மே மாதம் 18ம் தேதி இரவு
7.45 மணியளவில் ‘கருத்துப்பட்டறை’ வாட்ஸப் குழுமத்திலிருந்து நண்பர் சுரேஷ் அவர்கள் ஒரு சிறிய காணொளியுடன் தகவல்
ஒன்றினை எனக்குத் தனிப்பட்ட முறையில் ஃபார்வர்ட் செய்திருந்தார். நேரடியாக வரும் தகவலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஃபார்வட் எனும் குறியோடு
வரும் தகவல்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. எனினும் முதன்முறையாக
வந்திருப்பதால் இது என்னவாக இருக்கும் என்றுதான் பார்த்தேன்.
“இந்த
முதியவர் கொல்கத்தாவில் என் மனைவியின் அதிகாரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் உள்ளார்.
மனநிலை சரியில்லாதவராக உள்ளார். திருப்பூர் அருகில்
சிறுபூலுவப்பட்டி என்கிறார். உங்களுக்குத் தெரிந்தவர் மூலமாக
விபரம் சேகரிக்க முடியுமா?” என்ற கேள்வியோடு 38 நொடிகள் அளவிலான ஒரு காணொளியும் இருந்தது. அந்தக் காணொளியில்
பெண் அதிகாரி தமிழில் விசாரிக்க, அந்தப் பெரியவர் பேசுகிறார்.
பெயர் துரைசாமி என்பதுவும், திருப்பூரில் இருந்து
காணமல் போய், ஐதராபாத் சென்று சிக்கி சீரழிந்து கொல்கத்தா சென்றடைந்திருப்பதும்,
உணவு உட்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதுவும் புரிந்தது.
இது அவர் நேரடியாக
அனுப்பிய செய்தியா அல்லது அவருக்கு வந்ததை எனக்கு ஃபார்வர்ட் செய்திருக்காரா எனும்
குழப்பத்தோடு கருத்துப்பட்டறை குழுமத்தை எட்டிப் பார்த்தேன். அங்கும் அந்த செய்தி
பகிரப்பட்டு நான் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் பெயர்கள் சுட்டப்பட்டிருந்தன. ஆகவே இதில் சுரேஷ் அவர்களுக்கு நேரடி தொடர்பு இருக்கின்றது எனும் எண்ணத்தில்,
அவரிடம் தனிப்பட்ட முறையில் திருப்பூர் நண்பருக்கு அனுப்பிவிட்டேன்.
அவர் பதில் தந்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டேன்.
திருப்பூரில்
யாரிடம் கேட்கலாம் என நினைத்தவுடன் எனக்கு குமார் துரைசாமிதான் நினைவுக்கு வந்தார். உடனே அவருக்கு அனுப்பினேன்.
அவர் உடனடியாக கட்டுப்பாட்டு அறை விபரங்கள் கேட்டதோடு, ஃபேஸ்புக்கில் இதைப் பகிரலாமா எனக் கேட்டார். சுரேஷ்
அவர்களிடம் கேட்க, “துணை ஆணையர், கொல்கத்தா
விமான நிலைய பிரிவு” எனக் குறிப்பிட்டதோடு, துணை ஆணையரின் அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, இரவு
8.30 மணியளவில் அனுப்பியிருந்தார்.
குமார் அதனை
ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.
இரவு 9.45 மணியளவில் பெரியவர் துரைசாமி அவர்களின்
வீட்டை அடையாளம் கண்டு, குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக ஒருவர்
செல்வதாக தகவல் தெரிவித்தார் குமார். 10 மணியளவில் அவர் குடும்பத்தினர்
விபரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றைப் பெற்று சுரேஷ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரவு 10.15 மணிக்கு சுரேஷ்
“மிக்க நன்றி. நான் அவங்ககிட்ட பேசிட்டேன்.
எப்படியாவது முயற்சி செய்து அவரை அனுப்பி வைக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். கருத்துப்பட்டறை குழுமத்திலும்
அவரின் முகவரி மற்றும் உறவினர்களைக் கண்டறிந்ததைத் தெரிவித்திருந்தார். குமார் அவர்களிடம் ஃபேஸ்புக் பதிவை நீக்கிவிடலாம் எனத் தெரிவித்தேன்.
ஆனால் அது வாட்ஸப் வழியாக தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தது தெரியாது.
இரவு 11.45 மணியளவில் திருப்பூர்
ஆட்சியர் இந்தத் தகவல்களைப் பார்த்து விட்டதாகவும், குடும்பத்திற்கான
உதவிகள் செய்வதாக உறுதியளித்திருப்பதாகவும் குமார் தெரிவித்தார். அதனையும் சுரேஷ் அவர்களிடம் பகிர்ந்துவிட, எதையோ சாதித்துவிட்ட
நிம்மதியில் அந்த நாள் நிறைவடைந்தது.
ஆனால் அத்தோடு
நிறைவடைந்து விடுமா என்ன!?
துரைசாமி திருப்பூரில்
இருந்து காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மனப்பிறழ்வும் தெளிவின்மையும் கொண்ட அவர்
அவ்வப்போது காணாமல் போயிருக்கிறார். குழந்தைகள் இல்லை.
