முன்மாலைப் பொழுதில் விமானம் மாலத்தீவுகளின் மேல் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கிவிட்டதையும் இறங்கப்போவதையும் விமானி அறிவிக்கிறார். சன்னல் வழியே எட்டிப்பார்த்தால் பச்சைக் கடல் வெயிலில் பளபளக்கிறது. அழகாய் ஆங்காங்கே தீவுகளும் பச்சை நிறக் கடற்கரைகளும் வியப்பின் உச்சிக்கு எடுத்துச் செல்கின்றன.
விமானத்திலிருந்து பார்க்கும்போதே தீவுக்கூட்டங்களில் ஓரிரு கட்டிடங்கள் மட்டுமே இருப்பதுவும், தலைநகர் மட்டும் வெறும் கட்டிடக் காடுகளாக இருப்பதும் புரிகிறது. விமான நிலையம் தனியாக ஒரு தீவில் இருக்கின்றது. GMR கம்பெனியால் நிர்வகிக்கப்படுகிறது.
இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது அனலடிக்கும் வெப்பத்தைத்தான். அங்கிருந்து மாலத்தீவுகளின் தலைநகர் மாலே (Male) நகருக்குச் செல்ல சாதா படகும், விரைவுப்படகும் அணி வகுத்திருக்கின்றன. சாதாப் படகில் மாலத்தீவு ரூப்யா 10, விரைவுப் படகுகளில் MR 25. ஒரு மாலத்தீவு ரூப்யா என்பது இந்திய ரூபாயில் ரூ.4
விமானத்திலிருந்து பார்க்கும்போதே தீவுக்கூட்டங்களில் ஓரிரு கட்டிடங்கள் மட்டுமே இருப்பதுவும், தலைநகர் மட்டும் வெறும் கட்டிடக் காடுகளாக இருப்பதும் புரிகிறது. விமான நிலையம் தனியாக ஒரு தீவில் இருக்கின்றது. GMR கம்பெனியால் நிர்வகிக்கப்படுகிறது.
இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது அனலடிக்கும் வெப்பத்தைத்தான். அங்கிருந்து மாலத்தீவுகளின் தலைநகர் மாலே (Male) நகருக்குச் செல்ல சாதா படகும், விரைவுப்படகும் அணி வகுத்திருக்கின்றன. சாதாப் படகில் மாலத்தீவு ரூப்யா 10, விரைவுப் படகுகளில் MR 25. ஒரு மாலத்தீவு ரூப்யா என்பது இந்திய ரூபாயில் ரூ.4
சாலைகளும் வீதிகளும் கான்க்ரீட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சொட்டு கூட தார் ரோடு என்பதைப் பார்க்கவே வாய்ப்பில்லை. சாலையெங்கும் எந்நேரமும் வாகனங்கள் சீறிக்கொண்டேயிருக்கின்றன. தலைநகரத்தின் மொத்த நீளமே 1.7 கி.மீ அகலம் 1.2 கிமீ. மொத்த சுற்றளவு சுமார் 4 கி.மீ வருகின்றது. சுற்றிலும் கடல். அதுவும் ஆழக்கடல். நடுவே ஒரு தீவு மட்டும் தனித்திருப்பது சற்றே ஆச்சரியத்தையும் அச்சத்தையும் தரவே செய்கின்றது.
