எங்க ஊரு ஈரோடு


காவிரியும் பவானியும் கலந்து பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமே ஈரோடு. ஆற்றுக்கும் நகருக்கும் இடையே வெகு அழகாய் கடந்து போகிறது காலிங்கராயன் கால்வாய். தாழ்வாய் ஓடும் ஆற்றங்கரையோரம் இருக்கும் நிலம் பயனுறவே கி.பி 1282ல் அமைக்கப்பட்ட கால்வாய் அது. காலிங்கராயன் கால்வாய் குறித்துப் பக்கம்பக்கமாப் பேசலாம். அருகில் ஓடும் ஆற்றின் கரையிலேயே உயரமான நிலப்பரப்பில் ஓடும் தொழில்நுட்பம் மிகுந்தது அந்தக்கால்வாய்.

ஒரு நகரம் என்பது உயிரற்ற பொருளாக இருக்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட ஒரு உயிரினத்தின் உடல் போன்றுதான். எனக்கு ஈரோடு நகரை பருந்துப்பார்வை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மனிதன் கிழக்குப் பக்கம் தலை வைத்து தன் கைகளை விரித்து மல்லாந்து மேற்கில் கால் நீட்டி படுத்திருப்பது போலவே தோன்றும்.

நானறிந்த நகரங்களில் ஈரோடு நகரை மிக அழகான நகரம் என்று என்னால் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் மிகக் கச்சிதமான ஊர் என்றும், மிக அமைதியான நகரம் என்றும் மிகுந்த பெருமையாகச் சொல்வேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு என்று எதையாவது பட்டியலிடலாம். ஆனால் ஈரோடுக்கு அடையாளமாகச் சொல்லவிரும்புவது அமைதி என்பதைத்தான்.

உண்மையில் பார்த்தால் ஈரோடு என்பது பல பெருமைகளை உள்ளடக்கிய நகரம். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைத் தந்த மண். கணித மேதை ராமானுஜத்தை தந்த மண். பாரதியின் கடைசி உரையை கேட்கும் வாய்ப்பை பெற்ற மண்.

இன்று ஈரோடின் அடையாளமாகத் திகழ்வது மஞ்சளும், இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் துணிவகைகளுமே. சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விளையும் மஞ்சளைச் சந்தைப்படுத்தும் மஞ்சள் மண்டிகள் மற்றும் ஏலவிற்பனை, இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி, விசைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வாராவாரம் கூடும் ஜவுளிச்சந்தை, பெருந்துறை சாலையில் வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனைகள், நகரத்தின் புறவெளிகளில் பெருகி வரும் கல்வி நிறுவனங்கள் என அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்து மக்களை நகரம் வெகுவேகமாக ஈர்த்து வருகின்றது.

வெகு வேகமாய் மாறிவரும் உலகத்தின் ஓட்டத்தில் ஈரோடு நகரமும் நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவந்தாலும் நகரத்தின் மையத்தில், இன்னும் கட்டடம் முளைக்காத கொஞ்சம் மிச்சமிருக்கும் நிலத்தில் சோளம் விதைத்து அறுவடை செய்யும் வித்தியாசத்தைக் கொண்டுள்ள நகரம். 

பிரப் சாலை என அழைக்கப்படும் பிரதானச் சாலையை மையப்படுத்தி இரு பக்கமும் பிதுங்கிப்பிதுங்கி வளர்ந்து வரும் நகரம். பிரப்சாலையின் மேற்குப் பக்க நீட்சியாக பெருந்துறை செல்லும் சாலையில் இன்று வேகுவேகமாக நாலு கால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டிலிருந்து எந்தப்பக்கம் இருக்கும் நகரங்களுக்குச் சென்றாலும், விவசாய நிலங்கள் மட்டுமே பசுமை போர்த்திக்கிடக்கும். இப்போது சாலையோரங்கள் தோறும் வண்ணக் கட்டிடங்கள் முளைத்து சுற்றிலும் இருக்கும் எல்லா நகரங்களோடும் இணைந்து, தன்னை சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக பெயர் மாற்றிக்கொண்டுள்ளது. பெயர் மாற்றிக்கொண்டாலும் அதற்கான அடையாளமாக எதுவும் இன்னும் பதிக்கத் தொடங்கவில்லை. 

