கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் புதிய
தலைமுறைக் கல்வி இதழில் வேட்கையோடு விளையாடு தொடருக்கான கட்டுரைகளை எழுதி
முடித்திருந்த நிலையில், 2018ல் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவிற்குள்
புத்தகத்தை தயாரிக்கும் எண்ணமும் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தயார்
செய்வது மிகச் சிரமம் எனத் தோன்றியது. கூடவே சின்னச் சோம்பலாலும்
சற்று தள்ளிப்போட்டேன்.
அந்த ஆசுவாசத்தில் நிதானமாக மீள் வாசிப்பு செய்து, அக்டோபர் முதல் வாரத்தில் புத்தகம் வெளியிட்டுவிட வேண்டுமென முடிவு
செய்திருந்தேன். மிக நெருங்கியவர்களிடமும் அவ்விதமே
கூறியிருந்தேன். அதன்படி திட்டமிட்டு, அனைத்தையும்
தொகுத்து, ஒரு பிரதி எடுத்து படிக்க ஆரம்பித்தபோது, அடுத்தடுத்த பணிகளுக்காக ஓட வேண்டி வந்தது. அந்தப்
பிரதி ஒரு பக்கம் அமைதியாக இருக்க, புத்தகத்தை மெல்ல மெல்ல
மறந்து, அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் என ஓடிக் கொண்டிருந்தேன்.
பின்னர் நவம்பர் எனத் தீர்மானித்து. அதுவும்
நிறைவேற்றப்படாமல் போக புத்தகம் மேலிருந்த ஆர்வம் நீர்த்துப் போக ஆரம்பித்தது.
இந்த தாமதங்களின் பின்னால் இருந்த ஒரு காரணம், இந்தப் புத்தகத்தை சுயமாக பதிப்பிக்க வேண்டும் என்பதுவும்.
இப்படியாக
மூன்று - நான்கு முறை தள்ளிப்போட்டதில்,
“புத்தகமா கொண்டு வந்தே ஆகனுமா!?” என நானே
மாற்றிச் சிந்திக்க ஆரம்பித்த நேரத்தில்தான், அடுத்த 15
தினத்திற்குள் முடிக்க வேண்டுமென டிசம்பர் மத்தியில் உறுதியாகத்
துவங்கினேன். அதிலிருந்து இடைவிடாது 15 - 20 நாட்கள் கட்டுரைகளுக்குள் மூழ்கிப் போனேன். ஏற்கனவே மூன்று கட்டங்களாக
பிழைத் திருத்தம் செய்திருந்த கட்டுரைகளின் வரிகளில் புதிதாக கை வைக்க, பணி கடினமானது. ஒவ்வொரு முறையும் அச்சிட்ட திருத்தப் பிரதிகளிலும் சிவப்புக் கோலமிட
ஆரம்பித்தேன். இரவுகளில் நீண்ட நேரம் போராடினேன். 31ம்
தேதிக்குள் புத்தகங்களை தயாரித்துவிட முடியும் எனும் நம்பிக்கை பெரும் உத்வேகம்
தந்தது.
31ம் தேதி ஒருவேளை தயாராகவிட்டாலும், ஜனவரி முதல்
வாரத்தில் தயாராகிவிடும் எனும் நம்பிக்கை ஆழமாக வந்துவிட்ட நிலையில், வெளியீடு குறித்து பல்வேறு சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன. ஃபேஸ்புக்கில் வெளியிடலாமா, சென்னை புத்தகக்
காட்சியில் வெளியிடலாமா எனும் ஊசலாட்டங்களைக் கடந்து மீண்டும் ஈரோட்டிலேயே
வெளியிடலாம் என முடிவெடுத்தேன். மீண்டும் என்றால்...!
ஆமாம்
2017 ஜனவரி 15ம் தேதி
பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை நூல்கள் வெளியீடு
கண்டு இரண்டு ஆண்டுகள் கடக்கும் சூழலில் இந்த தொகுப்பு தயாராகிக் கொண்டிருந்தது.
அதே மாட்டுப்பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என நினைத்தபோது, ஈரோடு வாசல் தொடங்கியதும் அந்த 2017 ஜனவரி 15ம் தேதி என்பதால் ஆண்டு விழாவையும் இணைத்து நடத்தலாம் எனும் ஆவல் வந்தது.