மனைவியும் இல்லை. தங்கை மகளை அவர்தான் வளர்த்தியிருக்கிறார்.
எனவே அந்தப் பெண் தன் மாமா திரும்பி வந்துவிட்டால் பத்திரமாகப் பார்த்துக்
கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். எப்படியாவது அழைத்து வந்து
கொடுத்துவிடுங்கள், அதன்பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
எனக் கூறியிருக்கின்றனர்.
நாட்கள் நகர
மனதில் ஓரத்தில் காணொளியில் பார்த்த துரைசாமி அவ்வப்போது வந்து போனார். எப்படி அனுப்புவார்கள்?
இந்த கொரானா இக்கட்டுகள் நிறைந்த காலத்தில் எதில் அனுப்ப முடியும்?
ரயில் போக்குவரத்து முழுமையாக இல்லை. 20ம் தேதி
மதியம் கொல்கொத்தாவை புயல் தாக்கியது. துரைசாமி குறித்த உரையாடல்களை
சுரேஷ் ட்விட்டர் கணக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தையும் பார்க்க நேர்ந்தது. எந்த முடிவும் எடுக்கும் புள்ளியில் நான் இல்லை என்பதால் அமைதியாக இருந்தேன்.
22ம்
தேதி மாலை சுரேஷ் அழைத்திருந்தார். குரலில் ஒருவித நிம்மதியின்மையும்,
தொய்வும் தெரிந்தது. ”நான்கு நாட்கள் ஆகிவிட்டது
எப்படியாவது அனுப்ப வேண்டும் என முயற்சி செய்கிறோம், ஆனால் எந்த
வழிகளும் தெரியவில்லை. அவரைத் தொடர்ந்து காவல் நிலையத்திலேயே
வைத்திருப்பதிலும் சிரமமாக உள்ளது. புயல் காரணமாக காவலர்களுக்கும்
மிகக் கடுமையான பணிகள் உள்ளன. இதற்குமேல் தாமதமானால் அவரை அரசு
காப்பகத்தில்தான் விடவேண்டி வரும். மனநலம் சற்று பாதிக்கப்பட்டிருப்பதால்
அவரை சாதாரண காப்பகத்தில் விடாமல், மனநல காப்பகத்தில்தான் விடவேண்டும்.
அப்படி விட்டால் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அவர் எப்படி சமாளிப்பார்
எனத் தெரியவில்லை. தனியாக வாகனம் வைத்தும் அனுப்பத் தயார் ஆனால்
துணைக்கு ஒரு நபரை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும் நபருக்கு
தமிழ் தெரியாது. ஆகவே குழப்பமாக உள்ளது. இவரை இப்படியே விடவும் மனமில்லை, எப்படியாவது,
எவ்வளவு செலவானாலும் அனுப்பிவிட விரும்புகிறோம், ஆயினும் வழி தெரியவில்லை” என்றார்.
உடனே குமார்
அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
அவரும் ”திருப்பூரில் இருந்து ஒரு வாகனத்தையே அனுப்பிக்
கூட அழைத்துவர ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். எனினும் இப்போது
இருக்கும் சூழலில் யாரேனும் சென்றுதான் அழைத்து வரவேண்டும், அதற்கு
ஆட்கள் இல்லை. குடும்பத்தினர் தினசரி உழைக்க வேண்டிய நிலையில்
இருப்பதால், கொல்கத்தா வரை சென்று வர ஒரு வாரம் ஆகும்.
அப்படியே சென்று வந்தாலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
என்பதால் யாரும் முன் மறுக்கிறார்கள்” என்றார்
இரண்டு முனைகளிலும்
செலவு செய்து அனுப்ப,
வரவழைக்கத் தயாராக இருந்தாலும் உடன் செல்லும் ஆட்களில் யார் என்பதில்
பிரச்சனை ஏற்பட்டது. அடுத்து தனியே ஒரு வாடகை வாகனம் அமர்த்தி
வந்து செல்வது அல்லது சென்று வருவது என்பது சுமார் 35,000 - 50,000 வரை செலவு பிடிக்கக் கூடியதாகவும் அமையும் எனத் தோன்றியது. இன்றைய நிலையில் அந்தத் தொகை என்பது சில குடும்பங்களுக்கு ஓரிரு மாதங்கள் பசியாற்றும்
தொகையாக இருப்பதால் மாற்று வழிகள் யோசிக்கலாம் என்றேன். இந்த
நிலையில் இங்கிருந்து ஊர் திரும்பும் மேற்கு வங்கத்தினர் பேருந்துகளில் செல்வதாகவும்,
அப்படிச் செல்லும் பேருந்து தொடர்பு ஏதேனும் கிடைத்தால் அதன் வழியாக
அனுப்ப முடியும் என்கிற தகவலும் கிடைத்தது.
எனினும் சுரேஷ்
அவர்களின் தீவிரமும்,
நிம்மதியின்மையும் அழுத்தம் தர ஆரம்பித்தது. 22ம் தேதி இரவு சுரேஷ் மற்றும் குமார் ஆகியோரை இணைத்து வாட்ஸப்பில் Mission
Duraisamy Rescue என்ற குழுமத்தைத் தொடங்கி, அவர்கள்
இருவரையும் குழுவின் நிர்வாகிகளாக மாற்றி, தொடர்பான யாரையும்
குழுவில் இணையுங்கள், 24 மணி நேரம் எடுத்துக்கொண்டு மாற்று வழிகள்
யோசிப்போம். ஏதேனும் தீர்வுகள் கிடைக்கும் என்று கூறினேன்.
