கருவிக்குள் கட்டுண்ட கவிதை

சமீபத்தில் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் சேலம் தொடர்வண்டி நிலையம் அருகே நிழற்படக் கருவிக்குள் சிக்கிய கவிதை இது.படங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், உருவெடுக்கும் உணர்வுகளின் வண்ணங்கள் மனது முழுதும் ஒன்றன்மேல் ஒன்றாய்ப் படிந்து பாரத்தைக் கூட்டவே செய்கின்றன. கூடவே அந்த பாட்டியின் மீதும் பிள்ளையின் மீதும் ஏதோ ஒரு இனம்புரியா பாசத்தை விதைக்கவும் செய்கின்றது.

தொட்டில் கட்ட வாய்ப்பில்லாத வெட்டவெளியில், ஒற்றைக் கம்பு ஒருபக்கமாய் சாய்ந்து ஒரு பிள்ளையின் உறக்கத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.

பால், மருந்து, தண்ணீர் என குடுவைகள் தவம் இருக்கின்றன அந்தப் பிள்ளையின் விழிப்பிற்காக!

ஒற்றைச் சிணுங்களைக் கண்ணுறும் பாட்டி ஓடி வந்து இசைக்கும் தாலாட்டில் தூக்கம் தொடர்கிறது.

அவர்கள் போராடிப் பூட்டும் தண்டவாளத்தில், அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை

எங்கும், யாரோ படைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள், செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !

தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
-0-

32 comments:

அகல்விளக்கு said...

//தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது//

முழுக்க முழுக்க நிதர்சனம்...

அகல்விளக்கு said...

இனம் புரியாத பரிவும், ஒருவித குற்றவுணர்ச்சியும் ஏற்படுகிறது அண்ணா.... :-(

VELU.G said...

//அவர்கள் போராடிப் பூட்டும் தண்டவாளத்தில், அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை
//

உண்மை

ஒதுங்க ஒரு நிழலில்லா வெளியில் படுத்திருக்கிறோம் என்ற உணர்வின்றி உறங்கும் குழந்தை

வாழ்வில் சரிசெய்ய முடியாமல் நிறைய விஷயங்கள் உள்ளது

யார் தவறு இது?

Sathish said...

எத்தனை தலைமுறைக்கு இவர்கள் நிலை என்பது அவர்கள் வகுத்து கொள்வது இல்லை. நாம் தான். நல்ல தலைவர்களை திரந்து எடுப்பது என்பது அவர்களை விட நம் கையில் தான் அதிகம்.. இந்நிலை மாறியே ஆக வேண்டும்..

vasu balaji said...

இந்தப் பணிக்குப் பேரு கட்டமைப்பு. இவர்கள் வாழ்வாதாரத்திற்குத்தான் எந்தக் கட்டமைப்பும் இல்லை:(

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

கார்த்திகேயன் said...

மொட்டை வெயிலில் இப்போது பூத்த பட்டுப்பூ ஒன்று படுத்திருக்கிறது.காவலுக்கு யாருமில்லை என கவலைப்படாதே நானிருக்கிறேன் என தாலாட்டு பாடுகிறது இந்த குருவி.முதுமை சுமையா யார் சொன்னது..?இதோ பாருங்கள் உங்களை சுமந்தவள் யாருக்கும் சுமையாக விரும்பாமல் கல்லை சுமப்பதை...நெஞ்சு சில்லுச்சில்லாய் போகிறது.வறுமை இது ஒன்றை ஒழிக்க தானே வாயிக்கும் வயிற்றுக்கும் இடையே இத்தனை போராட்டம்.தூங்காதே... தூங்காதே... குட்டிப்பூவே... நீ தூங்காதே... நாளைய பாரதம் உன் கையிலாமே..!! அப்படியா..??!! அப்துல்கலாம்களை புறம் தள்ளி யாருக்கு ஆசனமிட இத்தனை வேகம் இவர்களுக்கு??? இதை பற்றி நீ கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும் எழுந்திரி...இவர்களுக்கு ஓட்டு போட்டதுமே நமது கைவிரல் மட்டுமல்ல வாழ்க்கையும் இருண்டு தான் போகிறது.ஒரு கக்கன் ஒரு காமராசு நமக்குள் தான் இருக்கின்றான் உழைப்பளிகளே...உறங்கிவிடாதீர்கள்...அதற்காக தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் புதுவியூகம் சமைப்போம்...

கார்த்திகேயன் said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

கவிதையல்ல, காலகாலமாய் தொடரும் வேதனையான கதை:
//அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை
எங்கும், யாரோ படைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள், செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !//

ஹேமா said...

ஜீரணிக்கமுடியாத சில விஷயங்கள் நம் நாடுகளில் !

Unknown said...

ஏழைகள் உழைக்கிறார்கள்... ராசாக்கள் கொழிக்கிறார்கள்..

Chitra said...