ஆண்டு விழா பிரதானமாகவும், அதில் ஒரு நிகழ்வாக
புத்தக வெளியீட்டை வைத்துக் கொள்ள முதலில் நினைத்தேன்.
ஆண்டு
விழாவிற்கான குழு அமைத்து, அதற்கான திட்டங்கள் தீட்டும்போது, ஆண்டு விழா கொண்டாட்டத்தில் புத்தக வெளியீடு கூடுதல் பளுவாகத் தோன்றியது.
ஆண்டு விழாவை மாட்டுப் பொங்கல் தினத்தில் வைப்பதிலும் கொஞ்சம் தயக்கம்
உருவானது. யாரையும் விழாக்காலத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்
எனத் தோன்றியதால், புத்தக வெளியீட்டை முன் நகர்த்த
விரும்பினேன். அதன்படி ஜனவரி 6ம் தேதி
புத்தக வெளியீடு என டிசம்பர் 31ம் தேதி இரவுதான் முடிவானது.
ஐந்து
நாட்கள் இடைவெளியில், விழா என்பது அதீத தன்னம்பிக்கையோ எனத்
தோன்றினாலும், ஈரோடு வாசல் குழுமத்தால் அது சாத்தியப்படும்
எனத் தோன்றியது.
வெளியீட்டு
இடமாக ஈரோடு நவீன நூலகம்தான் மிகப் பொருத்தமான இடம் என அனுமதி கேட்டதும், நூலகர் திருமதி. ஷீலா ஒப்புதல் வழங்கினார். ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் திரு.மாதேஸ்வரன் அவர்கள்
புத்தகம் பெற்றுக் கொள்ள மிகப் பொருத்தமானவர் என்று முடிவு செய்து அணுக, அவரும் ஒப்புதல் கொடுத்தார். சமீபத்தில் அனைத்து
மாவட்ட நூலக அலுவலர்களோடு இரண்டு நாட்கள் இருந்த அனுபவத்தில் அவர் மிகப்
பொருத்தமானவர் எனக் கண்டிருந்தேன்.
புத்தக அறிமுகம் என்று
வைக்காமல்,
மதிப்புரை மற்றும் வாழ்த்துரையையே புத்தகம் குறித்தான கருத்தாக்கத்திற்கு
பொருத்தலாம் எனத் தோன்றியது. வேட்கையோடு விளையாடு தொடருடன் பயணித்த
கல்வியாளர்களே அதற்குப் பொருத்தமானவர்கள் என முடிவு செய்து, அணுகிய
ஐந்து பேரும் ஒப்புக்கொள்ள நிகழ்ச்சி நிரல் ஏறத்தாழ முடிவானது. அவர்களில் மூவர் வாசல் நட்புகளாகவே இருந்தது மிக அணுக்கமானதும்கூட.
தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் அன்பிற்கினிய சுரேஷ் ஆகியோர் பெரும்பாலும்
என் எழுத்துடனும், வேட்கையோடு விளையாடு கட்டுரைகளுடனும் பயணித்து
வந்தவர்கள். தாளாளர் திரு.இளங்கோ அவர்கள்
நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்திருந்தவர். வாசல் தவிர்த்து
நான் அழைத்த திரு.சிவக்குமார் மற்றும் திருமதி. உமா சிவக்குமார் இருவரும் இந்தக் கட்டுரைத் தொடரில் மிக முக்கியமானவர்கள்.
அவர்களின் மாணவிகள் முக்கியமான கட்டுரைகளின் நாயகிகள். எழுதும் வரை அவர்களுக்குத் தெரியாது. தொடரை
வாசித்துவிட்டு கட்டுரைகளில் இருந்த தம் மாணவிகளை இனங்கண்டு அவ்வப்போது உரையாடியவர்
உமா சிவக்குமார். ஆகவே அவர்கள் தம்பதிகளாக பங்கெடுக்க வேண்டுமென
விரும்பியிருந்தேன்.
