நினைவுகளில் தணியும் பயணத் தாகம்

 எல்லாம் சரியாக இருந்திருந்தால், எத்தனையெத்தனையோ நிகழ்ந்திருக்கும், நானும் இனிதே கடந்திருப்பேன். அவற்றில் மிக முக்கியமான ஒன்று, இந்த நாட்களில் நான் இலங்கையின் ஏதோ ஒரு நகரத்தில் இருந்திருப்பேன் அல்லது அதற்கான

பயணம் மற்றும் தயாரிப்பு ஆயத்தத்தில் இருந்திருப்பேன்.

குறிப்பாக, பயணம் குறித்தான தாகத்திற்கு நினைவுகளைக் கொண்டுதான் ஈடு செய்ய முடிகின்றது.

இது...
கடந்த ஆண்டு இதே நாளில் இலங்கைக்கு பயணித்த அனுபவம். பயணம் முடிந்து சில வாரங்கள் கழித்து எழுதி, ஏதோ ஒரு மனநிலையில் பகிராமல்விட்ட அனுபவம். அந்த பயணத்தில் கழிந்த பதினான்கு நாட்கள் குறித்து அப்போது, எழுதி மற்றும் குறித்து வைத்தவை, நினைவில் இருப்பவை அடுத்த இரு வாரங்களுக்கு அவ்வப்போது வெளியாகும்.

இனி....

29.09.2019 ஞாயிறு




இதுவரை இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணங்களில் இந்தமுறை சற்று கனமான பயணம் என்றே சொல்ல வேண்டும். பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டாம், புத்தகங்களின் கனம் தான். ஏற்கனவே வேட்கையோடு விளையாடுகணிசமாக அங்கு சென்று சேர்ந்து வரவேற்பு பெற்றிருந்த நிலையில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டியது ஒருவகையில் கடமையும்கூட. ஆகவே அளந்து அளந்து புத்தகங்களின் எண்ணிக்கையை முடிந்தவரை கூட்டிக் கொண்டேயிருந்தேன். அத்துடன் பதினான்கு நாட்கள் பயணம் என்பதால் உடைகளின் எண்ணிக்கையும் அதிகம்.

காலை 9.30க்குத்தான் விமானம். எனினும் ரயில் குறித்த நேரத்திற்குள் சென்றடைந்ததால் திருச்சி விமான நிலையத்தை காலை ஐந்து மணிக்கே சென்றடைந்திருந்தேன். விமான நிலையம் உறக்கத்திலிருந்து எழவில்லை என்பதாகவே உணர்த்தியது. ஒரு பன்னாட்டு விமான நிலையம் இத்தனை அமைதியாக இருக்குமா என ஆச்சரியமாகவே இருந்தது. நுழைவாயிலில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி உள்ளே சென்றுவிட்டால் நீங்கள் வெளியில் வரமுடியாது!’ என்பதை அறிவுறுத்தியே அனுப்பினார். நான் சென்றபோது, காத்திருப்பு பகுதியில் ஒருவரும் இல்லை.

பொழுது விடிந்து, விமான நிலைய பொறுப்பாளர்கள் மெல்லச் சேர, பயணிகளின் எண்ணிக்கையும்கூட, மெல்ல பரபரப்பிற்குள் மூழ்கத் தொடங்கியது விமான நிலையம்.

*

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியபோது முந்தைய பயணங்களில் கண்டிருந்த நெரிசலைக் காண முடியவில்லை. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். இத்தனைக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கொழும்பில் தங்கும் திட்டம் இல்லை. அடுத்த நாள் காலை 8 மணிக்கு மட்டக்களப்பு நகரில் நிகழ்ச்சி என்பதால், கடந்த ஆண்டு போலவே பகல் நேரத்தில் பயணித்து சென்றடைய முடிவு செய்திருந்தேன். கடந்த ஆண்டு கட்டுநாயக்கவில் இருந்து நேரடியாக கதுருவெல சென்று அங்கிருந்து மட்டக்களப்பு சென்றடைந்தேன். அதுவொரு மிகப்பெரிய அனுபவமும்கூட. இந்தமுறை கடந்த ஆண்டு அனுபவத்தை வைத்து சற்று முன்கூட்டியே திட்டமிட்டதால், ட்ராவல்ஸ் பேருந்து எடுக்க திட்டமிட்டிருந்தேன். என் நேரம், சுரேனா ட்ராவல்ஸ் ஞாயிற்றுக்கிழமை தம் பயணத்தை ரத்து செய்திருந்தது. ஆகவே SLTB (.போ.) பேருந்துதான் என்பதால் மனதை நன்கு திடப்படுத்தி வைத்திருந்தேன். பகல் நேரத்தில் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒரே ஒரு பேருந்துதான். மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என்றும், பயண நேரம் ஆறு மணி நேரம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னுடைய இருக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆறுதலான விசயம், அது சன்னலோர இருக்கை. பேருந்தில் நுழைந்து பார்த்தபோது, அந்த சன்னல் இருக்கையில் ஒரு தம்பி அமர்ந்திருந்தார். பதிவினைக் காட்டிய பிறகும், அவர் ரொம்பவும் குழம்பிக் கொண்டேயிருக்க, நடத்துனர் வந்து உள்பக்க இருக்கையில் அமருமாறு அவரிடம் சொன்னார். பேருந்து முழுக்க நிரம்பிய நிலையில் குறித்த நேரத்தில் பேருந்து புறப்பட்டது. அந்தத் தம்பி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். மட்டக்களப்பா எனக் கேட்டேன். காத்தான்குடி எனச் சொல்லிவிட்டு சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்தார். ஏழெட்டு விதமான வடிவங்களில் தூங்கிக் கொண்டே வந்தார். அத்தனை வடிவங்களிலும் என் தோளில் சாய்ந்து கொள்வதை மட்டும் அவர் தவறவிடவேயில்லை.