மாலத்தீவின் வருவாய் மீன் மட்டுமே எனப் புரிகிறது. தீவின் ஒரு முனையில் விமான நிலையத்தீவிற்குச் செல்லும் படகுகளின் முகப்பு இருக்கின்றது. சற்றுத் தள்ளி கப்பல்கள் சரக்கு இறக்கும் இடம் இருக்கின்றது. அடுத்தததாக மற்ற சில தீவுகளுக்கு செல்லும் படகும்களும், மற்ற தீவுகளுக்கு சரக்குகளை அனுப்பும் படகுகளும் இருக்குமிடம் இருக்கின்றது. தெற்குப் பகுதியில் மீன்பிடிப் படகுகளும், எண்ணெய் கொண்டு செல்லும் படகுகளும் இருக்கின்றன. தென்கிழக்குப் பகுதியில்தான் 2004 சுனாமி தாக்கியிருக்கின்றது. அங்கு கடல் அரிப்பைத் தடுக்க ஜப்பான் வழங்கியிருக்கும் பிரமாண்ட கான்க்ரீட் கற்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. செயற்கையாக மணல் கொட்டப்பட்டு மிகச்சிறிதாய் கடற்கரை உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடலில் இருக்கும் அதிசயம் அந்த நீரின் சுத்தம் தான். நிலம் தெரியும் இடங்களில் இளநீலப் பச்சையாகவும், ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அடர் நீலமாகவும் நீர் தெளிந்துகிடக்கிறது. கடலில் பெரிதாக அலைகள் இல்லை. குறிப்பாக தெற்கு கடற்கரைப் பகுதியில் மட்டும் கூடுதலாய் அலைகள் தென்படுகின்றன. அங்கு பெரிய பெரிய கான்க்ரீட் கற்கள் போடப்பட்டு கொஞ்சம் ஆழம் குறைவான பகுதி நீச்சல் பழகுவதற்கும், குளிப்பதற்குமாக விடப்பட்டுள்ளது.
மாலே தீவைச் சுற்றிலும் சில தீவுகள் இருக்கின்றன. அருகில் உள்ள வில்லிங்கிலி தீவிற்குச் சென்றோம். பகல் பொழுது என்பதால், ஊரே கிட்டத்தட்ட காலியாக இருக்கின்றது. அங்கிருந்து பெரும்பாலானோர் மாலே தீவிற்கு வேலைக்கு வந்து இரவுகளில் திரும்புகின்றனர். அங்கு கடற்கரையில் சற்று மணலைப் பார்க்கமுடிகிறது.
மாலத்தீவில் மது முற்றிலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. விமானத்தில் யார் மது எடுத்துச் சென்றாலும் விமான நிலையத்திலேயே பறிக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் நகருக்குள் போதை வஸ்துகளுக்கு குறைவில்லையென்றே தோன்றுகிறது.
மாலே நகரில் ஆச்சரியத்தைக்கொடுக்கும் முதல் விசயம், அந்த சிறிய நகரத்திற்குள் சுற்றும் அதிக எண்ணிக்கையிலான கால் டாக்ஸிகள் தான். எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் 25 ரூ கட்டணம். அடுத்தது இந்தியாவில் கூட இல்லாத வகைக் கார்களும் அங்கு நிறைந்திருப்பதுதான். இத்தனை வகைக் கார்கள் எனப் பட்டியலிட முடியாத அளவிற்கு ஒவ்வொருமுறையும் புதிய வகைக் கார் எதாவது ஒன்றினை சாலைகளில் கண்டுவிடமுடிகிறது. அடுத்ததாக நிறைந்து கிடக்கும் இரு சக்கர வாகனங்கள்.
வெகு அரிதாக சைக்கிள்கள் தென்படுகின்றன. இரவுகளில் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஒரு டார்ச் லைட் கையில் வைத்திருக்கின்றனர். ஒருவழிப்பாதைகளில் சைக்கிளை நடந்து உருட்டிவருதல் கூட தடை செய்யப்பட்டிருக்கிறதாம். எங்கு சைக்கிள் தென்பட்டாலும், சைக்கிளின் அளவிற்கு பொருத்தமில்லாத அளவிளான பூட்டு போட்டு பூட்டப்பட்டிருபதைக் காணலாம். சைக்கிள் திருட்டு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிகிறது. சாலையில் கவனக்குறைவாக செல்போனில் பேசிக்கொண்டு நடந்தால், கேமராவை கவனக்குறைவாக வைத்திருந்தால் மிக எளிதாக திருடப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
ஆணும் பெண்ணுமாய் எந்நேரமும் இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டேயிருக்கிறார்கள். நீண்டு கிடக்கும் முக்கிய சாலையில் ஒரு இரண்டு மணி நேரம் நடந்து சென்றால் குறுக்கிடும் சாலைகள் வழியாக திரும்பத் திரும்ப அதே நபர்கள் கடப்பதைக் காணவும் முடியும். ஒரு கட்டத்தில் குறுக்காக விரைபவனின் சட்டைக் காலரைப் பிடித்து ”அடேய்… எதுக்குடா இப்படி என்னேரமும் சுத்திக்கிட்டிருக்கீங்க!?” எனக் கேட்கத் தோன்றுகிறது.