இந்தச் சூழலில் ஏறத்தாழ விருந்தினர்கள் முடிவாக,
வெளியிட பொருத்தமான ஆளுமை வேண்டுமென நினைத்த தருணத்தில் தமிழ்நாடு அரசு
நிதித்துறை கூடுதல் செயலாளர் டாக்டர். ஆனந்தகுமார்
IAS அவர்களின் வருகை மற்றும் பங்கேற்பினை தம்பி அர்விந்த் ஏற்பாடு செய்ய,
நிகழ்ச்சி நிரல் முழுமையடைந்தது. அவர் தற்போதைய
அரசு கூடுதல் செயலர் என்பதைவிட ஈரோட்டின் பெருமை வாய்ந்த முன்னாள் ஆட்சியர் என்பதே
முக்கியமான காரணம்.
ஏழு விருந்தினர்கள் தவிர்த்து,
வரவேற்புரை, நன்றியுரை, நிகழ்ச்சி
தொகுப்பு, நிழற்படம், காணொளி பதிவு,
சிற்றுண்டி ஆகியவற்றை வாசல் உறவுகள் பொறுப்பெடுத்துக் கொள்ள
“வேட்கையோடு விளையாடு” தம் வெளியீட்டிற்கு மிக
எளிதில் தயாரானது.
அழைப்பிதழ் அச்சிடப்படாமல்,
வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாக அழைப்பது என முடிவெடுத்தேன்.
தொடர்ச்சியாக உடன் வசித்து வரும் சளி நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பாக
அதன் உச்சகட்ட உக்கிரத்தைக் காட்ட, அது சுவாசப் பிரச்சனையாக மாறியது.
வியாழன் முழு இரவும் சொட்டுத் தூக்கமின்றி, வெள்ளிக்கிழமை
காலை இருந்த நிலை, ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள வெளியீட்டில்
நான் கலந்து கொள்ள முடியுமா எனும் சந்தேகத்தைக் கொடுத்தது. அழைப்பிதழில்
இடம் பெற்றிருக்கும் விருந்தினர்களில் ஈரோட்டில் இருப்போரையாவது நேரில் சந்தித்து அழைக்க
வேண்டும் எனும் நினைப்பும் அந்தக் கடும் நாட்களில் பொய்த்துப் போனது.
நிகழ்ச்சி நெறியாளர்களாக பொறுப்பெடுத்துக்கொண்ட மகேஸ்வரி
மதன் மற்றும் மஞ்சு கண்ணன் ஆகியோரிடம்கூட நிகழ்ச்சி நிரலை ஒழுங்க செய்ய என்னால் ஒத்துழைப்பு
கொடுக்க முடியாமல் போனது. சிற்றுண்டி, நினைவுப் பரிசுகளுக்கு தங்கதுரை மற்றும் ஆரூரன் ஆகியோரிடம் பொறுப்பெடுத்துக்
கொள்ள வேண்டினேன். இந்த நிலையில் 5ம் தேதி
சனிக்கிழமை கரூரில் நடைபெறவிருந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டிருந்ததால்
எப்படியாவது சென்று சமாளித்துவிடத் தயாராகினேன். மருந்துகளின்
உதவியோடு, அந்த நிகழ்ச்சியை முடித்து புறப்பட்ட அரை மணி நேரத்தில்
கல்லூரி நிர்வாகம், மீண்டும் ஒரு நிகழ்ச்சியை திங்கட்கிழமை செய்து
தர வேண்டியதை அங்கீகாரமாக்க் கருதியபடியே, ஈரோட்டை நோக்கி வரும்போதுதான்
வாசலில் மூர்த்தியை அழைத்து வீடியோ பதிவு குறித்து சில வார்த்தைகள் பேசினேன்.
ஈரோட்டை அடைந்து, தயாராக இருந்த
புத்தகங்களை ஏற்றிக் கொண்டு, நூலகத்திற்குச் சென்றேன்.
வாசலில் இருந்து மகேஷ்வரி, மஞ்சு கூட்ட அரங்கில்
வருகை தர, நூலகரின் ஒத்துழைப்போடு அரங்கில் இருக்கைகளை வேறு வடிவில்
மாற்றி அமைத்துவிட்டு, வெளியீட்டிற்கான புத்தகங்களை வைத்துவிட்டு.
எப்படியும் நிகழ்ச்சி அதன்போக்கில் நடந்துவிடும் என வீடு வந்தபோது முழுக்க
சக்தியை இழந்திருந்தேன்.
தாளவாடியில் இருந்து புறப்பட்டிருந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள்
கொடிவேரியிலிருந்து அனுப்பிய படங்களில்தான் ஞாயிறு காலை கண் விழித்தேன்.
