உறங்க மட்டுமே இரவுகள் என்பதையும் தாண்டி, பல நேரங்களில் நடுநிசியில் வரும் அழைப்புகள் ஏதோ ஒரு கனத்தைக் கொண்டுவந்து சேர்ப்பது வாடிக்கை. சிலமுறை நம்மை எழுப்புவது உடன் இருப்போரின் உடலில் புகுந்து ஆட்டும் தற்காலிக நோயின் தீவிரமாக இருக்கும். எதோ ஒரு வாதையில் தவிக்கும் உறவுகளை அள்ளி அழைத்துக்கொண்டு நடுநிசிகளில் மருத்துவமனை தேடி ஓடுவது பழகிப்போய் விட்டது. அப்படியோடும் பொழுதுகளில் இருக்கும் பதட்டம், மருத்துவமனையை அடைந்து, அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து, ”சிறிது நேரத்தில் ஒன்னும் பயப்படவேண்டியதில்லை, சீக்கிரம் சரியாயிடும்” எனச்சொல்லும் மருத்துவர்கள் தெய்வங்களின் பிரதிநிதிகளாகத் தென்படுவர்.
அன்றைக்கும் அப்படித்தான் பனிரெண்டு மணி சுமாருக்கு வலி தாங்க முடியவில்லை என எழுப்பியவரை அழைத்துக்கொண்டு, எங்கு செல்லலாம் எனக் கொஞ்சநேரம் குழம்பி, யாரைத் துணைக்கு அழைக்கலாம் எனத்தவித்து ஒரு வழியாய் வாகனத்தை முடுக்கினேன். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஏற்கனவே மூன்று நான்கு முறை வந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவுக்கே சென்றோம். தாழ்தளத்தில் இருக்கும் அவசர சிகிச்சைப்பிரிவு அது. ஆண்டுக்கொரு முறையாவது, யாருக்காகவாவது இப்படி நிகழ்வதால், இப்பொழுதெல்லாம் பதட்டம் நீர்த்துப்போய்விட்டது.
வலியோடு நடந்தவரை, தாங்கிப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவுடன் என்ன உபாதை என்று கேட்கும் முன்பே,
“நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க” என வெளியேற்றப்பட்டேன்.
ஆறு படுக்கைகளும் காலியாகக் கிடந்தன. அவை பசியோடு இருப்பதாகக் கண்களுக்குப் பட்டது.
தளர்ந்த உடல், களைத்த முகம், காதுகளை ஒட்டிக்கட்டிய துணியோடு கரும்பச்சை நிற சீருடையில் மருத்துவமனைக் காவலர் நின்றிருந்தார்.
தரை தளத்திலிருந்து மெல்லப்படியேறி சாலை முகப்பில் நின்றேன். ”கொஞ்ச நீங்க வெளியே இருங்கனு சொல்றதே இந்த நர்சுங்களுக்கு வேலையாப் போச்சு” எனும் அலுப்பு மனதில்.
சாலை வழியே கிளைத்து, பிரிந்து, பரந்து கிடக்கும் நகரம், கனத்த உறக்கத்தில் இருப்பதாய்த் தோன்றியது. பரபரப்பாய் சில இரு சக்கர வாகனங்கள் வந்து நிற்க, பின்னாலேயே வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டு வாகனம் ஒன்றும் வந்தது. முகப்பு விளக்கு அணைக்கப்பட்ட பின்தான் அது ஒரு அவசர ஊர்தி எனப்புரிந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் உள்ளே ஓடினர். உடனே மருத்துவமனைச் சிப்பந்திகள் ஒரு ஸ்ட்ரெச்சரை இழுத்துக்கொண்டு ஓடிவந்தனர். அவரச ஊர்தியின் பின்பக்கம் திறக்கப்படுவதும், ஒருவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி வேகமாய் இழுத்துக்கொண்டு வருவதும் தெரிந்தது. கூடவே ஒரு இளம்பெண் அழுதுகொண்டே வந்தார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்த ஒரு அறைக்குள் அந்தப்படுக்கை வெகு வேகமாக இழுத்துச்செல்லப்பட்டது. இளைஞர்கள் அங்கும் இங்கும் பதட்டமாய் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் பரபரப்பாக கைபேசி மூலம் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே இருப்பவரின் இரத்த வகை குறித்து அவர்களுக்குள்ளாகவே கேள்வி கேட்னர். ஒருவர் அவரின் பர்ஸில் தேடிவிட்டு, ”O+ தான், ஒன்னும் பிரச்சனையில்லை” என திரும்பத் திரும்பச்சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள்ளேயே ”ப்ளெட் ஒன்னும் பிரச்சனையில்லை” எனச் சொல்லிக் கொண்டனர்.