இளஞ்சோடிகள் ஏராளமாய்த் தென்படுகின்றன. முன்னிரவுகளில் வீதிகளில் நிற்கும் வாகனங்களின்
மத்தியில் ரகசியமாய் காதலித்துக்கொண்டோ கதை பேசிக்கொண்டே நிறைய இளசுகள் ஜோடிஜோடியாய்
நிற்பதையும் காண முடிகின்றது.
பெரும்பாலனவர்கள் கிட்டத்தட்ட பாப்மார்லி போன்றே நீளமான சுருள் கூந்தலோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். புகைக்கவும் உட்கொள்ளவுமான போதைப் பொருட்கள் மிகப்பரவலாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். சாலைகளில் விரைகின்றவர்களைப் பார்த்தாலும் போதை மயக்கத்தில் இருக்கின்றனரோ என்றும் தோன்றுகிறது. மருந்துக்கடையில் ஒருவரே 40 அவில் மாத்திரைகளை வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. அது மீன் பிடிக்க படகில் போகும்போது ஏற்படும் ஒவ்வாமைகளுக்கு என்றும் சொல்கிறார்கள்.
ஏறத்தாழ இந்தியர்களுக்கு பொருத்தமான உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. எல்லா உணவு வகைகளிலும் மீன் இருக்கிறதென்றே தோன்றுகிறது. மீன் பிடிக்காது என சைவ வகைகளில் சுண்டல் குழம்பு வாங்கினாலும், அதில் மீன் வாசனை இருப்பதுதான் கொடுமை. . டீ காபி வாங்கினால் கூட உள்ளே மீன் இருக்கின்றதா எனப் பார்க்கும் மனைநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிடுகிறோம். மூன்றாம் நாள் மீனை நினைத்தாலே ஒரு ஒவ்வாமை வந்துவிட ரொட்டி, ஜாம் என சிரமப்படவேண்டியும் வந்தது.
மாலே நகரில் இந்திய அரசு “இந்திரா காந்தி மெமோரியல் மருத்துவமனை” என அரசு மருத்துவமனை ஒன்றை அன்பளிப்பாக கட்டிக்கொடுத்திருக்கிறது. நம்மூரில் இருக்கும் எந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சளைத்ததல்ல என்றே தோன்றுகிறது. நம்மூர் அரசு மருத்துவமனை குப்பென நினைவில் தாக்கியது.
நாட்டாமை படத்தில் கவுண்டமணி வசனம் தான் நினைவுக்கு வருகிறது..
“டே.... தகப்பா... நாட்டாமைக்கு பங்காளி, நான் கார்பரேசன் ஸ்கூல்ல படிச்சேன். ஒரு பிச்சக்காரியோட பையன் அவன ஊட்டி கான்வென்ட்ல படிக்க வெச்சிருக்கே... காச பல இடத்துல எறச்சுவிட்ருக்கேடா!” என இந்திய அரசியலில் ராஜதந்திரம் மேல் ஒரு கோபமும் கடுப்பும் வருகின்றது
நாட்டாமை படத்தில் கவுண்டமணி வசனம் தான் நினைவுக்கு வருகிறது..
“டே.... தகப்பா... நாட்டாமைக்கு பங்காளி, நான் கார்பரேசன் ஸ்கூல்ல படிச்சேன். ஒரு பிச்சக்காரியோட பையன் அவன ஊட்டி கான்வென்ட்ல படிக்க வெச்சிருக்கே... காச பல இடத்துல எறச்சுவிட்ருக்கேடா!” என இந்திய அரசியலில் ராஜதந்திரம் மேல் ஒரு கோபமும் கடுப்பும் வருகின்றது
மின்சாரம் முழுக்க முழுக்க ஜெனரேட்டர் மூலம் உருவாக்கப்படுகிறது. அதற்கான எரிபொருள் வெளியில் இருந்தே தருவிக்கப்படுகிறது. எனினும் கூட இந்த நாட்டில் மின்தடை ஒருபோதும் இருந்ததில்லையாம். வருடத்திற்கு ஒருமுறை சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும்
என்கிறார்கள்.