உடலை ஒருவாராகத் தயார்படுத்தி, மருந்துகளை எடுத்துக்
கொண்டு நூலகத்திற்குள் நுழையும்போது காலை 10.15 மணி. நிகழ்ச்சி நெறியாள்கைக் குழு தயாராக இருந்தது. நெறியாள்கையில்
ஒரே ஒரு சொல்கூட நான் வாசிக்காத, என்னவென்று கேட்காத முதல் நிகழ்ச்சி.
என்னால் இயலவில்லையென்பதைவிட, அவர்கள் சிறப்பாகச்
செய்வார்கள் எனும் நம்பிக்கையே.
பாதி நிரம்பியிருந்த அரங்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது.
10.30 மணி நிகழ்ச்சியை 10.45க்கு தொடங்கிவிடலாம்
எனத் தயாரான நிலையில், தேநீர் மற்றும் சிற்றுண்டியை எப்போது வழங்குவது
எனும் குழப்பம் வந்தது. முதலிலேயே நான் அதைத் திட்டமிட்டிருக்க
வேண்டும். நிகழ்ச்சியின் இடையில் வழங்குவது, நிகழ்ச்சியின் போக்கை சிதைக்கும். நுழையும் இடத்தில்
வழங்கலாம் என்றால், அனைவரும் அரங்கிற்குள் நுழைவதிலேயே கவனமாக
இருந்ததால், கடந்த புத்தக வெளியீட்டில் வழங்க முடியாமல்போனது
நினைவிற்கு வந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்து வழங்கலாம் என்றால்,
புறப்படும் அவசரத்தில் அதுவும் சரி வராது எனத் தோன்ற, தேநீர் வழங்கிவிட்டு நிகழ்ச்சி தொடங்குவது எனத் தீர்மானித்து வழங்கியதில் திட்டமிட்டதைவிட
சற்று தாமதாகமாகவே விழா தொடங்கியது.
சிறு அறிமுகத்துடன் நெறியாள்கை குழு விழாவை துவக்கியது.
காஞ்சிக்கோவில் அரிமா சங்கத்தின் தலைவரும், வாசல்
நண்பருமான அரிமா. முத்தரசு அவர்கள் கலகலப்பானதொரு வரவேற்புரை
நிகழ்த்தினார்.
அடுத்ததாக தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி,
முதல்வர் சுரேஷ்குமார், தாளாளர் உமா சிவக்குமார்,
தாளாளர் இளங்கோ ஆகியோர் தாம் வாசித்த கட்டுரைகளை மையப்படுத்தி மிக ஆழமாகவும்,
அழுத்தமாகவும், நெகிழ்வாகவும் மதிப்புரை மற்றும்
வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். நால்வரிடமிருந்தும் பல்வேறு
விதமான உணர்ச்சிகளை ஈட்டிக்கொள்ள முடிந்தது. இதுபோன்ற தொகுப்பு
வெளியீட்டிற்கு இதுவே சிறந்த அறிமுகம், மதிப்புரை, வாழ்த்துரை என்பதை அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். அத்தனைக்குப் பின்னாலும் அன்பும், எளிய மனதும் அவர்களிடமிருந்தது.
அதன்பின் ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் நூலை வெளியிட மாதேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மாதேஸ்வரன் அவர்கள் நெகிழ்வானதொரு வாழ்த்துரை வழங்கினார். அடுத்து பேச வந்த சிறப்பு விருந்தினர் ஆனந்தகுமார் மிக கலகலப்பாக ஆரம்பித்து,
விழாவை மிகச் சிறப்புள்ளதாக ஆக்கினார். ஈரோட்டில்
நாற்பது நாட்கள் மட்டுமே ஆட்சியராக இருந்து தனி முத்திரை பதித்தவரை, இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்தித்ததும், அவரை உரையாற்ற
வைத்ததும் என்னளவில் பெரும் மகிழ்ச்சிக்குரியது. நான் ஏற்புரை
வழங்கி முடித்ததும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்புரையில்
விருந்தினர்களை அழைத்த காரணங்களை மையப்படுத்திதான் பேசினேன். நிறைவாக நண்பர் ஆரூரன் அற்புதமானதொரு நன்றியுரை நவில விழா மகிழ்வாய் நிகழ்ந்தேறியது.