உடனடியாக அதில் காவல் இணை ஆணையர் இணைக்கப்பட்டார்.
23ம்
தேதி காலை குழுவில் குமார் ‘திருப்பூரில் உள்ள துரைசாமி அவர்களின்
உறவினர்கள்’ ஆர்வமில்லாமல் இருக்கும் நிலையைத் தெரிவித்தார்.
அதே நேரம் சுரேஷ் அவர்களிடமும் பேசிய குடும்பத்தினர் கொல்கத்தா வந்து
அழைத்துச் செல்வதில் இருக்கும் சிரமங்களைப் பட்டியலிட்டிருக்கின்றனர். எப்படியாவது அனுப்பிவிடுவது நல்லது, ஆனால் யாரும் ஒத்துழைக்காத
போது எப்படி என உண்மையில் சுரேஷ் மிகவும் சோர்ந்து போயிருந்தார்.
தமிழக முதல்வர்
டிவிட்டர் கணக்கில் இவற்றை பகிர்ந்து உதவி கோருவோமா என்றும் குழுவில் கேட்டிருந்தேன். முதலில் அது முதல்வர்
கவனத்திற்குச் செல்ல வேண்டும், இன்று அரசு இருக்கும் பரபரப்பு
சூழலில், இதைச் செயல்படுத்த மேற்கொள்ளும் நடைமுறைகள் எப்போது
துவங்கும் எனும் குழப்பமும் மனதிற்குள் எழுந்தது. சுரேஷ் மீண்டும்
சற்று நம்பிக்கையாக கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் எதாவது வாய்ப்பு கிடைக்கும்
என்றார்.
மதியம் குமார், கொல்கத்தாவில் இருந்து
புறப்படும் லாரி ஒன்றின் தொடர்பு கிடைத்திருப்பதாகவும், ஓட்டுனர்
எண் கிடைத்துவிட்டால், இது எளிதாகிவிடும் எனும் நம்பிக்கை கொடுத்தார்.
லாரியில் ஏற்கனவே இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள். மூன்றாவது நபருக்கு அனுமதி இல்லையே என்றேன்.
இதற்கிடையே
துரைசாமியை அனுப்பி வைத்துவிடலாம் எனும் நம்பிக்கையில் துரைசாமியின் அடையாள அட்டை, திருப்பூரில் இருந்து
அவர் காணாமல் போனதற்கான புகார் பதிவினைக் கேட்டார் சுரேஷ். அடையாள
அட்டை எதுவும் இல்லையென்ற நிலையில், புகார் விபரங்களை மட்டும்
விரைவில் அனுப்புவதாகக் குமார் கூறினார்.
அன்று மாலை
குமார் குழுவில் மணிவண்ணன் ராமசாமி அவர்களை இணைத்தார். அந்த இணைப்பு குழுவில்
ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருப்பூர் விதைகள் மக்கள் நல
அமைப்பினைச் சார்ந்தவர் மணிவண்ணன். சில ஆண்டுகளாக கொல்கத்தாவில்
பணிபுரிந்து வருகிறார். அவரும் வாட்ஸப் வழியே சுழன்று கொண்டிருந்த
பதிவினைக் கண்டு காவல் துணை ஆணையரைச் அழைத்துப் பேசி, காவல் நிலையம்
சென்று துரைசாமியையும் சந்தித்திருக்கிறார். இதெல்லாம் பிறகு
தெரிந்த தகவல்கள்.
குழுவில் இணைந்த
ஒரு மணி நேரத்தில் ”துரைசாமியை திருப்பூர் அழைத்துச் செல்வதற்கான வாகன ஏற்பாடு நடந்து கொண்டுள்ளது.
வாகன பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் இரவுக்குள் உறுதி செய்யப்படும்”
என்றார் மணிவண்ணன்.
24ம்
தேதி காலை ஆறு மணியளவில் திருப்பூரில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள Khujutipara
எனும் இடத்தில் ஆட்களை இறக்கி விடுவதற்காக புறப்பட்டிருக்கும் பேருந்தின்
பதிவு எண், ஓட்டுனர்களின் மொபைல் எண்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து,
முந்தைய இரவு திருப்பூரில் புறப்பட்ட பேருந்து சென்னையைக் கடந்து மேற்கு
வங்கம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். வாகன எண்,
ஓட்டுனர்கள் விபரம் கிடைத்ததும் பெரும் நம்பிக்கை வந்தது. ஓட்டுனர்கள் இருவரும் குழுவில் இணைக்கப்பட்டனர். அடுத்த
நாள் 25ம் தேதி இரவு Khujutipara-வை பேருந்து
அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
சற்றுப் போராடி
துரைசாமியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு திருப்பூர் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட
புகார் மனுவிற்கான ரசீது பெறப்பட்டு 25ம் தேதி இரவு அனுப்பப்பட்டது.
