காணும் எல்லோரையும் நம் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய்விடுவதில்லை.
எதன்பொருட்டோ சிலரை மிக நெருக்கமாகப் பிடித்துவிடும். அப்படிப் பிடித்துப் போனவர்களோடு
ஏதேனும் ஒரு சூழலில் பிணக்கோ ஊடலோ ஏற்பட்டாலும், மீண்டும் நெருங்கிப்போகும் சமயத்தில்
பீறிடும் அன்பினை விளக்கிட வார்த்தைகள் கிடைப்பதில்லை. பிடித்தலையும், பிடிக்காமையையும்
ஏதோ ஒரு காரணத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் மனம் மிக நுணுக்கமானது.
ஒருவரைப் பிடிக்காமல் போனதற்கும், பிடித்துப் போனதற்கும் என்னதான் நேரடிக்காரணமென எவ்வளோ
யோசித்தாலும், இதுதான் காரணமென தீர்க்கமாய் தீர்மானித்திட முடிவதில்லை.
அவளைப் போலவே நீங்கள் ஒருத்தியைக் கடந்து போயிருக்கலாம்.
அவளுக்கு வாழ்க்கையில் வேறேதும் குறையில்லை. திருமணத்தில் எடுத்த பொருந்தா முடிவு தவிர.
பொருந்தா முடிவு என்பதற்குள் நுண்ணிய சிக்கல்களுண்டு. விளைவு கையில் வலிந்து பரிசாகத்
திணிக்கப்பட்ட மோசமான தாம்பத்ய வருடங்கள். வாழ்தலை விட எல்லாம் விட்டொழிந்து மரணித்துப்போவதில்
கூடுதல் பிரியம் அவளுக்கு. மரணம் மிக அருகில் வந்து இரண்டொரு முறை வருடிப்போனதுமுண்டு.
அவளின் துன்பங்களை அவள் பக்கமிருந்து ஓரளவு அறிவேன். தற்கொலை முயற்சிகளை விதவிதமாய்
செய்பவர்களைக் கண்டால் ஒரு பயமிருப்பதுண்டு. ஒருமுறை முயன்றுவிட்டால் எப்போதிருந்தாலும்
அவ்வழியேதான் முடிவு வருமென எவரோ எங்கோ எப்போதோ நம்ப வைத்ததன் வெளிப்பாடுதான் அந்தப்
பயம்.
செத்தே தீரவேண்டும் என முடிவெடுத்தால், என்னிடம் அனுமதி பெற்றுவிட்டு
செத்துப்போ என்பதுதான் எங்கள் நட்பிற்குள்ளிருக்கும் ஒப்பந்தம். இப்படியான ஒப்பந்தத்திற்கு
சத்தியம் பெறுவதே ஒரு கசப்பான முரண்தான். வாழ்வின் மீதான அச்சங்களைக் கொண்டிருப்பவனுக்கு
சத்தியங்கள் மீது சற்றேனும் நம்பிக்கை வரலாம். அச்சங்களைக் கடந்து, எல்லாம் துறந்து,
வெறுத்து, மறுத்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ள நினைப்பவனுக்கு முதலில் சத்தியம் செய்தது
நினைவுக்கு வருமா? சத்தியம் எனும் மெல்லிய நூல் என்ன செய்துவிடப்போகிறது. இந்த சத்தியங்கள்
சம்பிராதாயங்கள் எல்லாம் ஒரு திருப்திக்குத்தான்.
மனதில் வெளிச்சமற்றுப் போயிருந்த அவளுக்கு, தன் தோழியின்
வீட்டில் காய்ந்த மாலையோடு தொங்கிய தோழியின் கணவனின் நிழற்படம்தான் இதுவரை எவரும் சொல்லித்தந்திடாத
வைராக்கியத்தைக் கொடுத்திருக்கிறது. தோழியின் கணவர் இறந்தது, தோழி கடினமாய் உழைத்து
பிள்ளைகளை வளர்ப்பது என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும், இருள் கவிழ்ந்த மனநிலையில் அன்று
அந்த நிழற்படம் ஏதோ இம்சை செய்திருக்கிறது. விபூதி சந்தனம் குங்குமத்தின் தடயங்கள்
மட்டுமே படத்தில் தெரிந்தன. போன இறந்த தினத்தில் இடப்பட்டிருக்கலாம். சட்டத்திற்குள்
அடங்கிக்கிடக்கும் அந்தக் கணவனின் விழிகள் இவளைத் தைப்பது போலவே உணர்கிறாள். அவனின்
இல்லாமை மட்டுமே அந்தக் குடும்பத்திற்குள் நிரப்பிவைத்திருக்கும் துன்பங்கள் ஏராளம்.