”என்னுடையதும் கூட O+ தான்” எனச் சொல்லவேண்டும் என நினைத்தேன். அவர்கள் இரத்தம் தேடுபவர்களாகத் தெரியவில்லை, எச்சரிக்கைக்காக முன்கூட்டி தயாராக இருக்கிறார்கள் எனப்புரிந்தது.
என்ன விபத்து, எப்படி நிகழ்ந்தது என அறிந்துகொள்ள நாக்கு நுனி துடித்தது. அவர்களில் யாரிடமாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென என மனது அரித்தது. ”தெரிந்து என்ன கிழிக்கப்போறே, பதட்டத்திலிருக்கும் அவங்களத் தொந்தரவு பண்ணி தெரிஞ்சுக்க என்னருக்கு” எனப் புத்தி அடக்கியது.
யாரிடமும் எதையும் கேட்டு, பசித்திருக்கும் மனதிற்கு சுவாரசியத் தீனி போடுவதில்லை என முடிவு செய்தேன். ஒருவேளை இரத்தத்திற்கு தேடத் துவங்கினால், அரிமா இரத்தவங்கியை அழைக்கச் சொல்லலாம் என நினைத்தபோதே, 9942988429 என அரிமா ரத்த வங்கியின் எண் மனதிற்குள் டயலானது. நண்பர்களில் யாரெல்லாம் O+ என மனதிற்குள் மீட்டுக்கொண்டிருந்தேன். இந்த யோசனை தேவையற்றது என புத்தி சொன்னது.
திடீரென அமைதியடைவதும், குபுக்கென அழுவதுமாய் இருந்தார் அந்தப் பெண் மட்டும். இதுபோன்ற சூழல்களில் ஆண்கள் பரபரப்பாய் இங்கும் அங்கும் நகர்வதில் தங்களைச் சமாளித்துக்கொள்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் அழுதே கடக்கின்றனர். அந்தப் பெண்ணைப் பார்க்க ரொம்பவும் பாவமாக இருந்தது.
விபத்து என்பது எவ்வளவு கொடுமையானது என மனது நினைக்கும் போதே ஏதேதோ விபத்துகள் நினைவில் வந்துபோயின. அதுவும் நடுநிசி விபத்துகள் மிகுந்த அச்சமூட்டுபவை. விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவரை மருத்துவமனையின் மூடிய அறைக்குள் கொடுத்துவிட்டு வெளியே தவிப்பது நரகத்தின் ஒரு முன்னோட்டம்.
உள்ளேயிருந்து இளைஞர் ஒருவர் வந்தார், அந்தப் பெண் ஓடிச்சென்று பதட்டத்தோடும், பயத்தோடும் அந்த இளைஞரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே வழியும் கண்ணீரோடும் அழுகையோடும் ஏதோ கேட்டார், உடனிருந்தோரும் கேட்டனர் “இங்க வேணாமாம், கோயமுத்தூருக்கு அனுப்புறாங்களாம்” என அவர் சொல்லும்போதே அந்தப் பெண்ணின் விசும்பல் கூடியது. சுற்றிலும் ஏதேதோ கேள்விகள், ஏதேதோ பதில்கள் என வெளியேறிய வார்த்தைகள் அனைத்தும் துக்கத்தையும், பதட்டத்தையும் சுமந்துகொண்டே திரிந்தன.
”நல்ல நேரம்ப்பா, தலையில ஒன்னும் டேமேஜ் இல்ல” என யாரோ சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க
”தலையில அடியில்லையா, தலைக்கு ஒன்னும் ஆகலதானே, தலை நல்லாத்தானே இருக்கு” என அந்தப்பெண் உள்ளிருந்து வந்தவரை மீண்டும் கேள்விகளால் மொய்த்துக் கொண்டிருந்தார்.
