பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போதே அழைத்த நண்பர் அழைத்து, ”வந்தடைய இன்னும் அரை மணி நேரம் ஆகும்” என்றார். வேறு வழியின்றி நேரத்தைக் கடத்த கண்முன்னே பரந்துகிடந்த பேருந்து நிலையத்தை மனதின் பசிக்குத் தீனியாகக் கொடுக்கத் துவங்கினேன். முதன்முதலாய் எப்போது இந்தப் பேருந்து நிலையத்தில் கால் வைத்தேன் என்பது நினைவில் இல்லை. கல்லூரியில் இணைந்த காலம் தொட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது இந்தப் பேருந்து நிலையத்தோடு கூடிய பந்தம்.
குளிரும் வெம்மையும் புழுதியும் அற்ற ஒரு முன்னிரவின் முதிர்ந்த நேரம். மாலை நேரத்துப் பரபரப்பு மெல்ல தீர்ந்து, மக்கள் இடமும் வலமும், முன்னும் பின்னுமாய் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றைச் சுமந்து செல்கிறது. வெளியூர் பயணத்திற்குப் பைகளோடு வரும், குளித்துத் திருநீறிட்ட முகங்கள் மட்டும் கொஞ்சம் கூடுதல் சுறுசுறுப்போடு வலம் வர, ஏனைய முகங்கள் களைப்பை மிக அடர்த்தியாக அப்பிக் கொண்டு, தங்களுக்கான பேருந்துகளை அலையும் கண்களால் வலைவீசிக் கொண்டிருக்கின்றன.
சந்தனக் கலர் தாவணியும், அடர் கருஞ்சிவப்பு பாவாடையும் அணிந்த ஒரு இரட்டைச் சடைப் பெண் ஒரு புத்தக மூட்டையோடு நிதானத்துக்கும் சற்றுக் கூடிய நடையோடு கடந்து கொண்டிருக்கிறாள். பள்ளி முடிந்த பின் தனிவகுப்புச் சென்று திரும்பும் பெண்ணாக இருக்கலாம். உயரத்தை வைத்துக் கணிக்கும் போது பனிரெண்டாம் வகுப்புப் பெண்ணாக இருக்கும் எனத் தோன்றியது. தாவணிப் பெண்களைப் காணும் வாய்ப்புகள் சுருங்கிவிட்டது. எதோ ஒரு சிலத் தமிழ் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இன்னும் சுரிதாருக்கு மாறாமல் தாவணியை கட்டாயாமக் கட்டச் சொல்லிக்கொண்டிருக்கலாம். அந்தப் பெண் தமிழ் பள்ளிக்கூடம் என்று நினைக்கவே கொஞ்சம் கூடுதல் வாஞ்சையாக இருந்தது, ஆமாம் ஏன் இந்தப் பெண் தமிழ் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும், ஒரு வேளை வசதி வாய்ப்புகள் இருந்திருக்காதோ? அல்லது தமிழ்ப் பற்று இருந்திருக்குமோ என மனம் தன் போக்கில் தறிகெட்டுச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
தொலைதூரப் பேருந்துகள், வெளியூர்ப் பேருந்துகள், புறநகர்ப் பேருந்துகள், நகரப்பேருந்துகள், சிற்றுந்துகள் என எனக்கு முன்னே இடமும் வலமுமாய்க் கடந்து கொண்டேயிருந்தன. தங்கள் உருவத்திற்குச் சற்றும் பொருந்தாத கூடுதல் சத்தத்தோடு சில சிற்றுந்துகள் பேருந்து நிலையத்தின் அந்த அகலமான வேகத்தடைமேல் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. அரசுப்பேருந்துகள் அதற்கான அழுக்கடைந்து, தகரங்கள் வர்ணம் உறிக்கப்பட்டு, கீறல்களோடு, அப்பிய வண்ணப்பூச்சோடு வழக்கமான இலக்கணத்தோடு நகர்ந்து கொண்டிருந்தன. கோத்தகிரி எனப் பெயர்ப் பலகையில் பெயரிட்ட பேருந்து கடக்கும் போது பேருந்தைப் பரவலாக மூடிய அழுக்கு போக்குவரத்து கழகத்தின் ஒழுங்கை, தரத்தைப் பறைசாற்றியது.
