வாடிய நரம்புகளோடுஓங்கியடித்த சம்மட்டியில்
உதிர்ந்துபோன மோதிர விரலின்
முக்கால் பாகம்...

காய்த்துப் போன
கை விரல்களின் நகக் கண்ணில்
கெட்டித்துப்போன கிரீஸ் மை...

ஆணித் துண்டுகள் தைத்து
யானைத் தோல்போல்
ஆன உள்ளங்கால்...

தகிக்கும் இரும்புத்துண்டு
எகிறிப் பறந்து விழுந்ததிலான
கன்னத்து தழும்பு...

சனிக்கிழமை சாயந்திரம்
சம்பளப் பணத்திற்கு காத்திருக்கும்
அம்மாவின் நம்பிக்கை...

நடுச்சாமத்திலும் தீராத
முதலாளியின் டாஸ்மாக் சரக்கும்,
மீன் துண்டும்...

இதுவரை எதுவுமே
மாறிவிடவில்லை...

ஆனாலும்...
அவன் பொறந்ததிலிருந்து
பொற்கால ஆட்சிதான் நடக்கிறதாம்
இந்த பொய்யர்கள் ஆளும் தேசத்தில்...

விழித்திருந்து உழைக்கும் இரவுகளில்
இமை மேல் விழித்துக் கிடக்கும்
உறக்கம் போல்...

வதங்கிய வயிரோடு
வாடிய நரம்புகளோடு
நம்பிக்கையோடு காத்திருக்கிறான்...

7 comments:

sarathy said...

நச்சுன்னு இருக்கு...

sarathy said...

// அவன் பொறந்ததிலிருந்து
பொற்கால ஆட்சிதான் நடக்கிறதாம்
இந்த பொய்யர்கள் ஆளும் தேசத்தில்... //

சிந்திக்க வேண்டிய விசயம்...

ராமலக்ஷ்மி said...

//ஆனாலும்
அவன் பொறந்ததிலிருந்து
பொற்கால ஆட்சிதான் நடக்கிறதாம்//

'பொற்'காலம் என்றைக்கும் ஆளுபவர்களுக்குதானே?

நல்ல கவிதை கதிர்!

ஈரோடு கதிர் said...

//சிந்திக்க வேண்டிய விசயம்...//
ஆமாம்... ஆனாலும் வெறும் சிந்தனையோடு
மட்டுமே நிற்கிறோமே...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி சாரதி

//'பொற்'காலம் என்றைக்கும் ஆளுபவர்களுக்குதானே? //

நிச்சயமாக

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராமலஷ்மி

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லா வரிகளும் அற்புதமாயிருக்கிறது கதிர் சிந்தனைகளுடன்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத.........

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்.........வசந்த் said...
எல்லா வரிகளும் அற்புதமாயிருக்கிறது கதிர் சிந்தனைகளுடன்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத.........//

வசந்த் நன்றிகள் பல

Unknown said...

உழைக்கும் வர்க்கம் உழைத்துக்கொண்டே........அனுபவிக்கும் வர்க்கம் அனுபவித்துகொண்டே....ஒன்றும் சொல்வதற்கில்லை.