துரைசாமியை அங்கிருந்து அனுப்புவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இணை ஆணையர் துரைசாமியை மேற்கு வங்கத்தில் இருந்து அனுப்புவதற்கும் தமிழகத்திற்குள்
நுழைவதற்குமான ஆவணங்களைத் தயார்படுத்தினார்.
25ம்
தேதி காலை பேருந்து ஒடிசாவில் பயணப்படுவதாக தகவல் வந்தது. Khujutipara சென்று விட்டு, திரும்பும் வழியில் கொல்கொத்தாவில் இருந்து
150 கி.மீ பயணித்து துரைசாமியை பேருந்தில் ஏற்றிவிடும்
திட்டம் வகுக்கப்பட்டது. இரவு 9 மணியளவில்
’துரைசாமி அவர்களை பேருந்தில் ஏற்றிவிடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும்
செய்து மணிவண்ணன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளாதாக’ காவல் துணை ஆணையர்
பகிர்ந்தார்
இரவு 2.20 மணியளவில் காவல்துறை
வாகனத்தில் துரைசாமி அமர்ந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, பேருந்தை
நோக்கி பயணம் துவங்கிவிட்டோம் என மணிவண்ணன் பகிர்ந்திருந்தார்.
மேலும் காலை 5 மணியளவில்
//
Khujutipara க்கு 10 கிமீ முன்பு இரவு சுமார் 8.00 மணி அளவிற்கு சென்றடைந்த நமது பேருந்து உள்ளூர் காவல் நிலைய எல்லையில்
அக்காவல் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
(சுமார் 4 மணி நேரம் ஓட்டுநர்கள் உணவின்றி காத்திருந்து)
செய்து மீண்டும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பின்பு Khujutipara கிராமத்தில்
பயணிகளை இறக்கிவிட்டு சரியாக இரவு 1.00 மணியளவில் கிராமத்திலிருந்து
விடைபெற்றதாக எனக்கு தகவல் அளித்தனர்.
காவல் இணை ஆணையர்
அவர்களின் ஆணைக்கிணங்க ,
காவல் வாகன ஓட்டுநர் மிலன் அவர்களின் உதவியுடன் திரு.துரைசாமி
அவர்களை அழைத்துக் கொண்டு இரவு சரியாக 3 மணிக்கு Dankuni
toll plaza சென்றடைந்து வாயிலில் நாங்கள் காத்திருந்தோம்.
திரு.துரைசாமி
அவர்களை வழியனுப்ப முடிவு மேற்கொண்ட Dankuni
toll plaza விற்கு ( 125 கிமீ தூரத்தை கடந்து
)சரியாக விடியற்காலை 4.30 மணிக்கு பேருந்து வந்தடைந்தது.
மரியாதைக்குரிய
DCP அவர்கள்
தயாரித்து வழங்கிய உரிய ஆவணங்களையும், திரு.துரைசாமி
அவர்களையும் பேருந்து ஓட்டுநர்கள் திரு.ஜெய்கணேஷ் & திரு.சரவணன்
ஆகியோர் வசம் ஒப்படைத்து வழியனுப்பி வைக்கப்பட்டார்.
பேருந்து சரியாக
5
மணிக்கு Dankuni toll plaza விலிருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்டது.
காவல் இணை ஆணையர்
உள்ளிட்ட நமது குழுவின் சார்பாகவும்,
காவல் வாகன ஓட்டுநர் திரு.மிலன் சார்பாகவும் பேருந்து ஓட்டுநர்கள்
இருவருக்கும் நன்றி கூறி விடை பெற்று திரும்பினோம்.
இந்நேரத்தில்
, திரு.துரைசாமி
அவர்களை மீட்டுச் செல்ல உதவும் பணியில்
தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எனது நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.
மேலும், காவல்துறை உயர்
அதிகாரி அவர்களுக்கும், அவரது கணவர் திரு.சுரேஷ்குமார் ஐயா
அவர்களுக்கும் மரியாதையுடன் கூடிய சிறப்பு
நன்றியை நமது மீட்புக் குழுவினர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
கொல்கத்தா வாழ் தமிழக நண்பர் திரு.இராஜேஷ்&
திருமதி.பரமேஸ்வரி அவர்களின் பேரன்பில் தயாரான உணவை கொண்டு சென்று
நமது பேருந்து ஓட்டுநர்களின் பசியாற வழங்கப்பட்டது. (திரு&திருமதி இராஜேஷ் இணையருக்கு நன்றி).
//
என மணிவண்ணன்
குழுவில் பகிர்ந்திருந்த தகவல்தான்
26ம் தேதி விடியலில் கிடைத்த மிக மகிழ்வான செய்தி.
அத்துடன் பேருந்தின்
படம், அதில்
துரைசாமி ஏறி அமர்ந்திருக்கும் படம், ஓட்டுனர்கள் உடன் இருக்கும்
படம் ஆகியவற்றையும் பகிரிந்திருந்தார்.
திருப்பூர்
வேலம்பாளையம் காவல் நிலையத்தில் துரைசாமியை ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருக்கு தகவல்
தெரிவிக்க ஓட்டுனர்களிடம் காவல் இணை ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
18ம்
தேதியில் இருந்து மெல்ல அழுத்தம் கூடியிருந்த சுரேஷ் அவர்கள் அப்போது குழுவில் பகிர்ந்தது
//
இதுவரையான
செயல்பாடுகள் என்பது ஊர் கூடி தேர் இழுத்தல் போன்று எல்லோரின் பங்களிப்பு மிகமிக
முக்கியமானது.
