ஒரு காலத்தில் பெங்களூருக்கு வாரம் ஒருமுறை என ஓடிக்கொண்டிருந்தவனுக்கு,
கிட்டத்தட்ட 2-3 மூன்று ஆண்டுகள் கழித்து தொழில் நிமித்தம் செல்லும் வாய்ப்பும், ஒருநாள்
தங்கும் வாய்ப்பும் கிட்டியது. இயன்றால் ஃபேஸ்புக் மூலம் நட்பு வலுப்பெற்ற சிலரைச்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் என்ற ஆசையும் மிகுந்திருந்தது. பொதுவாகவே
இப்படிப்பட்ட சந்திப்புகளில் கொஞ்சம் சோம்பேறித்தனம் மற்றும் எழுத்தால் அறிந்தவர்களை
எழுத்தைத்தாண்டி உருவமாக, நேரிடையாகச் சந்திப்பதில் அதுவரை நான் தீட்டிவைத்திருக்கும்
பிம்பத்தின் வர்ணம் மாறும் வாய்ப்பு ஆகிய காரணங்களால் அதைத் தவிர்ப்பதை விரும்புபவன்.
ஆனாலும் அதையெல்லாமும் ஒதுக்கி சிலரைச் சந்திப்பதற்கான காரணத்தை
மனது சேகரித்துக் கொண்டே வந்தது. எனவே இந்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்பதென
நினைத்திருந்தேன். சந்தித்தவர்கள் விதைத்த அன்பு முளைவிட்டு கிளைபரப்பு தருணத்தை பகிர்வதிலும்
கூடுதல் மகிழ்வே.
·
மாதங்கிலதா அவர்களை குடும்பத்தினரோடு சந்தித்து உணவருந்திய அந்த
சுவாரசிய நிகழ்வும், விடைபெறும்போது ஆட்டோக்காரரிடம் அவர் நிகழ்த்திய கன்னட உரையாடலும்
நினைக்க நினைக்க இனிப்பவை. எப்போதும் தமிழில் எழுதி கூடவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்
அவரை இனி கன்னடத்திலும் முழி(!) பெயர்க்கச் சொல்ல வேண்டும்.
·
பெங்களூர் வருகிறேன் எனச் சொன்னவுடன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டே
ஆகனும் என வற்புறுத்தி என்னை அழைத்த என் மேல்நிலைப்பள்ளித் தோழன் சிவசுப்பிரமணியம்
வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நானும் சிவசுப்பிரமணியமும் 1991ல் உடுமலை
அருகே ஒரு பள்ளியில், விடுதி மாணவர்களாக 12ம் வகுப்பு படித்து 21 ஆண்டுகள் கழித்து
2012ல் ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமாகி சிலமாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் சந்தித்து,
இந்தமுறை பெங்களூருவில் இல்லம் சென்று உணவருந்தும் வாய்ப்பு, கூடுதல் சுவாரசியம் சிவசுப்ரமணியத்தின்
மனைவியின் இல்லம் ஈரோட்டில் 7 வருடமாக நான் வசிக்கும் வீட்டிலிருந்து அடுத்த 2வது வீதியில்
இருக்கின்றதென்பதுதான்.
ஃபேஸ்புக்கை ஒவ்வொருவரும் எப்படியெப்படியோ பயன்படுத்தி வரும்
சூழலில் சிவசுப்ரமணியம் ஃபேஸ்புக் மூலம் பேஸ்காம் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொண்டு
தனது பகுதியில் வீதி விளக்குகள் அமைக்கச் செய்திருப்பதைக் கண்டபோது இது இந்தியாதான
என்ற ஆச்சரியமும், இது தமிழகம் இல்லையென்ற அங்கலாய்ப்பும் ஒருசேர எனக்குள் நிகழ்ந்தது.
·
என் பிரியத்திற்குரிய எழுத்துக்குச் சொந்தக்காரரான வா மணிகண்டனின்
நிசப்தம் நான் சமீபத்தில் தொடர்ச்சியாக வாசித்துவரும் வலைப்பக்கம். சில மாதங்களுக்கு
முன்பு போனில் அழைத்துப் பேசும்போது, ஈரோடு சங்கமம் குறித்த பேச்சு வர, 2011ம் ஆண்டு
சங்கமத்திற்கு வந்திருந்தேன் என்றார்.
“அப்படியா நான் கவனிக்காம போயிட்டனே” எனச் சொல்ல.
“நீங்க தாங்க கைகுடுத்து வாங்க மணிகண்டன்னு சொல்லி உட்கார வச்சீங்க!”
எனக் குண்டைத் தூக்கிப்போட்டார்.
