சிங்கப்பூர் பயணம் - 8



இந்தப் பயணத்தில் இரண்டு நாட்களை மிகப் பயனுள்ள, நம்பிக்கையுள்ள நாட்களாக மாற்றிய பெருமை ஏ.பி.ராமன் அவர்களையே சாரும். திங்கட்கிழமை நூலகம் அழைத்துச்சென்றது போல, செவ்வாய்க்கிழமை திரு.மு.ஹரிகிருஷ்ணன் அவர்களோடு மிகுந்த ஆக்கப்பூர்வமான சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்தார். உதவினார் என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் அவர் உதவியை கடந்துபோய்விட முடியாது. அதற்கு முந்தைய வாரம்தான் அவரின் ஈரோடு வருகையில் பிரமித்திருந்தேன். அதுகுறித்து எழுதியிருந்ததில் இருந்த பிரமிப்பு வெறும் உணர்வுப்பூர்வமான எழுத்தல்ல, அத்தனையும் நிதர்சனம் என்பதைத்தான் அவரின் அந்த இரண்டு நாட்கள் சந்திப்புகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டு நாளும் நாங்கள் அவர் சந்திக்கலாம் எனச்சொன்ன இடத்தை அடையும் முன்பே வந்திருந்து காத்திருந்தார். தம் வயதைச் சற்றும் பொருட்படுத்தாது, நடை, கார் என உடன் பயணித்து மிகவும் உதவியாக இருந்த அன்பிற்கினிய ஏ.பி.ராமன் அவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது பெரும் வரமென்றே சொல்வேன். 


ஒரு உணவு வேளைக்கு சந்திக்கவேண்டும் என இரண்டு நாட்களாய் முயற்சித்த தாம் சண்முகத்தோடு செவ்வாய் மதிய உணவிற்கு நான், ஏ.பி.ராமன் மற்றும் அனிதா கலந்து கொண்டோம். அமைதியான சூழலில், சுவையான ஒரு விருந்தோடு அழகியதொரு உரையாடலோடு அந்த மதியம் கரைந்தது. அதற்குமுன் அதிகப் பரிட்சயம் இல்லாமல் இருந்திருந்தாலும்கூட, ஓரிரு சந்திப்புகளில் உள்ளத்திற்கு மிக நெருக்கமாக மாறிவிட முடியும் என்பதை இந்தமுறை உணர்த்திவர்கள் முக்கியமானவர்கள் தாம் சண்முகம், ஹாஜா மொய்தீன் மற்றும் அமல் ஆனந்த். தாம் சண்முகத்தோடு காலம் காலமாக பழகிய உணர்வை ஒவ்வொரு முறை உரையாடும்போது உணர முடிகின்றது. 

 

மூன்று நாட்களாய் விரும்பி வீட்டுக்கு அழைத்தும் அமல்ஆனந்தைச் சந்திக்க முடியாமல் போனதில் ஒரு கட்டத்தில் குற்ற உணர்ச்சியே வந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை நானாக தொடர்புகொண்டு எப்படியாவது எங்காவது சந்தித்துவிடலாம் எனச் சொல்ல, மாலை விமான நிலையம் ஒன்றாகச் செல்வோம் எனக்கூறி நான் இருக்கும் இடத்தின் எதிர் துருவத்தில் இருந்து, தேடிவந்து, விமானநிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பை எடைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி நிறைய நிறையப் பேசி உற்ற தோழனாய் உடனிருந்த உதவி அமல் ஆனந்த் அன்பையும் நட்பையும் என்னவென்று சொல்ல.



வலைப்பக்கத்திலிருந்து ஒரு நண்பனாக, மனதுக்கு மிக நெருக்கமான ஒரு தோழனாக இருக்கும் கண்ணன் இந்தப் பயணத்திலும் பெரிதும் உடனிருந்தார். மிக உரிமையாய்ப் பேசும் நட்புகளில் கண்ணனும் ஒருவர். பிப்ரவரியில் அவர் ஊருக்கு வந்தபோது பலமுறை சந்திக்கத் திட்டமிட்டும் முடியாமல் போனதை இந்த நான்கு நாட்களில் நிரப்பிக்கொள்ள முடிந்தது.