வித்தியாசமான வடிவம் கொண்ட முகப்புகளோடு, வேறு வேறு வர்ணங்களோடு, கருப்புக்குளிர்தாள், இளம்பச்சைக்குளிர்தாள் என சில்லிடும் இசைப் பிளிறல்களோடு, வழியும் வெளிச்ச சன்னல்களோடு தனியார் பேருந்துகள் புதுமணப்பெண்ணின் வெட்கம் போல் அந்த வேகத் தடையைத் தாண்டிக்கொண்டிருந்தன.
ஓடி முடித்து பணி நேரம் தீர்ந்த பேருந்துகள் உள் விளக்குகளை அணைத்துவிட்டு மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தன. பேருந்துகளுக்கும் களைப்பாய் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. அதீதக் களைப்போடு பேருந்து கிடைக்காத சில பின்னிரவு நாட்களில், ”ஒரு பேருந்து வராதா?” என ஏங்கும் நேரத்தில் ஆடி அசைந்து ஓய்வெடுக்கப்போகும் பேருந்துகளை காணும்போது ஒரு ஏக்கமும், தீராத வன்மமும் பல முறை கொண்டது நினைவிற்கு வந்து போனது.
அசாத்திய உயரம் கொண்ட ஒரு காவல் உதவி ஆய்வாளரோடு, ஆறேழு இளம் காவலர்கள் தங்கள் நெஞ்சு வரை உயரம்கொண்ட குச்சிகளைக் கையில் பிடித்தவாறு பேருந்து நிலையத்தின் நடுவே எல்லாத் திசைகளிலும் பார்வைகளை வீசியவாறு விறைப்பாக விரைந்து கொண்டிருக்கின்றனர். அது ஒரு வழக்கமான ஆய்வாக இருக்கலாம் அல்லது பயணிகளுக்கு ஏதோ நம்பிக்கையை விதைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். ஆறேழு பேரின் ஒழுங்கில் அமைந்த விறைத்த நடை தேர்தலுக்கும் முன் தினங்களில் நடத்தும் காவல்துறை அணிவகுப்பை சில விநாடிகள் நினவில் மீட்டிவிட்டுப்போனது.
அக்கம் பக்கம் உள்ள பயணிகள் விறைத்த வேக நடைகளை ஒரு கணம் தங்கள் நிலையிலிருந்து மீண்டுபார்க்கத் தவறவில்லை. கால்சட்டைக்குள் இறுகச் சொறுகிய காக்கி அங்கியும், கல்சிலைபோல் இறுக்கமாக நகரும் உருவமும் ஒரு தடவை என்னையறியாமல் வயிற்றில் சுமக்கும் தொப்பையைத் தடவி எக்கிக்கொள்ள வைத்தது. தொப்பை குறைப்பதற்கான சங்கல்பங்கள் தொடர்ந்து தோற்றுவரும் மர்மம் கொஞ்சம் கூடுதல் கவலையை ஊட்டுகிறது.
பார்க்கும் இடமெல்லாம் உயர்ந்த கம்பங்களிலிருக்கும் விளக்குகள் வெளிச்சத்தை அடர்த்தியாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன. பேருந்து நிலையம் பட்டப் பகல் போல் வெளுத்துக்கிடக்கிறது. பேருந்து நிலையத்தின் தென் புறம் இருந்த மரத்தின் அடியில் நிற்கிறேன். மரத்தைவிட உயரத்தில் இருக்கும் விளக்கு கொட்டும் வெளிச்சத்தில் இலைக்கூட்டங்கள் தின்றது போக ஆங்காங்கே பொத்தல்களில் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்தது. இரவில் அடர்த்தியான வெளிச்சத்தில் மரத்தின் அடியில் சிந்திச் சிதறும் ஒளியைப் பார்ப்பதும் ஒரு அழகுதானோ?
