பொங்கல்:
வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தோடு பொங்கல் நாள் மகிழ்ச்சியில் நகர்ந்தது. விவசாயப் பின்னணி என்பதால் மாட்டுப் பொங்கல் மட்டுமே வழக்கமாய்க் கொண்டாடி வருவதில் ஒரு மாற்றமாய் பொங்கல் தினத்தன்று உறவுகளோடு ஒன்று கூடி குழந்தைகள் சூழ பொங்கல் வைக்கலாமே என்ற ஆசை மிக அழகியதாய் நிறைவேறியது. பலகாரங்களைவிட, பொங்கலில் கலந்திருந்த வெல்லச் சுவையைவிட, சுற்றியிருந்த உறவுகளின் புன்னகைத்த முகங்களே கூடுதல் சுவையாய் இருந்தது.
அடுத்த நாளும் கிணற்றில் குளியல், தோட்டத்தில் வெட்டிய கரும்பு என மாட்டுப் பொங்கலும் மகிழ்வாய்ப் போனது!
ஓய்வில் உரல்களும், உலக்கைகளும்:
திங்களூருக்கு அருகில் இருக்கிறது அப்பிச்சிமார் மடம். குறிப்பிட்ட தினங்களில் பல ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் வருவதுமுண்டு. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட மனிதர்களின் வேண்டுதலுக்குரிய ஓர் இடம். பல நூறு முறை திங்களூருக்குச் சென்று வந்தாலும் மடத்திற்குச் செல்ல நினைத்தது இந்த பொங்கல் தினத்தில் மட்டுமே. அப்பிச்சிமார், இராவணத்தன், மசிரியாத்தாள் ஆகியோரின் சமாதிகள் தனித்தனியே வணங்கப்படுகின்றன.
குறிப்பிட்ட தினங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பேய் ஓட்டுதல் நடைபெறும் என்று கூறுகிறார்கள். மடத்தில் ஒரேயொரு ஒற்றை மான் மட்டும் கம்பிகளுக்குள் இருந்து வருவோர் போவோரை ஏக்கமாய் பார்த்து நின்று கொண்டிருக்கிறது. அருகில் சென்றால் தடவிக் கொடுக்க ஏதுவாய் அமைதிகாக்கிறது. மடத்தில் கவர்ந்த விசயம் அழகாய்க் கிடந்த உரல்களும், உலக்கைகளும். நெல் கொண்டுவந்து அங்கேயே குத்தி, அரிசியாக்கி, பொங்கல் வைத்து சாப்பிட்டுப் போனதை நினைவுபடுத்தும் வகையில் அழகாய்க் கிடக்கின்றன உரல்களும் உலக்கைகளும்.
வலைப்பூக்களில் எழுத்தாளர்கள்:
கங்கணம், நிழல்முற்றம், கூளமாதாரி ஆகிய புத்தகங்களை எழுதிய நேசத்துக்குரிய எழுத்தாளரான திரு. பெருமாள் முருகன் சமீபத்தில் ”பெருமாள் முருகன்” என்ற வலைப்பூ மூலம் இணையத்தில் காலடி பதித்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான மாதொருபாகன் மிக நிச்சயமாக பேசப்படும் ஒரு புத்தகமா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் ஒரு எழுச்சி மிகு பேச்சாளராக அறியப்படுபவரும், இராமைய்யாவின் குடிசை, என்று தணியும் ஆவணப்படங்களின் இயக்குனருமான பாரதிகிருஷ்ணகுமார் ”உண்மை புதிதன்று” என்ற வலைப்பூ வாயிலாக இணையத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இருவரையும் வலைப்பூ எழுத்தில் காண்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்மணம் விருதுகள்:
தமிழ் வலைப்பூக்களின் மிக முக்கிய அடையாளமாக இருக்கும் தமிழ்மணம் திரட்டியின் 2010 விருதுகளில் என்னுடைய
”வவுனியாவுக்குப் போயிருந்தேன்” இடுகைக்கு முதல் பரிசும்,
”கோடியில் இருவர்” இடுகைக்கு இரண்டாவது பரிசும்
கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு கட்டங்களில் வாக்குகள் மூலம் தேர்வு பெற்று, நடுவர்கள் மூலம் இறுதிச்சுற்றில் தேர்வு பெற்றிருக்கின்றன. தேர்வு பெற உதவிய அனைவருக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
”வவுனியாவுக்குப் போயிருந்தேன்” இடுகைக்கு முதல் பரிசும்,
”கோடியில் இருவர்” இடுகைக்கு இரண்டாவது பரிசும்
கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு கட்டங்களில் வாக்குகள் மூலம் தேர்வு பெற்று, நடுவர்கள் மூலம் இறுதிச்சுற்றில் தேர்வு பெற்றிருக்கின்றன. தேர்வு பெற உதவிய அனைவருக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
||தமிழ்மணத்தில் நடுவராக நானும் கலந்து கொண்டிருந்தேன். உங்களது “வவுனியாவுக்குப் போயிருந்தேன்“ படைப்புச் செறிவும் மனவெழுச்சியைத் துாண்டுவதாகவும் அமைந்திருந்தது . ”எனது நண்பர்தான்... அப்படி இருப்பதனால் நல்ல படைப்பாக இருந்தும்கூட, அதைப் பரிந்துரைக்கத் தயக்கமாக இருக்கிறது. இது எனது ஆலோசனை. நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று எழுதியிருந்தேன். தரமானதைத் தேர்ந்தெடுத்த அவர்களது முடிவு மகிழ்ச்சி அளித்தது.||
தமிழ்மணம் தேர்வு குறித்து, நடுவராக இருந்த நட்பிற்குரிய ஒரு பதிவர் எனக்கு அனுப்பியிருந்த மின்மடல். நட்பு என்ற காரணத்திற்காக இதைத் தேர்ந்தெடுங்கள் என்ற அழுத்தத்தைக் கொடுக்காமல், தன் கருத்தை நேர்மையாக திரட்டிக்கு அனுப்பிய நடு நிலைக்கு நன்றிகளும் வணக்கங்களும். நல்ல நடுவர்களை இனம் கண்ட தமிழ்மணத்திற்கும் பாராட்டுகள்.
புத்தகங்களை வாங்கும் பழக்கத்தில் தொய்வில்லாத போதும், இணையத்தில் அதிக நேரம் தீர்ந்து போவதால் வாசிப்பில் மிகப்பெரிய தொய்வு விழுந்து விட்டது உண்மையே. வாசிக்காமல் அலமாரியில் உறங்கும் புத்தகங்கள் மிகப் பெரிய குற்ற உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தும் சூழலில் தமிழ்மண விருதுகள் வாயிலாக வரவிருக்கும் புத்தங்கள் வாசித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தை மனதிற்குள் திணித்துக் கொண்டிருக்கிறது.
சபரி மலை:
இரண்டு நாட்களாய் தொலைக்காட்சியை விட்டு தொலைவில் இருந்ததால் அதிர்ச்சி தரும் செய்திகள் எல்லாம், காலம் கடந்து கேட்டதால் மிகச் சாதரணாமாவே தோன்றியது. சபரிமலையின் சாவுகள் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதைக்குறை சொல்ல, பக்தியோ, பணமோ ஆத்திரம் மிகுந்ததாகவே மாறிவிட்டது. எல்லாவற்றையும் பணத்தால் தீர்க்க முடியும் என்பது போல், எல்லாக் கஷ்டத்தையும் பக்தியால் கரைத்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறதோ என்றே தோன்றுகிறது. மாலையணிந்து செல்வதும், பாதயாத்திரையாய் பயணிப்பதும் ஒரு வித அழகியல் என்ற மனோநிலை கூடிவிட்டதோ? தேசிய நெடுஞ்சாலையில் பல கல் தொலைவிற்கு சாரைசாரையாய் பாதயாத்திரை செல்லும் பல்லாயிரக் கணக்கானோரின் வெற்றுப் பாதங்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு நம்பிக்கை மனிதர்களை அதன் போக்கில் நடத்திச் செல்வது மட்டும் புரிகிறது.
பழகிப்போச்சு:
காலையில் பதிவுலக நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம், திரைப்படம், சில நடிகர்கள், அரசியல், பங்குச்சந்தை, சீனாவின் ஆதிக்கம் என என்னவேன்னவோ பேசிக்கொண்டிருந்தோம். யார் ஒருவரும் 63 ரூபாயை எட்டியிருக்கும் பெட்ரோல் விலை குறித்து நினைக்கவுமில்லை, பேசவுமில்லை. பேசியும் ஒன்றும் கிழிக்கமுடியாது என்பதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து. எனவே இது குறித்து முனகக்கூட மனதில்லை. இப்படித்தான் நடத்துவோம், உங்களால் என்ன செய்திட முடியும் என்ற அரசாங்கத்தின் மனோபாவத்திற்கு முன்னால் மண்டியிட்டு குரல்களற்றுக் கிடக்கிறோம். முப்பது நாட்களுக்குள் 12% அதிகரிக்கப்பட்ட பெட்ரோல் விலையில் எட்டணாவோ, ஒரு ரூபாயோ குறைக்கப்பட்டால் ஏற்படும் மகிழ்ச்சியில் ஏற்றங்களையும், ஏமாற்றங்களையும் மறந்துபோகும் வரம் நமக்கு இருக்கத்தானே செய்கின்றது.
-0