தன் பெரும்பான்மையான நேரத்தை ஒதுக்கி மூன்று நாட்கள் சிங்கப்பூரின் திசைகள் தோறும் அழைத்துச் சென்ற கடலூரன் ஹாஜா மொய்தீன் அவர்களின் அன்பும் பிரியமும் அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் வடித்திட முடியாதது. சில விசயங்களை அவர் எடுத்துரைக்கும் விதம் அலாதியானது. நான் பழகிய வரையில் ஹாஜாவிடம் குறிப்பாக சிங்கப்பூர் வாழ்க்கை குறித்தும், பொதுவாகவும் எழுதவும் நிறைய உள்ளன. 



மிக நெருக்கமான பிரியமான இன்னொரு தம்பி வெற்றிக் கதிரவன். 2010ல் நான் வவுனியா சென்றது குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு தானும் யாழ்ப்பாணம் போகவேண்டுமென என்னிடம் விசாரித்ததில் தொடங்கியது நெருக்கமான நட்பு. ஊர் திரும்ப விமான நிலையத்தில் காத்திருக்கும்போது, அழைத்து “அண்ணே பக்கத்துலதான் இருக்கேன். கிளம்புறவரை நான் கூட இருக்கிறேன்” என்று உடனிருந்து விடை கொடுத்த பிரியம் மறக்கவியலாத ஒன்று.

உட்லாண்ட் நூலகத்தில் சந்தித்த என் பள்ளித்தோழனின், கல்லூரித் தோழனாய் இருந்து எனக்கும் நட்பான பி.பி.ராஜ்ஜை மீண்டும் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த அன்புத் தம்பி தளபதி முஸ்தபாவை இரண்டு மூன்று முறை முயற்சித்தும் சந்திக்க இயலாமல் போனதிலும் வருத்தமே. பாரதி இளங்கோவனோடு பேசும் வாய்ப்பு கூட அமையாத சூழலும் சற்று வருத்தமே.

இறுதியாக…

எங்களின் நட்பு எப்படி உருவானது என்பதிலெல்லாம் பெரிய சுவாரஸ்யமில்லை. ஃபேஸ்புக்கில் எதற்கோ, எப்படியோ ஒரு காலகட்டத்தில் எங்களில் யாரோ கொடுத்த நட்பு அழைப்பில்தான் அந்த நட்பு பூத்திருக்க வேண்டும். ஆனாலும் காலம் எங்களை விசித்திரமான ஒரு நட்புக்குள் பூட்டிவைத்தது. என்னைக் குறித்து அவரும், அவரைக் குறித்து நானும் எங்கும் புகார் வாசித்திருக்கவே மாட்டோம். ஆனால் எங்களுக்குள் ’நீ அப்படி, நீ இப்படி’ என ஆயிரமாயிரம் புகார்கள் அவ்வப்போது உருவாகும். ஒரே நாளில் நான்கைந்து முறைகள்கூட பேசியதுண்டு. தொடர்ந்து ஒரு மாதம்கூட ஒற்றை வார்த்தை பேசும் அவசியமற்று இருந்ததும் உண்டு. ஆழக் கிடக்கும் கிழங்கில் ஒரு சொட்டு நீர் விழுந்தால் கூட முளைத்து மண்ணைத் துளைத்து செழித்து நிற்கும் கோரைப்புல் போல் எங்களுக்கிடையே கிடக்கும் நீண்ட நாட்களின் மௌனத்தை உடைக்க எப்போதாவது ஒளிரும் அல்லது ஒலிக்கும் “எப்படியிருக்கே” என்ற ஒற்றைச் சொல் போதும்.

வாசகர் வட்ட விழாவில் வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களை அச்சிடும் பணியை அவர்தான் உறுதிகூறி பொறுப்பெடுத்துக்கொண்டார். உண்மையில் குறைந்த கால அவகாசம் மிகுந்த நெருக்கடியைக் கொடுத்ததால், மிகக் கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது. புத்தகங்களுக்கானவற்றை அனுப்பும் முழுப்பொறுப்பும், பிழை திருத்த ஏற்பாடு செய்து அனுப்பும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததாயிருந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு நாட்கள் மிகச் சவாலானவை. மிகக்கடுமையானவை. தாங்க முடியாத அயர்ச்சியைக் கொடுத்தவை. எனக்கு அது ஆண்டாண்டு காலமாய்ச் செய்த தொழில். அவருக்கோ தம் நண்பனை நம்பி, அங்கிருக்கும் நட்புகளுக்கு உறுதிகொடுத்துவிட்டு அந்த வார்த்தையைக் காப்பாற்ற போராடிய போராட்டம். வேலைப்பளுவில், இயலாமையில், அயர்ச்சியில், ஏதேதோ பிரச்சனைகளால் என சில நாட்களில் நான் காட்டிய கோபம் மிக உக்கிரமானவை, கோபமூட்டக்கூடியவை. அப்படியான தருணங்களில் நான் காட்டிய கோபத்தையும் பொறுமையாய்க் கடந்து செயலை செவ்வனே முடிக்கச் செய்ததில் முழுக்க முழுக்க அவரின் பங்கே முக்கியமானது.