அவை
எல்லாவற்றையும் கடந்து மணிவண்ணனின் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு பேருந்து வருகின்றது என்று தெரிந்த பிறகு ஓட்டுநர்களோடு தொடர்ந்து தொடர்பில்
இருந்து எல்லா தகவல்களையும் பரிமாறி, இரவு முழுவதும்
கண்விழித்து காத்திருந்து திரு.துரைசாமி அவர்களை உரியவரிடம் ஒப்படைத்த அந்த
அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
ஓட்டுனர்களுக்கு
உணவு இல்லை என்று அறிந்த பிறகு,
அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு உணவை தயார் செய்து சொல்லி அவற்றையும்
கொண்டு சேர்த்த அந்த செயல்பாடு என்பது இயல்பிலேயே சேவை குணம் உள்ள ஒருவரால்
மட்டுமே மேற்கொள்ளமுடியும் அந்த வகையில் மணிவண்ணனின் செயல்பாடு மிக மிக
போற்றுதற்குரியது.
//
மாலை 5 மணியளவில் பேருந்து
விசாகப்பட்டிணத்தை நெருங்குவதாக மணிவண்ணன் தெரிவித்தார்.
அதற்குள்ளாக
துரைசாமி பேருந்தில் ஏறிய புகைப்படங்கள் இணையத்தில் எப்படியோ பரவ ஆரம்பிக்க, குழுவில் லேசான பதட்டம்
ஏற்பட்டது. அவர் நல்லபடியாக திருப்பூர் சென்றடையும் வரை இது மாதிரியான
பரவல்கள் ஆரோக்கியமானது அல்ல எனத் தோன்றியது. குழுவில் லேசான
இறுக்கமான மனநிலை சூழ்ந்தபோது சுரேஷ் பகிர்ந்திருந்த ஒரு செய்தி மிக முக்கியமானது
//
திரு.துரைசாமியை
அனுப்புவதில் சில தாமதங்கள்,
சிக்கல்கள் ஏற்பட்டதென்பது குடும்பமற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய
அவலம். சிக்கல் நிறைந்த இந்த பணியில் அவரவர் நிலையில், சில
இடர்ப்பாடுகளை சந்தித்து உள்ளோம் என்பது உண்மை.
நாங்கள்
அவரை சந்தித்த அந்த நொடியிலிருந்து,
அவர் வேண்டியது ஒன்றே ஒன்றுதான் திருப்பூருக்கு செல்ல
வேண்டும். உறவினர்களிடம் கொண்டு சேர்த்து
விடுங்கள் என்று ஒருபொழுதும் அவர் கேட்கவில்லை.
உறவினர்களால்
ஒதுக்கப்பட்டவர்களும்,
உறவினர்களை ஒதுக்கியவர்களும், ஒருபொழுதும்
தாய் மண்ணை ஒதுக்கியதில்லை. தாய் நிலத்தால் ஒதுக்கப்பட்டதுமில்லை.
இந்த ஊர், மொழி, உணவு எல்லாம் அவருக்கு ஒவ்வாமையாக
இருந்தது. ஒரு எதிலியை போல் திரிந்தவரை, அவரின்
மண்ணில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றே விரும்பினோம். எல்லோர் கையையும் பற்றிக்
கொண்டதாலே இதை செய்ய முடிந்தது. அவரை சேவை இல்லத்தில் வைத்து பாதுக்காக்க தோழர்கள்
உறுதியளிக்க வேண்டும்.
அவர் ஊர்
வந்து சேர்ந்தவுடன் இந்த குழு கலைக்கப்படும். மனிதம் காக்கும் முயற்சியில் பல நல்ல
உள்ளங்களை சந்தித்தது மகிழ்ச்சியையும்,
நிறைவையும் அளிக்கின்றது. எப்பொழுது உதவி தேவைப்படினும் நான் உங்களை அழைக்கவும், நீங்கள்
என்னை அழைக்கவும், வாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்வை மனதில்
நிறுத்தி மகிழ்ச்சி அடைகிறோம்.
ஊர் கூடி
இழுத்த தேரை நிலையில் கொண்டு நிறுத்துவதே சிறப்பு. அதை செய்வோம். யாருடைய
பாராட்டுகளுக்காவும் இதை செய்யவில்லை.
மனிதம்
காப்பது அறம். அறம் செய்ய விரும்பினோம்,
செய்தோம்.
//
26ம்
தேதி இரவு விசாகப்பட்டினத்தைக் கடந்து, பேருந்து நிறுத்தப்பட்டு,
பேருந்தில் வந்த ஓட்டுனர்கள் மற்றும் துரைசாமி ஆகியோர் நன்கு தூங்கி
எழுந்து காலை 7 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்டிருப்பதாக
27ம் தேதி காலை மணிவண்ணன் தகவல் தெரிவித்தார். மாலை நெல்லூர் அருகே
பேருந்து வருவதாக தகவல் வந்தது. இரவு 11.30 மணியளவில் தமிழகத்திற்குள் திருப்பூரை நோக்கி பேருந்து வந்து கொண்டிருப்பதாக
தகவல் வந்தது.