தோழியின் தனிமை, பிள்ளைகளின் ஏக்கம், சுற்றத்தின் வரம்பு மீறல்கள், இன்னும் இத்யாதிகள்.
அவளோடு வந்த தம் பிள்ளைகளை ஒரு கணம் பார்க்கிறாள். அந்தப் படத்தை மீண்டும் நன்றியோடு
பார்க்கிறாள். தோழியின் கணவனின் கண்களிலிருந்து கருணை கசிவதாய் உணர்கிறாள். மரணம் வெகு
தொலையில் அதன் போக்கில் அமைதியாய் இருப்பதாய் நிறைவாய் உணர்கிறாள். பிடிக்காததை ஒரு
கணமேனும் ஒதுக்கியோ, விலக்கியோ இந்த வாழ்க்கை எத்தனை அதி அழகானது என்பதை ரசித்து வாழ்ந்துவிட
வேண்டுமென்றாள். வாழ ஆரம்பித்துவிட்டாய் என நான் சொல்லவில்லை. வாழ்ந்து கொண்டிருப்பதும்
தானாகவே புரியட்டுமே!
கண்டு மாதங்கள் கடந்தும் மனதில் குறுகுறுத்துக்கொண்டிருக்கும்
ஒரு படம் “பிரணயம்”. அச்சுதமேனன், கிரேஸ் யதேச்சையாக சந்தித்து காதல் கொண்டு கடிமணம்
புரிந்து மகனுக்கு இரண்டரை வயதாகும்போது எதனாலோ விவாகரத்துப் பெற்று பிரிந்து விடுகின்றனர்.
மகன் தந்தை வளர்ப்பில். நாற்பது வருடங்கள் கரைந்த ஒரு முதுபொழுதில் மாரடைப்பு ஏற்பட்டு
ஓய்விலிருக்கும் சூழலில், ஜெயப்பிரதாவை ஒரு லிப்டில் சந்திக்க நேர்கிறது. இன்ப அதிர்ச்சியில்
இரண்டாம் முறை நெஞ்சுவலியில் மயங்கிவிழ, ஜெயப்பிரதாவே அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டி
வருகிறது. கலங்கிய மனதோடு வீடு திரும்ப, தத்துவத்தில் துறைப் பேராசிரியாக இருந்து ஓய்வுபெற்று,
பக்கவாதத்தில் ஒரு பக்கம் விழுந்து கிடக்கும் தன் நாற்பதாண்டு காலக் கணவன் மேத்யூஸிடம்
அச்சு குறித்துச் சொல்கிறாள். இரண்டு குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில் வசிக்கிறது.
இரண்டு குடும்பத்தினருக்கும் பழைய கதைகள் தெரிய வருகின்றன. அவர்கள் மூவருக்குள்ளும்
மிகஅழகியதொரு நட்பு பூக்கிறது. மனைவின் முன்னாள் கணவனை எதிர்கொள்ளும் மேத்யூஸிடம் கொட்டிக்கிடக்கும்
புரிதலும், அன்பும் பொறாமைகொள்ள வைக்கிறது. அவர்களின் நட்பை அவர்களின் இரு குடும்பமும்
அதிர்ச்சியாய்ப் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் கொச்சைப்படுத்துகிறது.
ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் மூவரும் புறப்பட்டு நெடும் பயணம்
துவங்குகின்றனர். ஒவ்வொன்றையும் கொண்டாடுகிறார்கள். பயணிக்கிறார்கள், தாங்கள் மகிழ்ந்திருந்த
இடங்களைப் பார்க்கிறார்கள், குடிக்கிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வாழ்வின்
அற்புதமான மகிழ்வினை அனுபவிக்கிறார்கள். அப்போது மேத்யூஸ் உதிர்க்கும் ஒரு அற்புத வரி
“சொப்னங்கள் காண் மனோகரமானது ஜீவிதம்” (Life is beautiful than dreams). படம் பார்க்கும்
நொடியில் வழமையாய் விழும் கூர்மையான வசனங்களைக் கடந்து செல்வது போல் என்னால் இந்த வரியைக்
கடந்து சென்றுவிட முடியவில்லை. கனவுகள் எத்தனை வர்ணங்கள் நிரம்பிய ஒன்று. எல்லைகளை
உடைத்தெறிந்து விரும்புமளவிற்கு நீட்டித்துக்கொள்ளும் அனுமதியுண்டு. பூட்டுகள் கிடையாது.
சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு.
