மாலை 5 மணியிருக்கும் அரசு மருத்துவனை தாண்டி பவானி நகருக்குள்
கிட்டத்தட்ட நுழைந்தாகிவிட்டது. நகரப் பரப்புக்குள் நுழைவதால் வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தினேன்.
உடன் வரும் நண்பர்கள் வானம்பாடி, சுவாமி, பிரபாகர் ஆகியோருடன் உற்சாக உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அரசு மருத்துவமனை கடந்து வண்டிப்பேட்டை அருகே காவலர் குடியிருப்பு
கடக்கும் இடத்தில் எங்களுக்கு முன்னால் சென்ற கல்லூரி சிற்றுந்து ஒன்று, நின்று மெதுவாக
இடது புறம் ஒதுங்கி நகர்ந்தது. அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த ஒரு கார் நட்டநடு சாலையில்
நிற்பது தெரிந்தது. பரபரப்பான சூழலில் ஏன் இப்படி நிற்கிறது எனக் காரை உற்றுப்பார்க்க,
அப்படியே அதிர்ந்து போனேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் அப்படியே சிலை மாதிரி அமர்ந்திருக்க,
பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி அவர் முகத்தில் தண்ணீரை வீசியடித்துக் கொண்டிருந்தார்.
எதோ விபரீதம் எனப் புரிந்தது. ஓட்டுனர்கள் வாகனம் இயக்குகையில்
மாரடைப்பு வருவது குறித்து அடிக்கடி வாசிக்கும் செய்தி நினைவிற்கு வந்தது. அருகிலிருந்த
நண்பர் சுவாமி குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்.
“சுவாமி, அந்த கார் ஓட்றவருக்கு எதோ ஒடம்பு சரியில்லனு நெனைக்கிறேன்,
ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுவீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே சட்டென என் வண்டியை இடது ஓரமாக
நிறுத்திவிட்டு இறங்கி அந்த காரை நோக்கி ஓடி ஓட்டுனர் இருக்கைக் கதவைத் திறந்தேன்.
சுமார் 65 வயது கடந்த ஒரு பெரியவர் இருக்கையில் அப்படியே சிலை
மாதிரி அமர்ந்திருக்க அவர் முகம் சட்டையெல்லாம் தண்ணீர் ஈரம். அருகிலிருந்து பெண் உச்சபட்ச
பதட்டத்தில் வார்த்தைகளை தடுமாறித் தடுமாறிப் பேசினார்
“இப்ப கெளம்ப வேண்டாம் நாளைக்குப் போலாம்னுதான் சொன்னோம், இப்ப
வந்து இப்படியாகிப் போச்சுங்ளே…”
“என்னாச்சுங்க”
“என்னுனே தெரிலீங்… அப்டியே வண்டிய நிறுத்திட்டு ஒன்னும் பேசாம
மயக்கமாயிட்டாரு”
அருகில் வந்த நண்பர் சுவாமி என்னை மெல்ல ஒதுக்கிவிட்டு அவர்
கை நாடி பார்த்தார்.
“ஒன்னுமில்ல, லோ பிரஷர்தான்” என நம்பிக்கை கொடுத்தார்.
அவரிடம் மெல்லிய அசைவு தெரிந்தது. விழிகள் மூடியிருந்தன. இன்னும்
சிலர் வந்தனர். மெல்லக் கை பிடித்து இருக்கையில் இருந்து இழுத்து வெளியே நிற்க வைத்து
சாலை ஓரத்துக்கு அழைத்துச் சென்றோம்.
வாகனங்கள் இரு பக்கமும் தேங்க ஆரம்பித்தன. அந்தக் காரை ஓரமாக
நிறுத்துவதாகச் சொல்லிவிட்டு மெல்ல சாலையின் இடது ஓரத்திற்கு நகர்த்தும் போது, பின்னிருக்கையில்
இருந்த இளவயது பெண்மணி “ஏனுங்.. போன் இருக்குங்ளா, ஒரு நெம்பருக்கு போட்டுக்குடுங்களேன்”
என்றார். அவர் சொன்ன எண்களை ஒத்தி அவரிடம் கொடுத்தேன். பின் இருக்கையில் சிறுவயதுக்
குழந்தை ஒன்றும், கைக் குழந்தை ஒன்றும் இருந்தன. ஓரமாய் நிறுத்திவிட்டு எல்லாக் கண்ணாடிகளையும்
ஏற்றிவிட்டு அவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு எதிர்பக்கம் நகர்ந்தேன். ஒரு வீட்டு வாசலில்
நாற்காலியில் அமர வைத்திருந்தவரைச் சுற்றிக் கூட்டம் மொய்த்தது. அப்படியே துவண்டு சரிந்திருந்தார்.
யாரோ அவர் முகத்தில் தண்ணீர் அடித்து, தண்ணீர் பாட்டிலைக் வாயில்
வைக்க கொஞ்சம் பருகினார். மெல்ல தெளிந்து கண் திறந்தார்.
அந்தப் பெண்மணியை நோக்கி ”எதாச்சும் உங்களுக்கு டாக்டர் தெரியுமா,
இல்ல பக்கத்துல எதாச்சும் டாக்டரைப் பார்க்கலாமா?” எனக் கேட்டேன்.
”டாக்டரு ஆரும் தெரியாதுங்ளே” என்றவர் கண் விழித்து சூழலைக்
கவனித்த கணவன் மீது பாய்ந்தார்
“ஒன்னயத்தான் காரோட்ட வேண்டாம்… காரோட்ட வேண்டாம்னு சொன்னம்ல,
நாளைக்கு போயிக்கலாம்லனு சொன்னா, கேட்டையா, ஒனக்கு எத்தன சொன்னாலும் ஏற்ரதேயில்ல” என
முழங்க அவர் அப்படியே கண் சொருகித் தளர்ந்தார்.