என்னருகில் ஒரு ஆள் கொஞ்சம் அமைதியின்றி தவிப்பதை உணர முடிந்தது. கையில் வைத்திருக்கும் குடுவையில் அரைப்பகுதி மாம்பழச்சாறு இருந்தது. என்னை உற்று உற்றுக் கவனிப்பதை உணர முடிந்தது. நான் மிகச் சாவகாசமாய் நிற்பது ஒருவேளை நான் அப்போதைக்கு நகர மாட்டேன் என்ற உணர்வைத் தந்திருக்கலாம். ஏதோ ஒரு போராட்டத்துடன் என்னைக் கவனித்தவன் தன் கவனிப்பு மூலம் என்னை அவனைக் கவனிக்க வைத்தான். எனக்குப் பின் சில அடிகள் நகர்ந்து என்னவோ செய்வது புரிந்தது. உற்றுக் கவனித்ததில் கால் சட்டைப் பையில் இருந்து எடுத்த கால்புட்டி மதுக்குடுவையில் இருந்ததை மெலிதான கை நடுக்கத்துடன் மாம்பழச் சாறு இருக்கும் குடுவையில் ஊற்றுவது தெரிந்தது. சரக்கின் வாசனை சில விநாடிகள் மிதந்து கரைந்தது. காலிக் கண்ணாடிக் குடுவை டங்’என சப்தத்துடன் விழுந்தது. காரியம் முடித்ததில் மிகச் சுதந்திரமாக அவன் உணர்வதாய் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. மாழ்பழச்சாறு குடுவையின் மூடியை இறுக மூடிக் கொண்டு நிமிர்ந்த நெஞ்சோடு ஏதோ ஒரு பேருந்தை நோக்கி நகரத்துவங்கினான்.
இத்தனை வருடங்களில் கவனித்ததில் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் அதே பெயரோடு தான் ஓடிக்கொண்டிருந்தன. வடிவம் வண்ணம் மாறினாலும், பெயரைப் பார்த்தவுடனே அது செல்லும் ஊர் எது என மனதிற்குள் ஒரு மின்னல் அடிப்பது மகிழ்ச்சியாய் இருந்தது. கூடுதலாய் கடந்து செல்லும் பேருந்துகளில் ஓரிரு பேருந்துகள் யார்யாரையோ நினைவில் மீட்டவும் செய்கின்றது.
ரெங்கா என்ற பெயருள்ள பேருந்து கடந்த போது கல்லூரி கால நண்பன் குப்புசாமி நினைவில் வந்து போனான். பி1 என்றால் சுபாஷினி, கேஆர்&கோ என்றால் சீனிவாசன், எஸ்பிபிடி என்றால் ராமசாமி, அந்தியூர் வழி செல்லும் சத்தி வண்டி எனில் எப்போதும் ஓட்டுனரால் துண்டு போடப்பட்டு முதல் இருக்கையில் செல்லும் ஒரு உயரமான பெண்மணி என்பது போல் சில பேருந்துகள் யாரோ ஒருவரின் நினைவை வலிய முளைக்கச் செய்துவிட்டுத்தான் கடக்கின்றன.
