ஒரு புத்தாண்டைக் கொண்டாட
என்ன இருக்கிறது? அன்றைக்கு முக்கியமாகச் செய்ய வேண்டியவை இரண்டுதான் ஒன்று நாட்காட்டியை
மாற்றுவோம், அடுத்து தேதி குறிப்பிடும்போது கவனமாக புதிய ஆண்டை குறிப்போம்.
சரி, நினைவுகள் அற்ற
ஒரு ஆண்டினை எப்படி நினைவு வைத்துக்கொள்வீர்கள்?
ஆச்சரியமாக இருக்கின்றது.
இரண்டு நாட்களாக மார்கழி மத்திக்கே உண்டான குளிர் இல்லை. ஆனால் 2019 ஆண்டின் பிறப்பு
என்பது கடும் குளிர் சூழ்ந்ததாக இருந்தது. கூடவே ஆண்டின் துவக்கம் வேட்கையோடு விளையாடு
புத்தகத்தை அச்சிற்கு அனுப்பிவிட்டு வெளியீட்டு விழா திட்டமிடலுக்கு காத்திருந்த நேரத்தில்
அமைந்தது. இந்த இரண்டு நாட்களாக வேட்கையோடு விளையாடு முதல் ஆண்டு நிறைவு குறித்து யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
உண்மையில் கடந்த ஒரு
வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் பெரிய நினைவுகள் ஏதுமில்லை. நினைவுகளே இல்லையா எனும்
ஆச்சரியமும், நினைவுகள் ஏன் இல்லையெனும் கேள்வியும்
எழுகிறது. எதன் அடிப்படையில் நினைவுகள் தங்குகின்றன? பொருளீட்டுவதை வைத்தா? புகழ் சேர்ப்பதிலா?
நிறைய திட்டங்கள் நிகழ்த்தியா? ஆம் என்றால் இவை யாவற்றிலும் குறையேதும் இல்லை. எனினும்
நினைவுகள் கனக்காத எடையற்ற ஆண்டாகவே நான் 2019ஐ வழியனுப்பி வைத்தேன்.
எதனால் அப்படி ஆனது
என யோசித்துக் களைத்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன், 2019 குடும்பம் சார்ந்த மற்றும்
நண்பர்கள் சூழ்ந்த பயணங்கள் ஏதுமில்லாத ஆண்டாக அமைந்து போனது. அதுவே நினைவு வறட்சிக்குக்
காரணமாக இருக்கலாம். பயணங்கள் இல்லை என்பதைவிடவும் மிக முக்கியமானது, 2019ல் நான் எதுவுமே
எழுதவில்லை. இந்த தசாப்தத்தில் எதுவும் எழுதாமல் ஏமாற்றிய ஆண்டு இதுவாகத்தான் இருக்கும்.
தொடந்து கட்டுரைகளே எழுதியதில் ஏற்பட்ட சலிப்பு மனநிலை, முற்றிலுமாக முடக்கியிருக்கலாம்.
அலச வேண்டிய தருணத்தில் இருக்கிறேன். ஆக பயணங்களும், எழுத்தும் இல்லாததே இதற்கான காரணமாகத்
தீர்ப்பெழுதிக்கொண்டு...
மற்றபடி 2019 மீது எனக்கு
எந்தப் புகாரும் இல்லை. மிகுந்த வாஞ்சையே மிளிர்கிறது.
அற்புதமான நட்புகளை இனங் கண்டிருக்கிறேன். திட்டமிடல்களை தெளிவாக மேற்கொண்டிருக்கிறேன்.
உரை மற்றும் பயிலரங்குகளில் மிகுதியான உணர்வுப்பூர்வமாக மனம் திறந்த மனிதர்களை குறிப்பாக
பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறேன்.
2019ல் மனம் திருப்தியடையும்
அளவிற்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்திருக்கிறேன். சுமாராக 220 மணி நேரம் பேசியிருப்பதாக
என் நிகழ்ச்சிப் பட்டியல் சொல்கிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம்,
நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, வேலூர் ஆகிய மாவட்டங்கள்
மற்றும் இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா என்று உரை மற்றும் பயிலரங்குகளில்
கலந்து கொண்ட சுமார் 38000 பேரில் சுமார் 26000 பேர் மாணவ, மாணவிகள் என்பது மிகுந்த
மகிழ்ச்சிக்குரியது. நிகழ்ச்சிகளின் நிறைவில் பிள்ளைகள் நெகிழ்ந்து, மனம் திறந்து சிந்திய
கண்ணீரெல்லாம் உணர்வில் கலந்து உயிரோடு பிணைந்ததாகவே கருதிக் கடக்கிறேன்.