சங்கமம் 2011ல் என்னவெல்லாம் என்னையறியாமல் நிகழ்ந்ததென்பதற்கு
மேலும் ஒரு உதாரணம் கூடிப்போனது. அந்தக் குண்டைச் சுமக்கமுடியாமல் எப்படியாவது நேரில்
சந்தித்து இறக்கி வைத்துவிடுவதென அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன்.
·
அவரும் கப்பன் பார்க்கில் சந்திக்கலாம் என முடிவுவெடுத்து ஃபேஸ்புக்
சுவற்றில் பகிர வில்லன் வில்லன் எனும் பெயரிலிருக்கும் ஓம்ஸ்ரீ வருவதாக உறுதியளித்தார்.
முன்பே எழுத்துவழி, குரல்வழி அறிமுகமானவர்களைச் சந்திப்பதிலேயே கொஞ்சம் கூச்சப்படும்
நான், இவரைச் சந்திப்பது குறித்த கூடுதல் கூச்சமும் கூடவே கொஞ்சம் சுவாரசியமும் தயாரிக்கத்
தொடங்கினேன்.
ஞாயிறு பின் மதியம் சில்க்போர்டு பகுதியில் என்னை மணிகண்டன்
அழைத்துக்கொள்வதாகச் சொல்லியிருக்க, ஜே.பி.சாணக்யாவுடனான அவரின் பைக் சாகசம் போலவே
இன்றும் ஒரு சாகசம் கிடைக்கும் என என எதிர்பார்த்திருக்க கருப்பு கலர் ஸ்கார்பியோவில்
குடும்பத்தினரோடு வந்திருந்து என்னை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். மூன்று புத்தகங்கள்,
நீண்ட வலைப்பக்க எழுத்து என அவரின் அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் சேகரிப்பது அருமையாதொரு
தருணம்.
100 முறை போன ரோட்டிலேயே வழி தெரியாமல் பெங்களூரில் தடுமாறுவதுதான்
சுவாரசியம். அந்த சுவாரசியம் கெட்டுவிடக்கூடாதென்று நாங்களும் சுத்திக் குழம்பி தெளிந்து
நாலு மணிக்கு அடைய வேண்டிய கப்பன் பூங்காவை 4.45க்கு அடைந்தோம். எப்படியும் தாமதாமகத்தான்
சந்திப்போம் என கொஞ்சம் தாமதாமாக வந்திருந்த பதிவர் ராமலஷ்மி, வில்லன் வில்லன் ஆகியோருக்கு
அதைவிடத் தாமதமாகச் சென்று நாங்கள் யாரெனப் புரியவைத்தோம்.
·
வில்லன் வில்லன் ”கதாநாயகன் கதாநாயகன்” போல இருந்தார். இரண்டு
நாள் கழித்துதான் அவர் சாருவுக்கு நெருக்கம் என்று தெரிந்து சாரு குறித்து பேசமுடியாமல்
போனதிற்கு பின்னர் வருத்தப்பட்டேன்.
·
கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம் என எல்லாத் தளங்களிலும்
தொடர்ந்து சோர்வின்றி செயல்பட்டு வரும் ராமலஷ்மி என்னைப் பல சூழல்களில் எழுத்து ரீதியாக
ஆற்றுப்படுத்திய ஒரு குருவுக்கு நிகரானவரும்கூட.. தொடர்ந்து எல்லாத் தளங்களிலும் அவரின்
செயல்பாடு எனக்கு எப்போதுமே ஆச்சரியம் நிறைந்தது. ஒரு காலத்தில் மாதத்திற்கு 4 இடுகைகள்
மட்டும் எழுதியவரை 4லிலிருந்து 10-15 வரை எழுத நான் ஊக்குவித்தேன், இப்போது 4-5களில்
சோம்பிக்கிடக்கும் என்னை அவர் ஊக்குவிக்கும் நிலையில் இருக்கும் நிலை குறித்துப் பேசினோம்.
·
விகடனில் பணியாற்றும் அருளினியன் முதல் நாளிலிருந்தே சந்திக்க
வருவதாக உரையாடல் பெட்டியில் தெரிவித்திருந்தார். கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லியிருக்க,
மணிகண்டனிடம் யார் இந்த அருளினியன் என விசாரித்தேன். சமீபத்தில் விகடனில் வந்த ”ஒரு
பெண் போராளியின் பேட்டி” அவருடையது எனத் தெரிந்தது. அந்தப் பேட்டியின் நம்பகத்தன்மை
குறித்து நிறைய சந்தேகங்களும், இன்னும் சரியாகச் சொன்னால் கடுப்பும் கொண்டிருக்கும்
நான், அவரை எதிர்கொண்டு பேசுவதை நினைத்து நிறையவே தடுமாறினேன்.