அலைபாயும் கூட்டத்தில் ஒரு முகமாவது அடையாளம் தெரிகிறதா என உற்று நோக்குகிறேன்… ம்ம்ம்ஹூம்… வாய்ப்பே இல்லை. விதவிதமான முகங்கள் ஒவ்வொன்றும் பார்த்தறியா முகங்கள். உயரம் குறைவான ஆள் கூடுதல் உயரம் கொண்ட மனைவியோடு கடக்கிறார், அநியாயத்துக்கு ஒல்லியாக இருக்கும் அந்த மனைவி கொஞ்சம் குண்டாய் இருக்கும் குழந்தையை சுமந்தபடி. அம்மாக்கள் ஒரு போதும் சுமப்பதை சுமையாய் நினைப்பதேயில்லை என ஏதோ மனதிற்குள் ஓடியது. அந்த வரி சரிதானா என்ற கேள்வியும் உடனே பிறக்காமல் இல்லை.
வேகமாய் என்.ஆர்.எல் பேருந்து வந்து நின்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கணக்கில்லா இரவுகள் இதில் பயணப்பட்டிருப்பேன். காலை மூன்று மணிக்கு ஓட ஆரம்பித்து, இரவு பத்து மணிக்கு தூங்குவதற்காக பவானி செல்லும் பேருந்து. பெரும்பாலும் அந்த நடைக்கு மட்டும் கூட்டமே இருக்காது. காற்று சிலுசிலுக்க நெருப்பு போல் சீறிச் செல்லும் அந்தப் பழைய பயணங்கள் நினைவிற்குள் வந்து போயின, கூடவே மெதுமெதுப்பான அந்தப் பேருந்தின் இருக்கையும்.
கடக்கும் பேருந்துகளுக்குள் கூட்டம் திணறுகிறதா, காலியாக இருக்கிறதா எனவும் மனம் கவனிக்கத் தொடங்குகிறது. நெரிசல் இல்லாமல், நிற்காமல், அமர்ந்தவாறு குறைவான கூட்டத்தோடு கடக்கும் பேருந்துகள் மேல் ஏனென்று தெரியவில்லை கொஞ்சம் காதல் கசிகிறது. நகரத்துக் கசகசப்புக்குள் கசங்கி கடைசியாக வீட்டுக்குச் செல்ல பேருந்தில் ஏறி அது பேருந்து நிலையம் கடந்து சமிஞ்சைகள், பிரிவு சாலைகள், குறுக்குச் சாலைகள் என எல்லாத் தடைகளையும் தாண்டி நகரத்து எல்லை கடந்து இருளில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு சீறும் போது, அடிக்கும் சிலுசிலு காற்று அந்த நாளின் அத்தனை களைப்பையும் போக்கவல்லது. குறிப்பாக சன்னோலோர இருக்கை, மூவர் அமரும் இருக்கையில் இருவர் மட்டும் என்ற சௌகரியம், உள்ளே அழாமல் சிரிப்பாய் வெளிச்சத்தை சிதறவிடும் வெள்ளை விளக்கு, அதிரும் இசை என்பதெல்லாம் கூடுதல் சுகம். இப்போதெல்லாம் நகரத்து எல்லைகளைத் தாண்டவே முடிவதில்லை தாண்டும் முன்பாக அடுத்த நகரத்தின் எல்லை வந்து தனக்குள் நம்மைப் புகுத்திக்கொள்கிறது.
பேருந்தில் உருவமற்றுப் பயணப்பட முனைந்த மனதை மீட்டு வந்து மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப் பார்த்தேன். சுகமாய்த் பேருந்து நிலையத்தைத் தின்றுகொண்டிருந்த மனது வெளியில் பயணப்பட்டு வந்ததால் மீண்டும் பேருந்து நிலையத்தைச் சுவைக்க மறுத்து திமிரத் துவங்கியது. அதுவரை அத்தனை பரபரப்பிற்குள்ளும் எனக்காக கிடைத்த அமைதியின் வர்ணம் மாறத்துவங்கியது போல் உணரத் துவங்கினேன்.
நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது, பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டுவிட்டதாகச் சொல்ல, அந்த இடம் நோக்கிப் புறப்படும் போது மனம் புத்தியிடம் கேட்டது ”இன்னுமொரு பொழுது இதே போல் அமையுமா?” அமையாது எனப் புத்தி சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் மனதிற்கு புத்தி அப்படித்தான் சொல்லும் எனத் தோன்றியது. சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது. அந்த முத்தம் அதிசயமாய் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். வேண்டி விரும்பி திட்டமிட்டு உருவாக்கும் தனிமைகளில் ஒருவித மயான அமைதி வேண்டுமானால் கிடைக்கலாம், தனிமை அதற்கான தனித்துவத்துடன் கிடைப்பதேயில்லை. தானாய் அமையும் உருவாகும் தனிமை ஒரு வரம்.
-0-
படங்கள் உதவி கூகுளாண்டவர்
-0-
38 comments:
இந்த வலையுலகம் அறிமுகமானதில் இருந்து பல முறை பலருடைய படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தொடக்கத்தில் யுவகிருஷ்ணா எழுதிய பல கட்டுரைகளைப் பார்த்து இவரைப் போல நாமும் முயற்சிக்க வேண்டும் என்று அதைப் போலவே முயற்சித்து அய்யாவுக்கு அடி வாங்கும் தமிழன் என்ற தலைப்பில் எழுதினேன். ஆனால் இன்று உங்கள் இந்த தலைப்பை பார்த்து கொஞ்சம் எதிர்பார்த்தேன். ஆனால் திகைக்க வைத்து விட்டீர்கள். நிச்சயம் இது என்னைப் பொறுத்தவரையிலும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது. நன்றி கதிர்.
கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது. நன்றி கதிர்.
பாவம் பய புள்ள பாலாசி. எனக்குப் போட்டியா என் ஏரியாக்குள்ள வந்ததும் இல்லாம இடுகை வேறையான்னு பதறிப் போவான்:))
முதல்ல ஆளுங்களப் படிச்சி, அப்புறம் பேருந்தப் படிச்சி, அப்புறம் தன்னையே படிச்சின்னு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.
/தானாய் அமையும் உருவாகும் தனிமை ஒரு வரம்./
பல நேரம் பெரும் சாபம்
கதிர்
இனிமே நேரா வீட்டுக்கு வந்துட வேண்டியதுதான். பேருந்து நிலையம், ரயில் நிலையம்... இந்த மாதிரி இடங்களுக்கு வரவைக்கிற உத்தேசம் இனி இல்லை.
////கல்சிலைபோல் இறுக்கமாக நகரும் உருவமும் ஒரு தடவை என்னையறியாமல் வயிற்றில் சுமக்கும் தொப்பையைத் தடவி எக்கிக்கொள்ள வைத்தது. தொப்பை குறைப்பதற்கான சங்கல்பங்கள் தொடர்ந்து தோற்றுவரும் மர்மம் கொஞ்சம் கூடுதல் கவலையை ஊட்டுகிறது.//
எல்லா எடத்துக்கும் தொப்பைய அழைச்சிக்கிட்டு தான் வருவீயளோ...?
//வானம்பாடிகள் said...
பாவம் பய புள்ள பாலாசி. எனக்குப் போட்டியா என் ஏரியாக்குள்ள வந்ததும் இல்லாம இடுகை வேறையான்னு பதறிப் போவான்:))//
ஆமா... பாருங்களேன்.. அப்டியே நான் ஸ்ஸ்ஸாக்காயிட்டேன்...
பேருநதுகள் நம்மல கூட்டிட்டு மட்டும் போறதில்லை. சில நினைவுகள் மனசுல விதைச்சுட்டு போகுதுங்க, அது அழியறது இல்லை.. நான் எழுதின ST கதையும் அப்படிதானுங்களே..
"பேருந்து நிலையம் குறித்து ஒரு கட்டுரை வரைக!"
ஈரோடு பேருந்து நிலையம் வரைக. -ன்னு தலைப்ப மாத்திடுங்க. அருமை.
