இரண்டு புத்தகங்களும் ஈரோடும் பின்னே நானும்



நினைக்காத ஒரு செயல், திட்டமிடாத ஒரு காரியம் கை கூடி வரும்போது கிளர்ந்தெழும் மகிழ்ச்சி வார்த்தைகளில் அடங்காதது. முதல் தொகுப்பானகிளையிலிருந்து வேர் வரைவெளியான பின்பு அடுத்தது, அதுவரை எழுதப்பட்டிருக்கும் கவிதைகளைத் தொகுப்பதென்றே இருந்தேன். தொகுத்து அச்சுக்கு தயார் என்ற நிலையில் கால நேரம் குறிக்காமல் தள்ளிப் போட்டேன்.




இந்த நிலையில்நம் தோழிஇதழுக்கு மட்டும் தொடர்ந்து எழுதினாலும், மற்றபடி கட்டுரைகளின் எண்ணிக்கை மெல்லமெல்லக் குறைந்து கொண்டேயிருக்க, ஏனைய வேலைகளில் கவனம் கூடிக் கொண்டேயிருந்தது. அந்தச் சூழலில்தான் குங்குமம் வாய்ப்பு. அந்தத் தொடர் சாத்தியமானது ஆசிரியர் தி.முருகன் வைத்த நம்பிக்கையால் மட்டுமே. ஆண்டின் இறுதியை நெருங்கும்போது குங்குமம் கட்டுரைகளே ஒரு தொகுப்புக்கு தயாராக இருப்பது புரிந்தது. அப்போதுதான் மற்ற கட்டுரைகள் குறித்த நினைவு வந்தது. அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவையும் தொகுப்பாக மாறும் சாத்தியம் புரிந்தது.

பெயரிடப்படாத புத்தகம்டிஸ்கவரி பதிப்பகத்தாலும், “உறவெனும் திரைக்கதைசூரியன் பதிப்பகத்தாலும் சென்னைப் புத்தக் காட்சிக்குத் தயார் நிலையில் இருந்தன. முதல் புத்தகத்திற்கு மிக எளிதாக டிஸ்கவரி வேடி ஏற்பாட்டில் வெளியீட்டு விழாக் கண்டுவிட்ட அனுபவம் உண்டென்றாலும், புத்தகக் காட்சி காலம் என்பதால் அது நேரடியாகக் களம் செல்லட்டும், புத்தக வெளியீட்டுக்கென மெனக்கெடவியாலது என்பதுள்ளிட்ட காரணங்களால் வெளியீடு குறித்து எதுவும் முடிவெடுக்கவில்லை.

முதல் புத்தகம் சென்னையில் வெளியிட்டபோதே இங்கே ஒரு உரிமையான முணுமுணுப்பு இருந்தது. ஈரோட்ல இருந்துட்டு ஏன் சென்னைல எனும் அந்த முணுமுணுப்பு. சென்னையில் வைத்தபோது ஈரோட்டில் இருந்து மூன்று பேர் மட்டுமே சென்றோம். வேறு யாரையும் சிரமப்படுத்தக்கூடாது என்பதற்காகவே சென்னைக்கு அழைக்கக்கூட இல்லை. ஏன் அழைக்கவில்லை என அன்போடு கோபித்தவர்களிடம் தன்மையாகவும் சொல்லியிருக்கிறேன். இந்த நிலையில் இந்த தடவையாச்சும் ஈரோட்டில்தானே என்ற கேள்விகளே ஆசையை விதைக்கத் துவங்கின. ஆனால் எங்கு எவ்விதம் யாரை வைத்து நிகழ்ச்சி நடத்துவது எனும் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அமைப்புகளாய் ஒன்றிணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் எனக்கென ஒரு நிகழ்ச்சியை நானே திட்டமிடுவது எளிதானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் சந்தித்த நண்பர் ஆரூரனிடம் புத்தகம் தயாராகுது... ஈரோட்ல வெளியீடு வைக்கலாமானு யோசிக்கிறேன் எனச் சொல்லி முடிக்கும் முன்பே... “செய்வோம்... நாங்க பார்த்துக்குறோம்என்றார்.

புத்தகம் வெளிவருவது குறித்த அறிவிப்பு செய்தபோதுகூட தயக்கத்தோடுதான் ஈரோட்டில் வெளியீடு திட்டம் இருப்பதாகச் சொன்னேன். நிகழ்ச்சி தேவையா இல்லையா என்ற குழப்பம் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த நேரத்தில் இது ஈரோட்டில் தேவையெனத் தீர்மானித்தோம். விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியது. வெளியில் இருந்து யாரையும் சிரமப்படுத்த வேண்டாம் எனும் நோக்கில் மாட்டுப்பொங்கல் தினத்தில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு ஈரோட்டில் உள்ளவர்களால், ஈரோட்டில் உள்ளவர்களோடுஎன்ற அடிப்படையில் விருந்தினர்களை முடிவு செய்தோம். ஒவ்வொருவரையும் அழைத்ததில் அன்பு சார்ந்த தனிப்பட்ட சில காரணங்கள் எனக்குண்டு.