“இப்ப ஏம்மா இப்படிச் சத்தம் போடுறீங்க… மொதல்ல ஆஸ்ப்த்திரிக்கு
கூட்டிட்டுப் போற வழியப் பாருங்க என ஒருவர் அதட்டினார்
சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க எனும் குரல்களில்
அந்தப் பெண்மணிக்கும் பதட்டம் கூடியது.
ஒருவர் ஓடிச்சென்று அவர்களின் காரை எடுத்து பின்பக்கமாக நகர்ந்து
வலது புறம் திரும்பி அவரை அமர்த்தி வைத்திருந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.
மெல்ல அவரைப் பிடித்து வண்டியில் ஏற்றினார்கள்.
அரை மனதோடு நாங்களும் கிளம்பினோம்
நீண்ட நேரம் நண்பர் சுவாமி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்
“என்ன பொம்பளப்பா அது, இப்படித் திட்டுதே”
சமீபத்தில் பயணங்களில் ஓட்டுபவர்கள் நெஞ்சுவலியால் இறந்த செய்திகள்
குறித்து எங்களிடையே பேச்சு ஓடியது. அந்தக் காரை பார்த்த கணத்தில் அந்தப் பெரியவர்
சிலை மாதிரி அமர்ந்திருந்த கோலம் எனக்கும் வந்து வந்து போனது. அது மிரட்டலாகவும் இருந்தது.
நண்பர்களை வழியனுப்பும் பரபரப்பில் அந்தச் சம்பவம் நினைவிலிருந்து
அகன்றுபோயிருந்தது. அடுத்த நாள் காலையில் என் கைபேசியை எடுத்துத் தேடினேன், முதல் நாள்
மாலை 5.11 மணி சுமாருக்கு அழைப்பு சென்றிருந்த அந்தப் புதிய எண்ணிற்கு அழைத்தேன்
“ஏங்க நேத்தைக்கு சாயந்திரம், கார் ஓட்டிட்டு வந்த பெரியவர்
ஒருவருக்கு உடம்பு சரியில்லாமே போச்சே, இப்ப எப்படிங்க இருக்காரு”
நேற்று அழைத்திருந்த என் எண் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
”அண்ணா… அவரு நல்லாருக்காருங்… லோ பிரஷருங்க…. நட்ராஜ் டாக்டர்ட்ட
போயி சரியாயிடுச்சுங்க. எங்க அக்கா மாமனாருங்க அவரு.”
”இனிமே அவரை கொஞ்சம் கவனமா இருக்கச் சொல்லுங்க… அப்புறம் அக்கா
மாமியார்கிட்டே அவர ரொம்ப மெரட்டாதீங்கனும் சொல்லி வைங்க” என்றேன்
புரிந்து கொண்டு சிரித்தார்.
அதிவேகத்தில் செல்கையில் இப்படியேதும் நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்
என நினைக்கவே மனது அதிர்ந்தது. தினந்தோறும் நடக்கும் பலநூறு விபத்துகளில் ஒருசில இப்படிப்
பட்ட உடல் நலக்குறைவாலும் நடக்கலாம் என்பதும் புரிந்தது.
நினைவு தளர்ந்து செயல்படா இக்கட்டில் ஆட்படுகையிலும், நடுரோட்டிலேனும்
வண்டியை நிதானமாக நிறுத்திவிட்ட அந்தப் பெரியவரின் செயல் ஆச்சரியமாகவும் இருந்தது.
சிக்கல் வரும்போதும், தவறு நிகழும்போதும்…. அது எதனால் வந்தது,
நிகழ்ந்தது என ஆராய்வதை விட்டு முதலில் மீள்வது எப்படியென மட்டுமே யோசிக்க வேண்டும்
எனும் புத்திக் கொள்முதல் கிடைத்தது.
-
5 comments:
நிஜம்..ஒரு நொடியில் நடந்து முடிந்து விடும்.சமயோசிதமாக செயல்பட்டதால் அந்த பெண்மணியும் தப்பினார்..அதை கூட புரிந்துகொள்ளாமல்..ப்ச்.
மறுபக்கத்தையும் பார்க்கனும்.. அந்தாளுகூட பொழச்ச கஷ்டம் என்னென்னு அந்தம்மாவுக்குத்தான் தெரியும்..:)
எத்தனை விசயங்களில் இந்தம்மா சொல்லி அவர் கேட்காம போனாரோ ?
என்னென்ன விளைவுகள் நடந்ததோ.. அந்த ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகளாக இருக்கும்.
ஆசுவாசமாக, என்னதான் இருந்தாலும் அத்தனி சிரமத்திலேயும் வண்டிய விவரமா நிறுத்திட்டாருன்னு இப்ப பாராட்டிக்கொண்டுதான் இருக்கும் அந்தம்மா :)
அண்ணா உண்மையிலும் சொல்றேன் !
நீங்களும் உங்க குடும்பத்தாரும் நூறு வருஷம் எல்லாம் பெற்று வாழ வாழ்த்திய அந்த பெரியவரோடு நானும் ,,,,,,,,
அன்பின் கதிர் - எதிர்பாராமல் நடக்கும் இச்செயல்களைத் தவிர்க்கவே இயலாதா ? அப்பெண் எதனால் அப்பாடி நடந்து கொண்டாரோ - ....... ம்ம்ம்ம்ம்ம் - அவரவர் நிலையினை உணர்ந்து நடக்க வேண்டும். நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
எல்லோரும் ஒரு விசயத்தை மறந்து விட்டீர்கள். அவருக்கு லோ பீபிக்கு காரணமே அந்த அம்மாதான்.
Post a Comment