உங்கள் குழந்தையின் நட்பு வட்டம் ஆரோக்கியமானதா?


எல்கேஜி படிக்கும் நவீன் தன் அப்பாவிடம் கிசுகிசுப்பாக தன்னுடன் படிக்கும் வர்சினி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டதாகச் சொல்கிறான்.


ஐந்தாம் வகுப்பு மாணவி நிகல்யாவின் புத்தகப் பையில் கோணல்மாணலாய் படம் வரையப்பட்டு ”ஐ லவ் யூ … பை ஆகாஷ்” எனும் கசங்கிய தாள் கிடைக்கிறது.


ஒன்பதாம் வகுப்பு மாணவன் கரண் போதையில் வகுப்பிலேயே விழுந்து எழுகிறான்.


கணவனை இழந்து, பிள்ளைக்காகத்தான் இந்த வாழ்க்கையென வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது தாயின் ஒற்றை மகனான பத்தாம் வகுப்பு படிக்கும் சுதாகர் இனி வாழ்வது எதற்காக என்று சிந்திக்கிறான்



இவை மிகக்குறைவான உதாரணங்களே. இதுபோல் இன்னும் எத்தனையெத்தனையோ சம்பவங்களை நாள்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம் அல்லது கடந்து செல்கிறோம்.



குழந்தையின் கேள்வியை எதிர்கொள்ள முதலில் குழந்தை மனது தேவைப்படுகிறது. குழந்தைகளின் முதல் உலகம் பெற்றோர்கள்தானே. தன் முதல் உலகத்தில் தன் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கிறதா, தன் செயலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறதா, தான் பேசவிரும்புவதை பேச வாய்ப்பு கிட்டுகிறதா என்பதை எதிர்பார்க்கும் குழந்தைகள் தோற்றுப் போகும்பொழுது, தனக்கான வேறொரு இடத்தைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.



தன் கேள்விக்கு இசைவான பதில் தருபவர்களை, தன் செயலுக்கான அங்கீகாரத்தைத் தருபவர்களை, தான் சொல்வதை காது கொடுத்துக் கேட்பவர்களையே தன் நட்பாக பிள்ளைகள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படி அமையும் நட்புகள் எப்படிப்பட்ட நட்புகளாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களின் நட்பு வட்டம் அமைகின்றது.



நட்புகளாய் அமையும் சக வயது பிள்ளைகள் அல்லது உறவுகளிடமிருந்துதான் பெரும்பாலான புதிய புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். பொதுவாகவே தன் மனதுக்கு பிடித்துவிட்டால், அது யாராக இருந்தாலும், அவர்கள் செய்யும் செயல்களில் ’ஹீரோயிச’த்தைக் கண்டு கொள்கிறார்கள். அந்த ஹீரோயிசக்காரர்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் தானும் செய்து பார்க்க வேண்டும் அல்லது தனக்கும் வேண்டும் என எளிதாக ஆசைப்படத் துவங்குகிறார்கள். இப்படி ஆசைப்படத் துவங்குவதில் சில நல்லதும் நடக்க வாய்ப்புண்டு, சில சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பன் (அ) தோழி செய்யும் நல்ல விசயங்களை ஓரளவு தானும் செய்யவிரும்பும் பிள்ளை, அதே நண்பன், தோழி செய்யும் தகாத விசயங்களை ஆர்வத்தின் பேரில், அதில் என்ன இருக்கும் எனும் குறுகுறுப்பின் பேரில் இரண்டு மடங்காய் செய்து பார்க்க விரும்புகிறார்கள்.



புகை பிடிப்பது, எளிதாய்க் கிடைக்கும் சில வேதியல் பொருட்களை போதைக்குப் பயன்படுத்துவது ஆகியவற்றை  இன்றைய குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதன் கிளையிலிருந்து தேடி வேர் வரை சென்றால் முதலில் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொண்டு வந்த பிள்ளை, அதை தன் வீட்டிலிருந்தோ, உறவுகளிலிருந்தோ அல்லது வீட்டிற்கு வரும் நட்புகளிடமிருந்தோதான் கற்றுக் கொண்டிருக்கும்.



குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும், போதைப் பழக்கங்களும் பெரும்பாலும் நெருங்கிய உறவு, நட்புகளிடமிருந்தே முதலில் துவங்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா உறவுகளிடம் சரியாக கிடைக்காத அங்கீகாரம், நட்புகளிடம் மிக எளிதாகக் கிடைக்கும்போது அவர்களிடம் ஒன்றிப்போய்விடுகிறார்கள். ஒன்றிப்போன உறவுகள் திணிக்கும் கெடுதல்களை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது பழகிக்கொண்டு அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.



வீட்டில் தான் அல்லது தன் பேச்சு கவனிக்கப்படவில்லை எனும் பிள்ளை, தன்னை கவனிக்க வைக்க, தன் பேச்சைக் கேட்க வைக்க தான் செல்லும் பள்ளி வாகனத்தில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க முயல்கிறது. தன் வகுப்பு அல்லாத நட்புகளிடமிருந்து ஆர்வமாய் வித்தியாசமானதைக் கற்றுக்கொள்ள முயல்கிறது. இப்படிக் கற்றுக்கொண்டு தன் வகுப்பில் விதவிதமாய் பகிர்ந்து கொள்கிறது. அப்படி ஆரம்ப காலத்தில் கற்றுக்கொண்டு வருவதை தன்னையுமறியாமல் வீட்டிற்கு வந்தவுடனே பகிர்ந்துகொள்ள முனைவார்கள். அதை யாரும் கவனித்து அங்கீகரித்தால் தொடர்ந்து அந்த பகிர்வு நிகழும். அங்கீகாரம் கிட்டவில்லையெனில் முழுக்க முழுக்க தன் நட்புகளுக்குள்ளான உலகத்திற்குள் மூழ்கத் துவங்கிவிடுகிறார்கள்.



பொதுவாக தாத்தா பாட்டிகள் இல்லாத, அப்பா அம்மா இருவரும் வேலைக்குப் போகும் சூழலில் குழந்தைகள் பேச வருவதை நட்பாகக் கேட்க வீட்டில் ஆளில்லை என்பதே நிதர்சனம். அப்பா அம்மா வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளிடம் குழந்தைகளாக மாறிப் பேசுதல் மிகக் குறைந்து போய்விட்டன. டிவி, செல்போன், இணையம் என எல்லோரையும் ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக்கொள்வதால் யாருக்கும் வீட்டில் பேசும் அவசியமே அற்றுப்போய்விடுகிறது.



விளையாட்டு, திரைப்படங்கள், விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்கள், தொலைக்காட்சிகள், இணையப் பயன்பாடு என எதிலுமே முதலில் அவர்கள் நேரிடையாக அனுபவப் படுவதைவிட, அவர்களின் நட்புகளின் பரிந்துரையிலேயே மிக எளிதாக தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.



குழந்தைகளிடம் முதலில் நாம் நட்பாய் இருத்தல் மிகமிக அவசியம். அவர்களின் முதல் நண்பர்கள் அம்மா, அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். வெளியுலக நட்புகள் எல்லாம் அதன் பின்புதான். பொற்றோர், குழந்தைகளின் நண்பர்களாகி அவர்களின் உலகத்திற்குள் நுழைந்து அவர்களின் விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன, அந்த விருப்பங்களை எதிலிருந்து, யாரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம். பிள்ளைகளின் நட்புகள் யார்? ஆசிரியத் தோழமைகள் யார்? யாரோடு அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதும், அவர்களோடு முடிந்தவரையில் நட்பில் இருப்பதையும் பெற்றோர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடமும் அவ்வப்போது பேசி, தமது பிள்ளைகளின் நட்பு வட்டம் சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை, வீட்டுக்கே அழைத்து வருமாறு சொல்லலாம். வீட்டுக்கு வரும் நண்பர்களை நீங்கள் மதிப்பிட்டாலே, தீய நண்பர்களிடமிருந்து விலக்கி வைக்கவும் முடியும். அதேபோல நல்ல நட்பு வட்டத்தையும் உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தித் தரமுடியும்.





