கனக்கும் அன்பு – இலங்கைப் பயணம்


வெறும் நான்கு நாட்கள் அவகாசத்தில் இலங்கை சுற்றுலா செல்ல ஒரு நிறுவனத்தின் மூலம் நண்பர் சார்பில் அந்த வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் எங்கே என்றதற்கு, மூன்று நாளும் கொழும்புதான் என்று அறிய வர, நான் மட்டும் யாழ்ப்பாணம் வரை சென்று வர அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே என நினைத்தேன். ஆனால் தனியாக, எப்படி அந்த நாட்டின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.

அதுநாள்வரை இலங்கையிலிருந்து என்னோடு, அதுவும் எப்போதாவது மின் அரட்டையில் உரையாடும் ஒரே பதிவர் சிதறல்கள் றமேஸ் மட்டுமே. றமேஸிடம் முதலில் கொழும்பு வருவதாகவும், அங்கிருந்து யாழ்ப்பாணம் வரை சென்று வர விருப்பம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என அரட்டையில் கேட்க, உடனே கைபேசிக்கு அழைத்தார். தான், கொழும்பில் இல்லையென்றும், அங்கிருக்கும் சக பதிவர் நண்பர் நா மதுவதனனை அழைக்கச் சொல்வதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் மதுவதனன் அழைக்க இலங்கை நட்பின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. மது பதிவர் லோஷன் அவர்களோடு பேசி பயண விபரம் குறித்து திட்டமிடுவதாகச் சொல்ல, அதையொட்டி பதிவர்கள் மதுவதனன், லோஷன், தமிழ்நதி ஆகியோருக்கு கொழும்பு வந்தடையும் நாள் மற்றும் திரும்பும் நாள் ஆகியவற்றைக் குறித்து மின் மடலிட்டு பயணத்திட்டத்தை வகுத்துத்தர வேண்டினேன். அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் இருக்கும் பதிவர் தமிழ்நதி, வவுனியாவில் இருக்கும் தனது சகோதரி மகன் செந்தூரனை என்னிடம் தொடர்பு கொள்வார் என மடலிட்டார். சில மணி நேரத்தில் செந்தூரன் அழைத்து, கொழும்பு வந்த பின் தொடர்பு கொண்டு விட்டு வவுனியா வந்துவிடச் சொன்னார். அடுத்தடுத்த நாட்களில் மது, லோஷன், தமிழ்நதி என மின்னஞ்சல்களிலேயே பயணத் திட்டம் ஒரு மாதிரியாக வகுக்கப்பட்டது.

ஒருமாதிரி புரிந்தும் புரியாத திட்டங்களோடு அக்டோபர் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொழும்புவில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியை அடைந்தேன். என்னோடு வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் நான் தனித்து வெளியில் செல்வது பற்றித் தெரிவிக்கக்கூட இல்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை ஏழு மணிக்கு அதிர்ந்த கைபேசி எழுப்பிய போது அது மதுவாகத்தான் இருக்கும் என உணர முடிந்தது. அடுத்த சில நிமிடங்களில்  மெலிந்த, சிவந்த, சுறுசுறுப்பான மதுவின் கைகுலுக்களில் அன்பு நிறைந்த வெப்பத்தை உள்வாங்க முடிந்தது. வேற்று மண்ணில் முதன் முதலாய் முகம் பார்த்திராத ஒரு நட்பின் அன்பை உள்வாங்கும் சுகம் மிக அலாதியான ஒன்று. பேச வாய் திறக்கும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் சிரிப்புதான் சிதறி விழுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உற்சாகமாய் பேசி, உடனிருந்து, வவுனியாவில் இருக்கும் செந்தூரனோடு பேசி, தெளிவான ஒரு பயணத் திட்டத்தை திட்டமிட்டார். முன்னரே இலங்கையில் பயன்படுத்த ஒரு தற்காலிக கைபேசி இணைப்பு கேட்டிருந்ததையொட்டி, தன்னுடைய கைபேசி இணைப்பு ஒன்றினை என்னிடம் கொடுத்து விட்டு, பதிவர் லோஷனோடு பேசி அடுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிவிட்டு விடைபெற்றார். 