படங்களைப் பார்த்ததும், அந்த குழந்தை எப்பொழுதும் பத்திரமாக இருக்க வேண்டுமே என்று இருக்கிறது. இவர்களின் நிலை என்றுதான் மாறுமோ?

அன்புடன் நான் said...

சிலர் வாழ்வில் விதி....
எண்களுக்கு முன் சுழியங்களை போட்டுவிடுகிறது.

சிலருக்கோ.... எண்களுக்கு பின் சுழியங்களை போட்டு விடுகிறது.

செ.சரவணக்குமார் said...

நான்கு புகைப்படங்களும் ஒரு குறும்படத்தின் நான்கு காட்சிகள் போல இருக்கின்றன. அழகான குறும்படம்.

நிறைய வலியுடன்..

ஓலை said...

உழைக்கிற விவசாயிக்கு வெறும் அவனது உழைப்பு மட்டும் மிஞ்சுவது போல,

கட்டுமானத் தொழிலாளிக்கு தன் கையால் கட்டியதை எட்ட நின்னு கை கட்டிப் பார்ப்பது மட்டும் மிஞ்சும் போல.

Romeoboy said...

அண்ணே இன்னைக்கு சாயந்திரம் மகா கிட்ட பேசிட்டு இருக்கும் போது வெயில் காலம் வரப்போது கொஞ்சம் ஹிட்டா இருந்தாலும் பையன் சரியாய் தூங்கமாடான் அடுத்த மாசம் ஒரு ஏசி வாங்கியே தீரனும்ன்னு சொல்லிட்டு இருந்தா. இந்த புகை படத்தை பார்த்த பிறகு அது எல்லாம் தேவையான்னு யோசிக்கிறேன்.ரொம்ப வேதனையா இருக்கு அண்ணே.:(

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தா நல்லா இருக்கும்ல..

பா.ராஜாராம் said...

ப்ச்...

பகிர்விற்கு நன்றி கதிர்.

settaikkaran said...

படங்களைப் பார்க்கும்போது மனம் சற்றே பதைபதைக்கிறது. இடுகையின் வரிகள் நெகிழ்ச்சி!

காமராஜ் said...

அருமை,அருமை அருமை கதிர்

பழமைபேசி said...

அந்தக் குழந்தைய நினைச்சா, மகிழ்ச்சியா இருக்கு... அன்பும், அரவணைப்பும், நேசமும் மலை, மலையாய்க் கொட்டிக் கிடக்கு அந்தக் குழந்தைக்கு.....

காலையில ஆறு மணிக்கெல்லாம், அந்தக் குளிர்ல கொண்டு போய்க் குழந்தைகள் காப்பகத்துல வுடுறதும்... மூணு மாசத்துலயே பால் மறக்கடிக்கறதும்... காப்பகத்துல பத்தோட பதினொன்னா படுத்துக் கிடக்கறதும்...

தாழம்ப்பூவாம், ஒய்யாரக் கொண்டையாம்... உள்ள, ஈறும் பேனுமாம்!!

தாராபுரத்தான் said...

அழகான பார்வை..ங்க

பழமைபேசி said...

//தாராபுரத்தான் said...
அழகான பார்வை..ங்க
//

பார்வையப் பத்தி பாலாண்ணங்கிட்டச் சித்த பேசுங்ணா!!

பவள சங்கரி said...

அருமை கதிர்........மனிதம் மிளிர்கிறது. ம்னதை நெகிழவைக்கிறது.

ஓலை said...

Pazhamaiyoda saattai adi surrunu uraikkuthu.

Thenammai Lakshmanan said...

எங்கும், யாரோ படைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள், செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !


தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
// நிதர்சனம்..

Kumky said...

என்றும் விடியப்போவதில்லை...

Anonymous said...

ஒரு வித வலியை தூண்டவில்லை என்றால் முழுக்க புகைப்படத்தையே ரசிக்கவும் பாராட்டவும் செய்ய தூண்டும் ஆனால் படங்கள் ஒவ்வொன்று உயிரை தொட்டு பேசுகிறது.. கடைசி வரி

//தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது//

உருக்கும் உண்மை கதிர்..

மாதேவி said...

மனம் பதைபதைக்கிறது..
தெருவோர வாழ்க்கை அன்றாடம் பல காட்சிகள்...:(

'பரிவை' சே.குமார் said...

நிதர்சனம்...

க.பாலாசி said...

எத்தனையோ இடங்கள்ல பாத்திருப்போம்.. ஆனாலும் கருவிக்குள்ள அடைச்சி அதை கவிதையா பாக்கமுடியறதில்ல.. இது க்ளாஸ்...

நிலாமதி said...

தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உண்மை

சீமான்கனி said...

//அந்த பாட்டியின் மீதும் பிள்ளையின் மீதும் ஏதோ ஒரு இனம்புரியா பாசத்தை விதைக்கவும் செய்கின்றது//

நிதர்சனம் அண்ணா...