-
செல்லமே ஜனவரி 2015 இதழில் வெளியான கட்டுரை. நன்றி செல்லமே!

7 comments:

srinivasan said...

இன்று பலர் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை , பெற்றோரின் கெட்ட பழக்கங்கள் குழந்தைகளுக்கு கற்று கொள்ள தூண்டுகிறது.நல்ல அறிவுரைகள் 😃😁😌

கிருத்திகாதரன் said...

ஒஜு கூட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்து இருக்கிறான்..அவ்வப்பொழுது அப்டேட் செய்கிறான்.அந்த பெண் குழந்தையின் அம்மாவிடம் நல்ல உறவாக இருக்க சொல்லி உத்தரவு செய்து இருக்கிறான்..அந்த குழந்தையும் ஒஜு தன்னை பத்திரமா பார்த்துகொள்வதாக சொல்கிறாள்..

இன்னொரு பெண்..ஒரு கேர்ள் அவ உன் பிரெண்ட் வீட்டுக்கு வந்தாள் என்று சொன்னேன்..கேர்ள் பிரெண்ட் வேறம்மா..பிரெண்ட் வேறம்மா என்று சொல்லி தருகிறான்..

இதை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்க்க முடிகிறது..பல விஷயங்களுக்கு எதுவும் சொல்ல முடிவதில்லை..ஏதாவது சொல்ல போய் பகிர்தல் நின்று விடும் என்ற பயம்..

நிஜமாக எப்படி வளர்க்க போகிறோம் என்று தெரியவில்லை..ஒரு பார்வையாளராக, தோழியாக மட்டுமே இருக்க வேண்டி இருக்கிறது..அந்தளவுக்கு அவர்களின் உலகம் வேறு மாதிரி இருக்கிறது..

அழகான எழுத்துகளில் பல நினைவுகளை கொண்டு வந்து இருக்கீங்க. தேவையான பதிவு.

Rathnavel Natarajan said...

உங்கள் குழந்தையின் நட்பு வட்டம் ஆரோக்கியமானதா? = Erode Kathir - உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை, வீட்டுக்கே அழைத்து வருமாறு சொல்லலாம். வீட்டுக்கு வரும் நண்பர்களை நீங்கள் மதிப்பிட்டாலே, தீய நண்பர்களிடமிருந்து விலக்கி வைக்கவும் முடியும். அதேபோல நல்ல நட்பு வட்டத்தையும் உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தித் தரமுடியும்.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Erode Kathir.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான பகிர்வு அண்ணா....

அனைவரும் வாசிக்க வேண்டும்...

ராமலக்ஷ்மி said...

அவசியமான பதிவு. மிக நன்று.

Unknown said...

குழந்தைகள் பெற்றோரையே நண்பர்களாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்..அது மறுக்கப்படும் போதுதான் மனம் திசைதிரும்புகிறது...
அவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே பல சமயங்களில் பாதை மாறி போகாமல் இருக்கசெய்கிறது
வீட்டில் நல்ல புரிதலோடு வளரும் பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரிகிறது,யாரிடம்,எதுவரை நட்புபாராட்டலாம் என்று...
மேலும் இப்படி எல்லை வகுக்க தெரிந்த குழந்தைகள் யார்கூட பழகினாலும் கெட்டுபோக வாய்ப்பு குறைவு தான்..அப்படியே ஏதாகிலும் தவறு நடந்துவிட்டால் அதிலிருந்து பாடம் கற்றுகொள்வர்..
உண்மையில் பறவைகளும்,விலங்குகளும் அதன் குழந்தைகளை வளர்க்கும் விதமே பெற்றோருக்கு ஒரு அருமையான பாடம்..
தேவையான பதிவு

Unknown said...

மிக அருமையான பதிவு சார்
இதை ஒவ்வொரு பெற்றோருக்கும் circulara அனுப்பி படிக்க சொல்ல வேண்டும்