பதிவர் லோஷன், அவர் நண்பர் விமல்
பதினொரு மணி சுமாருக்கு விடுதி வாசலில் நின்று கொண்டிருக்க, வாகனம் ஒன்று நின்று நிதானித்து, கடந்து விடுதியின் வாகன நிறுத்தப் பகுதிக்குச் சென்றது. ”ஒருவேளை இது லோஷனாக இருக்குமோ” என்று நினைத்தேன், நினைத்தபடியே அது லோஷன் தான். ஊடகத்துறையில் இருப்பதால் பணி நிமித்தம் பரபரப்பாக இருப்பவர் என மது சொல்லிருந்தார். ஆனாலும் எந்த வித பரபரப்பும் காட்டாமல் இடம் தேடி வந்து அழைத்துக் கொள்ள, கொழும்பு நகர வீதி வழியாக கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பயணப்பட்டோம். செல்லும் வழியில் அவருடைய நண்பர் விமல் அவர்களும் இணைந்து கொண்டார்.

பதிவுலகம் குறித்து, ஈழத்தில் இந்திய அரசியல் குறித்து, கொழும்பு நகரத்தில் இருக்கும் கைபேசி விளம்பரங்களில் அசின் ஆங்காங்கே தென்படுவது குறித்து, அவர் இந்தியா வந்திருந்த பயணம் குறித்து என நிறைய வழி நெடுகப் பேசிக்கொண்டேயிருந்தோம். யாழ்ப்பாணம் செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டி, கடவுச்சீட்டின் பிரதியை பெற்றுக் கொண்டு, அனுமதிக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்புவதாகத் தெரிவித்து விட்டு என்னை மிகப் பத்திரமாக வவுனியா செல்லும் பேருந்தில் ஏற்றி அமர்த்திவிட்டு விடைபெற்றார்.
வவுனியா சென்ற பேருந்து... (நம்ம ஊரு அசோக் லைலேண்ட் பேருந்து)
வவுனியா பேருந்து ஏறியது முதல் செந்தூரன் என்னை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டார். ஏழுமணி நேரப் பயணம், இரவு ஏழு மணிக்குத்தான் வவுனியா சென்றடைவேன் என்றாலும், குறைந்தது 15 முறையாவது அழைத்து நான் எந்த இடத்தில் வருகிறேன் என்பதை தொடர்ச்சியாக கேட்டறிந்து கொண்டேயிருந்தார். முகம் தெரியாத இருட்டு கவிழ்ந்த பொழுதில் சிலுசிலுக்கும் குளிரோடு வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் பேருந்திலிருந்து இறங்கித் திரும்பிய நொடி, சிநேகமாய் கை அசைத்தார் செந்தூரன். முதல் பார்வையிலேயே சிநேகம் கொப்பளித்தது. கை பற்றிப் பயணம் குறித்து கேட்டு புறப்பட எத்தனித்தபோது எங்கே என்று கேட்டேன், வீட்டுக்கு என்றார். 
இளவேனில் - தமிழ்நதி வீடு
நகரத்தின் வீதிகளைக் கடந்து, காற்று சிலுசிலுக்க தமிழ்நதி அவர்களின் இளவேனில் வீட்டிற்கு சென்றடைந்தேன். அந்நிய தேசம், முன்பின் அறியாத அந்நிய மனிதன் என்ற உணர்வு ஏதுமின்றி அன்பு நிறைய அந்த வீட்டின் பிள்ளைகள் என்னை வரவேற்றனர். புதிய ஊர், முன்பின் அறியாதவர்களின் வீடு என்ற உணர்வும் துளியும் இல்லாமல், என்னால் சட்டென அந்த இல்லத்து மனிதர்களோடு மிக இயல்பாக பழக முடிந்ததுவும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