நட்புகளின் புத்தகங்களை
வெளிக்கொண்டுவர வாசல் படைப்பகம் துவங்கப்பட்டது. முதல் வெளியீடாக பொன்னி, ஆதலினால்
தேடல் செய்வீர் வெளியிட்டது மற்றும் புதிய எழுத்தாளர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதும்
மகிழ்ச்சிக்குரியது.
இந்து தமிழ் திசை அரைப்பக்கத்திற்கு
வெளியிட்ட, மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் எனும் அறிமுகக் கட்டுரை பெரும் கவனத்திற்குள்
என்னை நிறுத்தியது.
எல்லாவற்றிற்கும் மேலாக
#வேட்கையோடு_விளையாடு மிகப்பெரியதொரு மாயம் செய்தது. கட்டுரைகள் எழுதி முடித்து ஏறத்தாழ
நான்கு மாதங்கள் கிடப்பில் போட்டு, அப்படியே தேங்கிவிடுமோ என்ற அச்சத்தில் தொகுத்து,
வடிவமைத்து, சொந்தமாக வெளியிட்டிருந்தேன். ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இரண்டாம்
பதிப்பும் தீர்ந்து போகும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
விரும்பி வாங்கியதோ,
பரிசாக வழங்கப்பட்டதோ, எப்படி ஒருவரைச் சேர்ந்திருந்தாலும், அவர்களில் 80% பேர் அதை
வாசித்திருக்கின்றனர் என்பத மனதார அறிவேன். அப்படி வாசித்தவர்களில் பல நூறு பேர் என்னைத்
தொடர்பு கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர், தொடர்ந்து தற்போதும் வெளிப்படுத்தி
வருகின்றனர். எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை வேட்டைகோடு விளையாடு வாசித்துவிட்டு
உணர்வுப்பூர்வமாக உரையாடியவர்களின் வாயிலாக அறிந்து பிரமித்திருக்கிறேன். உண்மையில்
எழுதும் காலத்தில் ஒவ்வொரு வாரமும் எழுதவேண்டும், ஒரே கோட்டினை மையமாக வைத்து எழுத
வேண்டும் என்ற நிலையில் நான் சுணங்கியதும்கூட உண்டு. ஆனால் ஒவ்வொருவரின் உணர்வுப் பகிர்வும்,
இன்னும் கவனம் கொடுத்து முழு உத்வேகத்தோடு எழுதியிருக்கலாமோ என்று பலமுறை யோசிக்க வைத்திருக்கிறது.
புத்தாண்டை கவனத்தில்
கொள்ள வேண்டுமா, கொண்டாட வேண்டுமா? இது வெறும் காலண்டர் மாற்றும் தினம் மட்டும்தானா
எனும் கேள்வி வரும்போது, நான் சொல்ல விரும்புவது, நமக்கு எல்லாமே காலம்தான். நாம் எதையும்
காலத்தின் அடிப்படையில், இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் ஆண்டின் கணக்கிலேயே
கவனத்தில் எடுக்கிறோம். எப்போது பிறப்பு, எப்போது பத்தாம் வகுப்பு, எப்போது கல்லூரி,
எப்போது திருமணம், எப்போது குழந்தை, எப்போது, எப்போது, எப்போது எனக் கேட்கும் எல்லாக்
கேள்விகளுக்கும், 1989, 1994, 2002 என்பது மாதிரி முதலில் நாம் ஆண்டின் எண்ணிக்கையையே
கணக்கில் வைத்துக் கொள்கிறோம், அதற்கு அடுத்ததுதான் வயது உள்ளிட்ட மற்ற எந்த ஒப்பீடு,
உதாரணங்களுமே. ஆகவே, 2019 என்றால் அது வேட்கையோடு விளையாடு-வின் ஆண்டு. வேட்கையோடு
விளையாடு-வின் காலம் எதுவென்றால் அது 2019 என்பதாகவே இனி எனக்கு எப்போதும் அழுந்தப்
பதிந்திருக்கும்.
2019 அழுத்தம் திருத்தமாக
பயணிக்க வேண்டும், எழுத வேண்டும் என்பதை எனக்கு விட்டுச் சென்றிருப்பதாக கருதி
2020ல் நுழைந்திருக்கிறேன். இந்த வருடத்திற்கென்று பட்டியலிருக்கும் ஆசைகளை காலத்தின்
வேகத்தில் மறந்து போய்விடாமல் கனவுகளாக்கி எட்டிவிட வேண்டுமென உறுதியாக விரும்புகிறேன்.
இந்த ஆண்டு நிறைய மனிதர்களைச்
சந்திக்க வேண்டும். சந்தித்தவர்களோடு, இணைந்தவர்களோடு அன்பும் நட்பும் இன்னும் கூடுதலாக
உணர வேண்டும். அனைவருடனும் இணைந்து பயணித்து, நிறைய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும்.
வாழ்தல் அறம்.
No comments:
Post a Comment