// சந்தனக் கலர் தாவணியும், அடர் கருஞ்சிவப்பு பாவாடையும் அணிந்த ஒரு இரட்டைச் சடைப் பெண் ஒரு புத்தக மூட்டையோடு //
தல பேப்பர் பொறுக்குற ஆயாவகூட உட்டுவெக்கலையா.....??
என்ன சொல்றதுன்னே தெரியல! :)))))
நல்லாயிருக்கு..
//அது பேருந்து நிலையம் கடந்து சமிஞ்சைகள், பிரிவு சாலைகள், குறுக்குச் சாலைகள் என எல்லாத் தடைகளையும் தாண்டி நகரத்து எல்லை கடந்து இருளில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு சீறும் போது, அடிக்கும் சிலுசிலு காற்று அந்த நாளின் அத்தனை களைப்பையும் போக்கவல்லது.//
உண்மை! :)
அப்படி எவ்வளவு நேரம் இருந்தீர்கள் பேருந்து நிலையத்தில் ?நல்லாவே ஒன்றித் தான் போய் விட்டீர்கள். கவனித்ததை இப்படி எழுதியது அழகோ அழகு
தாராபுரம் வழியாக பழனி வண்டி எத்தனை மணிக்குங்க.
500 நட்புக்களுக்கு பாராட்டுகள்.
Simply Amazing Anna....
ஆகா.. நல்ல நடை.. சிறப்பான கவனிப்பு..
ஈரோட்டு பேருந்து நிலையம் நினைவில் வருகிறது.
எத்தனையோ தடவை அதிகாலை ரயிலில் இருந்து வந்திறங்கி ஈரோடு பேருந்து நிலையத்தில் காத்திருந்த நினைவு வருகிறது.
ஓர் இரவு, ஓராயிரம் பார்வை!
ஓர் ரெங்கராட்டினம், ஓராயிர அனுபவம்!
கலக்கியிருக்கீங்க கதிர்! :-)
அன்பின் கதிர்
அருமை அருமை - நடை அரௌமை - கண்ணில் கண்ட காட்சிகளை மனதில் உள்வாங்கி - அதனை அழகுற வடிவமைத்து - வர்ணித்து - உரையாக மாற்றியது நன்று. ஏன் தொப்பையை சுமந்து கொண்டு செல்கிறீர்கள் - கழட்ட முயற்சியுங்கள். ( அப்படி ஒன்னும் இல்லையே ) - தனிமை- முத்தத்திற்கு ஒப்பிடும் செயல் ...ம்ம்ம்ம்ம் - பலே பலே - காவலர்கள் - ஆய்வாளர் - மிடுக்கு - குச்சியின் உய்ரம் - ம்ம்ம்ம்ம் கூர்ந்து நோக்கும் திறமை பாராட்டத் தக்கது. மாம்பழச் சாறு - கலந்ததோ ...... - அதையும் கவனித்து எழுதியது .....தாவணி - பாவாடை - புத்தக் மூட்டை - கண்டவுடன் கற்பனைக் குதிரை பறக்க ஆறம்பித்து விட்டதோ - அரசுப் பேருந்துகள் - தனியார்ப் பேருந்துகள் - ஒப்பு நோக்கல் . ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு ஆண் / பெண் நண்பர் .... கொடுத்து வைத்தவரைய்யா நீர். ந்ல்லா ரசிச்சு, பொறுமையாப் படிச்சேன். ஆமா - வாழ்க வளமுடன்
அழகான விவரிப்புக்கும் ஒரு திறமை வேண்டும் 500 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் :))
மாப்பு... இன்னும் பல சிறப்புகள் எய்துக! வாழ்த்துகள்!!
ஆள் சுமக்கும் பேருந்து இப்படி நினைவு சுமந்து அங்குமிங்கும் போகுதே, அழகு.