மரங்கள் சூழ அழகியதொரு வனமாய்
இளவேனில் இல்லம், ஒரு மிக அழகியதொரு பறவைக் கூடு. தமிழ்நதி அவர்களின் சகோதர உறவுகளின் பிள்ளைகள் செந்தூரன், தீபா, சாந்தினி, கோபி என சிறகடிக்கும் அன்புப் பறவைகள். எல்லா வார்த்தைகளிலும், எல்லா நடத்தைகளிலும் அந்தப் பிள்ளைகளிடம் அன்பு கொப்பளித்தது. முதல் நாள் இரவு முழுக்க பயணம், அடுத்து பகல் முழுதும் பயணம் என்று களைத்துக்கிடந்த உடம்பை அந்தப் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சு மனதை குதூகலிக்கச் செய்து, தொடர் அரட்டையில் நடுநிசி வரை நகர்த்தி உறங்கவிடாமல் உற்சாகமாகவே வைத்திருந்தது. 
தீபாவின் கை வண்ணம்
செந்தூரன் உட்பட அவர்கள் அனைவருமே சில வருடங்கள் சென்னையில் தமிழ்நதியோடு வசித்திருக்கிறார்கள். நிறைய தமிழகத்து எழுத்தாளர்களை, பதிவர்களைச் சந்தித்த அனுபவம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தீபாவிடமிருந்து புத்தகங்கள் குறித்து, சென்னையில் நடந்த சில விழாக்கள் குறித்து, தமிழ்நதி குறித்து, அவர்களின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்தென பேச்சு அருவியாய் விழுந்து கொண்டேயிருந்தது. ஆச்சரியமாய் அவதானித்துக் கொண்டிருக்க மட்டுமே செய்தேன், காரணம் தீபா குறிப்பிட்ட அளவிற்கு எனக்கு பரிச்சயம் இல்லை என்பதுவும் ஒரு காரணம்.

புத்தகம், காஃபி - உபசரிப்பு
”மாமிய (தமிழ்நதி) சென்னையில் கண்டுறீக்கீங்கதானே”? என தீபா கேட்டபோதுதான் இதுவரை தமிழ்நதியிடம் நான் பேசியது கூட இல்லை, சில மாதங்களுக்கு முன் கானல் வரி வாசித்துவிட்டு மின்னஞ்சல் இட்டது, தற்போது இலங்கைப் பயணத்திற்காக மின்னஞ்சல் அனுப்பியதையும் கூறினேன். அங்கு தங்கியிருந்த தினத்தன்று தமிழ்நதி செந்தூரனை கைபேசியில் அழைத்த போதுதான் முதன்முறையாக அவர்களிடம் பேசினேன். நீங்கள் வழக்கமாக சாப்பிடு உணவுகள் வேண்டாம் என, நான்கு வேளைகளும் இலங்கை உணவு வகைகள் என மிகச் சிரத்தையாய் உணவு பரிமாறி, இந்த புத்தகம் வாசிங்க, அந்தப் புத்தகம் வாசிங்க என, ஒவ்வொரு செய்கையிலும் அன்பால் அந்தப் பிள்ளைகள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அடுத்த நாள் மதியம் வரை யாழ்ப்பாணம் பயணத்திற்கு முயன்று அனுமதி கிட்டாததால் மாலை வீட்டிற்கு திரும்பினோம். கொழும்புவிற்கு அன்று இரவே திரும்பலாமா? அல்லது அடுத்த நாள் அதிகாலை புகையிரதத்தில் கிளம்பலாமா என குழப்பத்தோடு யோசித்த நேரத்தில் மது அழைத்தார்.