பேருந்து வேகம் பிடித்தது. மீண்டும் கடந்த ஆண்டு பயணத்தைத்தான் ஒப்பிட்டாக வேண்டும். அந்தப் பேருந்துபோல் கை காட்டிய இடங்களிலெல்லாம் நிற்கவில்லை. ஏற்கனவே பேருந்து நிரம்பியிருந்ததால், எங்கும் நிற்காமல் சீறிக்கொண்டேயிருந்தது. மொத்த தொலைவு சுமார் 320 கி.மீ.  கூகுள் மேப்பில், சென்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து மட்டக்களப்பிற்கான வழித் தடத்தைப் போட்டு தூரம் குறைவதை அவ்வப்போது பார்த்தபடியே இருந்தேன். கசகசத்த வெயில் மெல்லத் தணிந்து, நடு இலங்கைக்கே உரிய குளிர்ந்த சூழல் ஆக்கிரமித்தது. கடந்த ஆண்டு குருநாகல் மற்றும் இன்னொரு இடத்தில் பேருந்து நிலையத்திற்குள் எல்லாம் சென்று வந்தது. இந்த முறை அப்படி எங்கும் நகரங்களின் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் ஓடிக் கொண்டேயிருந்தது.

குருநாகல், தம்புள்ள கடந்ததும், பாதித் தொலைவு கடந்துவிட்ட தெம்பு வந்துவிட்டது. சிற்றுண்டிக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதுவரை விதவிதமாக அமர்ந்திருந்த தம்பி, வெளியேறி சிற்றுண்டி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு பேருந்து புறப்படும்போது ஓடி வந்து அமர்ந்தார். கையில் ஒரு மிக்சர் பொட்டலத்தை உடைத்து வைத்து மறு கையில் கொட்டி சாப்பிட்டுக் கொண்டே வந்தவர், என்னிடமும் நீட்டினார். மறுத்தேன். மீண்டும் மீண்டும் புன்னகையோடு வற்புறுத்தித் தந்தார். தோளில் தொடர்ந்து தூங்குவற்கான பிரதியுபகாரமாய் இருக்கலாம். மரியாதைக்காக கொஞ்சம் வாங்கிக் கொண்டேன். மொய் வைத்துவிட்ட நிம்மதியில், அடுத்த நொடி நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

பொலனருவ ரயில் நிலையம் அருகே பேருந்து நின்றபோது மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. அடுத்தது கதுருவால. அங்கிருந்து பேருந்து சீறிப் பறக்கும் எனத் தெரியும். போக்குவரத்து நெரிசல் மிகக் குறைவாக இருந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஓட்டுனருக்கு பசித்திருக்கும்போல இரண்டாவது சிற்றுண்டி நிறுத்தமாக ஓட்டமாவடியில் நின்றது. இந்த முறை நான் கீழே இறங்கவில்லை. தம்பி சட்டென முழித்து விரைந்து இறங்கினார். திரும்பி வரும்போது இன்னொரு பதார்த்தத்தோடு வந்திருந்தார். நல்லவேளை எனக்கு பங்கு எதுவும் தரவில்லை. மீண்டும் பேருந்து புறப்பட்டது.

பயணச்சீட்டு பதிவு செய்யும்போது இணையத்தில் பயண நேரம் ஆறரை மணி நேரம் என்று குறிப்பிட்டிருந்தாலும், எட்டு மணி நேரம் ஆகுமெனத் தெரியும். அதைத்தான் கூகுள் மேப்பும் சொல்லியிருந்தது. அப்படி ஏதும் மேஜிக் நடந்துடாதா எனும் எதிர்பார்ப்பும் இருந்ததை மறுக்க முடியாது. பேருந்து மட்டக்களப்பு நகரைத் தாண்டி கல்லடி பாலத்திற்குள் நுழைந்தது. நினைத்தது போலவே, நேரம் 10.15 மணியை எட்டியிருந்தது.  பைகளோடு எழுந்து முன் நகர்ந்து வந்தேன். எனக்கான நிறுத்தத்தில் பேருந்து நின்றது.

விடுதிக்கான பாதை திருப்பத்தில் இராணுவ வீரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான்கு ஆண்டு கால பயணத்தில் மட்டக்களப்பில் முதன்முறையாக இராணுவத்தைப் பார்க்கிறேன். அங்கும் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்ததால், நிறுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

இரவு ஒரு மணிக்கு தொடங்கிய பயணம் ஒருவழியாக 21 மணி நேரத்தில் நிறைவுக்கு வந்திருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் விடுதி மேலாளர் வருகைக்காகக் காத்திருந்தார். அறையில் நண்பர் வாங்கி வைத்திருந்த சரவணபவ நெய் மசால் தோசையும் காத்திருக்கும் எனத் தெரியும்.

No comments: