விடுப்புகளால் ஏற்படும் குழப்பங்களாலான கடுப்பு. எங்கும் சேறும் சகதியுமாய் இருக்கிறது. பேருந்துகளில் ஒழுகுகின்றன. தாழ்வான பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் நிற்கிறது என்பது போன்ற சிற்சில சிரமங்கள் புறந்தள்ளக் கூடியவையன்றுதான்.

தண்ணீர் தேங்குகிறது, பெருவெள்ளம் பாய்கிறது என்பதற்குப் பின்னால் நாம் சாகடித்த ஏரி குளங்கள் விடுத்த சாபங்கள் அவை என்பதை வசதியாக மறந்துவிட்டோம். வீட்டில் உருவாகும் எல்லாக் குப்பைகளையும் கேரி பேக்கில் மூட்டைகட்டி சாக்கடையில் வீசியதையும் மறந்துவிட்டோம். ஐந்து - பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பேய்மழை அடித்தாலும் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் பழக்கமில்லை. மழைக்காகிதம் எனும் அந்தக் கால ப்ளாஸ்டிக் காகிதங்களுக்குள் புத்தகப் பையை வைத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கொட்டும் மழையில் வீட்டிற்கும் பள்ளிக்கும் சென்று வந்த தலைமுறைதான் நாலு துளி விழுந்தவுடனே டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் தேடுகிறது, ஆட்சியர் பிள்ளைகளுக்கு லீவு அறிவித்து விட்டாரா என்று.

பங்குனி சித்திரையில் வெயிலும் கொளுத்தக்கூடாது, மார்கழி தையில் குளிரும் மிதமாய் இருக்க வேண்டும். ஐப்பசியில் அடைமழையும் பெய்யக்கூடாது. வாழ்க்கை மட்டும் எப்போதும் சுகமாய் இருக்க வேண்டுமென்பதே பெரும் ஆசையாய் நமக்கு.

அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணறுகளில் அதிகபட்ச ஆழாமாய் இருக்க, அதை வைத்து மட்டுமே எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்ட சமூகம், இன்று அறுநூறு எழுநூறு அடி ஆழத்திற்குப் போய் குடிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் தேடுகிறோம். சில பகுதிகளில் ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லையென்பது மிகச்சாதாரணம். அவ்வளவு ஆழத்தில் கிடைக்கும் நீரில் அந்த மண்ணுக்கே உரிய எந்த சுவையும் நாம் உணர்வதேயில்லை. ஒட்டுமொத்தமாய் ஒரே ஒரு சுவை சப்பென இருக்கும் உவர்ப்புசுவை மாத்திரமே. சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான் கனிந்த தன் முலைக்காம்புகளின் மீது இயற்கையன்னை புதைத்துக் கொள்கிறாள். பாக்கெட் பால் மட்டுமே சுவைத்த தலைமுறைக்கு நேரடியாய் தாய்ப்பாலைச் சுவைப்பதில் ஏற்படும் தடுமாற்றமும் ஒவ்வாமையுமே ”சனியம்புடிச்ச மழ… எப்பப்பாரு நொசநொசனு பேஞ்சுட்டே இருக்கு” என்பது.

-

13 comments:

Unknown said...

சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான் கனிந்த தன் முலைக்காம்புகளின் மீது இயற்கையன்னை புதைத்துக் கொள்கிறாள். //////இது மிக அருமையான ரசனை கட்டுரை.....மண்வாசம் மாறாத வார்த்தைகளை எழுத்து நடையில் கொண்டு வந்த அழகு.....மிக ஆளுமை.உதாரணமாக "துக்குபோசி.....என்ற பொருளை குறிப்பிடும் இடம் எல்லாம் மிக அருமை.

sundarmeenakshi said...

nice words,
அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணறுகளில் அதிகபட்ச ஆழாமாய் இருக்க, அதை வைத்து மட்டுமே எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்ட சமூகம், இன்று அறுநூறு எழுநூறு அடி ஆழத்திற்குப் போய் குடிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் தேடுகிறோம்.

அகலிக‌ன் said...

அம்மாவோடு இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப்படியான பதட்டக்கேள்விகள் உருவாகுவதில்லை.இந்த வரிகளை வாசிக்கையில் ஏனோ கண்கள் கலங்கின.

Unknown said...

Superb sir

Ff said...

Savukkadi... Feeling guilty

Ff said...

Savukkadi... Feeling guilty

சத்ரியன் said...

செம்மையான பதிவுங்க, கதிர்.

ராமலக்ஷ்மி said...

மழைக்குள் நடந்த உணர்வு.

Sakthivel Erode said...

மிக அருமை.!!

Unknown said...

Arumai arumai.....

'பரிவை' சே.குமார் said...

அடைமழை அல்ல...
சிறு தூரல் வருவதற்கு முன்னே எங்கோ பெய்யும் மழையின் வாசம் வருவது போல் ஆரம்பித்த எழுத்து... தூறலாகி... பெரும் மழையாகி ஆரவாரமாய் பெய்து முடித்திருக்கிறது...
அருமை அண்ணா...

சக்திவேல் விரு said...

நன்றி ஈரோடு கதிர் -அருமையான மழை பதிவு நடை . சிறு பருவ பள்ளி நாட்கள் ஞாபகம் . இயற்கையுடன் கூடிய வாழ்வை இழந்துவிட்டோம் என்பது உண்மை.

Unknown said...

மண்மீது பிரியமாய் விழும் மழை,அது எழுப்பும் சத்தம்,கொடுக்கும் இதம் அழகினும் அழகு.. அதை அத்தனை பிரியமாய் ரசித்து,உணர்ந்து எழுதிய எழுத்து ரசனையின் உச்சம்..