*
2017ல் நிகழ்ந்த புத்தக வெளியீட்டிற்கும் இந்த புத்தக வெளியீட்டிற்கும் இடையேயான
இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதம் என்பது ”ஈரோடு
வாசல்”. அந்த வெளியீட்டின்போது ஈரோட்டில் படைப்பாளிகளின் எண்ணிக்கை
கூடவேண்டும் எனும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தேன். அந்த நிகழ்விற்காக
வாட்சப் வழியே திரட்டப்பட்டிருந்த நட்புகளில் ஒத்த சிந்தனையுடையவர்களைக் கொண்டு ஈரோடு
வாசல் எனும் குழுமமாக உரையாடத் தொடங்கினோம். ஏறத்தாழ
20 ஆண்டுகளாக இயக்கம், அமைப்புகள் சார்ந்தே இயங்கும்
எனக்கும் இது தீனிதான். ஏற்கனவே பழகி வந்த அமைப்புகளில் இருந்த
சில விதிமுறைகள் இதில் இல்லை. வேண்டுகிற மாதிரி அமைத்துக் கொள்ளும்
சுதந்திரம் இங்குண்டு. அங்கு கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும்
களமிறக்கும் வாய்ப்பு இங்குண்டு. இதிலும் சவால்களைச் சந்தித்ததுண்டு,
அவற்றையும் தாண்டி சரியானவர்கள் தொடர்ந்து நிற்கிறார்கள். உயிர்ப்புடன், உரிமையுடன் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தம் உயரத்தை தாமே தீர்மானிக்கிறார்கள். உடனிருப்பவர்கள் உதவ, உயர்த்த, தான் விரும்பிய உயரத்தைத் தொட்டுப் பார்க்க தொடர்ந்து உழைக்கிறார்கள்.
தன்னலம் பாராது, ’எங்கள்
வாசல்’ எனும் உரிமையை ஒவ்வொருவரும் கொண்டாடியதின் ஒரு உதாரணம்
இந்த புத்தக வெளியீட்டிற்கு வாசல் நட்புகள் காட்டிய அர்ப்பணிப்பு. பங்கெடுத்த யாரும் அதை என் புத்தகமாகக் கருதவில்லை. தம்
புத்தகமாகக் கருதினார்கள். தம் புத்தகமாகக் கருதும் மனதைவிட,
அடிப்படையில் அவர்களுக்கு உரிமையிருந்தது. இன்னும்
சில மாதங்களிலிருந்து அவர்களில் பலரிடமிருந்து புத்தகங்கள் வரும். அதற்கான ஒத்திகை இது. அப்போது அவற்றை நான் என் புத்தகமாகக்
கொண்டாடுவேன்.
அழைப்பிதழ் அச்சிடாமல், எவரையும்
போனிலும்கூட அழைக்காமல் அரங்கு நிரம்பித்தளும்ப திரண்ட கூட்டத்தின் பின்னே நான் மட்டுமே
கிடையாது. வாசலின் அர்ப்பணிப்பும், பேரன்புமே
காரணம். விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள்,
இடம் வழங்கிய நூலகர் ஷீலா, சிற்றுண்டி,
உணவு வழங்கிய தங்கதுரை, நிழற்படம் எடுத்த தம்பி ரகு, காணொளிக் காட்சி பதிவு, வெளியீடு என தொடர்ந்து அசத்தும்
வாசலின் செல்லப் போராளி தம்பி மூர்த்தி, புத்தக விற்பனையை கவனித்த
நந்தினி, நெறியாளுகை செய்த மகேஷ், மஞ்சு,
சிறப்பு விருந்தினரை அழைத்து வந்த அரவிந்த், வரவேற்புரை
வழங்கிய முத்தரசு, நன்றியுரை வழங்கிய எல்லாவற்றிலும் என்னுடன்
இருக்கும் ஆரூரன் உள்ளிட்ட ஒவ்வொரு வாசல் நட்புகளுக்கும் இந்த விழாவில் நான் பெற்ற
மகிழ்வையும் மனநிறைவையும்
சமர்ப்பிக்கிறேன்.
காணொளிகளுக்கு
வேட்கையோடு விளையாடு
காணொளிகளுக்கு
வேட்கையோடு விளையாடு
-
No comments:
Post a Comment