புடுங்கின, புடுங்குற ஆணிகளெல்லாம்!

கடந்த பத்து பதினைந்து நாட்களாகவே வாட்ஸப்பில் தினமும் நான்கைந்து முறையாவது அக்டோபர் 31ம் தேதி போராட்டம் குறித்து ஒரு சேதியேனும் வந்துவிடுகிறது. வாட்ஸப் தவிர்த்து வைபர், லைன், டெலிகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ப்ளாக் என எங்கும் இந்தப் போராட்டம் குறித்தான செய்திகளோ, வேண்டுகோள்களோ ஏனோ என் கண்ணில் படவில்லை. மொபைல் நிறுவனங்கள் 2ஜி, 3ஜி இணையக் கட்டணத்தை அதிகப்படுத்திவிட்டன என்பதுதான் போராட்டத்திற்கான காரணம். அதைக்கண்டித்து ஒரு நாள் முழுக்க மொபைல் மூலம் 2ஜி,3ஜி நெட் பேக்குகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் Wi-Fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்



தொழில் முறையில் பயன்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி சமூக வலைதளங்களுக்காகவும், மொபைல் ஆப்ஸ்களுக்காவும் கணிசமாக இணையத்தை பயன்படுத்தும் சூழலுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆளாகிவிட்டோம்.

மொபைல் ஆப்ஸ்களில் வாட்ஸப்பில் மக்கள் ஊறித்திளைத்துக் கிடப்பதை எளிதில் காணமுடிகிறது. என் தொடர்பு எண்களில் அறுபது சதவிகிதம் பேர் வாட்சப்பில் இருக்கிறார்கள். அவர்களில் 90% பேர் தொடர்ந்து அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் ஒரு காலத்தில் மாதத்திற்கு 1ஜிபி அளவிற்கான நெட் பேக் போட்டுக்கொண்டிருந்தேன் அலுவலகத்தில் WiFi இணைப்பும், வீட்டில், வெளியில் நெட் பேக் இணைப்புமென கைபேசி 24 மணி நேரமும் இணையத்தில் இருந்தது. தடையற்ற இணையத் தொடர்பு இருப்பதாலேயே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என எல்லாவற்றின் அறிவிக்கைகளும் மின்னிக் கொண்டேயிருக்கும். விட்டில் பூச்சிக்கு அந்த மின்னும் வெளிச்சம் போதாதா? உடனே அது என்னவெனப் பார்க்கத் தோணும், அதையொட்டி நேரம் போவதே தெரியாது. ஒரு கை சாப்பாட்டில் இருக்கும், ஒரு கை மொபைலை வருடிக் கொண்டிருக்கும், ஒரு காது டிவியில் இருக்கும், மறு காது மட்டுமே குடும்பத்தினருக்கானதாய் இருக்கும். ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் அட நாமதான் எவ்ளோ பிசியா இருக்கோம் என நினைக்கத் தோணும். நாய்க்கு நிக்க நேரமுமில்லே, வேலையுமில்லே என ஊரில் சொல்வது நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

மொபைல் நெட்பேக் இணைப்பைத் துண்டிப்பதென்று ஒரு முடிவெடுத்தேன். அலுவலத்திற்கு வந்தால் கைபேசியில் இணையம் விழிக்கும், விட்டுக்கிளம்பும்போது உறங்கிவிடும். அதன் விளைவு வீட்டின் நீள, அகலம் மீண்டும் தெரிந்தது. வீட்டில் இருக்கும் மனிதர்கள் மிக அருகில் தெரிந்தார்கள். அடிமைப் பட்டுவிட்டு வெளியேறிப்பாருங்கள் அதன் சுகம் எத்தனை அற்புதமானதென்று புரியும்.

24 மணி நேரமும் இணைய இணைப்பில் ஆண்டுக்கணக்கில் கிடந்தவனுக்கு திடீரென அலுவலக நேரம் தவிர்த்து மீதி நேரம் இணையத்தைவிட்டு விலகியிருப்பதில் சில நியாயமான தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டது. அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் 5 நிமிடமோ 10 நிமிடமோ இணையம் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமும், அவசரமும், அவசியமும் வந்தது. அதற்கு ஏதுவான ஒரு திட்டம் ஏர்செல்லில் கிடைத்தது. 14 ரூபாய்க்கு பூஸ்டர் போட்டுக்கொண்டால் 28 நாட்களுக்கு 40KB அளவிற்கு 1 பைசா எனும் திட்டம். இதில் ஒரு 1MB பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 26 பைசா செலவாகும். அதன்பின் மொபைல் டேட்டா பயன்படுத்துவது ஒரு மாத காலத்திற்கே 100 முதல் 150 MB அளவிற்குள் சுருங்கிப் போனது.

இவ்வளவெல்லாம் கணக்குகள் போட்டு அப்படி மொபை ஆப்ஸ்களை பயன்படுத்தித்தான் தீர வேண்டுமா என்ற கேள்வி வரலாம். கால ஓட்டத்தில் சிலது தவிர்க்கமுடியாதவை. தொழில் நிமித்தமாக எனக்கு வாட்ஸப் என்பது மிகுந்த பயனுள்ளது. வாடிக்கையாளருக்குத் தேவையானது தயாராகிவிட்டது என்பதை ஒரு படத்தின் மூலம் சில நொடிகளில் நிரூபித்துவிட முடிகிறது. வங்கியில் பணம் கட்டிய விபரம், கொரியர் அனுப்பிய விபரம் உட்பட பலவற்றை உடனுக்குடன் யாருக்கும் எங்கும் அனுப்பிக்கொள்ள முடிகிறது. போனில் அழைத்து நான் சொல்றதை எழுதிக்குங்க, டைப் பண்ணி அனுப்பத் தெரியாது என்கிறவர்களிடம், காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்புங்கள் எனச் சொல்வதும், மெயில் அனுப்பினால் அதைப் பார்க்க நேரமாகும் என்பவர்களுக்கு கணினித் திரையை அப்படியே படம் பிடித்து அனுப்பிவிடுவதுமென நிறைய எளிமைப்பட்டுவிட்டது. வைபர் மூலம் வெளிநாட்டு எண்களை அழைத்துப் பேசிக்கொள்ளமுடிகிறது.

கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள் என சிரமப்படுபவர்களுக்கான கேள்வி நம் இணையப் பயன்பாட்டில் எத்தனை சதவிகிதம் அவசியத்தின் பேரில் பயன்படுத்துகிறோம். பொழுதுபோக்கும், நகைச்சுவையும், வாசிப்பும் மிக நிச்சயமாக அவசியம்தான். ஆனால் இதில் எது அதிகப்படியாய் இருக்கிறது என்பதை தராசில் ஏந்திப் பார்க்கவேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் நாம் இருக்கிறோம்.

வாட்ஸப்பில் நான் மூன்று குழுமங்களில் இருக்கிறேன். ஒரு குழுமத்தில் 50 பேர், இரண்டாவதில் 17 பேர், மூன்றாவதில் 13 பேர். ஒவ்வொரு குழுமத்திலிருந்தும் சராசரியாக ஒரு நாளைக்கு 10 வீடியோக்கள் வந்துவிழுகின்றன. ஆக மூன்று குழுமத்தில் இருக்கும் எனக்கே சுமாராக ஒரு நாளைக்கு 30 வீடியோக்கள் வந்து விழுகின்றன. வீடியோ அதிகபட்சமாக 16MB அளவு வரை வருகிறது. சராசரியாக 5MB என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட எனக்கு வரும் 30 வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நான் பயன்படுத்தும் டேட்டா அளவு 150MB. மாதத்திற்கு கணக்குப் பார்த்தால் 4 முதல் 5GB அளவு டேட்டா வெறும் 3 குழுமம், 80 நபர்கள் இருக்கும் எனக்கே பயன்பாட்டில் வருகிறது.

என் நண்பர் ஒருவர் 16 குழுமங்களில் இருக்கிறார். ஒவ்வொருநாளும் அவர் அலுவலகத்தில் நுழையும்போது Wifi-யில் இணையத் தொடர்பு கிடைத்தவுடன் வாட்ஸப் அறிவிக்கையில் ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் செய்திகளைக் காட்டும். ஒவ்வொன்றாய் திறந்து ஓடவிட்டால் கிட்டத்தட்ட 100-200 வீடியோக்கள் இறங்கும். ஒரு நாளைக்கு அவர் பயன்படுத்தும் இணைய டேட்டாக்களின் அளவு ஏறக்குறைய 1GB அளவு.

வாட்ஸப் குழுமங்களிலிருந்து இன்று இதுவரை ஒரு வீடியோ அல்லது படத்தைக் கூட யாரும் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வரவில்லை என்பதைக் காணும்போது இந்த போராட்டம் மாபெரும் வெற்றிதான்(!) என ஒருவகையில் புரிகிறது.

தேவையா, தேவையில்லையா என எலி குட்டிபோடுவதுபோல் பெருகிப் பகிரும் வீடியோக்கள், படங்கள் மூலம் அதிக அளவிலான டேட்டாக்களை விழுங்குவதை மொபைல் நிறுவனங்கள் எளிதில் இனம் கண்டு கொண்டார்கள். இந்த ஒன்று போதாதா அவர்களுக்கு? ஒவ்வொரு மாதமும் கட்டணத்தை உயர்த்தத் துவங்கிவிட்டார்கள். உள்ளுக்குள் மூழ்கி சுகம் கண்டு போன நமக்கு அதிலிருந்து வெளியேறவும் முடியாமல், டாப்அப் செய்திருப்பதில் கரையும் டேட்டா அளவைக் காணவும் முடியாமல் வெடிப்பதின் ஒரு எல்லைதான் இந்த 31ம் தேதி புறக்கணிப்பும் போராட்டமும்.

தினமும் மது குடித்தே தீரவேண்டுமென்ற நிலையிலான குடி நோயாளிகளை மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாக்கியபிறகு, விலையை ஏற்றுவதில் மதுக்கடைகளுக்கு என்ன தயக்கம் இருந்து விடப்போகிறது? மது அருந்துபவர்கள் ஒரு நாளைக்கு போராட்டம், புறக்கணிப்பு எனச் செய்தாலும் அதை ஏளனப் புன்னகையோடு கடந்து செல்லும் தெனாவட்டு வந்துவிடும். புறக்கணிப்பின் அடுத்த தினம், சமூகம் பெருவேட்கையோடு தனக்குப் பிடித்ததின் மேல் படையெடுக்கும் என்பது பெரும்பாலும் கண்டதுதானே.

போராட்டம், புறக்கணிப்பு என்பதோடு ஒருமுறை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியது, வாட்ஸப் உட்பட எல்லா ஆப்ஸ்களிலும் நாம் புடுங்கின, புடுங்குற ஆணிகளெல்லாம் தேவையான ஆணிகள்தானா என்பதே!


-    -
-   


4 comments:

ezhil said...

யோசிக்க வேண்டிய ஒன்று .... எந்த ஆணிகளென்று....

ராமலக்ஷ்மி said...

நிறைய யோசிக்க வைக்கிறது, பதிவு.

Peppin said...

Super Kathir, very true indeed!

ஸ்வர்ணரேக்கா said...

முற்றிலும் உண்மை