இன்று 28.05.2020 காலை எழுந்தபோது,
பேருந்து வேலம்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு துரைசாமி ஒப்படைக்கப்பட்டார்
என்ற செய்தி மற்றும் அவர் காவல் நிலையத்தில் இருக்கும் தகவல்களை மணிவண்ணன் பகிர...
இன்றைய பொழுது இனிதே விடிந்தது.
துரைசாமிக்கு
உடனடியாக கோவிட் பரிசோதனை செய்து,
அவர் நலமாக இருக்கும் சூழலில் எங்களிடம் ஒப்படையுங்கள், நான்கு நாட்களாச்சும் கூட வச்சு கவனிச்சுக்குறோம், காப்பகத்திற்கு
அனுப்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டியிருப்பதாக குமார் இன்று காலையில் தெரிவிதிருக்கிறார்.
சுபம்.
சுபம் என்று
முடித்துக் கொள்வதற்கு முன்பு இன்னும் ஒரு முக்கியமான விசயத்தைப் பேச வேண்டியிருக்கின்றது.
*
Mission Duraisamy
Rescue குழுவில் ஒவ்வொருவரும் தம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்த
நேரத்தில் காவல் இணை ஆணையர் பகிர்ந்திருந்த 10 நிமிட குரல் பதிவு
மிக முக்கியமானதாக அமைந்தது.
”நான்
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதன்முதலாக 18ம் தேதி மாலை 6.30 மணியளவில் என்னோட இன்ஸ்பெக்டர் அத்தனு
கோஷல் என்னை அழைத்து, ஒரு வயசான ஆள் இருக்காரு, அவர் பேசுற மொழி புரியல, நீங்க பேசிப்பாருங்க எனக் கேட்டார்.
நான் அப்ப ஏர்போர்ட்ல இருந்தேன். அங்கிருந்து அவர்கிட்ட
பேசினப்ப அவர் எதோ முன்னுக்குபின் முரணா பேசினார். அவருக்கு எதோ
உடம்புக்கு சரியில்லனு புரிஞ்சுது.
உடனடியா நான்
ஸ்டேஷனுக்குப் போயி அவரை சந்தித்தேன்.
வீடியோ எடுத்தேன். நேர்ல பாக்கும்போது ரொம்ப நல்லா
இருந்தார். ஷேவ் பண்ணி, நீட்டா ட்ரெஸ் போட்டிருந்தார்,
பார்த்தவுடனே நல்லபடியா இவரக் கொண்டு போயி சேர்த்துடலாம்னு தோணுச்சு.
வீட்டுக்கு வந்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் ஒத்துழைப்பதாகச் சொன்னார்.
பிறகு கணவர்
சுரேஷ்கிட்ட இதைச் சொல்லும்போதுதான்,
அவர் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் பக்கத்துல நண்பர்கள் இருக்காங்க, அவங்ககிட்ட
சொல்லி ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னார். அதை சரினு சொல்லி
போடுங்கனு சொன்னேன். போட்டு ஒரு மணி நேரத்தில் தகவல் கிடைச்சதும்
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவர் குடும்பத்தில் இருந்தும் அந்தப்
பெண் பேசினாங்க. ரொம்ப நல்லதொரு அனுபவமா இருந்துச்சு.
ஒன் ஹ்வர்ல நாம் சக்ஸஸ் பண்ணிட்டோம்னு தோணுச்சு.
அடுத்த நாள்
போலீஸ் ஸ்டேஷன்ல போயி பார்த்தப்போ ரொம்ப ஆள் டல்லாக இருந்தார். இன்ஸ்பெக்டர்கிட்ட
என்னாச்சுனு கேட்டேன். அவருக்கு இந்த சாப்பாடு எதுமே புடிக்கல
மேடம், டீ, காபி மட்டும்தான் குடிக்கிறார்னு
சொன்னார். வேற எதும் சாப்பிடுறதில்லனு சொன்னதும் மனசுக்கு ரொம்ப
கஷ்டமா போச்சு. அப்பதான் முடிவு பண்ணினேன் இவர எவ்ளோ சீக்கிரமா
அனுப்ப முடியுமோ அனுப்பி வைக்கனும்னு.
எனினும் அங்கே
இருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் திருப்பூர் அதிகாரிகளை தொடர்பு கொள்வது சிரமமா
இருந்துச்சு. எப்படியாச்சும் நாமே சோஷியல் மீடியா உதவியோட அனுப்பிடனும்னு நினைச்சேன்.
அதற்கிடையே அவரோட வீடியோ வாட்ஸப்ல பரவி பலரும் தொடர்பு கொண்டாங்க.
ஃபோட்டோஸ் அனுப்பச் சொன்னாங்க, எங்களுக்கு தெரியும்னு
சொன்னாங்க. அவங்க எல்லார்கிட்டேயும் அவரோட குடும்ப விபரம் கிடைச்சிருச்சுனு
சொன்னேன்.