இந்த முறை பயணத்தில் ஐந்து நாட்கள் அவர்கள் வீட்டில் கழிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரின் அம்மாவும் என்னோடுதான் வந்திருந்தார். பொதுவாக எந்த நட்பிலும் நெகிழ்ச்சியைக் கடந்து நிதர்சனத்தை உணர தொடர்ந்து 2 நாட்கள் ஒன்றாகப் பயணித்தாலோ, இருந்தாலோ ஏதாவது ஒரு புள்ளியில் சிக்கல் உணரும் சாத்தியங்களுண்டு என்பார்கள். ஆனாலும் நான் அங்கிருந்த ஐந்து நாட்களில் துளியும் அன்னியத்தன்மை உணராமல், மிக இயல்பாக இருக்கும் சூழலை அமைத்துக் கொடுத்ததில், அவரின் கணவர் மோகன், குழந்தை சங்கீத் மற்றும் அம்மா சிவாச்சலம் ஆகியோரின் அன்பு மனங்களாலாயே சாத்தியமானது. ஒரு சாதரணமான நட்பை குடும்ப நட்பாக தகவமைத்து எளிமையாக, மிக அக்கறையாக, அன்பாக நடத்தும் மோகன் அவர்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரியவர். அவரின் அம்மாவிற்கும் என்னுடைய அம்மாவிற்கும் சமவயது. ஒரு மகனைப் போல நடத்தும் அன்பும், ஒரு தோழனைப் போல் நடத்தும் பக்குவமும் அவரிடம் ஒருங்கே இருப்பது ஆச்சரியமான ஒன்று. இலக்கியம் முதல் இன்றைய நிகழ்கால நடப்புகள் வரை அவரால் மிக இயல்பாக ஒன்றி உரையாடிக் கொண்டே இருக்க முடிகிறது. 


அந்த அழகிய குடும்பத்தின் சுதந்திரம், தனிமையில் சற்றே தியாகம் செய்து அன்பில் ஐந்து நாட்கள் என்னையும் அடைகாத்து வைத்திருந்தார்கள். அந்த ஐந்து நாட்களின் அன்பும் பிரியமும் குறித்தே தனித்து ஒரு கட்டுரையே கூட எழுதலாம். இப்போதும்கூட ஊர் திரும்பி ஒரு மாத காலத்தில் இரண்டு முறை மட்டுமே பேசியிருக்கிறேன். அதுவும்கூட அவர் அம்மா இந்தியா திரும்புதவற்கான விமான பயணச்சீட்டு குறித்ததாக என்றே நியாபகம். ஆனாலும் குறையொன்றுமில்லை!

இதுவரையிலும் அவர் எனக்குறிப்பிட்டது, மனது முழுக்க நெகிழ்வோடும், பிரியமாகவும், பெருமையாகவும் உணரும் நட்பு ”அனிதா ராஜ்”. இதுவரைச் சொன்னதாக நினைவில்லை, ஆனாலும் இந்தப் பயணம் குறித்த நினைவுகளை எழுத்தில் நிறைவு செய்யும்போது, அவரிடம் சொல்ல என்னிடம் எளிமையான சில சொற்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன… அவை “எல்லாத்துக்கும் நெகிழ்வான நன்றியும், நிறைவான அன்பும் அனிதா!”

-

தொடர்புடைய பதிவுகள்...
சிங்கப்பூர் பயணம் - 1
 
சிங்கப்பூர் பயணம் - 2

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

சிங்கப்பூர் பயணம் - 5

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

Unknown said...

நட்பை மறவாமல் பாராட்டும் நல்லவர் நீங்கள். மிக நன்று.