வெளியில் ஆட்டோ ஒன்று வந்து அடங்கும் சப்தம் கேட்டது. இரண்டு பேர், ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு படிகளில் வேகமாய் வந்தனர். ஏதோ ஒரு பள்ளியின் அழுக்கடைந்த சீருடையில் இருந்த அந்தக் குழந்தைக்கு 6-7 வயதிருக்கும். தலையில், காலில் வெள்ளைத்துணியால் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு பெண்ணும் லுங்கி கட்டி, கழுத்தில் துண்டுசுற்றிய இரண்டு ஆண்களும் வாடிய முகங்களுடன் வந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவு செவிலியரிடம் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தனர். லுங்கியில் வந்த இருவரின் முழங்கால்வரை செம்மண் புழுதி படிந்திருந்தது. நகர் முழுதும் நடக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளாக இருப்பார்களோ எனத் தோன்றியது.
செவிலியர் படுக்கையைச் சுற்றிலுமிருந்த திரைகளை இழுத்துவிட்டு, மற்றவர்களை வெளியில் அனுப்பினர். அந்தப்பெண் குழந்தையின் அம்மாவாக இருக்க வேண்டும். தாழ்வான படிகளில் மடங்கி உட்கார்ந்தார். குழந்தைக்கு அடிப்பட்டிருந்த இடத்தில் செவிலியர்கள் தொட்டிருக்க வேண்டும், அது பயத்திலும், வலியிலும் கதறியது. அந்தப் பெண்மணியின் உயிர்ப்பற்ற முகத்தின் சுழிப்புகளில் குழந்தையின் வலியைக்காண முடிந்தது.
கண்களில் கண்ணீர் வழிந்தது கொண்டிருந்தது. லுங்கி கட்டியவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே விரக்தியாக நின்றுகொண்டிருந்தார். அந்தப்பெண் நிமிர்ந்து ஏதோ அவரிடம் கேட்க, மேலே எங்கோ பார்த்தவாறே பதிலளித்தார். அழுக்கடைந்த புடவை, மூக்குத்தி, தோடு, கழுத்தில் ஒரு கயிறு மட்டும் இருந்தது. எப்படி இந்த மருத்துவமனையின் செலவுகளை சமாளிப்பார்கள் என நினைக்கவே சங்கடமாக இருந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிவரும்போது உடன் வந்த இளைஞர்கள் உள்ளே செல்வதும் வெளியில் ஓடுவதுமாய் பரபரத்தனர். செவிலியர் கொடுத்த ஒரு காகித்தோடு சென்றவர், சிறிது நேரத்தில் இருகைகளிலும் பெரிய பைகளில் மருந்துகளோடு வந்தார். செலவுகளை அவர்கள் கவனித்துக் கொள்வார்களோ, அவர்கள்தான் விபத்திற்கு காரணமாகவோ அல்லது அவர்களின் இடத்தில் இந்தக் குடும்பம் வேலை செய்து அந்தக் குழந்தைக்கு ஏதும் அடிபட்டிருக்குமோ என மனது ஏதையெதையோ நினைத்தது.
சுடிதார் அணிந்த பெண்ணொருவர், ஒரு சிறுவனைத் தோளில் சுமந்தவாறு படியிறங்கிக் கொண்டிருந்தார். சிறுவன் கடுமையாக இருமிக் கொண்டே, சிணுங்கிக் கொண்டிருந்தான். இதேபோன்று இரவு மூன்று மணிக்கு ஒருமுறை மகளைக் கொதிக்கும் காய்ச்சலோடு கொண்டுவந்தது நினைவில் வந்தது. கைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன் 12.50 எனக்காட்டியது. சுடிதார் பெண்ணுடன் வந்தவர் செவிலியரிடம் ஏதோ சொன்னார். அவசர சிகிச்சைப்பிரிவின் ஒரு மூலையில் ஒரு நாற்காலியில் அமரவைத்து, அந்தச் சிறுவனின் வாயில் வெப்பமானியைப் பொருத்தினார்கள்.
அந்த இளைஞர் கூட்டம், குழந்தையோடு வந்தோர், இருமும் சிறுவனின் பெற்றோர் என எல்லோரிடமும் என் கண்களும் காதுகளும் எதையோ தேடிக்கொண்டேயிருந்தன.