இணையம் பாவிக்காத விருந்தினர்களுக்கு மட்டும் அச்சு அழைப்பிதழ் மற்றபடி மின் அழைப்பிதழ் மட்டுமே. நெருங்கிய நண்பர்களை தற்காலிகமாக ஒரு வாட்சப் குழுமமாக ஒன்று திரட்டினோம். அனைவருக்கும் மின் அழைப்பிதழ்களே அனுப்பப்பட்டன நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் 90% ஃபேஸ்புக், வாட்சப் மூலம் அழைக்கப்பட்டவர்களே. உண்மையில் இதையும் ஒரு பரீட்சார்த்தமான முறையாகவே செய்து பார்க்க விரும்பினோம். ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. வியாழன், வெள்ளி, ஆகிய நாட்கள் முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக நான் சென்னையில் இருந்தாக வேண்டிய நிர்பந்தம். ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் இங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டார்கள்.



நிகழ்வு தினம் தன் இயல்பான வேகத்தில் வந்து சேர்ந்தது. 10.30க்கு நிகழ்வு எனக் குறிப்பிட்டிருந்தாலும், மனதளவில் ஞாயிறு / மாட்டுப்பொங்கல் தினம் ஆகியவற்றால் நிகழ்வு துவங்க எப்படியும் 11 மணியாகிவிடும் என்றிருந்தது. ஆனால் 10.45 மணிக்கே நிகழ்வைத் துவங்க முடிந்தது.

முனைவர் தனபாக்கியம் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ய, ஈரோடு இலக்கியச் சுற்றத்தின் பொருளர் அண்ணன் தாமோதர் சந்துரு வரவேற்புரை நிகழ்த்தினார். “பெயரிடப்படாத புத்தகம்நூலை நண்பர் ஷான் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தி வைத்தார். உடன் நட்புகளின் சார்பில் erodekathir.com இணையதளத்தை பரிசாக அளித்தனர். கவிஞர். மோகனரங்கன்உறவெனும் திரைக்கதைநூலை பக்கெட் லிஸ்ட் திரைப்பட உதாரணத்தோடு அறிமுகப்படுத்தினார்.



மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் புத்தகங்களை வெளியிட, “பெயரிடப்படாத புத்தகம்நூலை அரிமா சங்க பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பெற்றுக்கொண்டார். “உறவெனும் திரைக்கதைநூலை செங்குந்தர் கல்விக் கழக செயலர் சிவானந்தன் பெற்றுக்கொண்டார். மூன்று பேரும் மிகச் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார்கள். நண்பர் ஆரூரன் நன்றியுரையில் நிகழ்விற்கு வந்திருந்த என் பெற்றோர்களை மேடைக்கு அழைத்து நெகிழ்ச்சியூட்டினார்.

சுமார் 150 பேருக்கும் மேல் கலந்து கொண்டவர்களில் இருபத்தைந்து ஆண்டு கால நட்பு முதல் இதுவரை பார்த்திடாத நட்பு வரை உண்டு. இப்படியான கலவையாகவே வருவார்கள் என்றே தீர்மானித்திருந்தேன். அவர்கள் அனைவரிடமும் பகிர என்னிடமிருந்த மிக முக்கியமான செய்தி, நிகழ்ச்சியை ஈரோட்டில் நடத்த விரும்பியதன் காரணம். வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு கட்டத்தில் என்னோடு பயணித்தவர்கள். மிக நெருக்கமாக ஒருவரையொருவர் அறிந்திருந்திருக்கிறோம். ஆனால் திடீரென எழுத்து, மேடை, புத்தகங்கள் என நான் வேறு இடத்திற்கு நகர்ந்திருப்பதாய் அவர்களும், நானும் நினைக்கலாம். அது மிக இயல்பாக நிகழ்ந்ததும் கூட. ஆனாலும் அவர்களிடம் நான் சொல்ல விரும்பியது, எனக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளிகள் இல்லை. அவர்களும் நானும் ஒன்றாக இருந்த காலம் தொட்டு, கண்டிருந்த அனுபவங்களும், புழங்கிய சொற்களும் ஏறத்தாழ சமமானவையே. நான் எனக்கென ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது காணும், நினைக்கும், யோசிக்கும் விசயங்களை எழுதப் பழகினேன். எழுத்து என்னைப் பிடித்துக் கொண்டது. அதுவே தொடர்ந்து என்னை எழுதப் பணித்தது. மனதிற்கு இசைவான அனுபவங்களை, அங்கீகாரங்களை, பயணங்களை, நட்புகளை அந்த எழுத்தே பெற்றுத் தரவும் செய்தன. இதை என்னோடு இருந்தவர்கள். இருக்கின்றவர்கள், அறிந்தோர்கள் அறிமுகமற்றவர்கள் என பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதன் வெளிப்பாடே அந்த வெளியீட்டு விழா.