இரவு கிளம்பி அதிகாலை கொழும்பு அடைவதுதான் சிறப்பு என்று வழிநடத்தத் துவங்கினார். ஆனால் அதே இரவு மது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லப் பயணம் துவங்கினார். நான் வவுனியாவிலிருந்து கொழும்பு கிளம்பினேன். தான் கொழும்பில் இல்லாவிட்டாலும், நான் கொழும்பை வந்தடையும் அதிகாலை நேரத்தில் தனது நண்பர் நிமல்ராஜ் மூலம் கொழும்பில் இறங்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் நிமல் ராஜ் அழைத்து ”காலை ஐந்து மணி சுமாருக்கு கொழும்பு நகரை அடைவீர்கள், பேருந்திலிருந்து இறங்கும் முன் பத்து நிமிடங்களுக்கு முன்பாக என்னை அழையுங்கள், நான் அழைத்துக்கொள்கிறேன்” என்றார்.
பேருந்து கிளம்பும் போது, என் கைபேசி உரையாடல்களைக் கவனித்த திருகோணமலையைச் சார்ந்த நபர் ”என்ன சார் தமிழ்நாடா” என விசாரித்து, காலை எங்கு இறங்குவது, அந்த நண்பரை எங்கு வரச்சொல்வது என்று வழிநடத்தத் துவங்கினார். காலை கொழும்பை அடைந்து நான் இறங்க வேண்டிய இடத்தில் அவரும் இறங்கிக் கொண்டார். மதுவின் நண்பர் நிமல்ராஜ் வந்து என்னை அழைத்துக் கொள்ளும் வரையில் கூடவே இருந்து அவரோடு அனுப்பிவிட்டுச் சென்றார். நிமல்ராஜ் என்னை அழைத்து விடுதியில் சேர்த்தார்.

கன்கோன் கோபியுடன் நான்!
பயண அலைச்சலை கொஞ்சமாய் விடுதி அறையில் கரைத்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியாய் அறைக் கதவைத் தட்டி, அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க வந்தார் கன்கோன் கோபி, எது கேட்டாலும் சிரிப்பு, அதையொட்டி சன்னமான குரலில் ஒரு சின்ன பதில். பதிவுலகில் கிரிக்கெட் சுரங்கம் லோஷன் என்று சொன்னால், கான்கோன் கோபி லோசனின் வாரிசு என்று சொல்லலாம் அப்படியொரு கிரிக்கெட் ஆர்வம். நீண்ட நேரம் எங்கள் கடிகளைத் தாங்கிக் கொண்டிருந்ததை, சில கணங்களில் பார்க்க பாவமாகவும் இருந்தது.

இந்தப் பயணத்தில், சந்திக்க பெரிதும் விருப்பப்பட்ட றமேஸ் கொழும்பு வரும் திட்டத்தில் சில தனிப்பட்ட சிரமங்கள் ஏற்பட, அவரால் வரமுடியாமல் போனது வருத்தமாய்ப் பதிந்தது. மீண்டும் யாழில் அல்லது கொழும்பில் சந்திப்போம் என நினைத்து கை அசைத்துப்போன மது நான் கொழும்பு வந்த நாளில், யாழ்ப்பாணம் சென்றுவிட மதுவையும் மீண்டும் சந்திக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். மூன்று நாட்களாக, இலங்கை இந்தியா எனப் பேசித்தீர்த்து கைபேசி இணைப்பை திருப்பியளிக்கும் போது, எவ்வளவோ வற்புறுத்தினாலும் முதல் சந்திப்பில் பணத்தை முன்னிறுத்தக் கூடாது என மதுவதனன் அதற்கான செலவுகளைப் பெற மறுத்தது மட்டும் சமாதானமாக முடியாததாக இருந்தது.

இரண்டு இரவு, மூன்று பகல் என அழகான, அர்த்தமுள்ள 60 மணி நேரம், இதயத்துக்கு மிக நெருக்கமாய் அமர்ந்து வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத மாதிரி அன்பை சொட்டுச் சொட்டாய் சுரக்கச்செய்த இந்த மனித உள்ளங்களை, நினைக்கும் நேரமெல்லாம் நெஞ்சம் முழுதும் நிறைந்து துள்ளுகிறார்கள்.

அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.

அன்பிற்கு ’நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை போதுமா என்று தெரியவில்லை, அதையும் தாண்டி அந்த அன்பை சக மனிதர்களிடம் இறக்கிவைப்பதே நியாயமான தீர்வாகவும் இருக்க முடியும்.

சந்திக்கும் வரை சற்றும் நேரிடைப் பரிச்சயம் இல்லாமல், பார்த்த கணத்தில் பாசத்தால் கட்டி இழுக்கும் இந்த நட்புள்ளங்களை நினைத்துப் பார்க்க…. 24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் கனிணி விசைப்பலகையில் எழுத்துகளைத் தேடி விரல்கள் பாயும் இந்த நேரமே ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

______________________

47 comments:

sathishsangkavi.blogspot.com said...

நானும் உங்களுடன் கொழும்பு வந்ததாக உணர்வு உங்கள் பதிவுகளில்...

'பரிவை' சே.குமார் said...

//அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.//


இந்த இரண்டு வரிகள் போதுமே... மொத்த பதிவின் உணர்வைஸ் சொல்ல... நல்ல பகிர்வு.

cheena (சீனா) said...

அன்பினிற்கு ஒரு அழகான விளக்கம் - முன் பின் தெரியாத முகங்களிடம் இருந்து அன்பு வெளிப்படும் போத்தான் அதன் பொருளே விளங்கும். நல்லதொரு இடுகை

பிரபாகர் said...

உணர்வுப்பூர்வமான விவரித்தல்!... கதிர் த கிரேட்!

பிரபாகர்...

ராமலக்ஷ்மி said...

பயண அனுபவத்தை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

கசியும் மெளனத்தின் இரண்டு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா said...

தங்களை காண அவலாக இரந்தாலும் காலம் கைகூடவில்லை பரவாயில் மீண்டும் இலங்கை வரும் போது யாழில் சந்திப்போம் சகோதரரே...

பகீ said...

எங்கட ஊருக்கு வாறதெண்டா சும்மா இல்லை பாருங்கோ..

CS. Mohan Kumar said...

Armaiyaana pathivu.

ஈரோடு கதிர் said...

என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியான ஒரு பின்னூட்டம்

Ganapathi Gopal:

anna Neenga eppadi vena enna ninaichukalam athu paththi enaku kavalai illai ....

Erkkanave LTTE en manathil oru kevalamana pimbaththai erppaduththi vaiththu irukiraarkal

aduththu vaiko , seeman , tiruma , nedumaaran su pa vee , pondravarkalum tamil valai pathivarkal , FB ,orkut pondra samooga valaithalangalil tamil unarvu endru pithatri kolbavarkalum erppadithi iruntha bimbam veru thunaikku vanthu sernthathu

iila tamilarkalai patri ...enaku siru vayathil agathikalaga engal ooruku arukil mugamil vasiththa iila tamilarkalai paarthu irukiren athil oruvar nalla oviyam varaivaar niraiya niruvanagaluku peyar palagai eluthi thanthum irukirar ... innamum avar varaintha kamal oviyam antha mugamin suvari irukirathu .... anthanai thavira veru anubavam enaku kidaiyathu aanal intha mer sonna nabarkal ennulviththa pimbam eppadi pattathu theriyuma iilaththil vasippavarkal ellam KAIYAALAGATHAVARKAL PICHAIKAARARKAL endruthan pathinthu vittathu ... aanal

ungal pathivu avarkalai patriya en ennaththai matri vittathu ... iththanai naal antha tamil INA unarvaalarkal koduththiruntha pibbaththai ungal oru pathivu adithu kaali pani vittathu anna

iila sagotharkale ennai manniyungal ungal meethu naan kondu iruntha tavarana ennangaluku

vasu balaji said...

முதலில் மூன்றாம் ஆண்டு துவக்கத்துக்கு வாழ்த்துகள். அழகான விவரிப்பு இன்னும் நம்மவரை இணக்கமாகக் காட்டுகிறது. ஒரு புறம் மெல்லிய வலியுடனான ஏக்கமும். அவ்வப்போது கைபேசியில் தொடர்புகொண்டு நானும் உங்களுடன் பயணித்ததாகவே உணர்கிறேன்.

Unknown said...

உணர்வுப்பூர்வமான பயணம்...

செ.சரவணக்குமார் said...

இலங்கை சென்று வந்த பயண அனுபவத்தையும் இலங்கை பதிவர் நண்பர்களையும் அற்புதமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். அன்பிற்கு 'நன்றி' என்ற ஒற்றைச் சொல் போதாதுதான். அன்பிற்கு மாற்றாக அன்பை மட்டுமே தர இயலும் இல்லையா கதிர் அண்ணா.

மூன்றாம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துகள்.

Ramesh said...

வாழ்த்துக்கள் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்துக்கு

கனமான இதயம் இலேசாக வாழ்த்துக்கள்
அன்பு கொண்டு
அன்பு செய்வோம்
இதயம் கொண்டு
இணைப்பு செய்வோம்

எல்லாமே அப்பாவுக்கே.....

ம.தி.சுதா said...

சகோதரர் Ganapathi Gopal: அவர்கட்கு எங்கள் மீதான தங்களின் தற்போதைய புரிதலுக்கு மிக்க நன்றி நாங்களும் தங்களைப் போல் தான் சாதாரண மனிதர்கள்.. என்ன ஒன்று எங்கள் பிறப்பே பதுங்கு குழிகழுக்குள்ளும் வீதியிலுமாகிவிட்டது. எங்களிலும் மிகப் பெரிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.. போர் எங்களை வீரர்களாகக் காட்டினாலும் எங்களை மிகவும் ஏழ்மைப் படுத்திவிட்டதால் தான் நாங்கள் பிச்சைக்காரர் போல் ஆகி விட்டோம்.... இந்த இன ஒதுக்கலுக்குள்ளும் மீண்டும் நாங்கள் சாதித்துக் காட்டுவோம் (வெளி நாட்டவர் போரைத் தவிர்ப்போம் என்று சொல்லி விட்டால் எமக்குப் போதும் காரணம் எங்களது இப்போதுள்ள கொஞ்ச நிம்மதியையும் சில வெளி நாட்டவர் தம் பணம் புகழ் சம்பாதிக்கும் ஆயுதமாக மாற்றி விட்டனர்)

அவருக்கு தெளிவுபடுத்தும் இப் பதிவை எழுதிய சகோதரருக்கும் மிக்க நன்றி... முடிந்தால் இப் பதிலை அவருக்கு சேர்ப்பித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

ராஜ நடராஜன் said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Paleo God said...

நெகிழ்ச்சி.
வாழ்த்துகள்! :))

அகல்விளக்கு said...

நெஞ்சம் முழுதும் நெகிழ்ச்சி அண்ணா...

அவர்களுக்கு என் அன்பும், மகிழ்ச்சியும் போய் சேரட்டும்... :-)

சத்ரியன் said...

கதிர்,

அன்பு, நட்பு...இது போதும் வாழ்ந்திட. .!

பிறந்த நாள் வாழ்த்துகள் “ கசியும் அன்பிற்கு”!

காமராஜ் said...

'கண்டி கண்டின்புற வேண்டிய இடங்களில் ஒன்று'.

இப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த மனப்பாடப்பகுதி.என் நினைவு சரியாக இருக்குமானாம் அது திருவிக வின் 'எனது இலங்கைச்செலவு'.
ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ வரும்.அந்த படம் மறுவி மறுவி நான் இறுதியாகப்பர்த்த ஆவணப்படம்.அது ரெண்டு பக்கமும் இருக்கும் அமைதி யாசிக்கும் மனிதர்களைச்சொல்லும்.ஆனாலும் உள்ளுக்குள் ஒரு அழுகுரல் மௌனமாகப்பதிவாகியிருப்பதை இயக்குனராலும் கட்டுப்படுத்த இயலாது.அது தான் இலங்கை என்கிற சொல் கொண்டு வரும் ஒரு சோகம்.

அங்கே எங்கள் அன்புக்கு நெருக்கமான கதிர். அவரின் கூர்மையாந எழுத்து.

ரொம்ப ரசித்தேன் கதிர்.படங்களையும்.

Unknown said...

எப்படி சொல்ல கதிர். உங்கள் பயணம் சுவராசியமானதே! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

VELU.G said...

சுவாரஸ்யாமான பயணக்கட்டுரை

மூன்றாம் ஆண்டிற்கு வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

பகிர்வுக்கு மிக்க நன்றி!!

இடியாப்பமும் தேங்காய்ப்பூச் சம்பலும்...சொதியும்... பழைய நினைவுகள்.... இருந்து சாப்புடுங்க மணியண்ணை எனப் பிரியமுடன் அணைத்த நெஞ்சங்கள்...ப்ச்...

Chitra said...

அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.......உண்மை. உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதை தொட்ட அருமையான பதிவு.

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

NAANUM SRILANKA SENDRU VANDHADHU POLA UNARGIREN...ERODE VARUMPODHU UNGALAI PARKKA VENDUMNU AASAI PADUREN KADHIR ANNA,,,,

Jerry Eshananda said...

வாழ்த்துகள் கதிர்.....மனம் என்னவோ நிறைவாய் இருக்கிறது.மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அன்பரசன் said...

அருமையானதொரு பயணம்.

ARV Loshan said...

நன்றிகள் எல்லாம் வேண்டாமே கதிர்..
இது மொழியால் நட்பால் இணைந்த ஒரு உறவு :)
உங்கள் அன்பான வரிகளில் மகிழ்ச்சி.

மூன்றாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

ARV Loshan said...

zzz

தமிழ்நதி said...

அன்புள்ள கதிர்,

முதலில் மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் உங்கள் பதிவுலகப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

உங்களது இந்தப் பதிவைப் படிக்கும்போது மனம் அப்படி நெகிழ்ந்துபோய்விட்டது. எனது பாதுகாப்பில் விடப்பட்ட பிள்ளைகளுக்கு எது இல்லாவிட்டாலும் மனிதர்கள் குறித்த பரிந்துணர்வு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவர்களிடம் அது இருக்கிறதென்பதை உங்கள் பதிவின் வழியாக அறிந்து மனம் குளிர்ந்தேன்.

நேற்று ஒரு கசப்பான பதிவைப் படிக்க நேர்ந்தது. “மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா?”என்று நினைத்துக்கொண்டேன்.

இன்று...

"அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை."

என்ற உங்கள் வார்த்தைகளை உங்களைப் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்பவே உணர்வுப் பூர்வமா இருந்தது படிக்கப் படிக்க.. ம்ம்..

SShathiesh-சதீஷ். said...

உங்கள் இலங்கை பயணத்தில் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. இருப்பினும் நல்ல பல நினைவுகள் உங்களுக்கு சேர்ந்தது சந்தோசம்.

Mahi_Granny said...

பயண அனுபவத்தை எப்போ எழுதுவீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். அன்பான நண்பர்களுடன் பயணித்த திருப்தி. கசியும் மௌனத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

a said...

mekischiyana payana anupavam....... vasikkum enkalukkum

ஹேமா said...

நானும் என் வீடுவரை உங்களோடு போய் வந்ததாக உணர்கிறேன் கதிர் !

ஹேமா said...

என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கதிர் !

கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி கதிர்... ஊருக்குப் போய் வந்த மாதிரி இருக்கு..

மாதவராஜ் said...

கூடவே வரும் நினைவுகள்.பகிர்வுக்கு நன்றி, கதிர்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கதிர்,

பதிவை வாசிக்கும்போது மீண்டுமொருமுறை உங்களைச் சந்தித்த நிகழ்வுகளுக்குள் சென்றுவிட்டேன்.

பதிவு இலங்கைக்கு இனி வரஇருக்கும் நண்பர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கொடுக்கும்.

உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு இன்னும் உத்வேகத்தை அளிக்கிறது. நல்ல நினைவுகள்.

நல்லாய் இருங்கோ கதிர்.

-மதுவதனன் மௌ.

பவள சங்கரி said...

அட மூன்றாம் ஆண்டு துவக்கமா, வாழ்த்துக்கள். நல்ல ய்தார்த்தமான பதிவுங்க கதிர். பிறந்த நாள் கேக் தருவீர்கள் என்று காத்திருந்தேன்......

க.பாலாசி said...

ரொம்ப நெகிழ்வான நினைவுகள், பயணம். எந்த வழியாயினும் அன்பை மட்டுமே கொடுக்கும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நம்மால் சொல்லமுடிவது அதே அன்புகலந்த நன்றி மட்டும்தானே. இனிமை.

vasan said...

/அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை./
அனுப‌வ‌க் குர‌(ளா)லாய். உணர்வின் அதிர்வு ஓசையாய் ப‌திவுவில்.
மூன்றாமாண்டு நுழைவுக்கு வாழ்த்துக்க‌ள்.

sakthi said...

அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.


அசத்தட்டீங்க ஒரே வரியில்!!!!

நல்ல பகிர்வு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சங்கவி

நன்றி @@ சே.குமார்

நன்றி @@ cheena (சீனா) அய்யா

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ ம.தி.சுதா
ஒரு வேளை நான் யாழ் வந்திருந்தால் சந்தித்திருந்திருக்கலாம் சுதா!

நன்றி @@ பகீ
உண்மைதான்!

நன்றி @@ மோகன் குமார்

நன்றி @@ வானம்பாடிகள்
ஊருக்குப்போயும் பேசாம இருக்கோமா!!!???


நன்றி @@ கே.ஆர்.பி.செந்தில்

நன்றி @@ செ.சரவணக்குமார்
ஆமாங்க சரவணன், ஆனால் எல்லா இடத்திலும் இப்போது நினைக்கும் அளவிற்கு அன்பை கொடுக்க முடிவதில்லை

நன்றி @@ றமேஸ்-Ramesh
நம் அறிமுகத்திற்கே அவரே காரணம்!
சந்திக்காததுதான் வருத்தம் றமேஸ்


நன்றி @@ ராஜ நடராஜன்

நன்றி @@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி @@ அகல்விளக்கு
நிச்சயம் சேரும் ராஜா!

நன்றி @@ சத்ரியன்
கசியும் அன்பிற்கு..
ஹ ஹ ஹ.. :))

நன்றி @@ காமராஜ்
மிக்க மகிழ்ச்சி அண்ணே!

நன்றி @@ Sethu

நன்றி @@ VELU.G

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ Chitra

நன்றி @@ பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:
சதீஷ் நிச்சயம் சந்திக்கலாம் வாங்க

நன்றி @@ ஜெரி ஈசானந்தன்

நன்றி @@ அன்பரசன்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ LOSHAN
மகிழ்ச்சி நீடிக்கட்டும் லோஷன்!

நன்றி @@ தமிழ்நதி
இந்த அன்பு உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்துகளாக தூவட்டும்

நன்றி @@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நன்றி @@ SShathiesh-சதீஷ்.
நிறையப் பேரை சந்திப்போம் என எதிர்பார்த்தேன். தொடர் விடுமுறையும் தடுத்துவிட்டது

நன்றி @@ Mahi_Granny
எப்படியோ உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நலம்தானே!?


நன்றி @@ வழிப்போக்கன் - யோகேஷ்

நன்றி @@ ஹேமா
மகிழ்ச்சி ஹேமா!

நன்றி @@ கலகலப்ரியா
நீங்கள் கேட்டது போல் படங்கள் எடுக்க சூழ்நிலை அனுமதிக்கவில்லை ப்ரியா

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ மதுவதனன் மௌ.
மது.பயண அவசரங்களில் உடன் நின்று ஒரு படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.
என்னை முழுதும் இயக்கியது நீங்கள் தானே!

நன்றி @@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
கேக்-கை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் கழித்துக்கொள்ளலாம்!

நன்றி @@ க.பாலாசி
ஆமாம் பாலசி!

நன்றி @@ vasan
||அனுப‌வ‌க் குர‌(ளா)லாய்.||
ரசித்தேன்

நன்றி @@ sakthi

Denzil said...

"பதிவு இலங்கைக்கு இனி வரஇருக்கும் நண்பர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கொடுக்கும்." - உண்மைதான். ரொம்ப நாளாகவே அந்த ஆசை உண்டு. இப்போது அதிகமாயிருக்கிறது. விருந்தோம்பலுக்கு பேர் போனவர்களுக்கு நல்ல பதில் மரியாதை இந்த நெகிழச்செய்யும் பதிவு.

மோனி said...

சில விஷயங்களின் முடிவு
சில விஷயங்களின் ஆரம்பம்

கண்ணீரும் - புன்னகையும
:-(
:-)

Prapavi said...

நல்ல உள்ளங்கள் எங்கும் நிறைந்திருக்கிறது, விருந்தோம்பல் பண்பும் இன்னும் தழைத்து வாழ்கிறது என்பதை உணரமுடிகிறது! நல்ல பதிவு, நட்பு தொடரட்டும்!