மருத்துவமனைக்குரிய சீருடையோடு ஒல்லியான இருவர் வந்தனர். தலைமை செவிலியர் போல் இருப்பவர், இருவரிடமும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். இருவரும் அவசர ஊர்தி ஓட்டுனர்கள் எனப்புரிந்தது. உள்ளே இருக்கும் இளைஞரையும், அந்தக் குழந்தையும் முதல் உதவி சிகிச்சையோடு, கோவைக்கு அனுப்பப்போகிறார்கள் என்றும் புரிந்தது.
குழந்தையின் கால் கட்டுபிரிக்கப்பட்டு, ஒரு நீளமான பிளாஸ்டிக் பட்டையோடு நீட்டி வைக்கப்பட்டு, தொடையிலிருந்து பாதம் வரை புதிய கட்டு போட்டிருந்தனர். அந்தக் குழந்தை வலியில் துடித்துக்கதறியது.
“ஒன்னுமில்ல பாப்பா, சரியாயிடும், அழாதே” என மலையாளம் கலந்த தமிழில் செவிலியர் ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருந்தார். அதுவரை தலையை மெல்ல ஊசலாட்டியவாறு குனிந்து கிடந்த அந்தக் குழந்தையின் அம்மா, குழந்தை அழும் பதட்டத்தில், முந்தானைச்சுருளை வாய்க்குள் கடித்துக்கொண்டு, இரு முழங்கைகளையும் தொடையில் ஊன்றி தலையைத் தாங்கிக்கொண்டிருந்தார்.
கண்கொண்டு பார்க்க முடியவில்லை. மெல்லப்படியேறி வெளியே வந்தேன். ”என்னடா வாழ்க்கையிது. ஊரே தூங்கிக்கிட்டிருக்கு, இங்கே இத்தனை பேர் துடிச்சிட்டிருக்காங்களே, இத என்னனு சொல்ல, இதற்கெல்லாம் எதை, யாரைக் குத்தம் சொல்ல, குறையேதுமில்லையென்றும் எப்படிக் கடக்க” என ஏதேதோ மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
காவல்துறை உதவி ஆய்வாளார் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார். கையில் ஒரு நீளமான நோட்டோடு தரைதளத்திற்கு படிகளில் பூட்ஸ் சப்தம் கேட்க இறங்கினார். உள்ளே சென்று செவிலியர்களிடம் ஏதே கேட்டார். அவர்கள், அந்த இளைஞர்களில் ஒருவரைக் கைகாட்டினார். அவரிடம் ஏதோ கேட்கத்துவங்கினார். செவிலியர்கள் அவர்களை வெளியே இருக்கப் பணித்தனர்.
உதவி ஆய்வாளரைச் சுற்றி நான்கைந்து இளைஞர்கள் சூழ்ந்துகொண்டனர். அதற்குள் அவருக்கு கைபேசியில் அழைப்பு வந்தது.
“ஹலோ…
நான் ஆஸ்பிட்டல்லதான் இருக்கேன்
சரி
சரி” எனக் கைபேசியை அணைத்தவர். மீண்டும் செவிலியர்களிடம் நகர்ந்தார்
“சிஸ்டர், இண்டிமேசன் போட்டுட்டீங்ளா, டீடெய்ல்ஸ் கொஞ்சம் குடுங்க” என்றார்
“சார், இங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும்தான், கோயமுத்தூர் அனுப்றம் சார், அங்கதான் இண்டிமேசன் போடுவாங்க”
“ம்ம்ம்ம்… அப்படியா, செரி……….. சார் அடிபட்டவரோட ரிலேட்டிவ்ஸ் இருக்கீங்ளா………. வாங்க……….. கொஞ்சம் விபரஞ் சொல்லுங்க” என இளைஞர்களில் ஒருவரை அழைத்தார்
”அவரு பேரு, அட்ரஸ் சொல்லுங்க, அப்புறம் நீங்க அவருக்கு என்ன ஆகனும்” என தன் கையில் இருந்த நோட்டை விரித்தார்.
அவரிடம் பேச்சுக்கொடுத்த நபர், உள்ளே அறைக்குள் பதட்டமாய் பார்ப்பதும், இவரிடம் பேசுவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தார்.
உள்ளே இருப்பவரின் பெயர், விபரம் கேட்டுக்கொண்டார், இவருக்கு என்ன உறவு முறை வேண்டுமெனக்கேட்டார். அடிப்பட்டவரின் தங்கை கணவர் எனச்சொன்னார். அதுவரை அழுதுகொண்டிருந்தது அடிபட்டவரின் தங்கையென்று புரிந்தது.