எத்தனையெத்தனை அனுமதிகள் இருந்தென்ன பயன். மனதையும் உடலையும் உயிரையும் உலுக்க, உறையச்
செய்ய, குதூகலிக்கச் செய்ய வாழ்வின் ஆசிவர்வதிக்கப்பட்ட ஒரு நிஜமான பொழுதில்தான் முடியும்.
வாட்ஸப்பில் எங்கள் நண்பர்களுக்குள் ஒரு குழு உண்டு. பெரும்பாலும்
தங்களுக்கு வரும் நகைச்சுவைத் துணுக்குகளை, அரசியல், சினிமா பகடிப் படங்களை அங்கு பகிர்ந்து கொள்வதுண்டு. அவ்வப்போது
குரல் குறிப்புகளையும் அனுப்பிக்கொள்வதுமுண்டு. அப்படியான ஒரு சூழலில் ஒரு நண்பர் தாம்
சொல்லவிரும்பும் ஏதேனும் பொதுத் தகவலை, வித்தியாசமான கதை வடிவிலானதை தன் குரலில் பகிர்ந்துகொள்ள
ஆரம்பித்தார். மற்றவர்களுக்கு அதற்கு அவ்வழியாகவே மறுமொழி செய்யத் தெரியவில்லையெனினும்,
அவர் அனுப்பிய குரல் பதிவுகள் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதை எல்லோருமே
அவரவர் வழியில் செம்மையாக செய்ய முயன்றால், மிக முக்கிய ஆவணமாக எடுத்தாளவும் இயலும்.
ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டேதான் இருக்கின்றோம். எதற்கோ செய்கிறோமென்பதைவிட எதற்காகச்
செய்கிறோமென கொஞ்சமே கொஞ்சம் புரிந்துகொண்டால் போதும்.
காலையிலும், இரவிலும் சம்பிராத வணக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்த
தங்கை, சில நாட்களாய் காலையில் தான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை, ஓரிரு நிமிட அளவிற்கு
ஒரு துண்டாய் வாட்ஸப் வழியே பிடித்து அனுப்பத் துவங்கினாள். ஏதோ ஒரு மனப்போக்கில் துவங்கும்
அந்த நாளின் துவக்கத்தில் ச்சிலீரென வந்து விழும் ஒரு இசைத்துண்டு சொல்வதற்கரிய ஒரு
மனநிலையில் முங்கியெடுக்கும். அந்தப் பாடலின் முன்னும் பின்னுமான வரிகளைத் தேடி மனசு
அசைபோடும். அது எந்தப் படமென யோசிக்கத் தோன்றும். அந்த வரிகளுடனான பழைய நினைவுகளை மீட்டியெடுக்க
மனம் விழையும். ஒருநாள் ”உனக்கும் பாடவரும் தானே!” எனக் கேட்டேன். இப்போது அவள் குரலில்
அவ்வப்போது ஓரிரு வரித் துண்டுகள் வந்து செவி நுழைந்து மனதை நனைத்தபடி.
ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாயிருக்கிறது. சற்றே புரட்டிப்போட… சற்றே என்ன சற்றே முழுதுமாய்ப் புரட்டிப் போடவும் கூட. வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.
ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாயிருக்கிறது. சற்றே புரட்டிப்போட… சற்றே என்ன சற்றே முழுதுமாய்ப் புரட்டிப் போடவும் கூட. வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.
-
4 comments:
பிரணயம் சிலருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. உங்களின் அழகான இப்பதிவு ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது. கடைசி பத்தி உண்மை.
Good writing
//இப்படியான ஒப்பந்தத்திற்கு சத்தியம் பெறுவதே ஒரு கசப்பான முரண்தான்//
//மரணம் வெகு தொலையில் அதன் போக்கில் அமைதியாய் இருப்பதாய் நிறைவாய் உணர்கிறாள்//
This is top class
//வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.//
வணக்கம் அண்ணா ...
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
"மேத்யூசிடம் கொட்டிக்கிடக்கும் புரிதலும்,அன்பும் பொறாமை கொள்ளவைக்கிறது"அதனால் தானே படத்தில் அவரை ஓய்வு பெற்ற தத்துவயியல் பேராசிரியராக காண்பிக்கிறார்கள்.மற்றவர்களால் இந்த சூழ்நிலையில் இருக்கும் பெண்ணை இவ்வளவு புரிதலோடு அணுக முடியுமா என்பது கொஞ்சம் கேள்விகுறிதான்..மனதில் தங்கும் ஒரு உணர்வுபூர்வமான படம்...
"வாழ்தலைவிடவும்"மனதின் நுட்பங்களை அழகாக,ஆழமாக ,மனதிற்க்கு நெருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறது...
Post a Comment