அப்பதான் மணிவண்ணன்
என்னைத் தொடர்பு கொண்டு மிகத் தெளிவாகப் பேசினார். விமானத்தில் அனுப்புறதா இருந்தாலும்கூட
செலவை ஏத்துக்கிறதா சொன்னார். முழுமையான உதவிக் கரம் நீட்டினார்.
இவர் இதற்கு சரியாக இருப்பார்னு தோணுச்சு.
இந்த நிலையில் 20,21ம் தேதி புயல்,
பிரதமர் வருகையில் நான் ரொம்ப பிசியாகிட்டேன். சுத்தமா நேரமே இல்லை. பிரதமர் வந்து சென்ற நிலையில் சுரேஷ்கிட்ட
கேட்டேன், என்ன எதுமே நடக்காம இருக்கு. அவருக்கு வேற உடம்பு சரியில்ல. சீக்கிரமா அனுப்புறதுதான்
நல்லதுனு சொல்லிட்டு தீவிரமா அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்க நினைத்தேன்.
இதற்கிடையே
வாட்சப் ஃபார்வர்ல வண்டி வருதுனு தகவல் வந்த இடங்களிலெல்லாம் பேசினேன், என் நண்பர்கள் மத்தியில்
பேசினேன், உயர் அதிகாரிகளிடம் பேசினேன், லாரி முதலாளிகளிடம் பேசினேன். ஆனால் எதிலும் சென்னைக்கு
அனுப்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சுது. ரயில் சுத்தமா இல்லை.
இதற்குள்ளாக
அவர் குடும்பத்தினர் புகார் மனுவை அனுப்பச் சொன்னேன். அவங்க அனுப்பவேயில்ல.
அங்கிருந்து எதுவும் வராம எப்படி அவரை அனுப்ப முடியும்? அப்பத்தான் லேசான பயமும், பதட்டமும் இருந்தது.
ஒருவழியா பேருந்து
விபரங்கள் கிடைச்சுது.
ஆனாலும் என்னால இங்கிருந்து எக்ஸிட் பாஸ் மற்றும் அங்கே செல்வதற்காக என்ட்ரி பாஸ் ஏற்பாடு செய்ய முடியல. எப்படியாச்சும் அனுப்பிடனும்
25ம் தேதி இரவு 8 மணிக்கு என் கணவரையும் அழைச்சிட்டு
போலீஸ் ஸ்டேசன் போனேன். அவரை அழைச்சிட்டுப் போன காரணம்,
எதும் கையெழுத்து கேட்டா, அவரை வச்சு சமாளிச்சுக்கலாம்னு. அங்கே மணிவண்ணனும் இருந்தார்.
என்னோட இன்ஸ்பெக்டர் ரொம்ப நம்பிக்கையா இருந்தார். உங்க லட்டர் மட்டும் போதும் மேடம் எதா இருந்தாலும் நாம பார்த்துக்கலாம் என்றார்.
என்னோட இன்ஸ்பெக்டருக்கு 25 வருட சர்வீஸ்.
அவர் இதுபோல நிறையப் பேரை அனுப்பின கதைகள் எல்லாம் சொன்னார்.
ஒண்ணும் பிரச்சனையில்லனு சொன்னார். எனக்கு இது
புது அனுபவம். யார்கிட்டேயும் கையெழுத்து வாங்காம, அங்கே இருக்கிற ஜென்ரல் டயரில எழுதி எனக்கு ஆர்டர் காப்பி கொடுத்தார்.
அன்னிக்கு ராத்திரி
மணிவண்ணன் ஏழெட்டு மணி நேரம் காத்திருந்து அனுப்பியது பெரிய விசயமாபட்டது. இப்படி ஒருத்தருக்காக
இத்தனை மணி நேரம் செலவிடமுடியுமானு ஆச்சரியமா இருந்தது.
நல்ல சில விசயங்களை
மணிவண்ணன்கிட்ட இருந்தும் கத்துக்கிட்டேன்.
படிக்கிறது, பார்க்கிறது என்பதைவிட செயல்படும்போது
நிறைய கத்துக்கலாம். இதுவொரு நல்ல அனுபவம். உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கனும். நேர்ல பார்த்து
பேசனும். இந்த தொடர்புகள் நீடிக்கட்டும். சமூக சேவை செய்றோம்னு பலரும் சொல்றாங்னு நினைச்சிருக்கேன். இப்பத்தான் அது எத்தனை கஷ்டம்னு புரியுது. சேவை உள்ளம்
கொண்ட அனைவருக்கும், பேருந்து ஓட்டுனர்கள், பேருந்து உரிமையாளர், குழுவில் உள்ள அனைவருக்கும் என்
நன்றிகள்.”
காவல் இணை ஆணையர்
பேசியிருந்ததன் சுருக்கம் தான் இது.
*
ஆழ்ந்து யோசித்துப்
பார்க்கிறேன். இந்த தேசத்தில் துரைசாமிபோல் லட்சக்கணக்கானோர்
இருக்கலாம். எல்லோராலும் எல்லோருக்கும் உதவி செய்துவிட முடியாது.
அதுவும் இப்படியான நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்வதிலேயே பல்வேறு
தடைகள் மற்றும் தடுமாற்றங்கள் இருப்பதை நாம் அறிவோம்.
