அன்பிற்கினிய கவிஞர் கலாபிரியா
அவர்களின் அழைப்பில் பிப்ரவரி 13ம் தேதி தென்காசி, இடைகால் மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
விருந்தினராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. கவிஞர் கலாபிரியா
அவர்களின் துணைவியார் திருமதி சரஸ்வதி அம்மாள் அந்தப் பள்ளியில் கணித ஆசிரியையாகப்
பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பள்ளியின் செயலராகப் பதவி
வகிக்கிறார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர்
ஏ.ஆர்.எஸ் (எ) ஏ.ஆர்.சுப்பையா முதலியார் அவர்கள் 1969ம் ஆண்டு இந்தப்
பள்ளியைத் துவங்கியிருக்கிறார். அவருடைய 109வது பிறந்தநாள்
விழா தினத்தில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஆண்டு விழாவில் கலந்து கொள்வதையொட்டி, அன்று காலை மாணவர்களுக்கான பயிலரங்கு நடத்தலாமா எனக் கேட்டிருந்தனர். சரியென ஒப்புக்கொண்டிருந்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ராஜசேகரன் முழுவீச்சில் என்னோடு தொடர்பில் இருந்து, எப்போது அழைத்து விபரங்கள் கேட்டாலும் கொடுத்தார்.
முதலில் 10,11,12ம் வகுப்பில் உள்ள 600 பேருக்கும் ஒரே அமர்வாக
நடத்தும் திட்டத்தை முன் வைத்தனர். பொதுவாக மூன்று வகுப்பையும் ஒன்றாக அமர்த்தி
பேசுவதில்லை என்பதால் தனித்தனியாக வைப்பதையே பரிந்துரை செய்தேன். நேரமின்மை
காரணமாக ஒன்றாகவே நடத்துவதாக முடிவு செய்திருந்தனர். புதன்
இரவு அழைத்த தலைமையாசிரியர் இடப்பற்றாக்குறை காரணமாக 11,12ம்
வகுப்பை பயிலரங்கில் அமர்த்தி, 10ம் வகுப்பை அருகாமை
வகுப்பில் அமர்த்தி பேசுவதை மட்டும் கேட்க ஏற்பாடு
செய்கிறோம் என்றார். நான் மறுத்து, முடிந்தால் அவர்களுக்கு
மதிய அமர்வுகூட ஏற்பாடு செய்யுங்கள், வெறும் பேச்சு
மட்டும் கேட்பது போல் வேண்டாம் என்றேன். மாலை ஐந்து மணிக்கு ஆண்டு
விழா என்பதால் அதிலும் சிரமம் இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் பத்தாம்
வகுப்பிற்கு மதிய அமர்வை உறுதிப்படுத்தினர்.
புதன்கிழமை தென்காசி நிகழ்ச்சியை
முடித்துவிட்டு திருமலைக்கோவில் சென்று திரும்பி, தென்காசியிலேயே தங்கிவிட்டு, வியாழன் காலைதான் இடைகால்
சென்றடந்தேன். பேருந்து நிறுத்ததில் கவிஞர் கலாபிரியா காத்திருந்து
அழைத்துச் சென்றார். நடை தூரம் தான் அவர் வீடு. இரண்டாம் முறையாகச் செல்கிறேன். இது அவருடன் நான்காவது
சந்திப்பு என நினைக்கிறேன். எழுத்து, வயது,
நிலம் என மிகப் பெரும் இடைவெளி இருந்தாலும், மனதிற்கு
மிகப் பிரியமான அருகாமையை உணர்த்தும் தந்தையின் நெகிழ்வும், தோழமையின்
நேசமும் அவரிடமுண்டு. சென்றதும் சுவையான காஃபியுடன் அந்த நாள் துவங்கியது.
வீட்டின் மாடியில் விருந்தினர் தங்குவதற்கான
அறை, அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்களோடு வரவேற்கிறது. அறையில்
விருந்தினர் வந்து தங்கினால் எதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என மிக நுணுக்கமாகச்
செய்யப்பட்டிருந்த வசதிகளும், பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த
பொருட்களும் உபசரிப்பின் ப்ரியமிகு இலக்கணம். அவருடைய
வேனல், பெயரிடப்படாத படம் நாவல்களை அன்பளித்தார்.
நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளை
முழுவதுமாக முடித்து, தயாராகி கீழே வரும்போது அண்ணன் அமல்ராஜ் காத்திருந்தார். ஒவ்வொரு
வருகையிலும் எப்படியாவது சந்தித்து விடுகிறவர், நான் சந்திக்க வேண்டுமென பெரிதும் விரும்பப்படுகிறவர். சரஸ்வதி அம்மாவின் உபசரிப்பில் காலை உணவு முடித்து பள்ளிக்குப்
புறப்பட்டோம்.
நிறுவனரின் சிலைக்கு மாலை அணிவிப்பு, மரக்கன்று
நடுதல் ஆகியவை முடிந்து காலை மூன்று மணி நேர அமர்வு 11, 12ம்
வகுப்பிற்கான அமர்வு இரண்டு மணி நேரம் சுமார் 400 பிள்ளைகளுக்கு
நடந்தது. மதிய இடைவெளிக்குப் பிறகு 10ம் வகுப்பிற்கான அமர்வு
இரண்டு மணி நேரம் சுமார் 200 பிள்ளைகளுக்கு நடந்தது.
