இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.
Yes... that’s a Pad in my hand & I don’t feel weird. It's natural, Period!
#PadmanChallenge
*
பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.
இது கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் ஆவணப்படம் ( http://maaruthal.blogspot.in/2012/12/blog-post_31.html ) குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையின் முதல் வரி.
ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் எனும் காரணம் தவிர்த்து) “தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது என்பது குறித்து எப்போதும் கேள்வியுண்டு.
என் மகள் 9-10 வயதாக வளரும்போதே அவள் பருவமடைந்தால், அந்த நிகழ்வை திரட்டி சீர் (பூப்பு நன்னீராட்டு விழா) செய்வது குறித்து விதவிதமான பேச்சு எழுந்து கொண்டேயிருந்தது. மிக உறுதியாக, மென்மையான அப்படியான ஒரு நிகழ்வு மட்டும் நடந்துவிடக்கூடாது என்பதை விடாப்பிடியாக வலியுறுத்திக் கொண்டே வந்தேன். முதலில், நகை, புத்தாடை என கொண்டாட்டமாய் கருதிவிடும் சாத்தியமுள்ள மகள் மனதை வசப்படுத்தினேன். அடுத்து மனைவி, அம்மா என ஒவ்வொருவராய் நகர்த்தி, இறுதியாக உங்கள் திருப்திக்கு சடங்கு எதும் செய்ய வேண்டுமெனில் (பத்து-இருபது பேர்) முதல் வட்ட உறவுகளோடு முடித்துக்கொள்ளலாம் என்றளவில் தயார்படுத்தி வைத்திருந்தேன்.
எதிர்பாராத ஒரு நாளில் அவள் பருவமெய்திட, சடங்கு, சாங்கியம் எனும் பெயரில் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது எனத் தடுக்கப்பட்டிருந்தாள். மூன்றாம் நாளே பள்ளிக்கு போகனும் என விரும்பியவளை, உறவுகளிடம் வீட்டில்தான் இருக்கிறாள் எனச் சொல்லி, பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அவளிடம் மிக அழுத்தம் திருத்தமாக இது உடலில் நிகழும் ஒரு மாற்றம், உடல் நலனில் கவனம் எடுத்துக்கொள் என்றளவிலேயே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.
அவளுடைய மாதாந்திர நாட்களில் உன்னால் முடிந்த எதையும் செய்துகொள் எனும் ஊக்கம் தந்து, அது தீட்டு என ஒரு போதும் முடங்கிப் போகாதே என்பதை அழுத்திச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். இதோ சமீபத்தில்கூட நானும் அவளும் ஒரு மளிகைக் கடையில் 'நாப்கின்’ வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டை ஒரு காகிதக் கவரில் போட்டு, கேரி பேக்கில் போட்டுக் கொடுக்க, இரண்டையும் அங்கேயே வைத்துவிட்டு அந்தப் பாக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு வா என்று சொன்னேன்.
என்னளவில் ஒரு கடைக்குச் சென்று ஒரு ‘நாப்கின்’ பாக்கெட்டை காகிகப் பையில் போட்டு மறைக்காமல் வாங்கி வருவதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது. அவ்விதமே உணரும்படி குடும்பத்திலும் வலியுறுத்திச் சொல்கிறேன். என் மகளோ, உறவுகளோ, ஏனைய தோழமைகளோ, அவர்கள் தம் மாதவிடாய் காலத்தைக் கடப்பதில் ஒரு ஆணாக உறுதுணையாக நிற்பது என் குறைந்தபட்ச கடமையென்றே கருதுகிறேன்.
*
சானிட்டரி நாப்கின்னில் எந்த அசிங்கமும் அவமானமும் இல்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரட்சியின் முக்கிய கருவி ஒரு ஆண் என்பதுதான் விசேஷம். கோவையை சேர்ந்த முருகானந்தம் கதை எல்லாருக்கும் தெரியும். மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரித்து ஊரகப் பெண்களுக்கு வழங்கும் அவர் முயற்சி இப்போது உலக அளவில் புகழ் பெற்று ஐக்கிய நாடுகள் சபையில் அவர் உரையாற்றுவது வரை போனது. இப்போது அவரின் 'நாப்கின் இயந்திரம்' இந்தியாவின் பிற்பட்ட வடமாநிலங்களில் எல்லாம் அரசாங்கங்களால் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. முருகானந்தத்தின் பயணம் ஐஐஎம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
அதுவே இப்போது திரைப்படமாக பாட்மேன் (Padman) என்று அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவர இருக்கிறது. அதனை விளம்பரப் படுத்த முருகானந்தம் 'பாட்மேன் சவால்' என்று துவங்கினார். அதாவது திரைப் பிரபலங்கள் ஒரு நாப்கினை கையில் பிடித்து செல்பி எடுத்து வெளியிட வேண்டும். அதில் இன்னொருவரை டேக் செய்ய வேண்டும். அவர் அக்சய் குமார் மனைவியை டேக் செய்ய, அவர் அமீர் கானை டேக் செய்ய, ஆலியா பட், தீபிகா, அர்ஜுன் கபூர் என்று படங்கள் தொடர்ந்து வெளிவர, சானிட்டரி நாப்கின் பற்றிய விவாதங்கள் துவங்க ஆரம்பித்து விட்டன. அவர்கள் படங்களோடு 'இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.' என்ற வார்த்தைகளையும் காபி பேஸ்ட் செய்தும் வெளியிடுகிறார்கள்.
இது மிகவும் பாராட்டத் தகுந்த விஷயம். இதையே நம் தமிழ் நடிக நடிகைகள் செய்து யோசித்துப் பாருங்கள். அது எப்பேர்ப்பட்ட மாற்றங்களை நம் சிந்தனையில் விதைக்கும் என்று? அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன். பாலிவுட்டின் பொற்காலம் இதுதான்.
2 comments:
My respect for you has doubled after reading this post. Nice to have a father take initiative about such functions to be avoided and to buy sanitary pads for your daughter. This is not just one step forward, but leaps and bounds forward. Your daughter is surely lucky to have you as her father.
When i got my 1st periods, I resisted having such a function, but no one listened. It felt like announcing to the world that my uterus has started working and it needed an innagural ceremony! But my little brother was so furious that he didnt have any such ceremony for himself. He wanted to be in the throne and have new clothes and be photographed in funny angles.
Post a Comment