இந்தச் சூழலில் 2000 கி.மீ தள்ளி இருக்கும் ஒரு ஐ.பி.எஸ்
அதிகாரி, தன் ஆளுகைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பிடிபட்டிருந்த
/ தஞ்சம் அடைந்திருந்த ஒரு எளிய மனிதனைச் சந்தித்து, அவரின் நிலையை முழுக்க உணர்ந்து, மிகுந்த மனித நேயத்தோடு
தொடர்ந்து செயல்பட்டு, எந்த இன்னல்களையும் குறையாகச் சொல்லாமல்,
பேரிடர் நிகழ்ந்த நிலையில், பிரதமர் வந்து போன
சூழலிலும் இதனை மனதில் இறுத்தி, எப்படியாவது அந்த மனிதரை தன்
மண்ணிற்கு அனுப்ப வேண்டும் என உறுதியாக நிற்பது அவ்வளவு எளிதல்ல. தன் கணவருடன் இணைந்து, மிகச் சவாலாக செயல்பட்ட அந்த அதிகாரி
மிகப் பெரிய உதாரணமாக உயர்ந்து நிற்கிறார். மேலும் அனைத்து சூழல்களிலும் கற்றுக்கொள்கிறேன்
என்பதன் வாயிலாக அவரே ஒரு பாடமாவும் நம் மனதில் பதிகிறார்.
இந்த நிலையில் Mission Duraisamy Rescue குழுவின் சார்பாக இதில் பங்கெடுத்த காவல் இணை ஆணையர், ஆய்வாளர் அதானு கோஷல், நண்பர்கள் சுரேஷ், குமார் துரைசாமி, மணிவண்ணன் ராமசாமி, பேருந்தில் ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்த திருப்பூரைச் சார்ந்த ரத்தின மூர்த்தி,
பேருந்து உரிமையாளர் பிரபு, ஓட்டுனர்கள் ஜெய்கணேஷ்,
சரவணன் ஆகியோருக்கு மனித நேயம் நிறைந்த நன்றிகள்.
Mission Duraisamy
Rescue குழுவில் எல்லோருக்கும் ஒரு கடமை, பொறுப்பு
இருந்தது. குழுவை உருவாக்கியதோடு, அடிக்கடி
கை தட்டுவது, புன்னகைப்பது, மற்றபடி அவ்வப்போது
Group Icon மாற்றுவது தவிர வேறெதுவும் நான் செய்யவில்லை. உண்மையில் கருத்துப்பட்டறை வாயிலாக சுரேஷ் அவர்களுக்கு நான் அறிமுகமாகியிருந்தது
மற்றும் குமார் துரைசாமிக்கு நல்ல நட்பாக இருந்தது தவிர என் பங்கு இதில் எதுவும் இல்லை.
ஆனால் இந்த
இடத்தில் தெரிவிக்க விரும்புவது,
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து எல்லோரும் எல்லோருடனும் எளிதில் தொடர்பு
கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் யாரோ ஒருவர் தயக்கமின்றி தொடர்புகொள்வதற்கான நிலையிலும்,
யாரோ ஒருவரிடம் உதவி கோரினால் உடனே செய்ய முற்படுவார்கள் என்ற தகுதியிலும்
இருப்பது மிக முக்கியம். எல்லாவற்றையும் நாம்தான் செய்தாக வேண்டுமென்பதில்லை.
இணைப்பு புள்ளியாக இருந்தால் போதும், இணைகிறவர்கள்
ஏதேதோ அதிசயங்களை நிகழ்த்துவார்கள். சமூக வலைதளங்கள் வாயிலாக
மிக எளிதாக, மிகச் சிறப்பாக நிகழ்த்துவார்கள்.
சுமார் 2410 சொற்கள் எழுதியிருக்கும்
நிலையில் கவனமாக சொல்லாமல் விட்ட ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். காவல் இணை ஆணையர் என்றே அனைத்து இடங்களிலும் குறிப்பிடப்பட்ட மனிதநேயமும்,
கருணையும் மிகுந்த அந்த அதிகாரியின் பெயர்தான் இதுவரை சொல்லாமல் விடுபட்டது.
காவல் இணை ஆணையர் என அனைத்து இடங்களிலும் குறிப்பிடப்பட்ட கொல்கத்தா
விமான நிலைய காவல் இணை ஆணையரின் பெயர் திருமதி. மெர்ஸி ஐ.பி.எஸ்.
மிகச் சரியாகத்தான்
பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.
மெர்ஸி என்பதற்கான
அர்த்தம் கருணைதானே!
6 comments:
சிறப்பாக எழுதிருக்கிறீர்கள் அண்ணா அந்த அதிகாரிக்கும் வாழ்த்துகள்
அருமை!அண்ணா!பங்கெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!
என்னே ஓர் முயற்சி என்னே ஓர் வர்ணனை....அனைவர்க்கும் வாழ்த்துகள்!
I literally run a screen in front of my eyes with your explanation.....
A Big Salute to one and all who took this initiative in hand...
Good wishes to all the persons to take the proper steps.
வாழ்க வளமுடன் கதிர்.மிகச்சிறப்பானபணிசெய்தமைக்கு வாழ்த்து கண்கள்.பங்கெடுத்த அணைவருக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment