தமிழ் Quora : கேள்வி பதில்-1


தமிழ் Quora-வில் கணக்குத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்ன செய்வதென்றும்கூட பெரிய புரிதல் இல்லை. எப்பொழுதாவது எட்டிப் பார்ப்பதுண்டு. இன்று அப்படி எட்டிப் பார்த்தபோது அங்கு பொதுவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும்... அதற்கான என்னுடைய அரியபதில்களும்...

மக்கள் ஏன் புகழுக்கு அடிமையாகிறார்கள்?

ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருப்பதை இயல்பான குணமாக வைத்திருக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்றில் புகழ் என்பது மிகவும் இனிப்பானது. மெல்லியதொரு போதையை நினைக்கும் கணம்தோறும் தந்து கொண்டேயிருப்பது. மீள முடியாத போதையாகவும் மாறிப்போயிருப்பது.

திருடன் மணியம் பிள்ளை புத்தகம் எப்படிபட்டது விமர்சனம் தாருங்கள்?

வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நல்லதொரு மொழிபெயர்ப்பு. ஒரு சாமானியனின் சாகசங்கள் என்பதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு சம்பவத்தில் இருந்தும் மிக நிச்சயமாக ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

கிளைச்சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேச வேண்டிய தேவை ஏற்பட்டபோது, இந்தப் புத்தகத்தை வாசித்திருந்ததால், அவர்களைப் புரிந்து கொள்ள உதவியது. வாசிக்காமல் இருந்திருந்தால் கிளைச்சிறை கைதிகளை நான் மிகத் தவறாகவே அணுகியிருப்பேன்.

அண்மையில் உங்களை மனவேதனை அடைய செய்த செய்தி என்ன?

ஒருவன் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாய் வசை பாடுவது.
இதை வாசிக்கலாம்...

//கேரளாவில் ஊர் பக்கம் வந்த யானைக்கு ஒருவன் அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, அதைச் சாப்பிட முற்படும்போது வாயில் வெடித்து, அதன்பிறகு அது உணவெடுக்க முடியாமல், தண்ணீரில் நின்றபடியே உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்திருக்கின்றது.

மனிதனை நம்பிய பாவத்திற்கு, வாய் வெடித்து, சித்திரவதை அனுபவித்து, மரணத்திற்காக காத்திருந்து... என அந்த யானையின் ஒவ்வொரு தருணத்தையும் நினைக்கும்போது மனசு பதறுகிறது. சொல்லத் தெரியாத ஓர் இருண்மை சூழ்கிறது.

அதே நேரம், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடி வைத்தவனை திட்டும் விதமாக ஒட்டுமொத்த மனித குலமே நாசமாகட்டும்என்கிற ரீதியில் சாடும் போக்கு ஆச்சரியம் தருகின்றது. கோடியில் ஒருவன் செய்துவிட்டால், அவனை, அவனையொத்தவனைப் பழிப்பதை விடுத்து ஒட்டுமொத்தமாய்ச் சாடுவதில் ஒருவித சுகம் இருக்கின்றது போலும்.

வெடி வைத்த கொடியவன் ஒரு மனிதன் என்றால், அந்த யானையின் மரணத்தை உலகிற்கு கொண்டு வந்த வனத்துறை அதிகாரி, அந்த யானையை, அது வாழ்ந்த இடத்திலேயே புதைக்க உதவியவர்கள், வழக்கு தொடர்ந்திருக்கும் காவல் அதிகாரி என அனைவரும் நாசமாகட்டும் எனும் மனித குலத்தின்அங்கமேதான்.

யோவ்... உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப சாபம் கொடுக்காதீங்கய்யா... ஏற்கனவே கொரானா, வெட்டுக்கிளினு திக் திக்னு இருக்கு!
//

சில மனிதர்கள் மிருகங்களிடம் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கின்றனர்?

மனிதனிடமிருக்கும் கீழ்மையான குணங்களில் தம்மைவிட எளியவரை ஏதோ ஒரு கணத்தில் வதைப்பதுவும் ஒன்று. அதை பல தருணங்களில் மனிதர்களிடமே காட்டுவார்கள்.

பாதுகாப்பான சூழலில் இருந்து விலங்குகளிடம் காட்டுவது எளிதானது. அப்படிச் செய்பவர்களை விலங்குகளால் அடையாளம் காட்ட முடியாது. அவை ஒன்று சேர்ந்து வந்து போராட்டம் செய்ய முடியாது உள்ளிட்ட பல காரணங்கள் அதில் உண்டு.