பக்கத்துவீட்டு சேட்டுப்பையன் போல் மலர்ச்சியாக வந்த அருளினியன்
சட்டென ஒட்டிக்கொண்டார்
“அண்ணா, உங்களை முன்னமே எனக்குத் தெரியும்”
விளையாடுகிறாரோ என நினைத்துக்கொண்டே “அப்படியா எப்படிங்க?” என்றேன்
விகடனில் வந்த ”கஞ்சம் வெங்கட சுப்பையா” பேட்டியை உங்க ஃபேஸ்புக்கில்
பகிர்ந்திருந்தீங்க, அந்தப் பேட்டி எடுத்தது நான்தான் என்றார். அது எனக்கு மிகவும்
பிடித்த ஒரு பேட்டி. அருளினியனோடு கொஞ்சம் மனது நெருங்கத் தொடங்கியது. நிறையப் பேசினோம்.
மற்றவர்களும் உடனிருப்பதால் பெண் போராளி பேட்டி குறித்து பேசுவதை தவிர்த்துவிடுவதென்றே
முடிவு செய்திருந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்தி; அதுகுறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டு,
அவரும் அதற்கு பதிலளித்தார். எனினும் சூழல் குறித்து மேலும் அதை நீட்டிக்கவில்லை.
”ஈரோடு எங்கண்ணா இருக்கு” என்றார். தமிழக வரைபடத்தை ஒருவழியாகச்
சொல்லி, ”ஒருமுறை வாங்க” என்றேன்
”வருகிறேன் ஆனால் என்னை அடித்துவிட மாட்டீர்களே” என்றார் சிரித்துக்கொண்டே
”போராளி பேட்டி குறித்து மிகுந்த கோபம் இருந்தது. கஞ்சம் வெங்கட
சுப்பையா பேட்டி குறித்து மிகுந்த அன்பிருந்தது. இரண்டும் ஒருமாதிரி சமன் ஆகியிருக்கிறது
அருளினியன்” என்றேன்.
அதுசரியான சமன்தானா என்று தெரியவில்லை எனினும், அவரை அவராகவே
ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் என்பது மட்டும் புரிந்தது.
·
புறப்படும் நேரத்தில் செல்லி ஸ்ரீனிவாசன் மகளுடன் பரபரப்பாக வந்தடைந்தார். ஃபேஸ்புக்கில்
அதிரடி கமெண்டுகளால் அறிமுகமானவர். ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அவரின் அதிரடி கண்டு
இது Fake Idயாக இருக்குமோ என்றும் கூட மடத்தனமாக நினைத்ததுண்டு. சந்திக்க வந்தபோது
தனது கணக்கை முடக்கி அமைதியில் நீந்திக்கொண்டிருந்தார் செல்லி. ஃபேஸ்புக் இல்லாத அமைதியை
வைராக்கியமாகக் கொண்டிருப்பது குறித்து நிறையப் பகிர்ந்தார். வந்து இருந்த சில நிமிடங்களில்
தான் கையோடு கொண்டுவந்த ஒட்டுமொத்த உற்சாகத்தையும் அங்கிருக்கும் அனைவரிடமும் கைமாற்றிச்
செல்லும் வல்லமை அவரிடமிருந்தது.
·
புறப்படுகையில் வா மணிகண்டன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள
அவருடைய புதிய கவிதைத் தொகுப்பான ”என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” புத்தகத்தை
அளித்தார். நேசிப்பிற்குரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை அன்பளிப்பாகப் பெறுவதில் எப்போதும்
கூடுதல் மகிழ்விருப்பதை அந்தக் கணமும் உணர்ந்தேன்.
·
சூழல் இணக்கமாக அமையும் தருணங்களில் மனிதர்கள் மிகையான அன்பைப்
பகிர்வதில் எப்போதும் தோற்பதில்லை. எதிர்பார்க்காத அளவு ஒவ்வொருவரும் அளித்தனர். சுமக்கமுடியாத
அளவு நானும் சுமந்து திரும்பினேன்.
-
·
10 comments:
அருமை கதிர்
எப்பவும் போல இனியதொரு பகிர்வு, பதிவு.
நான் தவறவிட்ட ஒரு சந்திப்பு..மிக அருமை..அன்பு மிகும் பொழுதுகள்.
சுவையான பகிர்வு;
இயல்பான எழுத்து.
வாழ்த்துகள்
தேவ்
மகிழ்ச்சிங்க மாப்பு. படங்களில் உரியவர்களின் பெயர்களும் போட்டால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு அமைவாய் இருக்கும்.
இனிய சந்திப்புகள்!
அழகான பகிர்வு:)!
அன்பான உறவுகளை சந்தித்தது பற்றி இனிய பகிர்வு.
nallairukuthu sir,
nallairukuthu sir,
Post a Comment