செம..செம... அருமையான இடுகை.. சில நாள் இவ்வளவு நினைவுகளையும் சுமந்திருந்தாலும், அனுபவிச்சிருந்தாலும் இப்டி கோர்வையா எழுதமுடிஞ்சதில்ல... ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு நண்பரின் நினைவுகளை பொருத்தியிருப்பது எல்லாருக்கும் பொதுவானது... அருமை..
பார்வைகள் பலவிதம்....
ஒவ்வொன்றும் ஒருவிதம்....ம்..ம்...
நன்றி கதிர்
சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது. அந்த முத்தம் அதிசயமாய் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். வேண்டி விரும்பி திட்டமிட்டு உருவாக்கும் தனிமைகளில் ஒருவித மயான அமைதி வேண்டுமானால் கிடைக்கலாம், தனிமை அதற்கான தனித்துவத்துடன் கிடைப்பதேயில்லை. தானாய் அமையும் உருவாகும் தனிமை ஒரு வரம்.
.......பேருந்து நிலையம் குறித்து கட்டுரை மட்டும் அல்ல - தத்துவமும் வரைந்து பின்னிட்டீங்க!
enakku bus payanam romba pidikkum. erode bus standai kan munnaadi kondu vanthutinga anna. aanaalum ellaa uur bus standum kittathatta ippadiththaan irukkum pola. sugamaana oru pathivu. nanri.
வித்தியாசமாக கட்டுரைக்கேற்ற தலைப்பு கதிர்.கோர்வையா எண்ணங்களை அப்படியே எல்லோராலும் எழுதமுடிவதில்லை உங்களைப்போல !
Job and the age makes the people stranger to their very known place. that's what life.i am also some time s feel strange at my own town
Good work!
நூற்றுக்கு நூறு வரைந்த கட்டுரைக்கு.
ஐநூறுக்கு வாழ்த்து, விரைவில் ஆயிரம் தொடுவதற்கு.
mm..nice.. neraiya kummi irukalam..hm..chance miss
500 followers cross agiyacha..valthukal anna..
treatuuuuuuuuuuuuuuuuuu
nice observation and recollection ...good .....
மாதொருபாகன் படித்துவிட்டாயிற்று. ம்.... என்ன சொல்ல? கங்கணத்துடன் ஒப்பிடுகையில் அவசரத்தில் முடிந்ததாகப் பட்டது. பெருமாள் முருகனின் இன்னுமொரு நற்படைப்பு.
அருமையான நடை.நினைவுகளை அசை போடுகிற மனம்.இடைச் செருகல்கள்.அனுபவிச்சு படிச்சேனுங்க ..வாழ்த்துக்கள்
/கேஆர்&கோ என்றால் சீனிவாசன்/
மாப்ஸ், ரொம்ப காலமாக உன் பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டிருந்தாலும் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இடுவதே, இத்தனை வருடங்களுக்குப் பிறகு என்னை நினைவுகூர்ந்ததுக்கு நான் கூறும் நன்றி. மிக்க மகிழ்ச்சி!
வாவ்! என்ன அழகு! எழுத்தும், நடையும்! நல்ல கோர்வையான கட்டுரை!
பள்ளியில் படிக்கும்போது தமிழ் வாத்தியார் நான் ஆசிரியரானால், முதல்வரானால்.., தன் வரலாறு கூறுதல் இது போல நிறைய கட்டுரை எழுதச் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்கள்!
பேருந்து நிலையம்--
தங்களின் அழகுப் பார்வை,
பதித்த எழுத்துக் கோர்வை
அதற்க்கு.,
தங்கத் தமிழ் போர்வை
வாய்த்த வாய்ப்பு நல்லத் தீர்வை..,
போக்கியது காத்திருந்த சோர்வை!
எழுதும் போது சிந்தியதா வியர்வை?
யார் வைத்தது இந்த தேர்வை???
காக்க வைத்த நண்பர் வாழ்க! இப்புதையல் படைப்பு கிடைக்க ..,
Post a Comment