அடுத்து ஈரோடு புத்தகக் காட்சியில் தமிழகத்தில் மிகச்சிறந்தவொரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது. வாசிப்பு கூடிக்கொண்டே போகிறதென்றே நேர்மறையாக நம்புகிறேன். ஆனாலும் கூட ஈரோடு எனச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படைப்பாளிகள் வரவில்லை எனும் மனக்குறை எப்போதுமுண்டு. அதற்கு பலரையும் தூண்டும் ஒரு நிகழ்வாகவும் இந்த விழா இருக்க வேண்டுமெனக் கருதினேன். இந்த மண்ணின் கதை, இம்மக்களின் கதை, வாழ்வியல், வரலாறுகள் என எழுதித் தீர்க்க ஆயிரமாயிரம் உண்டு இங்கே. அரங்கில் இருந்த பலரிடமும் அதற்கான தகுதிகளுண்டு. ஆனால் எழுத ஏதேனும் ஒரு துவக்கத் தயக்கம் இருக்கலாம் என்பதே என் கருத்து.

இந்தப் புள்ளியில் அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாகவே இந்த நிகழ்வைக் கருதினேன். அதனடிப்படையிலேயே “ஈரோடு வாசல்” எனும் வாட்சப் குரூப் மூலம் ஒன்று திரளும் காரியத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

நிகழ்வு நிறைவாய் நிறைந்தது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் தம் பிள்ளைகளோடு பலர் வந்திருந்தனர். வெளியூர் நட்புகளை பயணிக்க வைத்து சிரமப்படுத்த வேண்டாம் என்ற நினைப்பிலிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக பலர் தொலைவிலிருந்து வந்திருந்தனர். நிகழ்வில் குறிப்பிடத்தகுந்த ஒரு குழுமமாகஉள்ளத்தனைய உடல்குழுமம் பங்கெடுத்திருந்தது.

என்னுடைய கட்டுரைகள் குறித்து செல்ஃபி வீடியோக்களில் தம் கருத்தைத் தெரிவித்திருந்த நட்புகளின் வீடியோக்களை நான்கு பகுதிகளாகத் தொகுத்தளித்த தம்பி சரவணமூர்த்தி, ஆலோசனைகள் வழங்கிய மேயர் ஆபீஸ் நண்பர்கள், பதிப்பாளர்கள் டிஸ்கவரி வேடியப்பன், சூரியன் பதிப்பகம், குங்குமம் ஆசிரியர் கே.என்.சிவராமன், முன்னாள் முதன்மை ஆசிரியர் தி.முருகன், நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணன் தாமோதர் சந்துரு, கவிஞர் மோகனரங்கன், நண்பர் ஷான், சிறப்பு விருந்தினர்கள் திரு.ஸ்டாலின் குணசேகரன், அரிமா. தனபாலன், திரு.சிவானந்தன், நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த முனைவர் தனபாக்கியம், நினைவுப்பரிசுகள் வழங்கிய பாரதி புத்தகாலயம் இளங்கோ, நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்களிப்பு செய்த Thomascook Travels, ஜெயச்சந்திரா மில்ஸ், BCS Computers, நண்பர் முருகவேல், மிக நேர்த்தியாக நிழற்படங்கள் எடுத்துக் கொடுத்த நண்பர் சுரேஷ்பாபு, காணொளி பதிவு செய்த ஈரோடு சசி, அரங்கினை வழங்கிய செங்குந்தர் பள்ளி நிர்வாகம், மரக்கன்றுகள் இலவசமா வழங்கிய சத்தியசீலன் ஆகிய அனைவருக்கும் தீரா அன்பும் தெவிட்டாத நன்றிகளும்.

இந்த இரண்டு நூல்களின் பின்னால் இருக்கும் இதழ் ஆசிரியர் தி.முருகன் மற்றும்மனுசனால ஆகாதது ஒண்ணுமில்ல” எனும் தாரக மந்திரத்தைக் கற்றுக் கொடுத்த என் அம்மா ஆகிய இருவருக்கும் இரண்டு நூல்களையும் சமர்பித்ததில் மீண்டும்  மகிழ்வெய்துகிறேன்.

நம்பிக்கையைக் கூட்டியிருக்கும் ஒரு நிகழ்வின் முதல் படியாக இதைக் கருதுகிறேன்... பயணம் தொடரும். உடன் இருங்கள்!

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா

Unknown said...

எழுத்துலகில் உங்கள் பயணம் தொடர்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்

Edhayan said...
This comment has been removed by the author.
Edhayan said...

இந்த "தீராப்பயணம்" என்றென்றும் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.. சார்..