எனது வாழ்க்கையை மேம்படுத்த சுய உதவி புத்தகங்களை (self-help books) எவ்வாறு பயன்படுத்துவது?

அதில் இருக்கும் உண்மையான உதாரணங்கள் உங்களுக்குப் பயன்படலாம். உண்மையான உதாரணங்கள் தெளிவான, தீர்க்கமான நம்பிக்கையைத் தரும். அவற்றை உங்களின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலத் தேவையையொட்டி பொருத்திப் பார்க்கலாம்.
அதே சமயம், புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

வாழ்க்கையில் மோசமான நேரங்களைக் கையாள்வதில் சிலருக்கு ஏன் சிரமங்கள் உள்ளன?

அந்த மோசமான நேரம் வாழ்வில் இதுவரை சந்திக்காத ஒன்றாக இருப்பதால் ஏற்படும் மிரட்சி.
அடுத்து அது 'நிம்மதி, நேரம், ஆற்றல், பொருளாதாரம், மகிழ்ச்சி' உள்ளிட்ட பலவற்றையும் விலையாகக் கேட்பதால், அவற்றைக் கொடுக்க முடியாமல் ஏற்படும் நிலைமையே சிரமமாகக் கருதப்படுகின்றன.

அனைத்தையும் இழந்து ஒருவனால் 30 வயதுக்குமேல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?

எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு நிலையிலும் அனைத்தையும் இழந்து விடுவதில்லை.

இங்கே அனைத்தையும் இழந்து என்பது உறவுகள், புகழ், பொருளாதாரம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
இதை வாசிக்கலாம்...

//“ஊனம் என்பது மோசமான மனோபாவம் மட்டுமே

இதுவரை நிகழ்ந்தவைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இதோ இந்தப் புள்ளியிலிருந்து இருப்பதை வைத்துத் துவங்குவோம். எல்லோருக்கும் அவர்களுக்கான மிச்சமிருக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்ந்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது.

எவர் ஒருவர் தம்மிடம் இருக்கும் குறைகளையும் கடந்து, தம்மைக் கொண்டாடுகிறாரோ, அவரே நினைத்தவற்றை எட்டும் உரிமைகளைப் பெறுகிறார். சரி அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறதெனக் கேட்டால், தம்மிடம் இருக்கும் குணம், திறமை, திறன் ஆகிய ஒவ்வொன்றிலும் தலா மூன்றினைப் பட்டியலிட்டால் புரிந்து விடும்.

அப்படியொரு பட்டியலைத் தயாரிக்கும் தைரியம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் கடிவாளம் தம் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதென அர்த்தம். இது சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதுதான். ஆனால் அப்படிப் பட்டியலிட மனதில் உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை வேண்டும்.

வழங்கப்பட்டது எதுவாகினும் வாழ்ந்து காட்டுவேன் எனும் உறுதிகொண்டவர்களுக்கு, இந்த வாழ்க்கை என்பது கொண்டாட்டம் எனக் கருதுபவர்களுக்கு உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்துமே மிக எளிதில் கிட்டிவிடும்.

#வேட்கையோடு_விளையாடு புத்தகத்தில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. கட்டுரையில் இருந்து ஒரு பகுதி...


//

எனக்கு
வயது 22, நிறைவான வாழ்க்கையை வாழ எனக்கு ஒரு அறிவுரை வழங்க முடியுமானால், அது என்னவாக இருக்கும்?

எது 'நிறைவுஎன்பதை முதலில் கண்டறிந்து விடுங்கள்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை என்ன?

வாழ்தல் அறம்

*

தமிழ் Quora-வில் தொடர... https://ta.quora.com/profile/Erode-Kathir



2 comments:

Unknown said...

வாழ்தல் அறம் என்ன ஒரு அட்டகாசமான நேர்மறை வார்த்தை....

சிகரம் பாரதி said...

சிறப்பு. குவோராவில் கணக்கையும் தொடங்கி விட்டேன். பார்க்கலாம். அது போல தனியாக ஒன்று உருவாக்கினால் என்ன என்று தொன்றுகிறது. பார்ப்போம்.

நமது வலைத்திரட்டி: வலை ஓலை