”உங்கள்ள யாராச்சும் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்ங்ளே, அடிபட்டவரோ, அவரோட அப்பாவோ கம்ப்ளைண்ட் குடுத்தா பரவால்ல”
”சார் இப்ப அவசரமா கோயமுத்தூர் கூட்டிட்டுப்போறோம், இப்ப என்ன பண்ணனுங்க” என மைத்துனர் கேட்டார்
“சரி போங்க, போய்ட்டு காலையில ஒரு ஒம்பது மணிக்கு, நீங்க ஸ்டேசனுக்கு வந்து எழுதிக் குடுத்துட்டுப் போய்றீங்ளா, எப்படியும் இப்பப்போனா ஒம்பது மணிக்கு வந்துருவீங்கதானே” என அவர் கேட்பதின் அபத்தத்தைச் அவரே சந்தேகப்பட்டுக்கொண்டே கேட்டார்
”தெர்ல சார், அங்க போயிப் பார்த்தாத்தானே நெலம தெரியும், இப்பவே எதாச்சும் கேட்டு எழுதிக்குங்ளே” என்றவரின் பார்வை அந்த அறையை நோக்கியே கிடந்தது.
உதவி ஆய்வாளார் தலையைச் சொரிந்தார், நோட்டின் இன்னொரு பக்கத்தைப் புரட்டி, மைத்துனரின் பெயர், முகவரி கேட்டார்
”செல்வராஜு, 43, சக்திநகர்” என முகவரி சொல்லும்போதே
”அடிபட்டது வீரப்பம்பாளையம் கிட்டத்தானே, நீங்க சக்தி நகர்ல இருக்கீங்களா?” என குறுக்கிட்டார் உதவி ஆய்வாளர்
”சார் நான் விஜயமங்களத்துல இருக்கிற சக்திநகர்ல இருக்கேன், மாப்ள இங்க வில்லரசம்பட்டிங்க” என்றார்
”ஓ… செரி செரி, அப்பச்செரி” என எழுதுவதைத் தொடர்ந்தார்
செவிலியர் என்னை அழைத்தார். ஒரு ஊசி மருந்து வாங்கவும், மருத்துவர் கட்டணம் கட்டவும் இரு துண்டுச்சீட்டுக்களைக் கொடுத்தார். மருந்துக்கடையில் 18 ரூபாயும், மருத்துவர் கட்டணம் 100 ரூபாயும் பெற்றுக்கொண்டார்கள்.
”உள்ள பாருங்க சார், வலியில்லைனா இப்ப கூட்டிடுப்போங்க. காலையில 10 மணிக்குமேல வந்து டோக்கன் போட்டு ரத்தினக்குமார் டாக்டரப் பார்த்துக்குங்க”
உள்ளே படுக்கையில் இருந்த என்னோடு வந்தவர், வலி குறைந்திருப்பதாகச் சொல்ல புறப்பட்டோம்.
வெளியே இரண்டு அவசர ஊர்திகளும் அடுத்தடுத்து தயாராக நின்றுகொண்டிருந்தன.
”அந்த இரு குடும்பத்தினரும், இந்த ராத்திரியை எப்படிக் கழிக்கப் போகிறார்கள், எப்போது தூங்குவார்கள், தூங்குவார்களா? இருவரும் பிழைத்துக்கொள்வார்களா? எப்போது குணம் அடைவார்கள்” என நினைக்க நினைக்க மனது குமைந்தது.
இந்தக்கணம் ஊர் உலகத்தில் இருக்கும் மருத்துவமனைகளின் அவசரசிகிச்சைப் பிரிவின் வாயில்களில் எத்தனையெத்தனை உறவுகள் விம்மும் மனதோடு இப்படிக் காத்துக்கிடக்கும் என நினைக்கும்போது, அந்தக் குளிரிலும் எனக்கு குப்பென்று வியர்த்தது.
மருத்துவமனையிலிருந்து முக்கிய சாலையில் இணைந்து இடது பக்கம் திரும்பி பெருந்துறை சாலையில் வேகமெடுத்தேன். ஆட்சியர் அலுவலகம் தாண்டும்போது, எதிர்திசையிலிருந்து ஒரு அவசர ஊர்தி தலையில் சுழலும் விளக்கோடு எங்களைக் கடந்தது.
அருகில் இருந்தவரிடம் “இந்நேரத்துல ஒரு ஆம்புலன்ஸ் போகுது பாரு” என்றேன்
“ம்ம்ம்” என்றார் அசதியோடு
வீட்டை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு படியேறினேன். நிலா வெளிச்சத்தில், காற்றில் அசையும் தென்னையின் நிழல், எதோ ஒரு மனித உருவம் படியில் படுத்து மெல்ல ஆடுவது போல் காட்டியது. அந்தப் பெண் குழந்தையும், இளைஞனும் அநேகமாக இப்போது அவசர ஊர்திகளில் கோவைக்கு குலுங்கிக் குலுங்கிப் போய்க் கொண்டிருப்பார்கள் எனத் தோன்றியது
“என்ன வாழ்க்கையிடா இது, இதுக்குத்தான் இத்தனை ஆட்டம் போடுறமா” என்று மனதிற்குள் குப்குப் என அடைத்தது. நிறைய தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்சம் களைந்துகிடந்த படுக்கையில் வீழ்ந்தேன். அசதியில் படுத்தும் நீண்ட நேரம் தூக்கம் பிடிக்காமல் உருண்டு புரண்டது அடுத்த நாள் எழும்போது நினைவிற்கு வந்தது.
வழக்கம் போல் விடிந்தது, வழக்கம்போல் காலைப் பணிகள் நடந்தேறியது, வழக்கம்போல் கிளம்பினேன். நகரம் வழக்கம்போல் வழக்கமான உற்சாகத்தோடு பரபரத்துக் கிடந்தது. காவல் நிலையத்தைக் கடக்கையில், இரவு பார்த்த இளைஞரோ, உதவி ஆய்வாளரோ தென்படுகிறாரா என மனம் தேடியது. இரவில் நடந்ததெல்லாம் நிஜமா கனவா என்றும் ஒரு சந்தேகம் வந்தது.
வரிசையாய் இரவு என்ன நடந்ததென, ஒவ்வொரு வார்த்தைகளாய் கடைசியாய் இந்த புள்ளிவரை மீட்டிப்பார்த்தேன்.
-
நன்றி அதீதம்
-0-
9 comments:
மருத்துவமனையின் உள்ளே ஒரு உலகமும் வெளியே ஒரு உலகமும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது சுத்திவருவதை சொல்லியிருக்கீங்க கதிர். எங்களுக்கு பெயர்கள் தெரிவதில்லை அந்த பெட் ``neck of femur fracture'' அடுத்த பெட் ``acute kidney impairment'' அடுத்த பெட் ''chest pain possible ACS''.. இப்படி முகங்களை மறைக்கும் ரோகங்களோடு பழகிப்போகிறது எங்கள் வாழ்க்கை...
அழகான படைப்பு. ஆச்சர்யம், ஆதங்கம், வியப்பு என்று உணர்ச்சிகள் குவிந்து கிடக்கின்றன. அருமை! வாழ்க்கையின் நிலையாமை பற்றி தெரிந்துகொள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்திற்குப் போனாலே போதும். நாமும் பட்டினத்தார் ஆகிவிடுவோம். எனக்கும் இதைப் போல அனுபவங்கள் உண்டு. நெகிழ வைத்த பதிவு. வாழ்த்துக்கள் சகோ.
மருத்துவமனையின் பதட்டம் எழுத்தில் வடிந்திருக்கிறது.
நிறைய நேரம் நான் யோசிப்பது போல இருக்கேன்னு தோன்றியது.....
ரொம்பக் கஷ்டமுங்க. பணம் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? நினைக்கவே கஷ்டமாயிருக்கு.
Uranga mudiyaa iravugal athu. :-(
இப்படியான சில நாளாந்த விஷயங்கள் வாழ்க்கையை சூன்யமாக்குகிறது.சிந்திக்கிறோம்.ஆனால் தவறு விடுகிறோம் என்றும் புத்தியில் அடிக்கிறது !
மனதை நெகிழ வைத்த பதிவு.
மிக அருமை..எத்தனை நடந்தாலும் மனதிற்குள் புதைத்துவிட்டு..வழக்கமான வேலைகளில் ஈடுபட செய்யும் மனித மனம்..அது உங்கள் எழுத்துகளின் வழியாக..
Post a Comment