தமிழகத்தின் வடமேற்குப் பகுதியின் மையம் என்றே ஈரோட்டைச் சொல்லலாம். பவானி, அந்தியூர், மேட்டூர், குமாரபாளையம், சங்ககிரி, சேலம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், சித்தோடு, கோபி, சத்தி,   பெருந்துறை, திருப்பூர், கோவை, காங்கயம், தாராபுரம், பழனி, கரூர், திருச்சி, மதுரை என அனைத்து திசைகளிலிருந்தும் சாலைகள் வழியே பிணைந்து கிடக்கின்றது ஈரோடு.

நகரத்தின் தென் பகுதியில் நீண்டு கிடக்கிறது ஈரோடு ரயில் நிலையம். இந்தியாவின் பெருநகரங்களை இணைக்கும் தொடர்வண்டிகள் தினந்தோறும் ஈரோடு வழியே தடதடத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடர்வண்டி நிலையத்தை ஒட்டியிருக்கும் இரயில்வே குடியிருப்பும் அதன் மைதானமும் அழகியல் நிறைந்த ஒரு தோப்பு போன்ற அமைப்புக்கொண்டது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கம் திரும்பினால் மேட்டூர் சாலை துவங்கும். அதன் வழியே நகரின் மையப்பகுதியான அரசு மருத்துவமனை சந்திப்பை அடையலாம். சந்திப்பின் மையத்தில் எம்ஜிஆர் விரல் சுட்டி சிலையாய் நின்று கொண்டிருப்பார். எம்ஜிஆர் விரல் சுட்டும் திசையில் நகர்ந்து, உயர்ந்த மருத்துவ கட்டிடங்களைக் கடந்து செல்கையில், ஈரோடு பகுதி மக்களை ஆட்டுவிட்டுக்கும் நோய்களின் கொடுமையை அறியலாம். இன்னும் கடந்தால் நம்மை வரவேற்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம். எதிர்புறம் பிரியும் சாலையின் முகப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைந்திருக்கின்றன. சிறிது தொலைவு சென்றால் சம்பத் நகர் குடியிருப்பு வரும். அங்குதான் ஈரோட்டின் புகழ்பெற்ற உழவர் சந்தை அமைந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி நேராகச் சென்றால் சில திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என திண்டல் மலை வரை நகரம் நீண்டுகிடக்கும். திண்டலில் இருக்கும் முருகன் கோவில் இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். திண்டல் மலையைக் கடந்து அகன்று விரிந்திருக்கும் சாலை நம்மை பெருந்துறை நோக்கி அழைத்துச்செல்லும். பெருந்துறை சாலை முழுக்க பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் ஆட்கொண்டுள்ளன.

எம்ஜிஆர் சிலை சந்திப்பிலிருந்து வடமேற்காய் பிரியும் சிறு சாலை வழியே நசியனூர் சென்றால் எளிதில் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ அடையலாம். வலது பக்கம் திரும்பினால் மைய, முக்கிய சாலையான பிரப்சாலை வரும். எல்லாம் விடுத்து நேராக மேட்டூர் சாலையில் சென்றால், நாம் அடைவது நகரின் முக்கியத் திரையரங்குகளையும், பேருந்து நிலையத்தையும். பேருந்து நிலையத்தைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் சித்தோடு, கோபி, சத்தி, மைசூர் என நீளும் சத்தி சாலை. அந்த சத்தி சாலையில்தான் பாரம்பரியம் மிக்க கல்லூரியான சிக்கய்யநாயக்கர் கல்லூரி இருக்கின்றது. 

சத்தி சாலையில் திரும்பாமல், நேராகச் செல்லும் சாலையில் சில அடிகள் சென்றால் வ.உ.சிதம்பரனார் பூங்காவும், மைதானமும் வரும். ஈரோடு நகரின் பெரும்பாலான மக்கள் காலையில் நடைபன்றும் தேயாமல் இருக்கும் மைதானம். அந்த மைதானத்தின் பின் புறம் நீண்டு கிடக்கும் காலியிடம்தான் ஈரோட்டின் புண்ணிய பூமியாக சில வருடங்களாக மாறியிருக்கின்றது.

அந்த புண்ணிய நிகழ்வு என்பது மக்கள் சிந்தனைப்பேரவை அமைப்பு நடத்தும் புத்தகத்திருவிழா தான். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மைதானத்தில்தான் ஈரோடு புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் அறிவுப்பசி கொண்டு தேடித்தேடி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்கிச்சென்ற புத்தகங்களின் வாசனை அந்த மண்ணில் ஆண்டு முழுதும் நீந்திக் கொண்டேயிருக்கும். 

மைதானத்தையொட்டி அமைந்திருக்கின்றது வ.உ.சி பூங்கா. எனக்குத் தெரிந்து உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தாத பூங்கா என்றால் இதைத்தான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். நானறிந்த நண்பர்கள் வட்டத்தில் எவரும் பூங்காவில் சென்று இளைப்பாறியதாகவோ, பார்த்து ரசித்ததாகவோ சொன்னதில்லை.

சத்தி திரும்பும் சாலைக்கு எதிர்புறச்சாலையில் நகர்ந்தால் முதலில் வரும் இடதுபக்கப் பிரிவுதான் பவானி வழியே அந்தியூர், மேட்டூர் மற்றும் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் வழியே சங்ககிரி சேலம், மற்றும் திருச்செங்கோடு, நாமக்கல் என இட்டுச்செல்லும், மூலப்பட்டறை சாலை. மூலப்பட்டறை பிரிவில் திரும்பாமல் நேரே நகர்ந்தால் இருமருங்கிலும் கட்டிடம் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள் விரிந்து பரந்து கிடக்கும். இன்னும் கொஞ்சம் கடந்து வளைந்து நெளிந்து முட்டி மோதியெட்டினால் வரும் இடம் ”பழையபேருந்து நிலையம் என்று அழைப்பதும்கூட மறந்து போன” தற்சமயம் காய்கறி அங்காடி இருக்கும் பகுதி, அங்குதான் ஈரோடு மாவட்டத்தின் ஆகச்சிறந்த பெரிய பிரமாண்டமான நடைக்கடைகளும், துணிக்கடைகளும் உயர்ந்தோங்கி பளபளத்து நின்றுகொண்டிருக்கின்றன.

கடைகளிலிருந்து கசிந்து வரும் குளிரூட்டிகளின் குளிர் அந்தச் சாலையெங்கும் தென்றலாய் வீசும். அப்படியே ஒரு வழிச்சாலையில், நெரிசலில் நகர்ந்தால் வரும் இடம் மிகப் பழமையான மணிக்கூண்டு பகுதி, அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும். நேராகச்சென்று நகரக்காவல் நிலையம் அருகே இடது பக்கம் சிறிது தூரம் சென்றால் தந்தை பெரியார் வசித்த பெரியார்-அண்ணா நினைவகம் வரும். காவல் நிலையம் தாண்டி வலதுபக்கம் திரும்பினால் வந்தடையும் இடம் பன்னீர் செல்வம் பூங்கா. 

ப.செ.பூங்காவில் துவங்கும் பிரப் சாலையில்தான் கிறிஸ்துவ தேவாலயமும், பழம்புகழ் பெற்ற சி.எஸ்.ஐ மருத்துவமனையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலும், மாநகராட்சி கட்டிடமும், டெலிபோன் பவனும், நூற்றாண்டுகளைக் கடந்த கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியும், செங்குந்தர் பள்ளியும் வீற்றிருக்கின்றன. இறுதியாய் முதலில் பார்த்த எம்ஜிஆரின் முதுகு வரை செல்லலாம். பெரியமாரியம்மன் திருவிழா என்பதுதான் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த கொண்டாட்டத்துக்கான திருவிழா. பதினைந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக பிரப் சாலையே கிட்டத்தட்ட முடங்கும் என்பதுபோல் திருவிழா கடைகளும், கூட்டமும் பொங்கி வழியும்.

பன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து தெற்கில் பிரியும் காந்திஜி சாலையின் முகப்பில் வருவது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் அலுவலகம். நேராகச்சென்றால், டெலிபோன் அலுவலகம், தபால் நிலையம், அடுத்து ஈரோட்டின் மிகச்சிறந்த குடியிருப்பு பகுதியாக அறியப்படும் பெரியார் நகர் குடியிருப்பின் கிழக்குப்புற முகப்பு வளைவு வரும். அதிவசதி படைத்த நபர்களிலிருந்து, அருகில் ஓடும் சாக்கடைப்பள்ளம் ஓரமாக வசிக்கும் ஏழ்மை நிறைந்த மனிதர்களை வரை உள்ளடக்கியது பெரியார் நகர். 

காந்திஜி சாலையில் நேராகக் கடந்தால் வலது பக்கம் தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும். அதற்கு எதிர்புறச்சந்தில் ”கோழி முட்டை” வடிவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆனூர் திரையரங்கு அமைந்திருக்கும்.

சில அடிகள் தூரம் சென்றால் வரும் இடம்தான் காளைமாடு சிலை சந்திப்பு. தென்மாவட்டங்களிலிருந்து வரும் சாலைகளின் முகப்புப் பகுதி அதுதான். இடது பக்கம் திரும்பி பயணித்தால் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் நுழைந்து கொல்லம்பாளையம் வழியே காங்கயம் தாராபுரம் பழனி செல்லும் சாலையும், கொடுமுடி கரூர் திருச்சி மதுரை செல்லும் சாலையும் நம்மை இரண்டாக பிரிக்கும். காளைமாடு பிரிவின் வலது பக்கம் திரும்பினால் நாம் முதலில் புறப்பட்ட ரயில் நிலையம் வரும்.

எளிமையும், நீங்கா அமைதியும் நிறைந்திருக்கும், பெருமை வாய்ந்த ஆறும், அழகிய கால்வாயும் அருகருகே பாயும் நகரத்தின் அடையாளாமாக தற்போது மாறியிருப்பது மாசடைந்த சுற்றுச்சூழல் என்றே சொல்லவேண்டும். ஈரோடு நகரையொட்டிய பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்த தோல் தொழிற்சாலைகள், சாய ஆலைகளிலிருந்து பல்லாண்டுகளாக வெளியேறிய கழிவுகள் சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இன்றைக்கு தண்ணீரைச் சுத்திகரிக்காமல் குடிக்கமுடியாது என்ற அளவுக்கு சேதப்படுத்தியுள்ளன. புற்றுநோய், சிறுநீரகக் கல், மலட்டுதன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் மற்ற பெருநகரங்களோடு போட்டியிடுவதில் முன்னணியில் உள்ளது என்ற வருத்தத்தையும் பதிவாக்கியே தீரவேண்டும்.

ஒரு நகரம் என்பது மிக நீண்ட வரலாற்றினை பல யுகங்களுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரலாற்றின் பக்கங்கள் வளம் நிறைந்ததாக இருப்பதே நலம், வலி நிரம்பியதாக இருப்பதல்ல.

-0-

மார்ச் மாத வடக்குவாசல் பத்திரிக்கையில் கட்டுரையின் சில பகுதி வெளியாகியுள்ளது


9 comments:

துளசி கோபால் said...

அருமையான கட்டுரை. இந்தப் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் கரூர் என்றொரு
புண்ணிய பூமி இருக்கே! அவதார ஸ்தலம்.

தெய்வசுகந்தி said...

நிறைய இடம் மறந்து போச்சுங்க. மறுபடியும் ஒரு சுத்து போயிட்டு வந்த உணர்வு.

ஸாதிகா said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Siddaarth said...

நம்ம ஊரப்பத்தி அருமையா எழுதி இருக்கீங்க கதிர்! வாழ்த்துக்கள்!

ஸ்ரீ.... said...

மிகச் சிறப்பான விளக்கம். மண்ணின் மைந்தர்களுக்கே சாத்தியம். நன்றி.

ஸ்ரீ....

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

ஈரோட்டுக்கு எத்தனையோ முறை வந்தாலும் என் மாமியார் ஊரா இருந்தாலும் ஈரோட்டைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை .இப்போது கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.நன்றி பதிவிற்கு .

Selvaraj (Edappadi, Salem) said...

anna Enga ooru Erode...super..na atha padika.....padika....Erode-ku oru thaba pokanum pola irukku anna.....

KANNAA NALAMAA said...

எனது மனைவியின் ஊரான ஈரோட்டைப்பற்றி இவ்வளவு அருமையாக தாங்கள் எழுதியிருப்பது தாங்கள் பிறந்த மண்ணை மறவாது அந்த மண்ணின் மீது தங்கள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் காட்டுகிறது!பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் மறவாதவர்கள் வாழ்க்கை என்றுமே மேன்மை உடைத்தானது!
பொறிஞர்.கணேசன்/கோவை

Saravanan TS said...

நான் வசிக்கும் ஈரோட்டை எனக்கு புதிய கோணத்தில் பார்கும் படி வைத்த உங்களது கட்டுரை மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் பயனம்.