STO (State
Trading Organisation) எனும் அரசுக் கடைகளில் அனைவருக்கும் தேவைப்படும் அளவிற்கு அரிசி, சர்க்கரை, மைதா ஆகியவை கிலோ 4 மாலே ரூபாய்க்கு கிடைக்கிறது. அதாவது நம்ம ஊர் காசில் சுமார் ரூ.16 மட்டுமே. இதில் முக்கியமான விசயம் என்றால், நம் அரசாங்கம்தான் மேலே குறிப்பிட்ட விலைக்கு இவர்களுக்கு அதையெல்லாம் வழங்குகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.
நானும் நண்பர் ஆரூரனும் பயணம் குறித்து பேச ஆரம்பித்தபோதே
முதலில் தொடர்புகொண்டது அடு சிட்டியில் பணியாற்றும் நண்பர் கோகுலகிருஷ்ணன்
அவர்களைத்தான். அவர் மூலம் வினோ தேவராஜ் அவர்களின் நட்பு ஃபேஸ்புக்கில் கிடைத்தது.
எல்லா வகையிலும் உடனிருந்து வினோ தேவராஜ் உதவிகள் செய்தார். அங்கிருந்த நாட்களில் மிக அன்பாகவும்
பொறுப்பாகவும் கவனித்துக்கொண்டார். அங்கு பணியாற்றும் தமிழ் நண்பர்களோடு ஒரு மாலைப்
பொழுதில் சந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் என்றைக்கும்
மறக்கமுடியாத ஒன்று.
கடலையும், சுற்றுலாவையும் மட்டுமே பெரிதாக நம்பியிருக்கும் ஒரு நாடு, எண்ணெய் வளம், மின்சாரம், குடி தண்ணீர் என எந்த வசதியும் இல்லாத ஒரு நாடு, கடலுக்கு மத்தியில் சிறு புள்ளிகளாக இறைந்துகிடக்கும் ஒரு நாடு, இத்தனை ஆச்சரியங்களை தனக்குள் பொதித்து வைத்திருப்பது ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமே!
-
9 comments:
Detailed! Good one!
இனிமையான பயணம் அற்புதமான படங்களுடன்...
சைக்கிள் நிலை சிரிப்பை வரவழைத்தாலும், மின்சாரம்..... இங்குள்ள நிலையை நினைத்து பெருமூச்சு தான் வருகிறது...
அன்பின் கதிர் - மாலத்தீவு பயணம் பயனுள்ளதாக் இருக்ந்திருக்கும் - சென்று கண்டு களித்து - விளக்கமாக ஒரு பதிவு - அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய பதிவு - எழுதியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தங்களின் எழுத்து நடை மூலம் , நானே நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தந்தது. சூப்பர். வாழ்த்துக்கள் சார். ஒரு வருடத்திற்குள் நானும் சென்று வரணும்ங்க்ர ஆசை வந்துடுச்சு .
உலக வெப்பமயமாதல் காரணமாக 2050 ஆம் ஆண்டு மாலத் தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று கணிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்
அருமையான பகிர்வு.
நண்பர் தலை நகர் மாலியை பத்தி மட்டும் தான் சொல்லி இருக்கிறார் இங்குள்ள ரிசர்ட் பத்தி சொல்லவே இல்லை ...அது சொர்க்க பூமி மேலும் ஒவ்வொரு தீவுகளும் ஒவ்வொரு அனுபவம் அதையும் சொலியிருக்கலாம் ...இனிமேல் வரும் போது வேறு தீவுகளையும் சுத்தி காட்டுங்கள் வினோ ..மேலும் கொஞ்சம் கூட எழுதியிருப்பார் ...நல்ல கட்டுரை உண்மையை உள்ளது போல சொல்லி உள்ளார் குறைவு தான் ஆனால் சொல்லி இருக்கிறார் வாழ்த்துகள்
ஒருமுறை போய் வர வேண்டுமென்ற ஆவல் வந்தது நிஜம்....தெளிவான வர்ணனை...ஆமா கரண்டையே கைல புடிக்கிற ஆளாக்கும் என்கிற மாதிரி ஒரு போட்டோ போட்டு பயமுறுத்துறீங்களே ஏன்?
GREAT EXPERIENCE..WRITE MORE!
Post a Comment