பிள்ளைகளுக்கான ஒரே சிரமம் நிலத்தில்
அமர வைக்கப்பட்டது என்பதைத் தவிர்த்து, இருக்கும் சாத்தியங்களை
வைத்து மிகச் சிறப்பான, அர்ப்பணிப்பான
ஏற்பாடு. இதற்காக பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட நிர்வாகத்தை எவ்வளவு
பாராட்டினாலும் தகும். பள்ளியின் தலைமையாசிரியர், தலைவர்
திரு.சுரேஷ், செயலர் திருமதி சரஸ்வதி, கவிஞர்
கலாபிரியா, அண்ணன் அமல்ராஜ் ஆகியோரும் முதல் பயிலரங்கு
அமர்வில் பங்கெடுத்தனர்.
மதிய உணவிற்குப் பிறகு இரண்டாவது
அமர்வு நிறைவடைந்து மீண்டும் கவிஞர் இல்லத்திற்கு திரும்பி
அவசரமாகக் குளித்து ஆடை மாற்றி ஆண்டு விழாவுக்கு தயாரானபோது, பாலபாரதி வருகை தந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன்தான் கவிஞர் கலாப்பிரியா இந்த வீட்டிற்கு வந்திருந்தேன், தென்காசி நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே முக்கியத்
துவக்கப்புள்ளி. அவருடன் உரையாடி மீண்டும் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி
விழாக்கோலம் பூண்டிருந்தது.
காலை முதல் பள்ளியின்
பெரும்பான்மை பிள்ளைகளிடம் பயிற்சியாளராக ஐந்து மணி நேரம் பேசியிருந்த சூழலில்,
தற்போது அவர்கள் முன்பு பேச்சாளர் பாத்திரம் எடுப்பது சற்று
சவாலாகத்தான் இருந்தது. மேடைக்கு வரும்போது முதல் வரிசையில் அமர்த்தப்பட்டிருந்த 10ம் வகுப்பு மாணவர்களில் ஒரு தம்பி என்னை மறித்தான். மதிய நிகழ்வில்
சிறப்பாக பங்கெடுத்த மாணவன்.
“சார் எனக்கு ஒன்பதாம்
வகுப்புல மார்க் எடுத்ததுக்கு ப்ரைஸ் கொடுப்பாங்க. அத நீங்கதான் கொடுக்கனும்”
என்றான். அப்படி கொடுப்பது என் கையில் இல்லையென்றாலும் சரியென்றபடி
நகர்ந்தேன். மேடை ஏறிய பிறகும் சைகை மூலம் எனக்கு நினைவூட்டினான். (வெண்ணிற ஆடை
மூர்த்திக்கு வடிவேலு சைகை காட்டிய காட்சி மனதில் நினைவுக்கு வராமல் இல்லை)
முதலில் நான் பேச வேண்டியிருந்தாலும், காலை, மதியம் பேசியிருந்ததால் மற்றொரு பேச்சாளரான முனைவர் சங்கரராமன் அவர்களை முதலில் பேசிவிடுமாறு வேண்டினேன். பயிலரங்குகளில் தொடர்ச்சியாக பேசி ஓய்ந்த பிறகு பெரு மௌனத்தை புசிப்பவன் நான். அது ஒருவகையில் ஓய்வாகவும், முக்கியமாக உரை தயாரிப்பு அவகாசமாகவும் தேவைப்பட்டது.
மாலை 6.45க்கு மேடை என் வசம்
வர 7.15 மணிக்கு உரையை நிறைவு செய்ததும், பரிசு வழங்க அழைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு
முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிள்ளைகள் அழைக்கப்பட்டனர். அந்தப் பத்தாம் வகுப்பு
மாணவனும் பரிசு வாங்க வந்தான். மலர்ச்சியோடு பரிசு கொடுத்து வாழ்த்தியபோது, வாங்கிய
மகிழ்ச்சியோடு ‘உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு
வருவேன் சார்’ என்றான்.
இரவு ஊர் திரும்ப
நெல்லையில் ரயில் பிடிக்க வேண்டியிருந்ததால் உடனடியாக புறப்பட வேண்டியிருந்தது.
தென்காசி சென்று அங்கிருந்து திருநெல்வேலி வரும் திட்டம். கலாபிரியா
அவர்களும், பள்ளியினரும் அதை மறுத்து நெல்லையில் விடுவதற்காக கார் ஒன்றை ஏற்பாடு
செய்து வைத்திருந்தனர். எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், நெல்லை சந்திப்பில்
இறக்கிவிட்டனர்.
‘உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்’ இது திரும்பத் திரும்ப உள்ளுக்குள் தளும்பிக் கொண்டேயிருந்தது. வேறென்ன
வேண்டும் ஒரு நாளின் நிறைவில். வென்றெடுத்த தினவும், மனத் திருப்தியும். அவன்
வளர வேண்டும், காலம் துணை நிற்கட்டும்.
1 comment:
நெகிழ்வான தருணம்
Post a Comment